Advertisement

திட்டமிடுங்கள்...செயல்படுத்துங்கள்!

“செயலைத்திட்டமிடு, திட்டமிட்டபடி செயல்படு” என்பது சுவாமி சின்மயானந்தரின் பொன்மொழி. செயல் இல்லாத திட்டங்கள் வெறும்கனவுக் கோட்டைகள், காற்றில் கலையும் மேகங்கள். திட்டமில்லாத செயல்களோ சேமிப்பற்று வீணாகும் மழைநீர் போலாகும். வெற்றியை எல்லோரும் விரும்பினாலும், வெகுசிலரே அதனை அடைகின்றனர். என்ன காரணம்? அதுதிட்டமிடுதலுக்கும், செயல்படுதலுக்கும் இடையில் உள்ள தொலைவைப் பொறுத்தே அமைகின்றது. இத்தொலைவைத் தொலைத்தோரே வெற்றிவீரர்கள்.திட்டமிடுதல் என்பது அறிவின் கூர்மை. அதனை செயல்படுத்துதல் மனதின்வலிமை. இவ்விரண்டின் சங்கமமே செயல். நம் இளைஞர்களுக்கு இது இன்றியமையாதபாடம். படைப்பின் ஆக்கப்பூர்வான நிகழ்வே செயல். செயலின்றி உலகில்லை. மகத்தான நிகழ்வுகளின் பின்னணியில், புலன்களுக்குப் புலப்படாத அதி நுட்பமானஅறிவின் வெளிப்பாடு இருக்கிறது. அந்தஅறிவு எல்லையற்றது. தெய்வீகத்தன்மை பொருந்தியது. நம்அனைவரிலும் மேலோங்கி நிற்கிறது. அதுவெளிப்படும் தளம் மனம். பின்பே செயலாக்கம் பெறுகின்றது. “மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே “ என்கிறது சித்தர்பாடல். அறிவுசெயலாக்கம் பெற மன ஒருமுகப்பாடுஅவசியம்.
எண்ணியதை அடைதல் : அகமாகிய அறிவும், புறமாகிய செயலும் இணைந்தாலன்றி எண்ணியதை அடைதல் என்பது எட்டாத கனியே. அறிவையும், செயலையும் இணைப்பது மனமே. செயல்என்பது உடலாலும், புலன்களாலும் மட்டுமே செய்யப்படுவதுஇல்லை. அதன் பின்னணியில் எதையும் ஆழ்ந்துசிந்திக்கும் அறிவும்,அதனைசெயல்படுத்தும் மாசற்ற மனமும் மாபெரும் சக்திகளாக நிற்கிறது. அறிவையும்,மனதையும் ஒருங்கிணைத்து செய்யப்படும் செயல்களே மாபெரும் சாதனைகளாக உருமாற்றம் பெறுகின்றது. மகாபாரதத்தில் பாண்டவர்களின் அறிவாக விளங்கியவர் ஸ்ரீகிருஷ்ணர். அவர்களுக்கான எல்லா திட்டங்களையும் வகுத்துக்கொடுத்தவரும், பாண்டவர்களின் ரதத்தை போர்களத்தில் செலுத்திய சாரதியும் அவரே. அத்திட்டங்களை திறம்பட செய்துமுடிக்கும் ஆற்றல் அர்ஜுனனிடம்இருந்தது. திட்டங்களைத்தீட்டுவதற்கு தெளிவானபுத்தியும்,அதைசெயல்படுத்துவதற்கு சலனமற்ற,கட்டுக்கோப்பான,குவிந்தமனமும் தேவை. பலகிளைகளாக பரந்து விரியும் மனதால் எதையும் செயல்படுத்த இயலாது.
நம்முடைய உடலே ரதம் : (தேர்). தெளிந்த அறிவே சாரதி (தேரோட்டி ). மனமே கடிவாளம் . நம்புலன்களே வலிமையான குதிரைகள் . அத்தேரில் அமர்ந்திருப்பவன் தன் புலன்களை மனதின் கட்டுப்பாட்டிலும் , மனதை அறிவின் வசத்திலும் நிலைபெறச்செய்தால் தான் குறித்த இலக்கை விரைவில் அடைகின்றான். இதை அறிந்தோரே செயலைக் குறித்து முழுமையாக அறிந்தோராவர்.
திட்டமிடுதல் : ஒருசெயலை திட்டமிடுவதால் காலவிரயத்தை தவிர்ப்பதோடு மட்டுமின்றி நம் சிந்தனைகளும் ஒழுங்குபடுகின்றது. குழப்பங்கள் முழுமையாக தவிர்க்கபடுகின்றது. விதிமுறைகளே இல்லாத விளையாட்டு வெறும்கூச்சலில் முடிவது போல் திட்டமில்லாத வாழ்வு நாமே நம் காலடியில் நாமே தோண்டிக்கொள்ளும் கவலைக் கிணறாகும். “எண்ணித்துணிக கருமம் “ என்கிறார் வள்ளுவர். நாம்திட்டமிடத் தவறினால், தவறிழைக்கவே திட்டமிடுவது போலாகிவிடும்.காலமே அனைவருக்கும் மூலதனம்.அதுவஞ்சகமின்றி அனைவருக்கும் பொதுவாகவே இருக்கிறது.
வெற்றிக்காக வியர்வை சிந்துபவனுக்கும்,வேலையின்றிவிரயம் செய்பவனுக்கும் நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் தான். காலத்தை சரியாக அட்டவணைப்படுத்தி, செயல்புரிந்தோரே சிகரங்களைத் தொட்டனர். ஒருநாளை திட்டமிடாமல் சந்திப்பதென்பது பெரிய குற்றமாகும்.
செயல்படுதல் : நாம்திட்டமிட்டபடி செயல்படவேண்டுமெனில் நமக்கென்றுசில விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.அதைகண்ணியத்துடன் கடைபிடிக்கவேண்டும்.அதுவே சுயகவுரவத்தை நமக்கு அளிக்கும்.இல்லையெனில்நம்மை அழிக்கும்.நம்வாழ்வில் சில விதிமுறைகளை நிர்ணயித்துக் கொண்டு வாழ்வதே பூரண சுதந்திரமாகும். திட்டங்கள்விரைந்து செயல்பட துணை நிற்கும். விதிமீறல் சுதந்திரமல்ல. அது நம்மை புறச் சூழலுக்கு நாமே அடிமைப் படுத்திக் கொள்ளும்இழிநிலை.
வலுப்பெறும் மனம் : அடுத்ததாக நாளை வரும் செயலை நிகழ்காலத்திலேயே செய்கின்றோம்.அதுவே சாத்தியம். செயலை கடந்த காலத்திலேயோ அல்லதுஎதிர்காலத்திலோ செய்ய இயலாது.எதிர்காலத்தை உருவாக்கும் திறன்நிகழ் காலத்திற்கு மட்டுமேஉண்டு.ஆகவேசெயல் புரியும் பொழுது கடந்தகால நினைவுகளின் குறிக்கீடுகளோ, எதிர்காலத்தைகுறித்த அச்சமோ, அல்லது நிகழ் காலத்தில் பதட்டமோ இல்லாதிருத்தல் அவசியம். கடந்தகால அனுபவங்களும், எதிர்காலம் குறித்த திட்டங்களும், நிகழ்காலத்தில் துணை நின்றால் தவறில்லை. பயிற்சியினாலும், இலக்கைத் தவிர்த்துப் பிற விஷயங்களில்ஏற்படும் பற்றற்ற தன்மையினாலும் மனம் வலுப்பெறுகின்றது.வலுவானமனம் அறிவின் ஆழத்தை அச்சமின்றித்தொடும் ஆற்றலைப் பெறுகின்றது. அதுநம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுகின்றது. நம்மைச்சுற்றிலும் ஓர் பயனுள்ளதாக்கத்தை ஏற்படுத்துகின்றது. “எண்ணிய எண்ணியாங்கு எய்துப” என்கிறது வள்ளுவம். நம்முடைய எண்ணங்களை நாம் எண்ணியவாறேசெயலாக மாற்றும் அற்புதத்திறனே யோகம் என்கிறது பகவத்கீதை. முயற்சி அதன் அடித்தளம். முயற்ச்சியினின்று நழுவாதிருத்தல் வீரம்
எதுபலவீனம் : மனத்தளர்ச்சியே பலவீனம். பலவீனர்களால் எதையும் எட்டமுடியாது. நான்குவிஷயங்களை பலவீனமாகக்கூறுகின்றது வள்ளுவம்.முதலாவதாக எதையும் காலம் தாழ்த்திச்செய்வது (நெடுநீர்). காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. அதைமதிப்பவனே மனிதன்.இரண்டாவதாக நினைவாற்றல் இன்மை ( மறதி ). அறிவில்மந்தத் தன்மை.செயலில்கவனமின்மை மற்றும் மனதில்உற்சாகமின்மை இவற்றினால்எழுவதே மறதி. இடைவிடாதஒருமுகப்பட்ட தியானப் பயிற்சிநல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். மூன்றாவது சோம்பல் (மடி). கதிரவனைக் கண்டவுடன் கணநேரம் கண்விழித்துப் பின் முழுமையாகதன்னை மூடிக் கொண்டு உறங்கும்ஒருவித நோய்.சோம்பலுடையோர் இதிலோர் சுகமிருப்பதாக சத்தியமிட்டுச் சொல்வர். சோம்பல்நீங்க வேண்டுமெனில் நம் அன்றாடசெயல்முறைகளில் நீண்ட காலமாக ஓர் சுய ஒழுக்கத்தைக்கடைபிடித்தல் அவசியம். நான்காவது துாக்கம் (துயில்). உணவு, உறக்கம்,மற்றும்உலகியல் ஈடுபாடுகளில் மிதமானபோக்கை கடைபிடிப்பவன் துாக்கத்தை வசப்படுத்துகின்றான்.அறியாமைகூட ஆழ் நிலைத் துாக்கம்தான்.ஆகவே இந் நான்கையும் தவிர்ப்பவன் செயலின் ரகசியத்தை அறிந்து தன்னை தானே உயர்த்திக்கொள்கின்றான்.
பொறுப்பு : செயல்புரிவோர் பொறுப்புமிக்கோர்களாக இருத்தல் அவசியம். பொறுப்பு மனிதனுக்கான தனி முத்திரை. நம்மை உலகோருக்கு வெளிச்சமிட்டுக்காட்ட உதவும் வெண்திரை. ஒருமனிதனை வேறொரு மனிதனிடத்தில்இருந்து வேறுபடுத்திக்காட்டும் மாயாஜாலம். பொறுப்புடையோர் புகழையோ, மரியாதையையோ உலகிடம் எதிர்பார்த்து நிற்பதில்லை.செயலைமதிக்கும் அவர்களுக்கு உலகமே மரியதையை வழங்குகிறது. பொறுப்பு சுமையல்ல. சுகம்.விதியின்திறவு கோல். இளையதலைமுறையினர்க்கு இது துன்பம் துடைக்கும் துாண்.“பொறுப்பனைத்தையும்உன் தோளில் சுமந்து உன் வாழ்வின்விதியை நிர்ணயிப்பவன் நீயேஎன்றறிந்து கொள்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.ஆகவேதான் திட்டமிடுதலும், செயல்படுதலும் அதற்கான மனவலிமையை வளர்த்துக்கொள்வதும் மனித வாழ்விற்கு மணம் சேர்க்கும். வாழ்வோம்!வளர்வோம்!
- சுவாமி சிவயோகானந்தா
சின்மயா மிஷன், மதுரை
94431 94012

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement