Advertisement

துஷ்டரைக் கண்டால் துரத்தி அடி!

'நாட்டில் நடக்கும் பல கொலைகளுக்கு, அரசும், சட்டம் - ஒழுங்கு சீரழிந்ததும் தான் காரணம்' என, பலர் அறிக்கை விடுகின்றனர். சென்னை, ராயப்பேட்டையில், நான்கு பெண்களை கொலை செய்தவன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை துள்ளத் துடிக்க, வெட்டிக் கொன்றவன் போன்றோருக்கும், அரசுக்கும் என்ன தொடர்பு?
இதற்கெல்லாம் எது காரணம் என்றால், தனி மனித ஒழுக்கக்கேடுகள் தான். அரவை இயந்திரத்தில் எதைப் போட்டாலும் அரைத்துக் கொடுத்து விடும். ஆளைக் கொல்லும் அரளி விதைகளை அரைக்கும் அதே இயந்திரம், ஆயுளைக் காக்கும் மருந்துகளையும் அரைத்துக் கொடுக்கும்.அந்த அரவை இயந்திரம் போன்ற திறமையான வழக்கறிஞர்களை வைத்து, எப்படிப்பட்ட குற்றங்களிலும் வாதாடி, ஜெயித்து விடலாம் என்ற நினைப்பில் தான், பல குற்றவாளிகள், 'ஆயுத பூஜை' போட்டு, களத்தில் இறங்குகின்றனர். நீதியின் துாதுவர்கள், அரவை இயந்திரங்கள் போல அல்லாமல் அன்னப் பறவை போல இருக்க வேண்டும்.
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை இன்றைய இளைய தலைமுறைகளிடம் தொழில்நுட்பங்கள் சென்று விட்டன. புதுமைகளில் அவர்கள் புரள ஆரம்பித்து விட்டனர். அம்மா, அப்பா, கூடப் பிறந்தவர்கள் முகங்கள் மறந்து போகும் அளவிற்கு, மொபைல் போன்களிலும், இணையதளங்களிலும் தங்களை இணைத்து, குடும்பம், நட்பு, ஒழுக்கம், மனித நேயத்திலிருந்து துண்டித்து போய் விட்டனர்.அதுபோல, இந்த சமூகத்தை, பல விஷயங்கள் கெடுக்கின்றன. 'டிவி' தொடர்களில், குடும்ப வன்மம், கள்ளத் தொடர்பு, கற்புக் களவு போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்து, நடு வீட்டில் நச்சு ஒளியை பாய்ச்சுகின்றன.
காய்கறிகளை அரிகிறோமா அல்லது கைவிரல்களை அரிகிறோமா என்பது கூட தெரியாமல், இல்லத்தரசிகளின் இதயங்கள் பாதிக்கும் அளவிற்கு, 'டிவி' தொடர்கள் வியாபித்துள்ளன.ஒரு தொடரிலாவது சிரித்த முகத்தை பார்க்க முடியுமா? அப்படி ஒரு சிரிப்பை காண வேண்டுமென்றால், அது, அந்த தொடரில் வரும் வில்லன், வில்லியின் சிரிப்பாகத் தான் இருக்க முடியும்.சமீபத்திய தமிழ் திரைப்படங்களில், பொறுக்கித்தனமான பாத்திரங்களே, கதாநாயகர்களுக்குப் பொருத்தப்படுகின்றன. அன்று, ஒழுக்கத்தை போதித்த திரைப்படப் பாடல்கள், இன்று அழுக்கை காண்பிக்கின்றன. நம் சுற்றம், சூழல் கெட்டுப்போனதற்கு இப்படி பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இது போதாதென்று மது. குடித்த பின் தன் தாய், சகோதரிகளின் மீது மட்டும் பாசப் பார்வை; அடுத்த வீட்டுப் பெண்கள் மீது மட்டும் பாலியல் பார்வை. இதுபோன்ற நிலையில், சட்டம் - ஒழுங்கை செயல்படுத்த வேண்டியது யார் எனும் போது, காவல் துறை தான் கண்ணுக்குத் தெரிகிறது.ஆனால், காவல் துறை மீது மக்களுக்கு மரியாதை இருக்கிறதா அல்லது அச்சம் இருக்கிறதா என்றால், இரண்டும் கடுகளவு கூட இல்லை என்பது தான் உண்மை.
சினிமாவில், காமெடியன்களாகவும், வில்லன்களாகவும் காவல் துறையினர் சித்தரிக்கப்படுகின்றனர். திரைப்படங்களில் வரும் நகைச்சுவை நடிகர்கள் கூட, காவலர்களை, 'வாடா, போடா' என, ஒருமையில் திட்டுவதை காண முடிகிறது.ஒரு நடிகையைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட ஒரு நாளிதழுக்கு எதிராக, திரைப்படத் துறையினர் ஒன்று திரண்டனர். ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் காவல் துறை அதிகாரிகளை கேவலமாக சித்தரித்து வரும் நிலையில், இதுவரை ஒரு காவல் துறை அதிகாரி கூட, 'எங்களை இப்படி இழிவுபடுத்தலாமா?' என, குரல் எழுப்பவில்லையே... ஏன் என்பது தான் கேள்வி.
காவல் துறை மீது மரியாதையும், அச்சமும் எப்போது ஏற்படுகிறதோ, அப்போது தான் குற்றங்கள் குறையும். அதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல, பொதுமக்களுக்கு காவல் துறை நண்பனாக இருக்க வேண்டும்; பொறுக்கிகளுக்கு கூடாது.நேர்மையான ஒரு காவல் துறை அதிகாரியோ அல்லது நேர்மையான ஒரு வழக்கறிஞரோ பிரபலமாவதில்லை. ஆனால், ரவுடிகள் பிரபலமாகின்றனர். இந்நிலை மாறி, காவல் துறை அதிகாரிகள் எப்போது பிரபலமாகின்றனரோ அப்போது, ரவுடிகள் பிரபலம் ஆக முடியாது.
உண்மையில் பிரபலமாக வேண்டியவர்கள், பிரபலமடைவதில்லை என்பதற்கு காரணம், பெரும்புள்ளிகளின் தலையீடு, அரசியல் உள்ளீடு. 'போலீஸ்னா என்ன பெரிய கொம்பா...' என, கேட்கும் நிலையில் தான் இன்றைய காவல் துறை இருக்கிறது.தவறு நடந்த பின், அங்கு சென்று தடயம் தேடும் துறையாக காவல் துறை இருக்கக் கூடாது. பொதுமக்கள் மத்தியில் ஊடுருவி, இரண்டறக் கலந்து, குற்றங்களை தேடும் கண்காணிப்பு துறையாக மாற வேண்டும்.குற்றவாளிகளைப் பற்றி தகவல் அளிப்பவர்களை காவல் துறை நட்பாக வைத்துக் கொள்ள வேண்டும். காட்டிக் கொடுப்பவர்களை குற்றவாளிகளிடமே காட்டிக் கொடுக்கும், 'எட்டப்ப' வேலைகளை செய்யக் கூடாது.
இலை மறை, காய் மறையாக நடக்கும் பல குற்றங்களை பொதுமக்கள், காவல் துறையிடம் சொல்ல அச்சப்படுகின்றனர். ஏன் தெரியுமா... தகவல் தந்தால், காவல் நிலையம், நீதிமன்றம் என, நம்மை அலைக்கழிப்பர் என்பதால் தான். இதனால் தான், சுவாதி போல, ஆபத்தில் சிக்கியவர்களை வேடிக்கைப் பார்ப்பதோடு நின்று விடுகின்றனர்.எனவே, காவல் துறைக்கு உதவி செய்பவர்களை அலைக்கழிக்காமல், அவர்களுக்கும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி, கவுரவித்து, ஊக்கப்படுத்த வேண்டும்.
'பெண்கள் பாதுகாப்பு படை' என்ற பெயரில், 24 மணி நேரமும், '108' ஆம்புலன்ஸ் போல, காவல் துறையில் விரைவுப்படை துறையைத் துவக்க வேண்டும். அதுபோல, வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்னைகளை தீர்க்க, தனி அழைப்பு மையம் உருவாக்க வேண்டும்.இதுபோல, எவ்வளவு மாற்றங்களை செய்தாலும், தனி மனித ஒழுக்கம் இல்லாமல் சமுதாயம் திருந்த வாய்ப்பில்லை. கிரிக்கெட் போன்றவற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட, பள்ளி, கல்லுாரிகளில், நல்லொழுக்கம், சேவை, கட்டுப்பாடு போன்றவற்றிற்குமுக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
எனவே, பொதுமக்களே, குற்றங்களை வேடிக்கைப் பார்க்காதீர். காய வைக்கும் தானியங்களை கொத்த வரும் காகங்களை, கைதட்டி விரட்டுவதில்லையா...சுவாதி வெட்டப்பட்டு, அலறும்போது, அங்கு நின்ற அனைவரும் ஊமைகளா? பேசத் தெரிந்த நாம் சத்தமாகக் கூடவா கத்தக் கூடாது... பொது இடங்களில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக இனி கத்தப்பழகுங்கள்.பணிக்குச் செல்லும் சகோதரிகளே, படிக்கச் செல்லும் மாணவியரே, 'துஷ்டரைக் கண்டால் துார விலகு' என்பது பழம் மொழியாக இருக்கட்டும். இனி, 'துஷ்டரைக் கண்டால் துரத்தி அடி' என்பது, சுவாதி மொழியாக இருக்கட்டும்.இ-மெயில்: kattumanathozhilgmail.com - சிந்து பாஸ்கர் -'கட்டுமான தொழில்' மாத இதழ் ஆசிரியர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

    முன்காலங்களில் குற்றவாளிகளை பாதுகாக்கும் சுயநல ஆர்வலர்கள் ,சாதீய தீய கூட்டங்கள் இன்றைக்கு உள்ள அளவு வியாபித்திருக்கவில்லை .உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் தன்னார்வ மன்றங்கள் ஒருபுறம் எல்லாம் சேர்ந்து ஊடகங்களின் குறுக்கீடுகள் உடனடி திருப்பு செய்திகள் எல்லாம் காவல்துறை சுதந்திரத்தில் தடங்கல்கள் உண்டாக்கி வருவது ஒரு தொடர் நிலையில் உள்ளது .இதற்கெல்லாம் விடிவுவந்தால் தான் விளங்கும் .

  • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

    மருதகாசி இன் திரை பாடல் நினைவுக்கு வருகிறது தரையை பார்த்து நிற்குது பயிறு தான் நிலையை மறந்து மேலே பார்க்குது பதரூ அதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே எதெற்கும் அகத்ததெல்லாம் ஆட்டம் போடுது நாட்டிலே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement