Advertisement

தேச முன்னேற்றத்திற்கு தோள் கொடுப்போம்:இன்று விவேகானந்தர் நினைவுநாள்

இந்த புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத்துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியையும் காட்டியிருக்கின்றனர்.சமயத் தலைவர்களாக, சமுதாயத் தலைவர்களாக எவ்வளவோ பேர்
வாழ்ந்திருக்கின்றனர். சமயத் தலைவராகவும், அதே நேரத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் புண்ணிய பூமியில் உண்டு. இந்த வரிசையில் தோன்றியவர் தான் சுவாமி விவேகானந்தர்.

இன்று நம் பாரதம் சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்க நம் நாட்டின் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டுள்ளனர். அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தார் சுவாமி விவேகானந்தர். விடுதலைக்கு அஸ்திவாரமிட்டவர். விவேகானந்தரின் வீரமுழக்கம்தான் இந்தியர்களை சிலிர்த் தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது. எனவே தான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும் போது, “விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர்

என்பதை உலகம் அறியும்,” என்றார். விவேகானந்தரை 'தேசபக்த ஞானி' என முன்னோர் கூறுவர். அவர் வெற்றி வீரராக அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, அவர் சென்ற இடமெல்லாம் பாரத மக்கள் போட்டி போட்டு வரவேற்றனர்.அப்போது அவர் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று தேசபக்தி ததும்பும் வீரச் சொற் பொழிவுகளை நிகழ்த்தினார். இந்தச் சொற்பொழிவுகள் தேச பக்தியைத் தரும் ஓர் உப நிஷதம் போன்று இந்திய தேசியத்துக்கு வழிகாட்டியாக விளங்கின.

“விவேகானந்தர் உயிருடன் இருந்திருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையைச் சொல்வதானால் இன்றைய இந்தியா அவருடைய படைப்பே ஆகும்,” என்று, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் கூறுவது வழக்கம்.விவேகானந்தரின் நுால்கள், உள்ளத்தில் உண்மையான தேசபக்தியைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றை நாம் படிக்கும் போது, 'நம் தாய்நாட்டின் நலனுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும்,' என்ற எண்ணம், இயல்பாக நம் உள்ளத்தில் பதியும்.

சுவாமி குறித்து மகாத்மா:மகாத்மா காந்தி, “சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நுால்களையும் படித்தி ருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு எனக்கு என் தாய்நாட்டின் மீதிருந்த அன்பு ஆயிரம் மடங்காக அதிகமாயிற்று,” என்றார்.திரு.வி.கல்யாணசுந்தரனார் சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும் போது, “இந்தியாவுக்கு வேதாந்தத்தால் புத்துயிர் வழங்கிய ஞானசூரியன் சுவாமி விவேகானந்தர். லட்சம் பேர் சிறை சென்று எழுப்பும் தேசபக்தியை சுவாமி விவேகானந்தரின் ஒரு பேச்சு எழுப்பிவிடும்,” என்றார்.
பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் சுவாமி விவேகானந்தரைப் பற்றி கூறியதாவது: “பாரினைக் குலுக்கிய பாரதத் துறவி;
துறவிகளிலும் தனக்கு நிகர் தானேயான அரசியல் துறவி. பாரதமணித் திரு நாடே, தான் என்று உருவகித்து வாழ்ந்த முழுமையான தேசபக்தத் துறவி; நவீன இந்தியாவின் ஞானாசிரியர்; பக்தத் துறவி; நவீன இந்தியாவின் ஞானாசிரியர்; இந்திய ஆன்மிக ஞானமும், மேற்கத்திய அறிவியலும் இணைந்து உறவாடி ஒளிவிட்ட கூட்டு மேதை; எம்மதமும் சம்மதமே என்று பொது நெறிப் பெரியார்; ஏழை எளிய மக்களுக்காகக் காலம் முழுவதும் இதய ரத்தம் பெருக்கிய கருணைக் கடல்; தீர்க்கதரிசிகளில் தீர்க்கதரிசி. இந்திய மண்ணில் சமதர்மக் கருத்தை வரவேற்ற முதல்வர், என்றார்.

பாலகங்காதர திலகர், வ.உ.சி., லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால், என்.என்.ராய், அரவிந்தர், கோகலே, சுப்ர மணியசிவா உட்படச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் விவேகானந்தரின் கருத்துக்கள் ஊக்கமும் உற்சாகமும் தந்து அவர்களைச் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தின.-

“எதிர்கால இந்தியா முன் எப்போதும் இருந்ததை விட மிகுந்த சிறப்புடனும் பெருமையுடனும் விளங்கப் போகிறது,” என சுவாமி விவேகானந்தர் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருக்கிறார். விவேகானந்தரின் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள்.

விவேகானந்தரின் அழைப்பு :புதிய பாரதம் தலையெடுக்க, தேசத்தொண்டில் ஈடுபடும்படி நம்மையெல்லாம் இன்றும் அழைத்தபடி இருக்கிறார் .

விவேகானந்தர்.அவரது சில கருத்துக்கள் வருமாறு: -
“பாரதமாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை, நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில்
பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும்.
தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும், தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையில்
உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.நல்லவர்கள் மற்றவர்களின்
நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள். மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும்.
உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்து விட விரும்பினால், அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதல்ல. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகி விடுவாய்.
எனது வீர இளைஞர்களே! செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

நமது தாய்நாட்டின் இளைஞர்களே! ஆக்கப்பூர்வமான நற்பணிகளில் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மனதுடன் ஈடுபடுங்கள்.நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்!
இந்தியா கண் விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில் தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை பிறப்பித்தாகி விட்டது.
என் சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான்
அமைந்திருக்கிறது.
புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள். அவரது நினைவு நாளில் அவரது வழியில் நடப்போம் என உறுதி ஏற்போம்.-சுவாமி கமலாத்மானந்தர்,
தலைவர்,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மதுரை.
0452--268 0224.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement