Advertisement

தீவிரவாதம் சுட்ட வடு!

'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேதீவிரவாதம் சுட்ட வடு'தனிமரம் தோப்பாவதில்லை. தனி மனிதன் குடும்பம் ஆவதில்லை. தனிக்குடும்பம் பல சேர்ந்து சமுதாயம் உருவாகிறது. மனித சமுதாயத்தின் இயல்பே கூடி வாழ்வது தான். இன்றைய சமுதாய அமைப்பில் கருத்து வேற்றுமை இருக்கலாம். அது வெறுப்புணர்ச்சிக்கு வித்திடாமல், ஒற்றுமையை உருக்குலைக்காமல் ஒன்றுபட்டு வாழ வகை செய்ய வேண்டும். அதுவே வாழ்வதற்கு ஒரே வழி, அதுவே உயர்வழி.
இன்று உலகம் பரந்து விரிந்து இருந்தாலும், அதில் வாழும் மனிதனின் மனமோ குறுகியதாக இருக்கிறது. ஒவ்வொரு மொழியினரும், மதத்தினரும், இனத்தினரும் தாம் வாழும் இடத்தை மட்டுமே சொந்த ஊர் என்றும், தம்மை சார்ந்தோரே இனத்தவர் என்றும், தாம் பேசும் மொழியே சிறந்த மொழி என்றும் நினைக்கும் போக்கு நிலவுகிறது.
தீவிரவாதம்:எந்த ஒரு குறிக்கோளையும் அடைய சில வழிமுறைகளை நம் சான்றோர் தந்துள்ளனர். பிறருக்கு சிறிதும் தீங்கு தராத நல்வழியில் சென்று நம் குறிக்கோளை அடைதல் வேண்டும். அதனை விடுத்து யாருக்கு எந்த கேடு வந்தாலும் அதனை பற்றி சிறிதும் கவலைப்படாது, தன் குறிக்கோளை அடைந்தே தீர வேண்டுமென்ற எண்ணமே, தீவிரவாதத்திற்கு அடிப்படை.ஆழி சூழ் உலகெங்கும் தீவிரவாதம் தலை விரித்து ஆடுகிறது. மதம், இனம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிரவாதிகள் சேத வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதமும் தீவிரவாதமும் :பழமையும் பெருமையும் கொண்டு அமைதிப்பூங்காவாக திகழ்ந்த நம் இந்திய திருநாட்டை, தீவிரவாதம் விட்டு வைக்கவில்லை. மதவெறி, பிராந்திய வெறி கொண்ட சில தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவின் வடமாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகினர். தீவிரவாதம் கொண்ட வெறியர்களால், நம் இந்தியாவிலும் உலக அளவிலும் நல்ல தலைவர்களை நாம் இழந்துள்ளோம்.பல்வேறு வடிவங்களில் தீவிரவாதம் தொடர்கதையாக அரங்கேறிய வண்ணம் உள்ளது. இன தீவிரவாதியான ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் பல லட்சம் யூத இன மக்களை கொன்று குவித்தார். ருவாண்டா நாட்டில் இன தீவிரவாதத்தால் லட்சக்கணக்கானோர் உயிர் இழந்தனர்.
அமெரிக்காவின் உலக வணிக மையம் மற்றும் ராணுவ தலைமையகம் இரண்டையும் தீவிரவாதிகள் விமான தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் மனித உயிர்களை பறித்தனர். தீவிரவாதத்தால் ஆப்கானிஸ்தான் அழியும் நிலையில் உள்ளது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் தீவுகள், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவிக்கின்றன.
கொடுஞ்செயல்கள் :தீவிரவாதிகள் தம் இலக்கை அடைய விதம், விதமான கொடுஞ் செயல்களில் ஈடுபடுகின்றனர். கப்பல், விமானம், பேருந்து முதலியவற்றை கடத்தி அவற்றில் பயணிப்போரை பிணைக்கைதிகள் ஆக்குகின்றனர். போதை மருந்துகளை உலகெங்கும் கடத்தி சென்று மனித இனத்தை போதை பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றனர். மொத்தத்தில் தீவிரவாதிகள் மனித இனத்தின் எதிரிகளாகவே விளங்குகின்றனர்.
வல்லரசு நாடுகள் தமது அரசியல் தளத்தை விரிவுபடுத்த, ஏழை நாடுகளின் ஏழ்மையை பயன்படுத்தி கொண்டு அவற்றின் மூலம் தமது தீவிரவாதத்தை ஊக்குவித்து வளர்த்து வருகின்றன. தவறான மதபோதனையால் உண்டாகும் மதவெறி, இனவெறி, பிராந்திய வெறி, தன்னல அரசியல், வறுமை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவையே தீவிரவாதம் பெருக காரணங்களாய் உள்ளன. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டு. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு“ என்ற பழமொழியினை தீவிரவாதிகளும் அதனை ஆதரிப்பவர்களும் உணர வேண்டும். குறிக்கோள் எதுவாயினும் அவற்றை அடைய உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் சிந்திக்க வேண்டும்.
தனி மனித அமைதிதான், உலக அமைதிக்கு அடிப்படை. தீவிரவாதத்தில் பெரும்பாலும் இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இளைஞர்கள் வழிதவறி போகாமலிருக்க, அவர்களுக்கு மாணவ பருவத்திலேயே பள்ளிகள் மூலம் நல்வழிகாட்டி பயிற்சி கொடுக்க வேண்டும். “உன்னைப்போல் பிறரை நேசி” என்ற உயர் சிந்தனை ஒவ்வொரு மனிதரிடமும் எழும் நேரமே தீவிரவாதம் வீழும் நேரமாகும்.
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று பாடினார் அவ்வையார். இன்றைய நவீன உலகில் மனிதராய் பிறத்தல் அரிதல்ல. அது மிக எளிது. “எளிது, எளிது மானிடராய் பிறத்தல் எளிது” ஆனால், “அரிது அரிது மனிதனாய் வாழ்வது அரிது”. அவ்வாறு மனிதனாய் வாழ வேண்டும் என்றால், இந்த உலகில் தீவிரவாதம் அழியும் நாளே நன்னாளாம்.-எம்.பாலசுப்பிரமணியன்,சமூக ஆர்வலர்,காரைக்குடி. 94866 71830.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement