Advertisement

இந்திய அரசாங்கமும் சட்டங்களும் 3

பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் நிர்வாக முறைச் சட்டங்கள்:
இந்திய அரசாங்கமும் சட்டங்களும் எனும் கட்டுரைத் தொடரின் இரண்டாம் கட்டுரையில், வியாபாரி ஒருவரின் மீது சந்தேகப்பட்டு காவலர் அவரிடமிருந்து தங்க, வெள்ளி நகைகளைக் கைப்பற்றினார். ஆனால் அதன் பிறகு அந்த வியாபாரி சந்தேகத்திற்குறியவர் அல்ல எனத் தெரிந்ததும், அந்த நகைகள் அவருக்கு திருப்பித் தர வேண்டிய நிலையில் அந்தக் காவலர் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் ஓடிவிடுகிறார்.

சட்டத்தின் படி, அந்தக் காவலர் அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகார வரம்பு மீறி செயல்பட்டதால், வியாபாரிக்குக் கொடுக்க வேண்டிய அந்த தங்க நகைகளுக்கு அந்தக் காவலரை வேலைக்கு அமர்த்திய அரசாங்கத்திற்கு பகரப் பொறுப்பில்லை என நீதிமன்றம் வழக்கை முடித்ததைப் பார்த்தோம்.
இந்நிலையில், அந்த வியாபாரிக்கு என்னதான் தீர்வழி? அந்தக் காவலருக்கு?
இருக்கிறதுதான். அந்த காவலரின் குற்ற செயலுக்கு பொருள் களவாடியமைக்கான தண்டனையும் அவரிடமிருந்து தனி வழக்காக அதாவது அரசாங்கம் சம்பந்தப்படாத ஒன்றாக அந்த காவலருக்கு தண்டனை கிடைக்கும்.
இவற்றிற்கென தனித் தனி சட்டங்கள் உண்டு.
இதற்கு உதாரணமாக எளிய வழக்கு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், 2006ம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் துணை தாசில்தாராக இருந்த ஜெயலட்சுமி, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்காக ரூபாய் 100 லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்து சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலட்சுமி மீது வழக்குப் பதியப்பட்டு, அவருக்கு ஆறு ஆண்டுகாலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதே போல, தர்மபுரியில், ஆவின் (State government Enterprise) நிர்வாகப் பொது மேலாளர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், பாலில் கலப்படம் செய்த பால் கூட்டுறவு சங்கச் செயலாளர் ஞான சுந்தரம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பத்திரிகைச் செய்தி.
ஆக, இந்தியாவில் அரசு ஊழியர் ஒருவர் தன் பணிநேரத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அல்லது வரம்பு மீறி பயன்படுத்தினால், அதற்கு அவரை வேலைக்கு வைத்த அரசாங்கம் பதில் சொல்லாது. ஆனால் அந்த நபருக்கு தனிப்பட்ட நபராக தண்டனை கிடைக்கும்.
பாதிக்கப்பட்டவருக்கு ஈட்டுத்தொகை தர வேண்டிய சூழல்களும் உண்டு. அவற்றைப் பார்க்கும் முன், அரசு, அரசுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களும், அரசு மக்களுக்கு காவல் அரசாக மட்டும் இல்லாமல் மக்கள் நல அரசாக இருக்க வேண்டி வந்த சூழலும், அதன் வரலாறும் கொஞ்சம் நாம் அறிய வேண்டி இருக்கிறது.
பிரான்ஸில் பொது சனங்களுக்கு ஒரு வகை நீதிமன்றமும், நிர்வாகத்துறை வழக்குகளை கவனிக்க வேறு வகை நீதிமன்றமும் செயல்படுகிறது. அதாவது பொது சனங்களுக்கான Court de Cassation, எனும் நீதிமன்றமானது, உரிமையியல் வழக்குகளையும், குற்றவியல் வழக்குகளையும் கவனிக்கும். Counsil d' Etat என்பது நிர்வாக சட்டங்களை கவனிக்கிறது.
இம்மாதிரியான இரு வகை நீதிமன்றங்கள் தோன்றக் காரணம், அன்றைய நெப்போலியனுக்கு முன் ஆட்சியில் செய்த அதிகார வர்கத்தினர் தமது நிர்வாக செயல்பாடுகளில் எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர் எனும் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட ஆரம்பித்தபடியால், அவர்களை ஒரு கட்டுக்குள் வைக்க விரும்பி, 1799-ம் ஆண்டில் நெப்போலியனால் உருவாக்கப்பட்டதே Counsil d' Etat ஆகும். குடிமக்களும் அரசு அதிகாரிகளும் சமமான அந்தஸ்தில் வைக்கப்பட்டால் அநீதி ஆரம்பமாகும் எனும் எண்ணத்தில் இது தோற்றுவிக்கப்பட்டது.
ஆட்சியாளர்களுக்கான இந்த சட்டம் தனிச் சட்டமாகவே உருவெடுத்தது. இது Droit Administratif என்றழைக்கப்பட்டது. இதுதான் ஆங்கிலத்தில் சட்டவியல் அறிஞர் Good New என்பவரால் அட்மினிஸ்ட்ரேட்டிவ் லா அல்லது நிர்வாகமுறைச் சட்டம் எனப் பட்டது.
இந்த Counsil d' Etat பிரான்ஸின் நிர்வாக சட்டத்தை கவனிப்பது மட்டுமல்லாமல், அரசின் விதிமுறைகளை உருவாக்குவது, Counsil d' Etat நீதிமன்ற அலுவலர்களின் அதிகாரங்களை நிர்ணயிப்பது, பொதுப் பணித்துறை, பொது நல அமைப்புகள் போன்றவற்றை அமைக்க எவரிடம் அனுமதி பெற வேண்டும் போன்றவற்றை நிர்ணயிப்பது, ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது ஆகிய ஏனைய பணிகளையும் செய்கிறது.
பிரான்ஸின் Droit Administratif எனும் நிர்வாகமுறை சட்டத்தின் கீழாகவே Counsil d' Etat நீதி வழங்குகின்றது.
தெளிவாகச் சொல்வதானால் Counsil d' Etat, Cour de Cassation இவ்விரண்டில் Droit Administratif - ன் கீழ் Counsil d'Etat ஆனது அரசு அதிகாரிகளுக்கான நீதியை வழங்குகிறது. Cour de Cassation என்பது பொது சனத்துக்கானது.
இந்நிலையில் ஒரு வழக்கானது அரசாங்கம் சம்பந்தப்பட்டதாயின் மட்டுமே கவுன்செல் டெட்டா கவனிக்கும். ஒரு வழக்கு அரசாங்கம் சம்பந்தப் பட்டதா என்பதை எப்படி முடிவு செய்ய? அதை எவர் முடிவு செய்ய வேண்டும்? இதற்கு பதில் சொல்ல அமைந்ததே Tribunal des conflicts எனும் அமைப்பு. இந்த அமைப்பில் சாதாரண நீதிமன்றங்களிலிருந்தும். நிர்வாகமுறை நீதிமன்ற்த்திலிருந்தும் சம எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் இருப்பார்கள். ஒரு வழக்கின் பரவெல்லை மற்றும் அதிகார வரம்பு குறித்து இந்த அமைப்பின் முடிவே இறுதியானது. அதாவது ஒரு வழக்கு அரசாங்கம் சம்பந்தப்பட்டதா அல்லது பொது சன வழக்கா என்பதைப் பற்றிய முடிவை இந்த அமைப்பே எடுக்கும்.
உதாரணத்திற்கு ஒரு வழக்கு.
ஃபார்சூன் என்பவர் உயர் அரசு அலுவலர் பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்தார் என்பதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஃபார்சூன் வழக்கிட்டிருந்தார். கவுன்சில் டெட்டா இந்த வழக்கை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, அரசிடம், 'ஃபார்ச்சூன் மனு நிராகரிக்கப்பட என்ன காரணம்?” என அரசைக் கேட்டிருந்தது. அரசோ, இது அரசு சம்பந்தப்பட்ட முடிவு என்றும் அதனால் இக்கேள்விக்கான ஆதார ஆவணங்களைத் தர இயலாது என்றும் வாதாடியது. கன்சல் டெட்டா இவ்வழக்கிற்கென ஒருவரை நியமித்து அரசு ஆதரங்களை தரசொல்லி கட்டாயப்படுத்தி, அரசு ஃபார்சூனின் மனுவை நிராகரித்தது செல்லாது என்றும், தீர்ப்பளித்தது.
அதாவது, ஃப்ரான்ஸில் பொது சன வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றமும், அரசு அதிகாரிகள் அரசு சார்ந்த பணியில் இருக்கையில் செய்யும் பிழை, குற்றங்களுக்கு ஒரு நீதிமன்றமும், ஒரு வழக்கு அரசாங்கம் சார்ந்த வழக்கா? தனிமனிதர்களுக்கிடையேயான வழக்கா என்பதைக் கண்டு முடிவு செய்ய ஒரு அமைப்பும் இருக்கிறது.
இந்தியாவில் ஒரு வழக்கு தனி நபர்களுக்கிடையேயான வழக்கா? அரசாங்கம் சம்பந்தப்பட்ட வழக்கா என்பதில் பிரச்னை எழுந்தால், அதைத் தீர்மானிக்க என தனி அமைப்புகள் இல்லை. அந்தந்த நீதிமன்றமே அந்த முடிவை எடுத்து அந்த வழக்கின்படியான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை முடிவு செய்கின்றன. இங்கும் அரசர் தவறு செய்ய மாட்டார் எனும் சொலவடை இல்லை எனினும், அரசாங்க ஊழியர் செய்த தவறுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அந்த அரசாங்க ஊழியர் செய்த அதிகார துஷ்பிரயோகமாகவே அது கருதப்பட்டு, அந்த அரசு ஊழியருக்கு தண்டனை கிடைப்பதுண்டு.
ஆனால் சில சந்தர்ப்பங்களில், அந்த அரசு ஊழியர் செய்த தவறுக்கு பாதிக்கப்பட்டவருக்கு ஈட்டுத்தொகை தர வேண்டியது இருந்ததுண்டு. அது போன்ற சந்தர்ப்பங்களை இனி வரும் கட்டுரைகளில் அலசலாம்.
இதே போலவே, இங்கிலாந்து நாட்டில் முதலாம் ஜேம்ஸ், அந்நாட்டின் தலைமை நீதிபதி. எட்வர்ட் கோக் என்பவரை பதவி நீக்கம் செய்தார். அதை ஒட்டியே பாராளுமன்றம் விழித்துக் கொண்டது. அரசரின் அதிகாரங்களைக் கட்டுக்குள் வைக்கும் முகமாக The Petition of Rights ஐக் கொண்டு வந்தது. இதை ஒட்டி பாராளுமன்றமே அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மாமன்றமாக இருக்கத் துவங்கியது. தன் முடிவின்படி பல சட்டங்களை இயற்றுவதும், சட்ட நடவடிக்கைகளைக் கைக்கொள்வதுமாக இருந்தது.
இதை அடுத்து பொதுசன வழக்குகளுக்கு என Common Law Courts அமைக்கப்பட்டட்ன. நிர்வாகத்துறை மக்கள் உரிமைகளில் குறுக்கிட்டால் சிறப்புரிமை வாய்ந்த நீதிப்பேராணைகள் (Prerogative Writs) மூலம் அவைகளைக் கட்டுப்படுத்தத் துவங்கின நீதிமன்றங்கள். 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சி சமயங்களில் தொழிற் சட்டங்கள் பலவற்றை இயற்ற நேர்ந்தது. அந்த சட்டங்களின் மூலமால சில நிர்வாகத்துறை முகவர் அமைப்புகளும், அவற்றின் கையில் விதிகள் செய்யும் அதிகாரமும், நீதி வழங்கும் அதிகாரமும் அளிக்கப்பட்டன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நிர்வாகமுறைச் சட்டங்களே இல்லை என சொல்லிக் கொண்டாலும். மேற்சொன்னவை அனைத்தும் அங்கும் நிரவாக முறைச்சட்டங்களின் ஆரம்பப் புள்ளிகளே.
ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் காலூன்றும் முன்பே நிர்வாகச் சட்டங்கள் அல்லது அதைப் போன்ற சில சட்டங்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.
அவற்றையும், நாம் சற்றே அலசுவதன் மூலமே இன்றைய நிர்வாகச் சட்டங்களின் வளர்ச்சியும், பிழையும், அதிலிருந்து நாம் மீளும் வழியும் பிடிபடக்கூடும்,

………………………………………தொடருவோம்……………………….
-ஹன்ஸா (வழக்கறிஞர்)
legally.hansa68gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

 • S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா

  உதாரணங்களுடன் சட்டம் பற்றி விளக்கமளித்ததற்கு நன்றி.

 • Jaya Ram - madurai,இந்தியா

  அப்படியானால் ஒருவர் தன வீட்டு வேலைக்கு ஒரு நபரை அமர்த்துகிறார். அவர் அந்த வேலையின் தன்மை பற்றி தெரிந்தவர். அவர் அதற்கான உபகாரங்களுடன் வேலை செய்ய வேண்டும். அதை தவிர்த்து அவருடையய இஷ்டப்படி வேலை பார்த்து அதனால் விபத்து ஏற்பட்டால் அவர்மட்டுமே PORUPPU

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  இன்றைய நிலை படைபலம் பணபலம் தைரியபலம் உள்ளவனுக்குத்தான் சட்டம் பயப்படுகிறது.சட்டம் எல்லோருக்கும் பொது என்பது சட்டத்திற்குள் ஏட்டளவிலே உள்ளது.சட்டம் பயின்றவர்களுக்கு பிழைக்க வழிவகை செய்கிறது. நீதி மன்றம்.அவ்வளவுதான்>>>>>

 • madayan - Anaheim,யூ.எஸ்.ஏ

  சட்டம் அது போட்டோ FRAME போட உதவும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement