Advertisement

அழுதால் கொஞ்சம் நிம்மதி!

அழுகை என்பது மனிதர்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. அழுது கொண்டே பிறக்கிறோம். அழுதுகொண்டே வாழ்கிறோம். அழுதது போதுமென்று அடங்குகிற போது அழுதே நம்மை அனுப்பி வைக்கிறது நமது உறவும் நட்பும். அழுவதென்னவோ கோழைத்தனமென்று தவறான கருத்து நம்மிடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆண்கள் அழலாமா? என்றுகூட நம்மவர்கள் கேட்பதுண்டு. அழுவது கோழைத்தனம் அல்ல. அழுகை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு. அதை வார்த்தைகளற்ற உணர்வின் மொழி என்றும் கூறுவதுண்டு.மகிழ்ச்சியாக இருந்தாலும், மனவருத்தமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும் அது அழுகையால் வெளிப்பட்டுவிடும். வெளிப்படாமல் மனதில் அழுத்தி வைக்கப்பட்டால் அது மன இறுக்கத்தையும் மனநலக்குறைவையும் ஏற்படுத்திவிடும். பெரும்பாலும் மனநோயாளிகள் அழுவதில்லை. அதிகமாக சிரிப்பார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். நலமாக இருப்பவர்களுக்குத்தான் அழுகை வரும். அழுதுகொண்டே பிறக்கிற குழந்தைகள்தான் ஆரோக்கியமான குழந்தைகள்.
முதல் மொழி : குழந்தை பிறக்கிற போது அதற்கு மொழி கிடையாது. ஆனாலும் அது தாயிடமும் பிறரிடமும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். பசிக்கிறபோது பால் கேட்க வேண்டும்; வலிக்கிறபோது வெளியே சொல்ல வேண்டும். அதற்காக இறைவன் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கிற முதல் மொழியே அழுகைதான். துன்பத்தை அழுகை வெளிப்படுத்துவதுபோல ஆனந்த மேலீட்டையும் வெளிக்காட்ட உதவுகிறது. ஆனந்தக்கண்ணீர் என்று அதை அழைக்கிறோம். போட்டிகளில் பரிசுகள் பெறுகிற போதும், கலைஞர்கள் விருது பெறுகிற போதும் உணர்ச்சி வசப்படும் வெற்றியாளர்கள் ஆனந்தக் கண்ணீர் வார்ப்பதையும், பேசமுடியாமல் தவிப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
ஆனந்த கண்ணீர் : பிரிவுத்துயரம் அழவைப்பதைப் போலவே சேரும்போதும் அழத்தோன்றுவது மரபு. இந்த மெல்லிய உணர்வையும், மகத்தான மகிழ்வையும் கண்ணதாசன் அழகாக ஒரு திரைப்படப்பாடலில் நமக்கு தருவார். “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி” என்று. இப்போதும்நாம் நீண்ட நாட்களாக வெளியூரில் தங்கியிருந்து வீடு திரும்பும் பிள்ளைகளை ஆரத்தழுவி வரவேற்கிற பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வார்ப்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அவர்களெல்லாம் கோழைகள் என்றா அர்த்தம்?மனிதன் தன்னைக் கண்டெடுப்பது சோகத்தில்தான். ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தாம்சன் “கண்ணீரால் கழுவப்பட்ட கண்களுக்குத்தான் புனித தரிசனங்கள் கிடைக்கும்” என்கிறார். அழுவதால் வலி குறைகிறது; வருத்தம் விடைபெறுகிறது என்பதைப்போலவே மன இறுக்கமும் தளர்கிறது. மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை அழுகை கரைப்பதால் மனம் இலகுவாகிறது. மனம் இலகுவாகாதபோது மனநலம் குன்றுகிறது. மரணம் சம்பவிக்கிற வீடுகளில்கூட அழுவதென்கிற பழக்கம் இருப்பதே துயரங்களைச் சற்றுத் துடைக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
லார்ட்டென்னிசன் எழுதியுள்ள 'த வுமன் ஷீ வெப்ட்” என்ற நாவலில் ஒரு காட்சி வரும். போருக்குச்சென்ற கணவன் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். கணவனின் பூதவுடல் வீடு வந்து சேர்கிறது. அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகிற அந்தஇளம் மனைவியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அழுகை இல்லை என்ற நிலை அவளை எந்த முடிவுக்கும் கொண்டு சென்றுவிடும் என்று கருதும் உறவினர்கள், அவளது மழலைச் செல்வத்தைக் கொண்டு போய் அவளுடைய மடியில் கிடத்தியதும் அழுது புரண்டு அரற்றுகிறாள். அழுத சற்று நேரத்தில்அவளால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்ததாய் கதை நகரும். சோகத்தை அழுது தீர்த்துவிட்டால் பாரம் குறைந்துவிடுகிறது. அழுகை நலம் மட்டுமல்ல, சமூகத்திற்கு நன்மையும்கூட. மனதத்துவ ரீதியாகக்கூட அழுகைப் படம் வந்த நாட்களில் சமூகம் சரியாக இருந்தது. காதல் படங்களும், வன்முறைப்படங்களும் நிரம்ப வருகிற இப்போதுதான் சமூகம் சீரழிந்து போயிருக்கிறது.ஆண்களைவிட பெண்களே அதிகமாக அழுவதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அழுதுதீர்த்துவிடுவதால் துயரத்தைத்தாங்கிக் கொள்கிற சக்தி ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகமிருக்கும். கணவனை இழந்த பெண்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். மனைவியை இழந்த கணவர்களின் சோகம் அவர்களை சீக்கிரம் கொண்டுபோய்விடுவது நடைமுறை. ஆண்டில் 30 முதல் 64 முறை பெண்கள் அழுகிறார்களாம். ஆறிலிருந்து 12 முறைதான் ஆண்கள் அழுகிறார்கள். அதுமட்டுமல்ல ஆண்களைவிட அதிகநேரம் அழுகிறவர்கள் பெண்கள் (குறைந்த அளவு 6 நிமிடங்கள்) என்றும், ஆண்கள் குறைவாகவே (குறைந்தது 2 முதல் 4 நிமிடங்கள்) அழுகிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. பெண்கள் அழுதே தம் காரியங்களைச் சாதித்துக் கொள்வதாக விளையாட்டாகக் கூறப்பட்டாலும் உடல் உபாதைகளும், உளச்சோர்வும் எளிதில் அவர்களை அழச்செய்து விடும். அழுவதால் அவர்கள் ஆண்களைவிட ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆன்மிகத்தில்கூட அழுகை குறித்த செய்திகள் நிரம்ப உண்டு. குறிப்பாக திருவாசகம் தீட்டிய மாணிக்கவாசகர், இறைவனிடத்தில் அழுதே காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்று உணர்த்தியவர். 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று சொல்லப்படுவதுண்டு. 'காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி' என்று இறைவனிடத்தில் உருகும் அவர் “அழுதால் அவனைப் பெறலாமே” என்றும் நம்மை ஆற்றுப்படுத்துகிறார்.
கவிஞன் அழுதால்... : உலகப்புகழ் வாய்ந்த நகைச் சுவை நடிகர் நம்மையெல்லாம் சிரிக்க வைத்தே விலாப்புடைக்கச்செய்தவர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கையோ சோகமயமானது. அடிக்கடிஅழுது விடுவார் அவர். “மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும் ஏனெனில் என் கண்ணீர் அப்போதுயாருக்கும் தெரியாது” என்பார் அவர். நலமான கண்கள் கண்ணீரால் நனைய வேண்டும். கண்ணீர்வருவதில்லை என்பதுகூட ஒருநோய்தான். கருணை,கண்ணியம், கரிசனம் ஆகியவற்றின் அடையாளம் தான் கண்ணீர். நமதுதுயரமும், வலியும் நம்மை அழச்செய்வதுபோல அடுத்தவர் துயரிலும், துன்பத்திலும் நாம் வாட வேண்டும். பொதுவாக இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறவர்களில் கவிஞர்களே முதலிடம் பெறுவர். 'என் கண்ணீரைத்தான் நீங்கள் கவிதைஎன்கிறீர்கள்' என்கிற கவியரசர் கண்ணதாசன்,'வானம் அழுவது மழையெனும்போதுவையம் அழுவது பனியெனும் போதுகானம் அழுவது கலையெனும்போதுகவிஞன் அழுவது கவிதையாகாதா…'என்றுகேட்டார்.தன்வலி, தன்துயரம், தனதுசோகம், தனது இழப்பு, தனதுதோல்விக்காகவும் அழுங்கள்! அது மனதுக்கு இதம் தரும். அதுபோல அடுத்தவருக்காகவும் கொஞ்சம் அழுங்கள். அதனால் மானுடம் மாண்புறும். அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது அழுங்கள். பாரத்தை இறக்கி வைத்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள். நிறைவாக ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருகிறார்கள். வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச் சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார், அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்: “நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று. “அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா? அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல் இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும் பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்” என்று!
-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுத்தாளர்சென்னை94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Rajesh Jeyaprakash - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

  நல்ல கட்டுரை எல்லோரும் ஒரு முறை படித்தால் எளிதில் கண்ணீர் உணச்சியை புரிந்து கொள்ளலாம்

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  இதற்காகத்தான் பெண்கள் சீரியலைப் பார்க்கிறார்களா? ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணனுக்கு என்ன சோகமோ, இங்கு கொட்டி அழுகிறார். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமென்பர்.

 • gopinath - BANGALORE ,இந்தியா

  அற்புதமான கட்டுரை - வாழ்த்துக்கள்

 • mvsrinivasan srinivasan - chennai,இந்தியா

  நன்றாக எழுதி உள்ளீர். கடைசியாக முடிவது அவர் நாளையிலேர்ந்து அழுவார்” என்று சொல்வது நன்றாக இல்லை

 • Chandra Sekar - Chennai (Madras),இந்தியா

  பாராட்டுக்கள் , கட்டுரைக்கும் மற்றும் உங்கள் பெயருக்கு முன் ஊர் பெயருடன் சேர்த்த உங்கள் அருமையான படைப்புக்கு.

Advertisement