Advertisement

'புலவரய்யா நொறுக்கிறீங்கய்யா': கலாமை கவர்ந்த என் தமிழ்

மல்லிகைப்பூவின் மகரந்த வார்த்தைகளால் மனங்களை வருடிடும் மதுரை மண்ணின் மரபுக்கவிஞர். தமிழ் கூறும் நல்லுலகில் முன்னேறி வரும் இந்த மரபுக்கவிஞர், பத்திற்கும் மேற்பட்ட கவிதை நுால்கள், 1500க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார். இலக்கியவாதி, சிறு குறு பத்திரிகைகளை தன் எழுத்துக்கள், கவிதைகளால் அலங்கரித்து வருபவர் மரபுக்கவிஞர் பொற்கைபாண்டியன். அவருடன் பேசியதிலிருந்து...
* பொற்கைபாண்டியன்- பெயரே மரபு மணம் வீசுகிறதே?
என் பெயர் ராஜேந்திரன். கவிதை உலகிற்காக பொற்கைபாண்டியன் ஆனேன். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி புல்வாய்க்கரை தான் சொந்த ஊர். கவிதை மற்றும் பணி நிமித்தம் மதுரையில் உள்ளேன்.
* கவிதை எழுத எது துாண்டுதலாக அமைந்தது?
வயல், வரப்பு, உழவு என வாழும் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். என் கிராமமும், கிராமத்தினரும், அங்கு நடந்த கலைகளும், கலை சார்ந்த செயல்பாடுகளும், எதுகை மோனை பேச்சுகளும் எனக்குள் கவிதையை கருக்கொள்ள வைத்தன. அம்மாயி கூறிய 'மரியாதை ராமன்' கதை, அம்மா கூறிய மகா பாரத கதைகள் எனக்குள் இருந்த கலாரசனையை துண்டின.
*எத்தனை வயதில் துவங்கினீர்கள் ?
14 வயதில் கவிதை எழுத துவங்கினேன். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் எனக்குள் உந்து சக்தியாக அமைந்தன. பாரதிதாசன் மூலம் பாரதியாரை படித்தேன். கண்ணதாசனை படித்த போது கவிதை சாளரங்கள் அனைத்தையும் திறந்து விட்டார்.
*முதல் கவிதை?
அது ஒரு காதல் கவிதை. சென்னை கொருக்குப்பேட்டை கவிஞர் சுல்தான் நடத்திய பொன்னகரம் என்ற இதழில் 'என்று தான் வடியும் எங்கள் பொழுது' கவிதையே அச்சில் முதல் வந்தது. மாநில அளவில் அதற்கு முதல் பரிசும் கிடைத்தது.
* உங்கள் நுால்கள் பற்றி...
'விழிகள் சிவக்கின்றன' என்ற சிறு நுால் தான் என் முதல் நுால். அங்கயற்கண்ணி அந்தாதி, காற்றுக்குச் சிறை இல்லை, அங்கயற்கண்ணி அருள் உலா, நுாபுர கங்கை, திருமலையில் ஒரு தீபம், மருது காவியம், கவிதைக்கு மெய் அழகு, உள்ளங்கள் பேசும் மொழி என பத்துக்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியிருக்கிறேன்.
நுாபுர கங்கை- மன்னர் திருமலை நாயக்கர் எங்கள் ஊருக்கு கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வந்த கதை. ஒரு முறை புல்வாய்க்கரையில் குடியிருந்த தங்கையை பார்க்க மன்னர் திருமலை நாயக்கர் சென்றுள்ளார். அப்போது அந்த கிராமம் வறுமையால் வாடியதாம். மன்னர் வரும் தகவல் குறித்து அவரது தங்கையிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது தங்கை, ''கார் கொண்ட நெல்லுக்கு நீர் கொண்டு வருகிறாரா,'' என்றார். அதை தெரிந்து கொண்ட மன்னர் கால்வாய் வெட்டியதாக வரலாறு.
* பக்தி பாடல்கள் எழுதியிருக்கிறீர்களா?
சிங்க வாகனம், தென் பாண்டித்தேவியர்கள், நவக்கிரக நாயகிபாடல்கள், திருவிளக்கு பாடல்களை எழுதியிருக்கிறேன்.
* சினிமா துறை மீது ஆர்வமில்லையா?
'சிட்டம்பட்டி ரெட்டைக்காளை' என்ற சினிமாவுக்கு பாடல்களை எழுதியுள்ளேன். தற்போது இயக்குனர் சினேகன் இயக்கும் 'பொம்மிவீரன்' படத்திற்கு டைட்டில் பாடல் எழுதியுள்ளேன்.
* இளைய தலைமுறையினருக்கு சொல்ல விரும்புவது?
யாப்பு இலக்கணம் தெரிந்து கொள்ளுங்கள். பின் யாப்பை மீறுங்கள். பக்தி இலக்கியங்களையும், சங்க இலக்கியங்களையும் புறந்தள்ளாதீர்கள். கம்பனை உள் வாங்குங்கள். குறவஞ்சி பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களையும் மனதில் வாங்குங்கள்.
* மறக்க முடியாத பாராட்டு?
தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன். என் தமிழை கேட்ட கலாம், ''புலவரய்யா நொறுக்கிறீங்கய்யா'' என பாராட்டியதை மறக்க முடியாது.
* கவிதைக்கு பொய் அழகு என்பர். ஆனால் நீங்கள் கவிதைக்கு மெய் அழகு பெயர் வைத்துள்ளீர்களே?
என்னை பொறுத்தவரை கவிதைக்கு பொய் அழகாக இருக்க முடியாது. மெய் தான் அழகாக இருக்க முடியும். திருக்குறள், மெய் தானே பேசுகிறது. அதை விட வாழ்வியல் அழகு எங்கே உள்ளது. சங்க இலக்கியங்களில் எந்த ஒப்பனை இருக்கிறது. அழகாக இல்லையா?
* மரபு மீறும் கவிதைகள் குறித்து
தமிழின் ஆழம் தெரியாமல் எழுதுவது ஆபத்தானது என புரிய வேண்டும்.
* ஹைக்கூ மீது ஆர்வமுண்டா?
ஜப்பான் தந்த கொடை அது. ஆனால் அதற்கு முன்னோடியாக நம் விடுதைகள் அமைந்தன. நான் எழுதிய கவிதை ஒன்று...
அரிதாரம் பூசியது
தமிழ்நாடு விடுகதை
ஹைக்கூ
* உங்களின் அடுத்த படைப்புகள்?
'கண்மாய்க்கரை மனிதர்கள்', 'பொய் மனிதர்களும், புகழ் மாலையும்' நுால்களை எழுதியுள்ளேன்.
பாராட்ட 98651 88773

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement