Advertisement

என் பார்வை - இசை கற்போம் இனிதே

மிழ்நாட்டில், இறைவனை வழிபட இசையை ஒரு கருவியாகக் கொண்டு பல்லாண்டு களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இசையும் இறைவனும் ஒன்று! இரண்டுமே காண முடியாதவை. உணரக் கூடியவை என்பர் அறிஞர். ஏழிசையாகவும், இசைப் பயனாகவும் இறைவன் உள்ளதை, சுந்தரர் திருப்பாட்டாக இசைத்துள்ளார். திருக்கோயில்களில் வளர்ந்தன இசைக்கலை. அவற்றுள் மங்கல இசை எனப்படும் நாதசுர, தவில் இசை ஈசனுடன் நம்மை இணைக்கும் பாலமாக இருப்பதை உணர்ந்தோரே உணர்வர்! பெரும் நாதத்தை வெளிப்படுத்துகிற தொனி மங்கல இசைக் கருவிகளுக்கு உண்டு. ஆலயங்கள், திருமணங்கள், விழாக்கள் என அனைத்திலும் நாதசுர, தவில் கருவிகள் இயக்கப்படுவதால் உலகில் அதிக மக்கள் கேட்டு ரசித்த ஒரு இசையாகவும் மங்கல இசை விளங்குகிறது.நாதசுரம் குழல் கருவியில் இருந்து பிறந்த நாதசுரம், முற்காலத்தில் நெடுங்குழல் என்றும் பெருவங்கியம் என்றும் அழைக்கப்பட்டது. அரசவை, சமஸ்தானம், மடங்கள், கோயில்களில் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டு இசைக்கலை வளர்க்கப்பட்டன. பரம்பரையாக வாசிக்கப்பட்டு வரும் கருவியாகவும் நாதசுரம் அமைந்துவிட்டது.மங்கல வாத்தியம் எனச் சொல்லப்படும் நாதசுரம், தவில் ஆகிய இரண்டும் கலையின் கண்களாக பண்பாட்டின் அடையாளமாகத் தமிழ்நாட்டில் காட்டப்படுகிறது. ஆச்சா மரத்தினால் கடைந்து செய்யப்படும் ஒரு துளைக் கருவி. அதன் நடுப்பாகமான உடல் மேற்பாகம் சிறுத்தும் அடிப்பாகம் வர வரச் சற்றுப் பெருத்தும் காணப்படும்; அதன் கீழ் அணைசு பொருத்தப்படும். வெண்கலத்தால் அணைசுகள் செய்யப்படுவது முந்தய வழக்கம். நாதசுரத்தில் திமிரி, பாரி என 2 வகையுண்டு. திமிரி அளவில் சிறியது. பாரி பெரியது. திமிரி 3 முதல் 5 கட்டை சுருதி வரை வாசிக்கலாம். பாரி என்பது இரண்டரை கட்டை சுருதிக்கு வாசிக்கலாம். இதன் இசை கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.திமிரி, பாரியாக மாறியதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் திருவாவடுதுறை ராஜரத்னம்பிள்ளை ஆவார். காற்றினை அழுத்தமாகவும், மென்மையாகவும் செலுத்துவதால் சுரங்களை வாசிக்க முடிகிறது. உதட்டின் பிடிப்பால் அரைசுரம். கமகம் முதலியவைகள் வாசிக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய பங்கு : நாதசுர இசைக்கே உரிய இசை அமைப்பு மல்லாரி ஆகும். இது பல வகைப்படும். பல்வேறு விதமான தாளங்களில் மல்லாரியை அமைக்கலாம். சாகித்தியம் மல்லாரிக்கு கிடையாது. திருக்கோயில்களில் முக்கிய பங்கு ஆற்றுவது நாதசுரமே. அன்றாட பூஜைகளிலும், திருவிழாக்களிலும் இன்னின்ன திசையில் இன்ன ராகங்கள், உருப்படிகள் வாசிக்க வேண்டும் என்கிற மரபு, வழிவழியாக நாகசுர கலைஞர்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது. முடிவு என்னும் பொதுச் சொல்லால் குறிக்கப்பட்டும், அதன் பிரிவான 'ஒரு கருவி' என்றும் 'தவில்' சொல்லப்படுகிறது. கி.பி.15ம் நுாற்றாண்டில் தோன்றிய திருப்புகழில், (திருவிடைமருதுார்).''இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய'' என்ற வரிகளில் 'தவில்- அறையப்படும் கருவி' என்று தத்ரூபமாக விளக்கியுள்ளார் அருணகிரிநாதர். முதல் முழக்கம் ஒரு இசையரங்கில் பாடல் தொடங்கிய பின்பே பிற கருவிகள் தொடர்வதைப் பார்க்கலாம். ஆனால் மங்கல இசை அரங்கில் தவிலே முதலில் முழக்கப்படுவது தனிச்சிறப்பு. தவில் கருவியில் கணித அடிப்படையிலான லய வேலைப்பாடுகள் தாம் முக்கியமானவை. புத்திகூர்மை மிக்க கற்பனைக் கூறுகள் தவில் கலைஞரின் விரல் மூலம் வடிவாக்கம் பெறுவதை மங்கல இசை அரங்கில் கேட்க முடியும். பொதுவாக, தவிலுக்குரிய தாளச் சொற்கள் தா, தீ, தொம், நம், கி, ட, ஜம் என்கிற ஏழு வகையை சில இசை அறிஞர்கள் கூறுகின்றனர். சில ஊர்களில் திருவிழா தொடங்கும் முன்னர், தவிலை வைத்து பூசை செய்வது வழக்கம்.மல்லாரி நாதசுர, தவில் இணைக்கே சொந்தமான ஒர இசை அமைப்பு - மல்லாரி ஆகும். தமிழ்நாட்டில் சைவ, வைணவத்திருக்கோயில்களில் அந்தந்த சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கப்படுவது மல்லாரி. நட்டபாடை பண்ணில் மட்டுமே வாசிக்கப்படுவதால், உலகம் முழுவதும் இந்த இசை எல்லோரையும் எழுச்சி கொள்ளச் செய்கிறது. ஊக்க இசை அமைப்பு கொண்ட நட்டபாடை பண் கேட்கும் போது தொலைவில் உள்ள இசை ரசிகர்களும், பொது மக்களும் மங்கல இசை நடைபெறும் இடம் நோக்கி வருவது இயல்பு. தளிகை மல்லாரி-, சுவாமிக்கு நைவேத்தியம் எடுத்துச் செல்லும் போது வாசிக்கப்படுவது. தீர்த்த மல்லாரி, தேர் மல்லாரி எனப் பல வகைப்படுகிறது மல்லாரி இசை.
மதுரையின் மரபு : மதுரை, சிதம்பரம் திருக்கோயில் சுவாமி புறப்பாட்டின் போது மல்லாரி வாசிக்கப்படுவது பல ஆண்டுகளாக நடைபெறும் ஒரு மரபு. இதை இசைக்கலைஞர்கள் திரண்டு வந்து கேட்பர். நாதசுர, தவிலிசையை கேட்கும் போதே உள்ளத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பே. தமிழ்நாட்டில் திருப்பாம்புரம், திருவீழி மிழலை, இஞ்சிக்குடி, மதுரை போன்ற ஊர்களுக்கு எனத் தனி இசை மரபு இன்றும் தொடர்ந்து வருவது கண்கூடு. மதுரை மீனாட்சி திருக்கோயிலில் ஆடி மாதம் நடக்கும் 'முளைக்கொட்டு திருவிழா'வில் பத்து நாட்களும், மங்கல இசைக் கலைஞர்கள், நாதத்தால் இறைவியை வழிபாடு செய்வதை இன்றும் காணலாம். தவில் நாதசுரக் கலைஞர்களுக்கு உலகம் முழுவதும் நல்ல எதிர்காலமும், வருமானமும் இருப்பதால் இக்கலையை கற்க மாணவர்களுக்காக, மதுரை, சென்னை, திருவையாறு, கோவை நகரங்களில் அரசு இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. 17 மாவட்டத்தில் இசைப் பள்ளிகள், தவில், நாதசுரத்தை முதன்மைப் பாடமாகக் கற்பித்து வருகின்றன. இக்கலை பயில்பவருக்கு மாதந்தோறும் தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையும் தந்து கலை வளர்ச்சியை செய்து வருகிறது. சுயமரியாதையுடன் வாழவும் கவுரவமான நிலையை எய்தவும் இசைக் கலையை கற்போம், இனிதே.
-- முனைவர் தி.சுரேஷ்சிவன்செம்மொழி இசைத்தமிழ் அறிஞர்,மதுரை-94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement