Advertisement

ஆரோக்கிய வாழ்வு தரும் கலை

இன்றைய இயந்திரமான உலகில் மக்கள் தங்கள் உடலைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. மக்களுடைய மனங்களில் ஒரு வித விரக்தி, இறுக்கமான நிலை, உள்ளச் சோர்வு ஏற்பட்டு இறுதியில் உடல் சோர்ந்து விடுகின்றனர்.“உடம்பால் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்துஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”என்று திருமூலர் நோயற்ற வாழ்வினை வேண்டியுள்ளார். உடலைப் பேணுவதன் மூலமும், மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் ஒருவன் தன் வாழ்க்கையில் எவ்வளவு கடினமான காரியங்களையும் சாதிக்க முடியும்.
யோகம்:பாரத நாடு உலகிற்கு வழங்கிய அரிய செல்வங்களுள் ஒன்று யோகா. மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்க்கை முறையே இது. இதன் சிறப்பினை அறிந்து இன்று உலகெங்கும் யோகாவினைப் பயில்கிறார்கள். விலங்கு நிலையில் வாழ்ந்த மனிதன் படிப்படியாக உயர்ந்து மனித நிலைக்கு வந்தான். தன்னுடைய அறிவாற்றல், தன் உடல், உள்ளம், மூளை, ஆன்மா ஆகியவற்றின் அளவற்ற ஆற்றலை உணர்ந்து, தெய்வ நிலைக்கு உயரும் வழி முறையாக யோக நெறியினை கண்டறிந்தான்.
பொருள் :யுஜ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பிறந்ததே யோகா. யுஜ் என்றால் ஒன்றாக இணைதல், சேருதல், கூடுதல் இரண்டறக் கலத்தல் என்று பொருள்படும். ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஒன்றிணைவது தான் யோகா. அதாவது மனிதன் கடவுளுடன் ஒன்றிணைவது. நாம் நமக்குள் இணைந்த பிறகு அடுத்த கட்டமாக இறைவனோடு ஐக்கியமாதல் வேண்டும். இது ஓர் உயரிய ஆன்மிக நிலை.பல்வேறு யோக மார்க்கங்கள் மூலம் மனிதன் இறைவனை அடையலாம். பக்தி யோகா, ஜனன யோகா, கர்மயோகா, குண்டலி யோகா, மந்திர யோகா, ஹதயோகா மற்றும் ராஜ யோகா என்பவை.வாழ்ந்த வரலாறு கி.பி., 300--200 ம் ஆண்டுகளில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தான் யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவருக்கும் முன்பே நம் முன்னோர்கள் யோகாசனப் பயிற்சி செய்துள்ளனர்.
மனிதனின் நாகரிக, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தால் இன்பத்தையும், அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருட்கள் மூலம் இவற்றை பெற நினைத்தான். தொழில்களை வளர்த்தான். கோவில்கள், கோபுரங்கள் கட்டினான். பொன்னையும், பொருட்களையும் பலவிதமான செல்வங்களையும் சேர்த்துக் குவித்தான். ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும் மட்டும் கிடைக்கவில்லை. மாறாக துன்பமும், தொல்லைகளும் தொடர்ந்து வந்தன. இந்நிலையில் தான் மெஞ்ஞானத்தை தேடத் தொடங்கினான். யோகிகளும், முனிவர்களும் வனவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கண்டறிந்த வழிமுறையில் ஒன்று தான் யோகா வாழ்க்கை.முற்றும் துறந்த துறவிகளுக்குத் தான் யோகா ஏற்றது என்றும் மற்றவர்கள் பின்பற்றினால் தீமை ஆகிவிடும் என்னும் தவறான கருத்துக்கள் மக்களிடம் பரவியுள்ளன. இன்னும் சிலர் மிகக் குறுகிய நோக்கில் இந்துக்கள் மட்டும் பின்பற்றக் கூடிய வழிமுறையே யோகா என்ற கருத்தையும் கூறிவிடுகின்றனர். இது தவறு.வாழ்க்கை கலை யோகா என்பது ஒரு வாழ்க்கை கலை. வாழ்க்கை விஞ்ஞானம், மெஞ்ஞானத்தை பெருவதற்குரிய நடைமுறைப் பயிற்சி, மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவைப்படுவது. மனிதனை தலைகீழாக நிற்க வைக்கத் தருகின்ற பயிற்சியே யோகா என்று கருதாமல், அந்த மனிதன் தன் காலிலேயே நின்று தன்னம்பிக்கையோடு வாழ்ந்து உலகையும் உயர்ந்த நெறியில் வாழச் செய்வதே என்று கொள்ள வேண்டும். மேலும் யோகா என்பது ஆசனங்களை மட்டும் கற்றுக் கொள்வது என்று எண்ணக் கூடாது. ஏனெனில் யோகக் கலையில் அமர்ந்திருக்கும் எட்டுப்படிகளில் ஒன்றுதான் ஆசனம்.
பதஞ்சலி முனிவர் உரைக்கும் யோகக் கலையின் எட்டுக் கட்டங்களானவை. யாமா (தீயன விலக்கல் - பிரபஞ்ச ஒழுக்கம்), நியமா (ஒழுக்கத்தின் மூலம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளுதல்), ஆசனா (உடல் தோற்றம்), பிரணயாமா (சுவாசத்தை கட்டுப்படுத்துதல்), பிரத்தியாகரா (புலன்களை அடக்குதல்), தாரணா (மனதை ஒருமுகப்படுத்துதல்), தியானா (தியானத்தின் மூலம் மனதை கட்டுப்படுத்துதல்), சமாதி (துாய தியானத்தினால் உருவாகும் உயர்ந்த நிலை).எட்டு படிகளில் முதல் ஐந்து படிகள் ஒருவனின் புற செயல்கள் அல்லது வெளிச்செயல்பாடுகள் பற்றியதாகும். இதனை “பகிரங்க யோகா” என்கிறோம்.அடுத்த மூன்று படியான தாரணா, தியானா, சமாதி ஆகியவை ஒருவனின் உள் மனது, எண்ணம் பற்றியவை. ஆதனால் இவை மூன்றும் “அந்தரங்க யோகா” என்கிறோம்.
பயன்கள் :உடல் உள் உறுப்புகளும், வெளி உறுப்புகளும் பயன்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். நல்ல சிந்தனை, செயல் உண்டாகும். நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க முடியும். மூச்சு பயிற்சி மூலம் ஆயுள் நீடிக்கும்.நோய்கள் வராமல் தடுக்கும். வந்த நோய்கள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் பெருகும், உற்சாகம் கூடும். உடல் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும். இளைமை கூடும். மன அழுத்தம் நீங்கி மன வலிமை கிட்டும். கோபம், பயம் நீங்கும். ரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, துாக்கமின்மை, முதுகுவலி, வலிப்பு, சக்கரை நோய், மூட்டுவலி, மாதவிடாய் பிரச்னைகள் போன்றவை கட்டுக்குள் இருக்கும்.தற்போது யோகா பற்றிய விழிப்புணர்வு பெருகி வருகின்றது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்போது யோகா கட்டாய பாடமாக்க முயற்சிகள் தொடரப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுகளும் யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.எண்ணங்களிலே எழுச்சி, சிந்தனையிலே மறுமலர்ச்சி அடைய வேண்டாமா? இன்றே யோகாவை ஆரம்பியுங்கள். உங்களில் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
உங்கள் உடலில் நல்ல பேரொளி உண்டாகும். உடல் மாபெரும் வலிமையுடன் திகழும். நன்கு பசிக்கும், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகி உடலில் கலக்கும். காமம் உங்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும்.ஒவ்வொருவரும் தானே பயிலும் போது நமது எண்ணங்களின் சுழற்சிகளின் வலிமையினால் நம் தேசமும் அனைத்து வளங்களையும். பெறும். எனவே அன்பு வாசகர்களே! நமது யோகா பயிற்சியை தகுதியான வல்லுனர் உதவியோடு இன்றே ஆரம்பிப்போமா?-முனைவர்.சா.விஜயகுமாரி,சிவகாசிvijishankar.kumari74gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement