Load Image
Advertisement

சேர்ந்தமரம் அருகே குகைக்கோயில் மலையில்கட்டப்பட்ட கழிப்பறைகளை அகற்ற வேண்டும்

திருநெல்வேலி:சேர்ந்தமரம் அருகே குகைக்கோயில் மலையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கழிப்பறைகளை அகற்ற வேண்டும் என வி.எச்.பி., வலியுறுத்தியுள்ளது.நெல்லையில் வி.எச்.பி., மாநில அமைப்புச்செயலாளர் நாகராஜன், துறவிகள் பேரவை மாநில செயலாளர் ராகவானந்தா சுவாமிகள், பா.ஜ., பிரசார அணி துணைத்தலைவர் தீனதயாளன், திருமலாபுரம் ஊர்த்தலைவர் குருசாமி, வி.எச்.பி., மாவட்ட அமைப்பாளர் செல்லப்பாண்டியன் கூறியதாவது:சேர்ந்தமரம் அருகே திருமலாபுரம் சர்வேஸ்வரர் மலையில் பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலை பழங்காலத்தில் வாரணாசி மலை என அழைக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் வடபகுதியில் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் குகைக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

கருவறையில் பாறையில் உருவாக்கப்பட்ட சிவலிங்கம், முன்மண்டபத்தில் விநாயகர், பிரம்மா, திருமால், நடராஜர், துவார பாலகர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.11ம்நூற்றாண்டில் இந்த கோயிலுக்கு பாண்டிய மன்னர் வல்லபத்தேவன் தினசரி பூஜை, வழிபாட்டுக்கு மலைப்பகுதி, சுற்றியுள்ள குளம், நிலங்களை தானமாக வழங்கினார். இத்தகவல் குகைக்கோயில் இடது தூணில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி நாளில் சுற்றுப்பகுதி 28 கிராம மக்கள் வழிபாடு நடத்த கோயிலுக்கு வருவர். தினசரி பூஜை, பிரதோஷ வழிபாடு நடக்கிறது.மலையில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நெல்லை தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மலை, மலையை சுற்றியுள்ள பகுதிகள் மிக பழமையானது என்பதால் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கையகப்படுத்தியுள்ளது. 92ம்ஆண்டு முதல் கோயில் பராமரிப்புப்பணிகளை தொல்லியல் துறை நிர்வகிக்கிறது.மலை உச்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1913ம்ஆண்டு கட்டப்பட்ட லூர்துமாதா பிரார்த்தனைக்கூடம் உள்ளது. இக்கட்டடத்தை மறுசீரமைப்பு செய்ய அனுமதி பெற்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டனர். மலையை சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்கு குழிகள் தோண்டக்கூடாது என தொல்லியல் துறை விதிமுறை உள்ளது.எனினும் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே விதிகளை மீறி 20 கழிப்பறைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம், தொல்பொருள் ஆராய்ச்சித்துறையிடம் அனுமதி பெறவில்லை. கழிப்பறைகள் கட்டினால் மலையின் புனிதத்தன்மை பாதிக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டனர். தற்போது கழிப்பறை கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.

விதிகளை மீறி மலை மீது கட்டப்பட்ட கழிப்பறைகளை இடித்து அகற்ற வேண்டும். மலையின் மீது கழிப்பறை, இதர கட்டடங்கள் கட்ட தொல்லியல் துறை, தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இப்பிரச்னையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இரு தரப்பு மக்கள் மத்தியில் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. இதுதொடர்பாக வி.எச்.பி., மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement