Advertisement

காலத்தை வென்ற கர்மவீரர் - இ்ன்று காமராஜர் பிறந்தநாள்

“பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, நம் பாரதத் தாயின் கையில் பூட்டப்பட்டிருந்த அடிமை விலங்கினை உடைக்க, மக்களாட்சியின் உண்மைப் பலனை மக்களுக்கு தந்த அறிவார்ந்தவர்கள் பலர். தன்னலம் துறந்து, தேசப் பணிக்கும் மக்கள் பணிக்கும் உயிர், உடமைகளை அர்பணித்து இன்றும் நம்மிடையே வரலாறாய் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் நம் 'கருப்பு காந்தி' காமராஜர்.
காமாட்சியின் பிறப்பு : தென் தமிழகத்தில் விருதுபட்டியில் (இன்றைய விருதுநகர்) தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்த குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையாரின் மகனாக 1903- ஜூலை 15ல் பிறந்தார் காமராஜர். தந்தையின் ஆசைப்படி, குடும்ப குலதெய்வம் காமாட்சியம்மனின் பெயரான “காமாட்சி” என்ற பெயரை குழந்தைக்கு முதலில் சூட்டினர். ஆனால் தாயார் சிவகாமி தன் செல்லக் குழந்தையை “ராஜா” என்றே அன்புடன் அழைத்தார். நாளடைவில் தந்தையின் ஆசைப்பெயர் காமாட்சியும் தாயின் அன்புப் பெயர் ராஜாவும் இணைந்து “காமராஜர்” ஆனது.
விடுதலை வேள்வி : 1919- ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை ஒவ்வொரு இந்திய இளைஞனின் இதயத்திலும் துளைத்தது. இந்நிகழ்வு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை தேச விடுதலைப் போராட்ட களத்திற்கு அழைத்து வந்தது. அதில் 16 வயது மட்டுமே பூர்த்தியடைந்த தேசப்பற்று மிக்க இளைஞன் காமராஜரும் ஒருவர். நாட்டு விடுதலைப் போராட்டத்தை முன்நின்று நடத்திய, காங்கிரஸ் தீவிரவாத பிரிவின் சென்னை மாகாண தலைவர் சத்தியமூர்த்தின் நாவன்மையால் ஈர்க்கப்பட்டு அவரின் சீடரானார் காமராஜர். அதே வேளையில் காந்தி, கொள்கையற்ற அரசியல், உழைப்பற்ற செல்வம், மனசாட்சியற்ற மகிழ்ச்சி, பண்பாடற்ற கல்வி ஆகியவை மிகப்பெரிய சமூக பாவங்கள் என்றார், இவற்றை மனமார ஏற்ற காமராஜரின் விடுதலைப் போராட்டங்கள் பெரும்பாலும் காந்திய வழி அறப்போராட்டங்களாகவே இருந்தன. 1920-ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைத்துக் கொண்டு 1923-ல் தமிழகத்தில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். நாகபுரியில் கொடிப் போராட்டம், மதுரையில் கருப்புக் கொடியுடன் “சைமனே திரும்பிப் போ” என ஆர்ப்பரித்து போராட்டம், சாமானியனை பாதித்த உப்பு வரிக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம், காந்தியின் “செய் அல்லது செத்துமடி” என்ற முழக்கத்துடன் துவக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டம் என இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெருவாரியான போராட்டங்களில் தாய் நாட்டின் விடுதலை வேள்விக்கு தன் இளமைக் காலத்தை காணிக்கையாக வழங்கியவர்.
வெள்ளை உள்ளம் : இந்த சுயநல பூமியில், தனக்கென வாழாமல் தனக்கென செல்வங்களை குவிக்காமல், இந்த நாட்டையே வீடாக கருதி நாட்டு மக்களை தன் குடும்பத்தினராக கருதிய இந்த கருப்பு மனிதனின் நேர்மையான வெள்ளை உள்ளம் எப்பொழுதும் ஆச்சர்யமே!காமராஜர் ஒரு முறை பிரதமர் நேருவுடன் அரசியல் பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், நேரு எடை மேடையில் ஏறி தனது எடையைப் பார்த்தார்; பின்பு காமராஜரை எடை பார்க்க சொன்னார். ஆனால் காமராஜரோ தயக்கம் காட்டினார். இதை அறிந்த நேரு காமராஜரிடம் காசு இல்லை என்பதை அறிந்து தன்னிடம் இருந்த காசைக் கொடுத்து எடைப் பார்க்க சொன்னார். பணத்தின் மீது பற்றில்லாத காமராஜரை கண்டு பிரதமர் நேரு மெய்சிலிர்த்தார்.உண்மை உள்ள இடத்தில் பயம் சிறிதும் இருக்காது அதனிடம் வஞ்சம், கபடம் போன்ற எந்தக் கலப்படமும் இல்லை என்ற மகாவீரரின் வார்த்தைக்கிணங்க 1954-ல் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தனது மந்திரிகளை “பிரச்னைகளைச் சந்தியுங்கள், தவிர்க்காதீர்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள், அவை எவ்வளவு சிறிதாக இருந்தாலும்” என்றார்.
சீருடை திட்டம் : சமூக நீதியை நிலைநாட்ட ஆதிதிராவிடர்களின் தலைவரான இரட்டை மலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக்கினார். ஒரு காலத்தில் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிக்கு, கோவிலின் முதல் மரியாதை பரிவட்டம் கட்ட வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தினார். ஜாதி, மத பேதத்தை பிஞ்சுகளின் மனதிலிருந்தும் முற்றிலும் ஒழிக்கவே பள்ளிகளில் சீருடை திட்டம் கொண்டு வந்தார். சமூகத்தில் அனைத்து பிரிவு மக்களிடமும் பரிவு காட்டியதால் தான் “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கவிஞர் கண்ணதாசன்.ஆட்சிக் கலையை, 'தலைமை அறிவியல்' என்றார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. அவரின் இந்த வரிகளுக்கு தீர்க்க தரிசனத்தை தந்தவர் காமராஜர். மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியலையும், ஆட்சிக் கலையையும் சிறப்பாக கையாண்டு, தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் நெருங்க இயலாத இடத்தை பிடித்து விட்டார். வரலாறு என்பது மாமனிதர்களின் வாழ்க்கைத் தொகுப்பு என்றார் தாமஸ் கார்லைல்.
திறமையான நிர்வாகி : தமிழக முதல்வராக காமராஜர் வழங்கியது, திறமையான துாய்மையான நிர்வாகம். இதற்கு தக்க சான்று 1954-ல் முதலமைச்சராக பதவியேற்றது முதல் 1963-ல் காமராஜர் திட்டப்படி, பதவியைத் துறந்த வரையில் கல்வித்துறையில் கிராமம் தோறும் பள்ளிகள், 11-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி, மதிய உணவுத்திட்டம், தொழில்துறை வளர்ச்சிக்காக பொறியியல் கல்லுாரிகள், மக்கள் உடல்நலம் காக்க மருத்துவக் கல்லுாரிகள், விவசாய தோழர்களின் நலன் காக்க கால்நடை மருத்துவக் கல்லுாரிகள், ஆசிரியர் பணி சிறக்க ஆசிரியப் பயிற்சி கல்லுாரிகள் அமைக்கப்பட்டன.தொழில் துறையில் மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் ஏராளமான தொழிற்சாலைகள், விவசாய உற்பத்தியைப் பெருக்க அணைக்கட்டுகள், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த கால்வாய்கள், சமூக ஏற்றத்தாழ்வைக் குறைக்க நிலச்சீர்திருத்த சட்டங்கள், ஜமீன்தார் ஒழிப்புச்சட்டம், மின் ஆற்றலை பெருக்க அனல் மற்றும் நீர்மின் திட்டங்கள் என கர்மவீரர் காமராஜரின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.தமிழக முதல்வராக காமராஜர் புரிந்த சாதனைகளை சில பக்கங்களில் நிரப்புவது என்பது இயலாதது. எளிமை, உண்மை, நேர்மை, நிறைந்த காமராஜர் ஆட்சிக் காலம் இன்று பழங்கதையாக உணரப்படுகிறது. ஆனால் காமராஜரின் ஆட்சிக்காலத்தை நன்கறிந்தவர்கள் அக்காலத்தை ஒரு அதிசயக் கனவாகவே எண்ணி அசை போடுகின்றனர்.
காலத்தை வென்றவர்
9 ஆண்டுகள் நாட்டு விடுதலைக்காக சிறைவாசம்.5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசின் தலைவர்.12 ஆண்டுகள் தமிழக காங்கிரசின் தலைவர்.5 முறை சட்டப் பேரவை உறுப்பினர்.4 முறை பாராளுமன்ற உறுப்பினர்.9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்.லால் பகதுார் சாஸ்திரி, இந்திரா காந்தி என இரண்டு பிரதமர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டிய கிங்மேக்கர்.இத்தனை பதவிகளும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்ந்த அந்த மாமனிதனிடம் இறுதியில் இருந்தது 60 ரூபாய் மற்றும் 10 கதர் வேட்டி சட்டை மட்டுமே. தன் வாழ்நாள் முழுவதும் காந்தியத்தை காதலித்த காமராஜர், காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் நாளில் கண்மூடினார். அவர் பயன்படுத்திய வாகனத்தை அவரின் கட்சி எடுத்துக் கொண்டது.அவரின் உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது.அவரின் ஆன்மாவை பஞ்ச பூதங்கள் தமதாக்கிக் கொண்டது.காமராஜர் என்ற பெயரையும் அவரின் சாதனைகளையும் வரலாறு எடுத்துக் கொண்டது.
-முனைவர். சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர், அருப்புக்கோட்டை. 7810841550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  அவரது வழியை பின்பற்றாமல் தமிழ்நாடு ஒருபோதும் முன்னேறமுடியாது .

 • $$$$ - $$$$,இந்தியா

  தலை வணங்குகிறேன்...நீங்கள் கடவுளுக்கு சமானமானவர் அய்யா......உங்களை இந்த தமிழ் நாட்டில் பிறக்க வைத்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன்......

 • mohanasundaram - chennai,இந்தியா

  அருமையான பதிவு.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  காமராஜர் அரசியல் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணம். அது காந்தி காலம்.. பிறகு இந்திரா காந்தி காலம். a dynamic and mighty PM who dared to liberate Bangladesh.. அப்புறம் சோனியா காந்தி காலம்.. அந்நிய முதலீடு, தாராள மயமாக்கல், பணம் ,,,பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் indirect colonisation காலம். இப்போ மோடி காலம். இவர் என்ன பண்ண போறார் என்று தெரிய வில்லை ... என்னவோ செய்யுறார்.. எப்படி முடிய போகுது என்பது காலம்தான் சொல்ல வேண்டும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement