Advertisement

நுழைவுத் தேர்வு தான், தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல்!

'நாடெங்கும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தீர்ப்பு வெளியான உடனே, தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள், 'உச்சநீதிமன்ற தீர்ப்பு, தமிழக மாணவர்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது' என, நீலிக்கண்ணீர் வடிக்க துவங்கி விட்டனர்.ஒரு போட்டியாளரின் தகுதியை தீர்மானிக்க, நுழைவுத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லாத மற்றொரு சிறந்த அளவுகோல் கண்டிப்பாக இருக்க முடியாது. கிராம நிர்வாக அதிகாரி பணிக்கும், தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 எனப்படும், எஸ்.எஸ்.எல்.சி.,க்கான கீழ்நிலை பணிகளுக்கும் கூட நுழைவுத் தேர்வு மூலம் தான், தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒரு தகுதியான கிராம அதிகாரியை தேர்வு செய்வதற்கே நுழைவுத் தேர்வு தேவைப்படும்போது, உயிர் காக்கும் மருத்துவம் பயிலும் மாணவருக்கு, தகுதித் தேர்வு தேவையில்லை என்று கூறுவது அபத்தமல்லவா?

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு, கிராமத்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி, 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசால் நிறுத்தப்பட்டு விட்டது.நகர்ப்புற பள்ளிகளுக்கும், கிராமத்துப் பள்ளிகளுக்கும் பிளஸ் 2 பாடத் திட்டத்திலும், பயிற்றுவிக்கும் முறையிலும் யாதொரு வித்தியாசமும் இல்லாதபட்சத்தில், நுழைவுத் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் வாதம் ஏற்புடையதல்ல.

கிராமத்து மாணவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அங்குள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளைப் பெருக்க வேண்டும். நுழைவுத் தேர்விற்கான சிறப்புப் பயிற்சியை கிராமப்புற மாணவர்கள் பெற வழி வகுக்க வேண்டும். அதை விடுத்து, அந்த மாணவர்களின் திறமையையும், ஆசிரியர்களின் தகுதியையும் குறைத்து எடை போடுவது நியாயமற்றது.

ஏற்கனவே, தமிழக மாணவர்களிடமிருந்து இந்தி படிக்கும் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த இங்குள்ள தமிழ்ப் பற்றாளர்கள், தேசிய நீரோட்டத்தில் பயணிக்க விடாமல் நம் மாணவர்களைத் தடுப்பதில், தீவிர முனைப்பைக் காட்டி வருகின்றனர்.

வேலுார் சி.எம்.சி., புதுச்சேரி ஜிப்மர், டில்லி எய்ம்ஸ் போன்ற தரமான மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு, நம் மாணவர்கள் அதிக அளவில் போட்டியிட முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் நுழைவுத் தேர்வு நடைமுறையில் இருக்கும்போது, இங்கு மட்டும் நுழைவுத் தேர்வு ரத்து செய்திருப்பதால், பிற மாநில மாணவர்களோடு போட்டியிடும் தகுதியை நம் மாணவர்கள் இழக்க நேரிடுகிறது.

ஒரு காலத்தில், தமிழகத்தில், எம்.டி., - எம்.எஸ்., போன்ற மருத்துவ பட்ட மேல்படிப்புகளுக்கு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தான், மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இன்று நாடு முழுவதும், அந்தந்த மாநிலங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வு இல்லாமல், குறைந்த செலவில், ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறும் நம் மாணவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலால் நடத்தப்படும் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தான், இங்கு மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

நாட்டின் கவுரவம் மிக்கதாக, கடினமானதாக, கவர்ச்சிகரமானதாக கருதப்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கல்லுாரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளில், சமீப காலமாக தமிழகம் மிகவும் பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கும் விஷயம்.

கடந்த, 2015ல், ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழகத்திலிருந்து, பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு செல்லும் தகுதி பெற்றோர், 263 பேர். 2010ல், இந்த எண்ணிக்கை, 350க்கும் மேலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றோரின் எண்ணிக்கையில், 2009ல், 14 சதவீதமாக இருந்த தமிழரின் பங்களிப்பு, 2015ல், வெறும், 6 சதவீதமாக சரிந்திருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கல்வியில் பின் தங்கிய மாநிலம் என்று முத்திரை குத்தப்பட்ட பீஹாரிலிருந்து, 2015ல், பிரதான தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை, 1,078; அதாவது, தமிழகத்தை விட நான்கு மடங்கு.

அதேபோல், ஜே.இ.இ., எனப்படும், ஐ.ஐ.டி.,க்கான பொது நுழைவுத் தேர்விலும், தமிழக
மாணவர்களின் பங்களிப்பு திருப்திகரமாக இல்லை. அண்டை மாநிலமான ஆந்திரா மாணவர்களின் சாதனையில், 50 சதவீதம் கூட, நம் மாணவர்கள் எட்டவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சென்ற ஆண்டு, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதல் ஆயிரம் ரேங்க் எடுத்தவர்களின் தர வரிசையை அலங்கரித்த, ஆந்திரப் பிரதேச மாணவர்கள், 193 பேர். ஆனால், அந்த பட்டியலில் இடம் பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ, 41 மட்டுமே.தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், 14.7 சதவீதம் ஆந்திராவைச் சேர்ந்தவர்களும், 2.5 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இந்தப் பந்தயத்தில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, பீஹார் மாணவர்கள் நிரூபிக்கத்
தவறவில்லை; கயா நகருக்கு அருகில் உள்ள பங்கரோன் என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, 18 மாணவர்கள் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் சாதனை புரிந்திருக்கின்றனர். இந்த, 18 பேரும் நகரவாசிகளல்ல; பக்கா கிராமவாசிகள்.

ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், 60 ஆண்டுகளில், 2001ல் மட்டும் ஒரே ஒரு முறை இந்திய அளவில் முதல் ரேங்க் எடுத்து சாதனை புரிந்திருக்கிறது தமிழகம். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பது குறைந்து, 'எங்களுக்கு நுழைவுத் தேர்வே வேண்டாம்' என, கூக்குரலிடும் அளவுக்கு நம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழக மாணவர்களின் செயல்திறன் இந்த அளவுக்குக் குறைந்ததற்கு பலவிதமான காரணங்கள் கல்வித் துறை நிபுணர்களால் முன் வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, இங்குள்ள கல்வியின் தரம் மற்றும் பாடத் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு இணையாகவோ, சி.பி.எஸ்.இ.,க்கு நிகராகவோ இல்லை. புத்தகத்தில் உள்ளவற்றை கரைத்துக் குடித்து, விடைத்தாளில் அப்படியே வாந்தி எடுக்க வைக்கும் கல்வித் திட்டம், மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கச் செய்து விடுகிறது.

ஆந்திரா மாநில பிளஸ் 2 பாடத் திட்டம், கிட்டத்தட்ட, சி.பி.எஸ்.இ.,க்கு நிகராக இருப்பதால், அதிக அளவில், ஆந்திர மாணவர்கள், ஐ.ஐ.டி., தேர்வுக்கு போட்டியிடுகின்றனர்.தமிழகத்திலிருந்து, ஐ.ஐ.டி., தேர்வில் வெற்றி பெற்ற, 451 பேரில், மாநிலப் பாடத் திட்டத்தின் மூலம் சென்ற, 33 பேரை தவிர்த்து, மீதமுள்ள அத்தனை பேருமே, சி.பி.எஸ்.இ., வழிக் கல்வி பயின்றவர்கள்.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் இருப்பதால், பிளஸ் 2 தேர்வில் பாஸ் மார்க் எடுத்தாலே ஏதாவது ஒரு கல்லுாரியில், பி.இ., சீட்டு கிடைத்துவிடும் என்ற சூழ்நிலையில், கீழ்த்தட்டு மாணவர்கள், ஐ.ஐ.டி., பற்றி சிந்திக்கவே அஞ்சுவதாகவும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

தவறான கல்விக் கொள்கையாலும், இங்குள்ள பாடத் திட்டத்தாலும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாம் எந்த அளவுக்குப் பின் தங்கி இருக்கிறோம் என்பதற்கு, இதைவிட வேறு சான்று தேவை இல்லை.கேரளாவில் உள்ளதுபோல், 50:50 என்ற அடிப்படையில் பிளஸ் 2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களையும், நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் கணக்கிலெடுத்து தர வரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும்.

கல்வியின் தரத்தை உயர்த்தி, தேசிய அளவில் நடைபெறும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி, அதற்கான பயிற்சியையும் வழங்க வேண்டும்.

மருத்துவக் கல்லுாரிகளுக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு, இன்றைய சூழ்நிலையில் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், மாநில அளவில் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும். தேசிய அளவில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கவும், சர்வதேச அரங்கில் தமிழனின் புகழ் ஓங்கவும் கல்வியின் தரத்தை உயர்த்த ஆட்சியாளர்கள் தீர்க்கமான முடிவெடுப்பர் என நம்புவோம்.
டி.ராஜேந்திரன்மருத்துவர் சமூக ஆர்வலர்
இ-மெயில்: rajt1960gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • maryjohnson - Chennai,இந்தியா

  ஐயா இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே ஆதார் எண் இருப்பது போல் பாட முறைமைமைகளையும் ஒரே பாட திட்ட கொள்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த தேர்வையும் எழுதலாம். அதுவரைககும் அவரவர் எழுதும் தேர்வே இறுதியானது.

 • Tamilan - Doha,கத்தார்

  மிகவும் கண்டிக்க தக்க, தவறான பதிவு. இல்லாத ஊருக்கு வழி சொல்லுகிறார் . முதலில் போது பாட திட்டம் வேண்டும் அதன் பின் போது தேர்வை பற்றி பேசலாம். இன்று சென்னை IIT, யார் படிக்கிறார்கள் பார்த்தாலே புரியும். 80% சதவிகிதம் பேர் மற்ற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். போது நுழைவு தேர்வு மூலம் அனுமதிக்க பட்டால், தமிழக மருத்துவ கல்லூரிகளில் எல்லாம் 80% சதவிகிதம் பேர் வெளி மாநில மாணவர்கள் இருப்பார்கள். இந்த போது நுழைவு தேர்வை ஒரு போதும் தமிழ் நாட்டில் அனுமதிக்க கூடாது. குறிப்பாக கிராம புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது வெறும் கனவு ஆகிவிடும். முதலில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தட்டும். கோடி கோடியாக பணம் கொடுத்தால் மட்டும் தகுதி வந்து விடுகிறதா என்ன. மாநில அரசு கல்வி துறை நடத்தும் +2 தேர்வு மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்யாத என்ன. அதில் குறை பாடுகள் இருந்தால் அதை சரிசெய்யவும். அதை விட்டு போது நுழைவு தேர்வு என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகள் வழங்கி உள்ளது. அதை எல்லாம் இந்த அரசு செயல் படுத்தி உள்ளதா, இல்லையே, குறிப்பாக மனித கழிவை மனிதன் சுமப்பது குற்றம் என்றும், அதை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இருக்கிறது, அது எல்லாம் உச்சநீதிமன்ற தீர்ப்பு இல்லையா?

 • NRajasekar - chennai ,இந்தியா

  நரி வாலை அறுத்துக்கொண்டு அது தான் அழகு என்று Tamilnadu கொள்ளையர்கள் மக்களை ஏமாற்ற கிராமப்புறம் என்று கோரி தமிழ்நாட்டை கெடுத்து விட்டார்கள்

 • kundalakesi - VANCOUVER,கனடா

  நுழைவு தேர்வு வேண்டாம். பிஹார் டாபெர்ஸா பாத்து போடுங்க. தமிழ் நாட்டப் பத்தி நமக்கு தெரியாதுங்க. ரோக்கியமான டாக்ட்டர்ஸா வருவாங்க .

 • Raj Pu - mumbai,இந்தியா

  ஏற்கனவே, தமிழக மாணவர்களிடமிருந்து இந்தி படிக்கும் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த இங்குள்ள தமிழ்ப் பற்றாளர்கள், தேசிய நீரோட்டத்தில் பயணிக்க விடாமல் நம் மாணவர்களைத் தடுப்பதில், தீவிர முனைப்பைக் காட்டி வருகின்றனர்// நுழைவுத்தேர்வுக்கும் ஹிந்திக்கும் என்னையா சம்பந்தம். ஆனால் இந்த உயர்கல்வி நுழைவுத்தேர்வு ஹிந்தியிலும் எழுதலாம். அதாவது அவர் தாய் மொழியில் எழுதலாம். ஹிந்தியில் எழுதும் இவர்களுக்கு உயர்கல்வி ஆங்கிலம் தெரியுமா? ஹிந்தி மீது பற்று உள்ள இவர் ஹிந்தி மாநிலத்தில் தொழில் செய்யலாமே? ஹிந்தி மட்டுமே தெரிந்து பலர் இங்கு தமிழ்நாட்டில் தொழில் செய்கிறார்களே அவர்களுக்காக நாம் ஹிந்தி பழகவேண்டுமா? கோயில்கள் என்றால் சமஸ்கிருதம். அரசு வேலை போது வாழ்க்கை என்றால் ஹிந்தி. தமிழ் வேண்டுமானால் வீட்டுக்குள் பேசிக்கொள்ளலாம் என்று கூறுகிறீர்களா>

 • Senguraja - Tamil,இந்தியா

  தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ சேர்க்கையில் முறைகேட்டை தடுக்க வேண்டுமெனில் அதற்கான சட்டம் கடுமையாக கொண்டு வாருங்கள். NEET கொண்டுவாருங்கள். அதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. அதே சமயம் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும் பொது நுழைவுத்தேர்வு எழுத நிர்பந்திப்பதை எப்படி ஏற்க முடியும்?. நமது தமிழக மாணவர்கள் MBBS சேர Cut-off-ல் 1 மார்க் 2 மார்க் தவறவிட்ட நல்ல புத்தியுள்ள குழந்தைகள் கூட Allen Carrier Institute, Aakaash Institute-ல் 1 அல்லது 2 வருடம் கோச்சிங் படித்தும்கூட AIPMT -ல் சேர முடியாமால் engineering சேர்ந்துள்ளார்கள். இதுதான் நிதர்சனம். சுதந்திரம் வாங்கியது முதல் 09-05-2016 சாயுங்காலம் 4.30 மணி முடிய தமிழக அரசானைபடி படித்தார்கள். அதன்படி, எல்லோரும் அவரவர் சக்திகேற்றார்போல் எதாவதொரு பள்ளியில் படித்தார்கள். சயின்ஸ் குருப் எடுத்து படிக்கும் மாணவன் தமிழக அரசானைபடி நல்ல கட்-ஆப் கிடைத்தால் முதலில் MBBS(மருத்துவம்) சேரலாம், கொஞ்சம் குறைந்தால் B.E அல்லது Agri அல்லது Law சேரலாம், இன்னும் குறைந்தால் Allied Science சேரலாம் இதுதான் தமிழக வழக்காமாகயிருந்தது. திடிரென இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 படிக்கும்போதே, டாக்டர் கனவோடு, அதற்கான, கட்-ஆப் பெறும் வகையில் படிக்கின்றனர். திடீரென, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு என்றால், சி.பி.எஸ்.சி., மாணவர்களோடு எப்படி போட்டியிட முடியும். அரசு பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.சி., பாடத்திட்டமாக நடைமுறைப்படுத்திய பின், நீட் தேர்வை அனுமதிக்கலாம். அதுவரை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். ஒரு மாணவர், மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வுக்காக படித்தால் நல்ல மார்க் (கட்-ஆப்) கிடைக்காது. நல்ல மார்க்குகாக(கட்-ஆப்) படித்தால் நுழைவுத்தேர்வில் ஜெயிக்கமுடியாது. நுழைவுத்தேர்வில் இடம் கிடைக்கவில்லையெனில் அவரால் மார்க்கின் அடிப்படையில் சேரக்கூடிய B.E அல்லது Agri அல்லது Law , Allied Science- ல் எப்படி சேர முடியும். ஒரே மாநிலத்தில் மருத்துவம் சேர பள்ளி மார்க்கினை கணக்கில் கொள்ளாத நுழைவுத்தேர்வின் அடிபடையிலும் மற்ற படிப்பில் சேர மார்க் தேவை என்ற அடிப்படையிலும் எப்படி ஒரு மாணவர் படிக்க முடியும். இது எந்த வகையில் தர்மம். அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஒரு விஷயத்தை பயன்பாடு சார்ந்த அடிப்படையில் படித்துவந்த சிபிஎஸ்இ மாணவர்களுடன் தேர்வுக்கு நேரடி வினா-விடை அடிப்படையில் படித்துவந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் போட்டிபோடுவது என்பது இயலாத காரியம். இந்தியாவில் பள்ளி மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். எனவே, கல்வியின் தரம் நிச்சயம் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த சூழலில் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் அதை எப்படி ஏற்க முடியும்?. இந்த நுழைவுத்தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும்தான் பயன்பெறுவார்களே தவிர மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக 10-ம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எளிதாக இருக்கும். இதுவரை 75%-க்கும் அதிகமானோர் Allen Carrier Institute & Aakaash Institute போன்ற கோச்சிங் செண்டரில் படித்தவர்கள்தான் AIPMT, AIIMS and JIPMER- -ல் MBBS சேர்ந்துள்ளனர்கள். இந்த் உண்மையினை கோச்சிங் செண்டரின் வெப்சைட்டில் அவர்கள் ரிசல்ட்டில் தெரிந்துகொள்ளலாம். சாதாரண ஏழை மற்றும் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் உயர்ரக கோச்சிங் சென்டரில் சேர முடியாது. தலைமுறை தலைமுறையாக மருத்துவர் ஆகவே முடியாத நிலையுருவாகும். நம்முடைய நோக்கம் திறமைசாலிகளை உருவாக்குவதே தவிர கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவை அழிப்பது அல்ல. கல்விமுறையை சமமாக்கிய பிறகு அதிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்டால் அனைவரின் திறமையும் அங்கு நிருபிக்கப்படும். அப்பொழுது திறமையான ஏழை மற்றும் பணக்கார மற்றும் நகரத்து மாணவனும் வெற்றி பெற்று நம் சமுதாயத்துக்கு சிறந்த மருத்துவர்கள் கிடைப்பார்கள். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேர்ந்துவிடலாம் என்ற கனவில் நிறைய மாணவ, மாணவிகள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். இப்பொழுது மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு அடுத்த வருடம் கட்டாயம் என்ற அறிவிப்பு கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” லட்சகணக்கான குழந்தைகள் State Board படித்துள்ளது. அவர்களின் நிலை என்ன? முதலில் அணைத்து மாநிலங்களிலும் பொதுவான syllabus உடனே கொண்டுவர சொல்லவேண்டும். பின் அணைத்து மாநிலங்களையும் இரண்டு வருடத்தில் நுழைவுத்தேர்வில் கட்டாயம் சேர ஆணையிடவேண்டும். இதுதான் தர்மம்.

 • P.Veeramani - Thanjavur,இந்தியா

  இது முற்றிலும் தவறான கருத்து. பொது நுழைவு தேர்வு தேவையெனில், பொது பட திட்டம் முதலில் தேவை. இல்லையெனில் தமிழர்கள் மருத்துவர் ஆக முடியாது. மேலும். தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரியில் தான் நிறைய மெடிக்கல் காலேஜ் உள்ளது. இது நான் உமி கொண்டுவரேன் நீ அரிசி கொண்டு வா ஊதி ஊதி சாப்பிடலாம் போல் உள்ளது . தமிழ் நாடு அளவில் நுழைவு தேர்வு போதாதா? ஏன் இந்தியா அளவில் வேண்டும்?. நாளை ஆசியா அளவில் கொண்டு வந்தால் மற்ற மாநிலத்தார் ஒத்துக்கொள்வாரா ?.

 • Proud Indian - kumari2kashmir,இந்தியா

  MBBS முடித்த பிறகு நமது தமிழக இளம் மருத்துவர்கள் பட்ட மேற் படிப்பிற்கான நுழைவு தேர்விற்கு கேரளத்திலுள்ள கோட்டயம் மற்றும் திருச்சூர் PG கோச்சிங் சென்டர் களில் உறைவிட மாணவர்களாகப் பயிற்சி மேற்கோள்கின்றனர். ஏன் இந்த படை எடுப்பு? இங்கு படிக்கும் மாணவர்கள் நல்ல சீட்களை அகில இந்திய அளவில் அள்ளி செல்கின்றனர். இப்போதைய நிலையில் தமிழகக் கல்வித் தரம் படு பாதாளத்தில் உள்ளது. சரி செய்யப் பட வேண்டியது அரசின்தலையாயக் கடமை.

 • Proud Indian - kumari2kashmir,இந்தியா

  தமிழக மருத்துவ தர வரிசையில் இந்த வருடம் முதலிடம் பிடித்தவர் ஆதித்யா மகேஷ் என்ற மாணவி. இவர் கேரளத்தில் படித்தவர். இந்த மாணவி கேரள மாநில மருத்துவ நுழைவு தேர்வும் KEAM எழுதி உள்ளார்.கேரள நுழைவு தேர்வில் அவர் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர் கேரள மருத்துவ தர வரிசையில், 8000+ மேலான ரேங்கில் உள்ளார். இந்த அடிப்படையில் கேரளத்தில் எங்கும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைப்பதில்லை. ஆனால் உயிரியல், இயற்பியல், வேதியல் பாடங்களில் 100% மதிப்பெண் பெற்றமைக்கு தமிழகத்தில் ஒன்றாம் நிலையில் உள்ளார். அப்படியானால், தமிழக மருத்துவ தர வரிசைப் பட்டியல் தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோலில் ஒப்பிடுவோமானால் தமிழக தர வரிசை 8000+ ற்கு பிறகு தான் தொடங்குகிறது. இது தான் தமிழக கல்வி தரத்தின் அளவுகோலும். அதாவது, கேரளத்தில் அரசு மற்றும் ஏனைய தனியார் மருத்துவ கல்லூரிகளில், தர வரிசை படி மருத்துவ சீட் கிடைக்காதவர் தமிழக ஒற்றை சாரள ஒதுக்கீட்டின் படி முதல் இடத்தில் அம்மாணவி இருப்பதை போல் தான் நம் தமிழக மாணவர்களும் நுழைவு தேர்வில் எந்த இடத்திலும் இடம் பிடிப்பதில்லை. தமிழகக் கல்வி துறையே, கண் விழித்துக் கொள். கல்வியின் தரத்தை உயர்த்து . கிராமப் புற பள்ளிகளின் நிலையை மாநகர பள்ளிகளின் நிலைக்கு உயர்த்து. எல்லாப் பள்ளிகளிலும் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்து. வெறும் பெயரளவில் அல்ல, JEE மற்றும் NEET பயிற்சி வகுப்புகள் வருடங்களாக நடத்தி வரும் தனியார் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தொடங்கலாம். கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. எங்கும் அரசியல்.இங்கும் உங்கள் அரசியல் வேண்டாமே. தமிழக எதிர்காலம் இன்றைய மாணவர்களின் கையில் தான் உள்ளது.

 • K.Subramaniam - Belgaum,இந்தியா

  நுழைவு தேர்வுக்கு சிறப்பு பயிற்சி என்று புற்றீசல் போல பெருகி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு மறுவாழ்வு கொடுக்க வந்த மாமனிதரோ இவர்.

 • saravanan - Bangalore,இந்தியா

  அருமையான கருத்துக்கள். மேலும், ஜே.இ.இ, என் இ இ டி, ஜிப்மர், எய்ம்ஸ் மாணவர் தேர்வு அவர்களுடைய 12th மதிப்பெண்களை எடுத்துக்கொள்வதில்லை. நுழைவுத்தேர்வை மட்டுமே அடிப்படையாக எடுத்துக்கொள்கின்றனர். இதுவும் தவறுதான். 11th மற்றும் 12th பாடங்களை படித்து அதன்முலம் கல்வியாண்டின் இறுதியில் பெரும் மதிப்பெண்களுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.அதே வேளையில் தொழிற்கல்வி என்பது ஞாபகத்திறன் மற்றும் பகுத்தறியும் திறனையும் உள்ளடக்கியது. இதற்கு 12th இறுதித்தேர்வு மட்டும் பத்தாது. 12th இல் 95% வாங்கிய எத்தனையோ நகர்ப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், மேலும் இதற்கு எதிர்மறையாகவும் நடப்பதுண்டு. இதில் நம்முடைய தேர்வுமுறை மாணவர்களின் முயற்சி, திறமை இரண்டுக்கும் மதிப்பளிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள், கிராமப்புற மாணவர்களுக்கான மாற்றுவழிகளை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். சிந்தனையையும், திறமையையும் மதித்து உயர்த்துவதே கல்வியின் நோக்கம். தொழிற்கல்வி கற்கும் மாணவர்களின் தரம் இன்று விவாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை முறை. 12th மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், இரண்டையுமே அடிப்படையாக கொண்டு, தொழிற்கல்வி சேர்க்கை நடக்கவேண்டும்.

 • Proud Indian - kumari2kashmir,இந்தியா

  அன்பர் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மருத்துவ படிப்புக்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வுத் தேவை. தமிழக மாணாக்கர்கள் நுழைவு தேர்வு என்றவுடன் காத தூரம் ஓடிவிடுகின்றனர். தமிழக கல்வியிலும் பாடத் திட்டங்களிலும் காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யவில்லை. அண்டை மாநிலங்கள் எங்கோ சென்று விட்டனர். நுழைவு தேர்வு ஏன்அவசியம் என்றால், ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இந்த வருடம் தமிழக மருத்துவ தர வரிசையில் முதலிடம் பிடித்தவர் ஆதித்யா மகேஷ் என்ற மாணவி. இவர் கேரளத்தில் படித்தவர். இந்த மாணவி கேரள மருத்துவ நுழைவு தேர்வும் எழுதி உள்ளார். நுழைவு தேர்வில் அவர் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர் கேரள மருத்துவ தர வரிசையில், 8000+ மேலான ரேங்கில் உள்ளார். இந்த அடிப்படையில் கேரளத்தில் எங்கும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைப்பதில்லை. ஆனால் உயிரியல், இயற்பியல், வேதியல் பாடங்களில் 100% மதிப்பெண் பெற்றமைக்கு தமிழகத்தில் ஒன்றாம் நிலையில் உள்ளார் என்றால், தமிழக மாணவர்கள் சளைத்தவர்களா? நுழைவு தேர்வு இல்லாமல் எளிதில் சுலபமாக மருத்துவ சீட் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் நுழைவு தேர்வு இல்லாததால் தமிழக மாணவர்களுக்கு நுழைவு தேர்வு பயிற்சி இல்லாமல் போய் விட்டது. அகில இந்திய அளவில் படிப்பிற்கான தேர்வாகட்டும், வேலைக்கான தேர்வாகட்டும் எந்த இடங்களையும் பிடிப்பதில்லை. வருத்த பட வேண்டிய விஷயம். முன்பு அயல் மாநில மாணவர்கள் சென்னை வந்து தேர்வுக்கு படித்த காலம் போய் இப்போது தமிழக மாணவர்கள் கேரளத்திற்கும், ஆந்திர மாநிலத்திற்கும் பள்ளி படிப்பிற்காக இடம் பெயரை வேண்டியுள்ளது. வருந்த தக்கது. கல்வித் துறை தூக்கத்தில் இருந்து கண் விழித்து பாடத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலமிது. கிராமப்புறப் பள்ளிகளின் தரத்தை மாநகர் பள்ளிகளின் நிலைக்கு உயர்த்துக. வீண் நீலிக் கண்ணீர் வேண்டாம். தேசிய நுழைவு தேர்வு அவசியம்.

 • raja - chennai,இந்தியா

  கிராமத்து மாணவர்களை கெடுப்பது இந்த அரசாங்கம் தான். ஏதோ நல்லது செய்றோம் என்ற வழில கெடுத்து விடுகிறார்கள் ,

 • Arun - Chennai,இந்தியா

  நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது புதிய பாட திட்டத்தை கொண்டு வந்தார்கள்.. அப்போது எங்களுக்கு வந்த புத்தகமே புதிது, மேலும் வழக்கத்தை விட லேட்டாகவே வந்தது.. அதனால் வழக்கமாக 10 வதை 9 வதில் நடத்தும் திட்டமும் வேலை செய்யவில்லை.. நாங்கள் படித்த புத்தகத்தில், பல்வேறு குழப்பங்கள்.. இது உண்டு, அது கிடையாது என ஏகப்பட்ட மாற்றங்கள்.. நாங்கள் 3 மாதம் படித்த பல பகுதிகளை, ஏதேதோ காரங்கள் சொல்லி நீக்கி விட்டார்கள்.. அந்த வருடம் entrance exam உம் இருந்தது.. அந்த புதிய பாட திட்டத்தை கொண்டு வந்ததன் காரணம் CBSE மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் என்பதே... ஆனால் அதற்கு அடுத்த வருடமே, கொஞ்சம் கொஞ்சமாக பல பகுதிகள் நீக்க பட்டு, பழைய திட்டத்தில் என்ன இருந்ததது, அங்கேயே கொண்டு வந்து விட்டார்கள்.. பலி கிடா ஆக்கப்பட்டவர்கள் நாங்களே.. எனக்கு புரியாத ஒரே விஷயம் என்ன என்றால், அரசின் திட்டம் தான் என்ன.. மாணவர்களின் தகுதியை அதிகரிப்பதா இல்லை, கடமைக்கு நடத்துவதா? என் நம் கிராம புற(நகர் புற மாணவர்களாலும் தான்) தேசிய அளவிலான எந்த தகுதி தேர்விலும் பெரிதாய் ஜொலிக்க முடிவதில்லை? 500+ பொறியியல் கல்லூரி இருக்கும் நம் மாநிலத்தில் ஏன் சிறப்பான பொறியாளர்கள் வருவதில்லை? இப்படியே இட ஒதுக்கீடு, கிராம புற மாணவர்களின் என சொல்லி சொல்லி எத்தனை நாள் தான் நம்மை நாமே ஏமாற்ற போகிறோம்? அல்லது அவர்களின் முன்னேற்றத்தை எப்படி கொண்டு வர போகிறோம்? 2116 யிலும் இதே காரங்களை சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்ள போகிறோமா? நுழைவு தேர்வு வேண்டாம் என சொல்லும் எந்த அரசியல்வாதியின் வீட்டு பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்?

 • raja - Kanchipuram,இந்தியா

  நுழைவு தேர்வு மூலம் எடுக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் என்ன திறமை வாய்ந்தவர்கள் என கட்டுரையாளர் கருதுகிறாரா? நுழைவு தேர்வு சில அரசியல் பினாமிகளுக்கு கோச்சிங் சென்டர் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை ஊக்கு விக்கும் திட்டமே நுழைவு தேர்வு நடந்த சமயத்தில் உருவான மருத்துவர் மற்றும் பொறியாளர் என்ன திறமைசாலிகளாக ஜொலிக்கிறார்களா கட்டுரையாளர் சிஎம்சி நுழைவு தேர்வு பற்றி குறிப்பிட்டுள்ளார் ஆனால் அங்கு உள்ள அட்மிஷன் முறை இவருக்கு தெரியுமா இவர் குறிப்பிட்டது போல ஐஐடி இல் அறுபது ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே முதல் இடத்தில் தமிழகம் வந்துள்ளது ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் தான் நுழைவு தேர்வு முறை இல்லை - இதன் மூலம் நுழைவு தேர்வு ஒரு தரத்தை வளர்க்க உதவும் ஒரு கருவியாக இருக்க முடியாது. உண்மையிலே கல்வி தரம் உயர வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலை ஈடு இருக்க கூடாது. மக்கள் ஒழுக்கம் உள்ளவர்களை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். நுழைவு தேர்வு ஒரு மாணவனின் தகுதி அறியும் கருவியை இருக்க முடியாது. கல்வி தரம் உயர நல்ல கல்வியாளர்கள் வர வேண்டும். அனைத்து பதவிகளுமே ஏலத்தில் எடுக்கப்படும் போது கல்வி தரம் உயர வாய்ப்பில்லை.

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  அப்போ எக்ஸாம் எதுக்கு..நுழைவு தேர்வு வேண்டாம்..மாணவர்களை விட்டுடுங்க......

 • mohanasundaram - chennai,இந்தியா

  Arumai.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement