Advertisement

வெற்றியை தரும் தரமான புள்ளிவிவர முடிவுகள் : இன்று தேசிய புள்ளியியல் தினம்

ஆண்டுதோறும் ஜூன் -29ம் தேதி தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவன தலைவரும், இந்தியாவில் திட்டமிட்ட வளர்ச்சி, சமூக கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை அளவீடு செய்வதற்காக புதிய, புதிய மாதிரி
சர்வேக்களை, வடிவமைத்தவருமான பிரசந்த சந்திர மகிலனாபிஸ் பிறந்த தினத்தையே இந்திய அரசு, புள்ளியியல் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
பல்வேறு மதிப்பீடுகளை, வளர்ச்சி நுணுக்கங்களை, எதிர்கால மாற்றங்களை கண்டறிய தெளிவான ஒரு ஆராய்ச்சி கட்டமைப்பை ஏற்படுத்தியதிலும், பெரிய அளவில் சர்வே மாதிரிகளை பயன்படுத்தி அதன் மூலம் பொதுவான முடிவுகளை எடுப்பதற்கு, எல்லா வகையிலும் உறுதுணையாயிருந்தவர் மகிலனாபீஸ். இவர் அடிப்படையில் கணிதவியலாளர்.
பிரசந்த சந்திர மகிலனாபீஸ் 1893 ஜூன் 29 மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்தார். இயற்பியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திரபோஸ்
இவருக்கு ஆசிரியராயிருந்துள்ளார்.கொல்கத்தா பிரசிடென்சி கல்லுாரி யில் பணிபுரிந்த போது, தனது கல்லுாரி தோழர்களுடன் இணைந்து, இந்தியாவின் தற்போது புகழ் பெற்று விளங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய
புள்ளியியல் நிறுவனத்தை, 1932ல்
சங்கங்களின் பதிவுச்சட்டம் 1860ன் கீழ் துவக்கினார். விரிவான கட்டமைப்புடன் புகழ் பெற்று திகழும் இக்கல்லுாரியின் முதலாம் ஆண்டு செலவு ரூ.238 என்பது அதிசயத்தக்க விஷயமாகும். இந்நிறுவனம் தேசிய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதில் அவரின் பங்கேற்பு அளப்பரியதாகும். இன்று இந்நிறுவனம் அரசின் பல்வேறு திட்டங்களை வடிவமைப்பதற்கும், கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு சிறந்த ஆலோசனை மையமாக திகழ்ந்து வருகிறது.
மத்திய அரசு அறிவிப்பு
மகிலனாபிஸ் பல்வேறு நிகழ்தகவுகளையும், தரவுகளையும் ஒப்பிட்டு ஒரு பொது முடிவுக்கு வருவதற்காக மிகப்பெரிய அளவில் மாதிரி சர்வேக்களை (சாம்பிள் சர்வே)யும் துரித ஆய்வு (பைலட் சர்வே) களையும் நடத்தினார். வேளாண்மை புள்ளியியல் விவர சேகரிப்பிலும், உணவு உற்பத்தி அளவீடுகளிலும் சர்வே மதிப்பீடுகளில் உத்தேசமான தவறுகள் மற்றும் மதிப்பீடு இடைவெளிகளை கண்டறிந்திட புதிய புதிய ஆய்வு நுணுக்கங்களை செயல்படுத்தினார்.
இந்தாண்டு ஜூன் -29 பத்தாவது தேசிய புள்ளியியல் தினம் “வேளாண்மையும், வேளாண் குடிமக்களின் நல்வாழ்வும்” என்ற தலைப்புகளில் கொண்டாடப்பட மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக புள்ளிஇயல் குறித்து குறிப்பிடும்போது “பொய், புளுகு, அண்டபுளுகு, புள்ளிவிவரம் என்ற சொலவடை உள்ளது. ஆனால் புள்ளிவிவரம் என்பது எண்களால் வரையப்பட்ட கோலம் என்பதும், அது, கோலம் வரைபவரின் கைபக்குவத்தையும், உபயோகப்
படுத்தப்படும் கலர்களையும் பொறுத்தது எனலாம். புள்ளிவிவரம் சேகரிப்பது என்பது ஒரு கலையாகும். சேகரிப்பவரும் தருபவரும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே இதில் நிச்சயமான, உண்மையான விவரத்தினை நாம் வெளியிட முடியும்.
உண்மை பேச வேண்டும் “உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை” வேண்டுமென்று அவ்வையார் குறிப்பிடுவது போல் விவரம் சேகரிக்கும் போது தகவல் சொல்பவர் உண்மை பேசுகிறாரா என்பதை அறிந்து கொள்ள முடியும். அதுபோலவே, எந்த கேள்விக்கும் நேரடியான பதிலை நீங்கள் பெற முயற்சிப்பது உண்மையை வெளிக்கொணர வழிவகுக்காது.
உதாரணமாக, ஒருவரின் மாத வருமானம் குறித்த விவரம் சேகரிக்கும் போது, எந்த நபரும் தனது வருமானம் குறித்த உண்மையான விவரங்களைத் தருவதில் தயக்கம் இருக்கும், அதே நேரத்தில் மாத செலவு உணவு, இருப்பிடம், மின்சாரம், கல்வி, போக்குவரத்து, மருத்துவம் என பகுதிவாரியாக செலவுகளை கேட்கும் போது அவ்விவரம் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.
இதில் இம்மாத செலவுகளுக்காக பெறப்பட்ட கடன் தொகையை கழித்தால் மொத்த மாத வருமானம் தெரிய வரும். ஆக இதுபோன்று பல்வேறு தரவுகளைக்கேட்டு ஒரு முடிவை எடுத்திடல் வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களில் உத்தேசமான தவறுகளை கழித்து ஒரு முடிவினை எட்டலாம்.
தரமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செயல்பாடுகளும் வெற்றியை தந்துள்ளன. அதுபோலவே தரமான புள்ளிவிவர சேகரிப்பை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட முடிவுகளும் கட்டுரைகளும் சான்றோர் நிறைந்த சபையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, இருந்து வருகிறது. தரமான எண்ணிக்கை இல்லாதபோது ஒருசில போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்காது என்பதைக்கூட எளிதில் கணக்கிட முடியும்.
மகாபாரத கதை மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டபோது, துரியோதனன் உட்பட அனைவரும்
கவுரவர் சேனையே வெற்றி பெறும் என்று நம்பினர் அதற்கு அவர்களுக்கு நம்பிக்கை தந்தது எண்ணிக்கையே. கவுரவர் சேனை “11அக்ரோணிகளைக் கொண்டதாகவும்”. பாண்டவர் சேனை “7 அக்ரோணிகளைக் கொண்டதாகவும்” இருந்ததேயாகும். ஒரு அக்ரோணி என்பது 2,17,600 எண்ணிகையை கொண்டதாகும். ஆனால் போரில் குறைந்த எண்ணிக்கையிலிருந்த பாண்டவர்கள் வெற்றி பெற்றது, அவர்களின் நெஞ்சுரம் கொண்ட தன்னம்பிக்கையும், போர் திறமையுமாகும்.
கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நேருக்குநேர் யுத்தம் மூண்டபோது கர்ணனுக்கு மாவீரன் சல்லியன் தேரோட்டியாகச் செல்கிறான் என்றவுடன், அர்ஜுனன் கவலை கொண்டார். அதற்கு கிருஷ்ணன்,
கர்ணனும் சல்லியனும் திறம் வாய்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் இணைந்து போவது சாத்தியமில்லாத ஒன்று; ஆகவே வெற்றி நம்முடையதே என்று கணித்து சொன்னார்.
அதுபோலவே போர்க்களத்தில் கர்ணனை, அச்சுனன் மார்புக்கு குறிவைக்க சல்லியன் சொன்ன போது தலைக்கு குறிவைத்து குறி தவறி அர்ஜுனன் உயிர் தப்பினான் என்பது கதை. இங்கே சல்லியனின் பேச்சை கர்ணன் கேட்கமாட்டான் என்ற கிருஷ்ணனின் கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, புள்ளியியலில் துரித ஆய்வுகளிலும், மாதிரி ஆய்வுகளிலும் கணிப்பாய்வு செய்வதின் அவசியத்தை முன்னிறுத்திய
மகிலனாபிஸ் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், இந்திய பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்கும் இத்தகைய வல்லுனர்களின் கருத்துக்கணிப்பாய்வு பலம் வாய்ந்ததாகும். ஆனாலும், இந்தியாவில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நிலையிலும், 21.3 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய நிலையை ஒழிக்க, புள்ளிஇயலின் பங்கு மிகப்பெரியதென்பதை இந்த நாளில் நினைப்போம்.
- முனைவர் சு.கிருஷ்ணன்,புள்ளியியல் அலுவலர், மதுரை.90420 90063

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement