Advertisement

சிறப்பித்து சிறப்பு பெறுவதே சிறப்பு - கவிஞர் வைரமுத்து

வார்த்தைகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் வித்தகன்... மை என்ற தோட்டாக்கள் நிரப்பிய இவர் பேனா, கவிதைகளை வெடிக்கச் செய்யும் மெஷின் கன், நயாகராவை நாடு கடத்தி வந்து, தன் காதல் வரிகளில் அடக்கி வயாக்கராவுக்கு விடை கொடுத்தவர்.
இவர் வெண்ணிற ஜிப்பாவும் வெண்பா பாடும், ஆண்டுகள் பல ஓடினாலும் வரலாறு இவரது கருவாச்சி காவியம் தேடும்... வைர வரிகளில் தமிழை பட்டை தீட்டும் கவிஞர் வைரமுத்து, மதுரையில் நடந்த கவிஞர்கள் திருநாள் விழாவிற்கு வந்த போது தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்து பேசிய கவித்துளிகள்...
* கவிஞர்கள் திருநாள்...
கவிஞர்கள் திருநாள் என்ற சிந்தனை வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகளுக்கு பிறந்தது. மொழி, இனம், பண்பாடு, கலை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே நிலவச் செய்ய வேண்டும் என்பதற்காக தோன்றியது வெற்றித் தமிழர் பேரவை. வைரமுத்து பிறந்தநாள் வெறும் பிறந்த நாளாக போய்விடக் கூடாது, அதன் வாயிலாக மொழிக்கும் கவிஞர்களுக்கும் சிறப்பு கிடைக்க வேண்டும் என்று சிந்தித்தார்கள். நான் தான் பெரிய கவிஞர் என்ற உணர்வு எனக்கு இல்லை, தமிழ் கவிஞர்களில் நானும் ஒருவன்.
என் பிறந்தநாளுக்கு ஒரு உள்ளடக்கம் வேண்டும் என்பதற்காக கவிஞர்கள் திருநாள் கொண்டாட முடிவு செய்தார்கள். இதற்கு மூல காரணமான கவிஞர் சுரதா, 'உங்கள் பிறந்தநாளை கவிஞர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கவிஞனுக்கு விருது கொடுத்து சிறப்பிக்க கூடாது' என்றார். சிறப்பிப்பதன் மூலமாகவே சிறப்பு பெறுவது சிறப்பு என்ற கருத்தை சுரதா முன் வைத்தார்; கவிஞர்கள் திருநாள் பிறந்தது.
* ஒரு கவிஞனாக, ரசிகனாக...
நான் முதலில் ரசிகன், பிறகு தான் கவிஞன். எவன் ஒருவன் நல்ல ரசிகனோ அவன் தான் நல்ல கலைஞனாக பரிமளிக்கிறான். என் கவிதைகளுக்கு, பாடல்களுக்கு நான் ரசிகன் என்பதைவிட, என் முன்னோடி எழுத்தாளர்களுக்கு நான் ரசிகன். கண்ணதாசன் பாடல்களில் நான் கரைந்திருக்கிறேன், பட்டுக்கோட்டை பாடல்களில் என்னை பறிகொடுத்திருக்கிறேன். இசையில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன் என்னை கவர்ந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா என்று இயங்கும் தமிழ் சினிமாவின் மூல இசை ஜி.ராமநாதன், எஸ்.சி.வெங்கட்ராமன். வெங்கட்ராமன் யார் என்று இளைய தலைமுறைக்கு தெரியாது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய 'காற்றினிலே வரும் கீதம்' பாடலுக்கு இசைஅமைத்தவர். 17 வயது வரை நான் வாழ்ந்த வாழ்க்கையில், நான் ரசிகனாகவே இருந்திருக்கிறேன்.
தயிர் கடைய, கடைய மெல்ல, மெல்ல அணுக்கள் கூடி, கூடி வெண்ணையாக திரள்வது மாதிரி நான் மற்ற படைப்புகளால் கடையப்பட்ட போது கவிஞனாக திரண்டுவிட்டேன்.
* காதல், சமூகப் பாடல்கள்...
சமூகப் பாடல்கள் எழுதுகிற போது என் மனதும், வாழ்வும் ஈடுபடுகிறது. காதல் கவிதை எழுதுகிற போது தென்றல் வந்து தொட்டுவிட்டு போகிறது. 'எரிமலை எப்படி பொறுக்கும்', 'கனவு காணும் வாழ்க்கையாவும்', 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்', முத்து படத்தில் இடம்பெற்ற 'ஒருவன் ஒருவன் முதலாளி...' இது போன்ற பாடல்களை எழுதாளர் திரையுலகிற்கு வந்தேன். நான் வந்த போது திரையுலகத்தின் உள்ளீடுகள் எல்லாம் தீர்ந்து போயிருந்தன. சினிமா என்பது வெறும் வாழ்வியல் பதிவு என்று வந்த போது, என் பசிக்கு தீனி இல்லையோ என்று ஏங்கிப்போனேன்.
காதல் பாடல்கள் எழுதுவது, என் அனுபவம் கொஞ்சம், என்று கூட சொல்லலாம். இதுவரை வந்த காதல் பாடல்களில், என் பழைய அனுபவங்களில் கொஞ்சத்தை சொல்லியிருக்கிறேன். நீங்கள் பார்த்ததெல்லாம் என் காதலின் நுனி மட்டும் தான். என் காதலின் ஆழத்தை நான் திரையுலகில் இன்னும் இறக்கி வைக்கவில்லை. அந்த நினைவுகளில், நான் இளமையாக இருக்கிறேன். காதல் நினைவுகளே ஒருவரை இளமையாக்கும் என்றால் காதலிப்பவர் இளமையாக இருப்பார் அல்லவா! நான் காதலிக்கவும் செய்கிறேன்.
* மதன் கார்க்கி, கபிலன்....
எனக்கு பிறகு இந்த பாடல் என்ன வடிவத்தில் பிறக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அந்த சந்தேகத்தை தீர்க்கிறவன் என் வீட்டிலிருந்தே வருவான் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. காரணம் என் பிள்ளைகளுக்கு கணிப்பொறி தான் கற்றுக் கொடுத்தேன். ஒரு கவிஞன் வீட்டில் உற்பத்தியான இரண்டு கணிப்பொறியாளர்கள், வெளிநாட்டு பல்கலையில் படித்துப் பட்டம் பெற்றவர்கள்.
மதன் கார்க்கி 23 வயதில கணிப்பொறி துறையில் டாக்டர் பட்டம் பெற்றார், கபிலன் மாஸ் கம்யூனிகேஷன் படித்து வந்தார். இருவரும் தங்கள் துறைகளில் வித்தகர்களாக வருவார்கள் என்று நினைத்தேன். இவர்கள் கற்ற கல்வி அவர்கள் மூளையை மட்டும் தான் தொட்டிருக்கிறது. அவர்களுக்குள் இருந்த மரபணுக்கள் இதயத்தை தொட்டுவிட்டன.
மரபணுக்களில் தான் மனிதன் பரிமாணம் ஆகிறான், மூளையால் அல்ல. 'எப்படி கவிதை மேல் காதல் வந்தது' என்று, கேட்டேன். '7 வயதிலிருந்து அம்மாவும், நீங்களும் பேசியதை பக்கத்திலிருந்து கேட்ட எங்களுக்கு கவிதை வராமல் எங்கே போகும்' என்றார்கள்.
* இன்றைய தொழில்நுட்ப யுகம்?
இது ஒரு புதிய பரிணாமம். யாப்பிலக்கணம், தொல்காப்பியம், நன்னுால், சங்க இலக்கியம், கம்பனும், ஷேக்ஸ்பியரும் கலந்த கலவையில் நான் பிறந்து வந்தேன். தொழில்நுட்பம் இல்லை என்றால் ஒரு அணுவையும் நகர்த்த முடியாது.
கைப்பேசிக்குள் உலகத்தை அடக்கத் தெரிந்தவன் தான் இனி கற்றவன். முதலில் எழுத்தறிவு உள்ளவன், இல்லாதவன் என்ற இரண்டு வர்க்கம் உண்டானதை போல, கணிப்பொறி இயக்க தெரிந்தவன், இயக்கத் தெரியாதவன் என்ற இரண்டு வர்க்கம் உருவாகியிருக்கிறது.
கணிப்பொறி கற்றவனுக்கு, கணிப்பொறி இயக்கத் தெரியாதவன் கல்லாதவன். தொழில்நுட்பம் மனிதனை இயக்குகிறதா, தொழில்நுட்பத்தை மனிதன் இயக்குகிறானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Girija - Chennai,இந்தியா

  என்ன வார்த்தை ஜாலம் காட்டினாலும் வாய் கொழுப்பால் இப்போது "வடை போச்சே வைரமுத்து " என்ற பட்டத்திற்கு நீங்கள் சொந்தக்காரர். கவியரசர் என்றல் அது கண்ணதாசன் தான்.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  இதைத்தானே கருணாநிதியும் நீங்களும் மாறி மாறி செய்துகொண்டிருக்கிறீர்கள்.

 • Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா

  மெட்டுக்கும் துட்டுக்குமே வார்த்தைகளை எழுதி அதை பாடல் என்று சொல்லி கலைஞருக்கு ஜால்ரா போட்டு பணம் புரட்டிய இவரை கவிஞர் என்று எப்படி சொல்ல முடியும். அவர் எத்தனை வெண்பா எழுதி இருக்கிறார். சரி வார்த்தை எதுகை மோனை எத்தனை பாடல்களில் உள்ளன. வித்தை சொல்லியபடி வாழ்ந்தாரா ? பார்த்தவுடன் பாட்டெழுத பாரதியை போல , வாலியை போல முடியுமா ?

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  ஜி raamanaathan,k.v.மஹாதேவன் ,ilayaraajaa,a.r.ரஹ்மான் இவர்களை போற்றுகிறவர் ஏன் m.எஸ். விஸ்வநாதனை குறிப்பிடவில்லை ..?,,,,கண்ணதாசன் கவிதையில் கரைகிறார் என்றால் ....em. எஸ் விஸ்வநாதன் இசையிலும் இவர் கரைந்திருக்க venumei ....அவர் பெயரை நினைவு கூற மறுத்த காரணம் என்னவோ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement