Advertisement

வெளியே வர வேண்டும் தமிழர்கள்!

தமிழகத்தில் எல்லாரும் தோற்றாயிற்று. கருணாநிதி, ஜெயலலிதா கட்சிகள் தான், மகத்தான வெற்றி பெற்றன. காங்கிரசின், எட்டு இடங்கள் கூட, தி.மு.க., போட்ட பிச்சை தான்.

இளங்கோவனைக் கேட்டால், 'தி.மு.க., 81 இடங்களில் வெற்றி பெற காங்கிரசின் ஓட்டுகளே
காரணம்' என்று ஏதாவது உளறிவிட்டு, டில்லி வரை மாட்டிக் கொள்வார்.'மிஸ்டு கால் மூலமாக, 60 லட்சம் உறுப்பினர்கள் தமிழகத்தில் சேர்ந்து விட்டனர்' என்று, நம்மை வியக்க வைத்த பா.ஜ., பெற்ற மொத்த ஓட்டுகள் வெறும், 12 லட்சங்களே! பல தொகுதிகளில் அதன் வேட்பாளர்கள் பிளஸ் 2 மாணவனை விட, குறைவான ஓட்டுகளே பெற்றிருக்கின்றனர். மீதி, 48 லட்சம் ஓட்டுகள் என்னவாயிற்று என, அமித் ஷா முதல் வானதி வரை, கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

குஜராத்தில், மோடியின் சிறப்பான, 10 ஆண்டு கால செயல்பாடு, லோக்சபா தேர்தலின்போது, அவரது நேரடியான ஒளிபரப்பு பேச்சுகளை கேட்டு, 'மிஸ்டு கால்' கொடுத்து உறுப்பினரானவர்களில் நானும் ஒருவன். தேர்தலுக்கு முன்னால், வட சென்னையிலிருந்து, தென் சென்னைக்கு குடி வந்து, வாக்காளர் பட்டியலுக்கு குடும்பத்தோடு விண்ணப்பித்தேன். நான்மறந்திருந்த வேளையில், என் மொபைலில் ஒரு அழைப்பு வந்தது.'நீங்க தானே மிஸ்டர் ராமச்சந்திரன்? வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்திருக்கு; வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்று ஒரு பெண்மணி அழைக்க, நானும், என் மனைவியும்,
மகனும், மருமகளும் அப்பள்ளிக்கு போனோம்.வரிசையில் நின்று கூப்பிட்டவுடன், என் கையில் அடையாள அட்டை கொடுத்தனர்; திடுக்கிட்டேன்.

பெயர் என்னுடையது. படம் நானல்ல; முகவரியும் வேறு ஏதோ. விஷயம் சொல்ல, தேடினர்; கிடைக்கவில்லை பின், என் மனைவி பெயர் அவளுடையது; போட்டோவில் வேறு யாரோ பெண்மணி. ஆனால் என் முகவரி.'இப்படி எத்தனை லட்சம் பேரோ; யாரிடம் முறையிடுவது? பா.ஜ.,விற்கு மட்டுமல்ல; மற்ற கட்சிக்காரர்களுக்கும் இப்படி ஆகியிருக்கலாம். ஆனால், 'மிஸ்டு கால்' கொடுத்து, கட்சியில் சேர்ந்த பலருக்கு, என் கதி நேரிட்டிருக்கலாம். இருந்தாலும், மோடியை விரும்புகிறவர்கள், ஓட்டளிக்காமல் இருக்க மாட்டார்கள் என்றாலும், தமிழகத்தின் திராவிட மாயையின் வேலை, இன்னமும் முடியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோ தங்கள் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிற மாதிரி, ஏதும் செய்யவில்லை. அறிவியல் வளர்ச்சி எனும் பெயரில், கருணாநிதி கொடுத்த, 'டிவி' இப்போது எத்தனை வீடுகளில் இருக்கிறது? மிகச் சிறப்பாக செயல்பட்ட உழவர் சந்தையும், சமத்துவபுரமும் இன்று எத்தனை இடங்களில் சிறப்பாக செயல்படுகின்றன? பின் வந்த ஆட்சியின் மீது பழி சுமத்துவரே தவிர, வேறு எதையும் கூறி, ஓட்டு கேட்க முடியாது. அதேபோல், இந்த முறை கருணாநிதி வந்திருந்தால், அம்மா உணவகங்களையும், அம்மா குடி நீரையும் நிறுத்தியிருப்பார்.

இதுதான், 1967 முதல் நடக்கிறதே தவிர, மக்களுக்காக எந்த அரசும் இல்லை. எனக்கு தெரிந்து
அரசியலில் குப்பை கொட்ட தெரியாத பலர், சைக்கிளில் சென்றவர்கள் கவுன்சிலராகி, ஸ்கார்ப்பியோ காரில் செல்வதும், மாளிகை போன்ற வீடுகளில் வசிப்பதும், இப்போது சகஜமாகி விட்டது. அதனால் தானே வேட்பாளர் தேர்தல் நேர்காணலில், 'எவ்வளவு செலவு செய்வாய்?'
என்கிற சம்பந்தமில்லாத கேள்வி உருவாகியது?பா.ஜ., ஏன் இப்படியாகி விட்டது? மத்தியில் மோடி அரசு; மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாவிட்டால்... கேரளாவில் கூட ஒரு இடம் பிடித்த பா.ஜ., தமிழகத்தில் ஏன் தரைமட்டமாயிற்று? தலை வர்கள் ஆயிரம் சொல்லலாம்.

ஆனால், முக்கியமானது, ஒரு கட்சியில் அற்புதமாகவும், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேச, நல்ல பேச்சாளர்கள் ஒரு சிலராவது இருக்க வேண்டும். பா.ஜ.,வில், அது பூஜ்யம். 'டிவி' சேனல்களில் பங்கேற்கும் பலர், மிக மிகப் புதியவர்கள் மட்டுமல்ல; சரியாக பேச தெரியாதவர்கள். தன்னை மடக்குகிறவர்களை அதை விட மேலாக மடக்கத் தெரியாதவர்கள் தான், 'டிவி' நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.எஸ்.எஸ்.,சின் குருமூர்த்தி போன்றவர்களை தமிழக பா.ஜ., முன்னிறுத்தியிருக்க வேண்டும். இல.கணேசன் அற்புதமான பேச்சாளர்; ஆனால், வயதாகி விட்டது. எச்.ராஜா ஆவேசமாக பதிலளிக்கக் கூடியவர். ஆனால், திராவிட கட்சிகள் அவரை சரியாக பேச விடவில்லை. மற்றதெல்லாம் ஓட்டை. திராவிடக் கட்சிகள் அனைத்தும், நெற்றியிலே விபூதி, குங்குமம் இட்டு, பா.ஜ.,வை, 'மதவாத கட்சி' என்றன; அசட்டு மக்கள் நம்பினர்.

பா.ஜ.,வை மதவாதக் கட்சி என்றவர்கள், முஸ்லிம் லீக்கோடும், கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியோடும் கூட்டு வைத்துக் கொண்டனர். அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக மதுரை ஆதீனம் மேடையேறினார். அன்புமணி, பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். மிகப்பெரும் ஈ.வெ.ரா., சீடர்களின் மனைவிமார்கள், கோவில் கோவிலாக சுற்றி, யாகங்கள் செய்தனர். ஆனாலும், இவர்களுக்கு, பா.ஜ., இந்து மதம், வெறி பிடித்த கட்சி. இப்படி ஒரு மாயையை திராவிட கட்சிகள், பா.ஜ.,வின் மேல் வேண்டுமென்றே மத சாயத்தை பூசி, பரப்பின. இப்படி பா.ஜ.,விற்கு கெட்ட பெயர் உண்டாக்கி, திராவிட கட்சிகள் வளர்ந்தன; தேசியக் கட்சிகள்
தேய்ந்தன.

சோ சொல்வது போல, காங்., அழிந்து விடக் கூடாது என்றாலும், அதன் தலைவர்கள், அதை அழிக்காமல் விட மாட்டார்கள். நம்மவர்களுக்கு ஓர் ஆத்திரம். புதிதாக ஒருவர் பதவியேற்ற மறு நாளிலிருந்தே விலைவாசிகள் குறைய வேண்டும்; உப்பு, புளி, பருப்பு முதல் பெட்ரோல் வரை, கணிசமாக விலை குறைந்து, பாலும், தேனும் தெருவில் ஓட வேண்டும். 120 கோடி மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.இது என்ன மந்திரத்தில் மாங்காய் விளைகிற விஷயமா? ஒபாமாவும், புடினுமே கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இங்கே மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பேச்சு!

அனைவருமே, '2ஜி' ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், போபர்ஸ் ஊழல், அகஸ்டா ஹெலிகாப்டரில் ஊழல் என்று, எதிலும் மெகா ஊழல் செய்த காங்கிரசை மறந்து விட்டனர். 'ரயில்வே பிளாட்பாரத்தில், தேநீர் விற்றவர் எப்படி பிரதமராகலாம்' என்று தான் இப்போதைய கவலை. தமிழகத்திலேயே, 'மோடி, லேடி, டாடி' என்று தான் தேர்தல் நேரப் பேச்சு!பா.ஜ., தோற்றதற்கு காரணம், திராவிட மாயை தான். 'கழகம் ஒரு, 16 வயது பருவ மங்கையைப் போல. தளதளக்கும் மாம்பழம் போன்ற உடல்; கருவண்டு கண்கள்; வாலிபரை சுண்டியிழுக்கும் அதரங்கள்' இப்படி சொல்லி, கட்சியை வளர்த்தார் அண்ணாதுரை.
மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்தவர். பிற்படுத்தப்பட்டவர்களின் தலித்துகளின் தலைவன் என்று தன்னை சொல்லிக் கொள்கிறவர்கள் எல்லாம், இன்று மோடியை எதிர்க்கின்றனர்.

மோடியின் இரண்டாண்டு கால ஆட்சியில், மத்தியில் எந்த ஊழலும், லஞ்சமும் கிடையாது. '2ஜி' போன்றவை, நிலக்கரி போன்றவை ஒதுக்கீட்டில் இணையதளங்கள் மூலம் விடப்பட்டன. பொருளாதார ரீதியில், 4.5 சதவீதமாக மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த வளர்ச்சி இப்போது, 7.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. விலைவாசி அவ்வப்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி, 12.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் அன்னிய செலாவணியின் இருப்பு, 23.59 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் இப்போது, 10 ஆயிரம் கி.மீ., ஆண்டொன்றுக்கு உயர்ந்திருக்கிறது. ஜன் தன் யோஜனா, துாய்மை இந்தியா, அடல் பிஹாரி ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம், எழுச்சிமிகு பாரதம் போன்ற பல்வேறு திட்டங்களை, மோடி செயல்படுத்தி வருகிறார். 28 கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டாண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி, இப்படி பல திட்டங்களை தீட்டி, பிரதமர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முன்னேற வேண்டும் என்பதே, மோடியின் லட்சியம். அதனால்தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல், சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகின்றன. தமிழர்கள் திராவிடத்தை விட்டு வெளியே வந்தால் தான், இதெல்லாம் புரியும்!
இ-மெயில்: bsr_43yahoo.com
- பா.சி.ராமச்சந்திரன் -
மூத்த பத்திரிகையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா

  உண்மை நிலை நன்கு அலசப்பட்டுள்ளது .துவேஷம் என்னும் விஷம் பல்லாண்டுகளாக தொடர்ந்து விதைக்கப்பட்டு அந்நிய சக்திகளின் எடுபிடிகளும் இனத்துரோகிகளும் தாங்களே பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டு பல வழிகளில் தொழிநுட்பத்துடனும் தடயம் இல்லாமலும் பெரும் செல்வம்சேர்த்து அதன் மூலம் ஜனநாயகத்தை வீழ்த்தி குறுக்குவழியில் கூட்டு செயல்பாடுகளுக்கு முயல அதனை முறியடிக்காமல் பொத்தம் பொதுவான பேச்சினால் ஓட்டுக்களை பெறமுடியவில்லை .மேலும் மத்தியில் உள்ள இருமனம் கொண்ட புல்லுருவிகளும் ஒரு காரணம் .

 • M.Vadivelu - Mangaf,குவைத்

  யாரு புது நாயனம். இல.கணேசனுக்கு வயசு அதிகம். கருணா, ஜெயலலிதா 16 வயசு .வாஜ்பாய் பிரதமர் 17 வயசா ராமசந்திரன் .

 • Malar Mannan - Madurai,இந்தியா

  திருடினாலும் குற்றம், திருட்டை செய்தவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் குற்றம்.

 • Muniyaraj - Bangalore,இந்தியா

  உங்க கட்சி மக்கள் பணி செய்யாமல் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள். கடமையை செய்து விட்டு பலனை எதிர் பாருங்கள் திரு இராமச்சந்திரன் அவரகளே.

 • samson - thanjavur,இந்தியா

  ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது இவரின் கட்டுரை. தமிழர்கள் , திராவிடர்களா இருப்பதில் தான் அவர்களுக்கு பாதுகாப்பு, இல்லை எனில் தமிழர்கள் தமிழையும் , தமிழ் நாட்டையும் இழக்க நேரிடும்.

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  மக்கள் எவ்வழி,மன்னன் அவ்வழி.இலவசங்களுக்கு மயங்கி வாக்களித்த நமக்கு இதற்குத்தான் அருகதை.

 • Raja - butterworth,மலேஷியா

  மதுவை ஊற்றி மதி மயக்கும் திராவிடக்கட்சிகள் மதியை ஊட்டி(மூளைச்சலவை) மதம் வளர்க்கும் பி ஜே பி போன்ற கட்சிகள் எதுவும் தமிழர்களுக்கு தேவை இல்லை. இதுவரை தமிழக மக்களின் வாழ்வாதாரம் அவர்களின் சொந்த அறிவை கொண்டும்,உழைப்பை கொண்டும் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.கட்டுரையாளர் சொல்வதுபோல் தந்திரமாக பேசுவதால் மட்டும் ஒரு கட்சி செயல்படுவதாக அர்த்தம் இல்லை.

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  யார் யாருக்கு வோட்டுபோட்ட என்பது அவாளுக்கு மட்டுமே தான் தெரியும். அதான் உண்மை நிலை , தான் வோட்டே போடலேன்னு சத்தியமா செய்ய போராங்கன்னேன் , காசுமேல காசுவந்து கொட்டினா பள்ளிக்கு சிலவு செய்ய /டாஸ்மாக்லே கொட்டிக்க ஆவுமேனு தான் மக்கள் வாங்கின்னாங்க அவ்ளோதான்

 • Arivu Nambi - madurai,இந்தியா

  தமிழ்நாட்டுக்குள்ளே இருந்துகொண்டு இவ்வளவு எழுதுகிறீர்களே ,என்னைப்போன்ற வட இந்தியா முழுவதும் சுற்றி அவர்களுடன் பழகி வருடக்கணக்காக அங்கேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்தவர்களுக்கு தெரியும் வட இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று , அவர்களைப்பற்றி நிறைய எழுதலாம்.மேலும் திராவிடன் திராவிடர்களுக்கு வோட்டு போடாமல் ஆரியர்களுக்கு எப்படி போடுவான்? வரலாறே கூறுகிறது இந்தியா முழுவதும் பரவி இருந்த திராவிடர்களை ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தி தென்பகுதியில் அடக்கி வைத்து விட்டார்கள் என்று, இந்தலச்சனத்தில் அவர்களுக்கு வரிந்து கொண்டு கட்டுரை......?

 • M Rajendran - Delhi,இந்தியா

  வளர்ச்சி என்பது சம்பாதிக்கும் கார்போரேட்களுக்கு இன்சென்டிவ் தருவதும் மத்திய வகுப்பு மக்களக்கு வரி போடுவது என்று செயல்படும் பா ஜ க வை உங்களை போன்றவர்கள் ஆதரிப்பதை விட, மக்கள் ஆதரிக்கும் தி மு க , அ தி மு க எவ்வளோவோ பரவாயில்லை.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  தமிழகத்தில் பிஜெபீக்கு நல்ல பேச்சாளர்கள் இல்லை.இரண்டு ஆண்டுகளில் தாங்கள் செய்த நற்செயலை விளம்பரபடுத்த தெரியவில்லை.நிலக்கரியில் பழைய டெண்டர்களை மாற்றி, இ டெண்டர் போட்டு 20000 கோடிகளுக்கு மேல் அரசுக்கு வருமானம் பார்த்தார்கள்.தற்போது இன்னும் 2 வருடங்களில் நிலக்கரி இறக்குமதியை முற்றிலுமாக ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலைகற்றை டெண்டர்களிலும் நல்ல வருமானம். நீர்வழி பாதையில் சரக்கு போக்குவரத்து என்பது மிகவும் நல்ல திட்டம்.போக்குவரத்து செலவு கணிசமாக குறையும். இதையெல்லாம் மக்களுக்கு எடுத்து சொல்ல பிஜெபீக்கு நல்ல பேச்சாளர்கள் இல்லை.

 • raja - Kanchipuram,இந்தியா

  பாஜக என்பதே ஏழைகளை ஒழித்து இந்தியாவை விற்க வேண்டும் என்பது இவர்கள் நாட்டிற்கு என்ன செய்வார்கள் கருணாநிதி ஸ்டாலின் கலவை தான் பாஜக

 • kandhan. - chennai,இந்தியா

  திராவிட கட்சி தமிழகத்தில் பெரியார் அவர்களால் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை சற்று விளக்கி இருந்தால் உண்மை மக்களுக்கு புரிந்திருக்கும் ,காரணம் இந்தியாவில் எல்லா துறைகளிலும் பார்ப்பனர்கள் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை எப்படி ஆக்கிரமித்து மற்ற மக்களை முன்னேறவிடாமல் வருணாசிரமப்படி செயல்பட்டதுதான் காரணம் என்பதை திரு இராமச்சந்திரன் ஒப்புகொள்வாரா கொள்வாரா ???இன்று பார்ப்பனர் அல்லாதோர்(மற்ற பிரிவினர் எஸ் சி /எஸ் டி) வேலைவாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தது திராவிடகட்சிகள்தான் காரணம் என்பதை பயனடைந்த மக்கள் நன்கு அறிவர் அதன் விளைவே பி ஜே பி யின் தோல்வி என்பதை புரிந்து கொண்டு பி ஜே பி மத வாத கட்சி அல்ல என்பதை மக்களுக்கு நிருபித்து காட்டினால் உங்களுக்கு மதிப்பு கூடும் ,செய்வீர்களா ?அல்லது அ தி மு க வோடு சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்வீர்களா ??எதிலும் நேரிடையாக மக்களை சந்தித்தால் வெற்றி நிச்சியம் வரும்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  மக்கள் பெட்ரோல் விலையை குறைக்க சொல்வது உலக சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததால். ஆனால், இதே மோடி அரசு பெட்ரோலை வைத்து இலாபம் ஈட்டுகிறது. அதுமட்டும் இல்லை. ஊழல் இல்லை என்று சொல்லிக்கொண்டே மல்லையாவையும் லலித் மோடியையும் ஆதரிக்கின்றது. அனைத்து கிராமங்ககளுக்கும் மின் வசதி என்பது ஒரு மாயைதான். அந்த திரிபு வாதம் தமிழ்நாட்டில் எடுபடாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எந்தெந்த கொள்கைகளை எதிர்த்தார்களோ, இன்று அதே கொள்கைகளை மிக தீவிரமாக ஆதரிக்கின்றது பாஜக. இப்படி பட்டியல் போட்டால் ராமச்சந்திரன் கட்டுரைக்கு பதில் ஒரு இராமாயாணம் ஆகிவிடும்.

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  சரி

 • Tamilan - Doha,கத்தார்

  உரத்த சிந்தனையா? இல்லை ஒரு மோடி பக்தனின் துதிபாட்டா? ப ஜ க ஒரு மதவாத கட்சி என்பதில் தமிழக மக்களுக்கு சிறிதேனும் சந்தேகம் இல்லை, வளர்ச்சி, வளர்ச்சி இல்லேயேல் விழ்ச்சி என்று 100 நாட்களில் நாட்டின் எல்லா பிரச்சினையும் தீர்த்து, நாட்டு மக்கள் அனைவரின் பேரிலும் 15 லட்சம் ரூபாய் பங்கில் போடுவேன் என்று பொய் முட்டைகளை அவிழ்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்தது மறந்து விட்டது என்று நினைக்கிறேன். அனால் தமிழக மக்கள் இவர்களை நன்றாக புரிந்து கொண்டார்கள், இவர்களால் ஒரு ஆணி கூட புடுங்கமுடியாது என்று. மாறாக யார் என்ன சாப்பிடவேண்டும், யார் என்ன உடை உடுத்தவேண்டும், யார் என்ன படிக்க வேண்டும், யார் எந்த சாமி கும்படவேண்டும், எந்த மதத்தார் எத்தனை பிள்ளைகள் பெற்று கொள்ளவேண்டும், நாள் ஒரு பேச்சி, பொழுதொரு சச்சரவு என்று சமுக நல்லின்னக்கத்தை சீர்குலைக்கும் ப ஜ கவை எப்படி தமிழக மக்கள் ஏற்பார்கள். இரண்டு வருட ஆட்சியில் உழல் இல்லையாம், வியாபம், லலித் மோடி உழல், மல்லைய உழல், ரேசன் அரிசி உழல், கடலை மிட்டாய் உழல், ஏக்நாத் கோட்சே உழல் ESSAR. குஜராத் ஊழல் அதானி 6000 கோடி வங்கி லோன், அம்பானி கோதாவரி பேசின் காஸ் ........ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மாடு புனிதமானது, ஒரு மனிதனை கொன்றவாது மாட்டை காப்பாற்றவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை உடைய கட்சிதான் ப ஜ க என்பதை தமிழக மக்கள மறக்கமாட்டகள்.

 • SHANKAR - BANGALORE,இந்தியா

  மிகவும் அருமையாக இன்றைய யதார்த்தத்தைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் மதிப்பிற்குரிய நண்பர் ராமச்சந்திரன் அவர்கள்.பிரதமர் மோடி அவர்கள் நம் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டு வருகிறார் என்பதில் யாருக்கும் எள்ளளவிலும் ஐயம் இல்லை. பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் செய்யவேண்டிய ஒன்று, நமது நாட்டு முன்னேற்றத்தில் நாமும் பங்கு கொள்ளவேண்டியது. அப்படி இல்லையென்றால் நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபடுபவற்கு நமது முழு ஒத்துழைப்பையும் நல்கவேண்டும். தவறு செய்தவர்கள்தான் தாங்கள் செய்த தவறிலிருந்து தப்பிக்க, மற்றவர்களின்/மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒன்றுக்கும் உதவாத விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அரசாங்கத்தையும் திசைதிருப்பி எந்தஒரு வளர்ச்சிப் பணிகளையும் செய்வதற்கு விடாமல் முட்டுக்கட்டை போடுவார்கள். இந்தத் தருணத்தில் மக்கள் மனதில் ஒரு புரட்சி எண்ணம் ஏற்படவேண்டும். இது போன்ற அற்ப காரணங்களுக்காக தங்களது நேரத்தையும் மக்களின் நேரத்தையும் வீணாக்கி நாட்டு முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களை எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும். நீங்கள் இவ்வாறு செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று உணர்த்தவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் தாங்கள் செய்வதுதான் சரி என்று உதவாக்கரையான போராட்டங்களை நடத்திக் கொண்டே இருப்பார்கள். நமக்கு என்ன யாராவது நமக்காக போராடுவார்கள் என்று எண்ணாமல், படித்த, நாட்டின் மேல் அக்கறை உள்ள அனைவரும் ( அப்படி என்றால் அற்பக் காரணங்களுக்காக போராட்டம் நடத்துபவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லையா என்றால் அவர்களுக்கு ஒரு துளியும் அக்கறை இல்லை. அவர்களுக்கு நன்றாகத் தெரியும் தாங்கள் செய்த ஊழலில் இருந்து ஒரு நாளும் தப்பிக்க முடியாதென்று. இது நாள் வரை தப்பித்து வந்தார்கள். இனிமேல் தப்பிக்க முடியாது. எனவே கூடுமானவரை குழப்பம் உண்டாக்கி தங்கள் தண்டனையிலிருந்து சிறிதுகாலம் தப்பிக்கஎண்ணுகிதார்கள் அவ்வளவுதான்). எனவே நாம் அனைவரும் நமது எதிர்ப்பை நாட்டு முன்னேற்றதிற்கு தடையாய் இருப்பவர்கள் மேல் காட்ட வேண்டும். அதேபோல் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக, உர்த்த சிந்தனையாக திரு. பா.சி. ராமச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல் நாம் அனைவரும் மாநில அரசியலை விலக்கி இப்போது ஆளும் தேசிய அரசியலை நேசிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். இப்போதைய தேசிய அரசியலில் தனி மனிதர் துதி இல்லை. குடும்ப அரசியல் இல்லை. சொத்து சேர்ப்பது ஒன்றே குறிக்கோள் இல்லை. கட்சி என்பது குடும்ப சொத்து அல்ல, வாரிசு அரசியல் இல்லை. தமிழக அரசியலில் ஜனநாயகம் என்ற பேச்சிற்கே இடமில்லை. ஜாதி, மதம், தலித், தாழ்த்தப்பட்டவர்கள் என்று வாய் கிழியப் பேசும் தமிழக அரசியலில் அப்படிப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் தலைவர் அறிக்கை விடுவதுபோல் அவர்களின் மனத்தில் வேண்டுமானாலும் இடம் இருக்குமே தவிர அவர்களின் கட்சி, ஆட்சியில் என்றும் இடமில்லை. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வெளியில் இருந்து கொடுக்கும் தீவிரவாதிகள் மற்றும், பொருளாதார நெருக்கடிகளை நாம் சமயோசிதமாக நாம் சமாளித்துவிடலாம். ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களைப் (களை) போன்ற சுயநலதிற்காக அரசியல் நடத்தி பொதுமக்களின் பொன்னான நேரம் வீடடிக்கப் படுவதுடன் நாட்டின் முன்னேற்றமும் தடைபடுகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பிரதமர் திரு. மோடி அவர்களின் சாதனைகளைக் காட்டிய வண்ணம் உள்ளார்கள். அதேபோல் அமெரிக்காவில் திரு. மோடியைப் போல் நாட்டு நலனுக்காக உழைப்பவரும் நாட்டின் எதிர்காலம் குறித்த தீர்கதரிசனம் கொண்டவர்தான் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டுமென்று விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு திரு. மோடி அவர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால் நம் நாட்டில்தான் அவரது அருமையைப் புரிந்துகொள்ளாமல் அவரது பூர்வீகம் குறித்து கேவலமாகப் பேசி அவரை இகழ்ச்சியாகப் பேசுவது வேதனைக்குரியது. எனவே இனிமேலேனும் நாம் சிந்தி்த்து செயல்பட்டு நம் நாட்டு முன்னேற்றத்திற்கு நம்மாலான பங்களிப்போம்.

 • Santhosh Kumar - Chennai,இந்தியா

  தமிழகத்தில் பாஜக தோற்றத்தின் உண்மையான காரணம் தகுந்த தலைவர்கள் இல்லாததே. இல்லாவிடில், 234 தொகுதிகளிலும் கன்னி முயற்சியிலேயே நிற்க, நின்று தோற்க அனுமதித்திருப்பார்களா? தொடக்கத்தில் தங்களுக்கு தோதான 25 முதல் 40 தொகுதிகளுக்குள் தேர்ந்தெடுத்து, அதில் எல்லோரும் கவனம் செலுத்தி அதில் 10 முதல் 20 வெற்றி பெற்று, அத்தொகுதிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் செய்யும் பணிகள் மூலமே மக்களை நம்ப வைக்க முடியும். தமிழக மக்கள் பெரும்பாலோர் பணத்திற்கு விலை போகிற மனிதர்கள். தங்கள் உண்மையாக உழைத்து தொகுதிகளை மேம்படுத்தியே அடுத்த முறை இன்னும் தொகுதிகளை கூட்ட முடியும். 1982 ல் இரண்டே இரண்டு சீட்டுகள் வாங்கிய பிஜேபி மத்தியில் ஆட்சியை பிடித்தது எப்படி? மக்களுக்கு ஊட்டிய நம்பிக்கை. வெறுமனே சுற்றி திரிந்து நாம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், பேசும் தலைவர்களின் வாய்மொழி வார்த்தைகள் போதாது வெற்றி பெற. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் யார்? ஒரு காங்கிரஸ் கட்சின் மூத்த உறுப்பினரின் அடுத்த உறவு. இவர் பொய் நின்றால் எல்லோருக்கும் அவர் நினைவுதான் வரும். மேலும் வைக்கு வந்ததை பேசினால் போதாது, அர்த்தத்துடன் பேசவேண்டும் என்பதனை தமிழக பஜகாவினர் உணரவேண்டும். சென்னையில் ஒரு வேட்பாளர் தேர்தலில் நிற்க நாமிநேசியன் செய்ய போகிறார், எண்ணி 6 முதல் 8 பேர் பின்னல் போகின்றனர். இப்படி உள்ள ஒரு நிலையில் 234 தொகுதிகளிலும் எந்த தைரியத்தில் நிற்க இவர்கள் ஆலோசனை கொடுத்தனர் என்று தெரியவில்லை. இவை எல்லாம்தான் தோல்வி என்பதனை உணர்ந்து இனி வரும் காலங்களில் தங்கள் தகுதி அறிந்து, அதே சமயம் ஒன்றாக (அதி முக்கியமாக ஒன்றாக) போராடினால், சொன்னது போல செய்தால், இன்னும் இரண்டு தேர்தல்களில் ஒரு கணிசமான இடங்களை பிடிக்கலாம்.

 • Raja - Doha-Qatar,இந்தியா

  நன்றாக இருக்கிறது உங்களது கட்டுரை. முழுக்க முழுக்க நீங்கள் மோடியின் புகழ் பாடும் ஒரு விளம்பரதாரர் என்பது இதிலிருந்து விளங்குகிறது.....அதாவது தினமலர் போலவே ........மோடி ஒரு பாஜகவின் மற்றும் ஆர் எஸ் எஸ் இன் கைபொம்மைதான், அவர்கள் சொல்வதைத்தான் இவர் செய்வார் ...பிரதீபா பாட்டில் இன் வாரிசு தான் இந்த மோடி ...குறுகிய காலத்தில் எல்லா நாடுகளிலும் சுற்றி விட்டார்.....இரண்டு வருடங்களில் எத்தனை முறை பெட்ரோல் டீசல் விலை யை உயர்த்தி இருக்கிறார்.... இவருடைய கையாலாகத்தனம் தனம் தான் இது ...இதனால் சரக்கு கட்டணமும் ஏறியது மளிகை பொருட்கள் காய்கறி கல் விலையும் ஜெட் வேகத்தில் ஏறியது...இதற்கு அந்த காங்கிரஸ் ஆட்சியே எத்தனையோ மடங்கு மேல் .....முதலில் இந்த மோடிக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்துங்கள்....

 • CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்

  ///ஈ.வெ.ரா., அண்ணா, எம்.ஜி.ஆர். தங்கள் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிற மாதிரி, ஏதும் செய்யவில்லை./// இந்த மாதிரி ஆகாச புளுகு உட்டா எப்படி பாஜக வெல்ல முடியும்? தமிழ் மண்ணில் கால் ஊன்ற முடியும்? கடைசியில் ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது... இதுல வேற இந்த கட்டுரையை எழுதின பாசிரா மூத்த பத்திரிக்கையாளர்...பாஜக விளங்கிடும்..... பகுத்தறிவு பகலவனையும் பேரறிஞரையும் புரட்சித்தலைவரையும் தெரியாத இவரை பத்திரிகை உலகம் எப்படி ஏற்றுக்கொண்டது? இன்றளவும் இரட்டை இலை உதய சூரியன் சின்னங்கள் தமிழ் தேசத்தில் நிலைத்து நிறுப்பதற்கு காரணமே இந்த மூவரின் பங்களிப்புதானே.இவர்களுடன் கருணாநிதி ஜெயலலிதாவை சேர்த்து விமர்சிப்பதை இவர் புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்...... ஆனால் தமிழர்கள் பிரித்து பார்ப்பதில் வல்லவர்கள் என்று இவருக்கு தெரியவில்லை பாவம் விட்டு விடுவோம்... மறப்போம் மன்னிப்போம்

 • Ramesh - Kuwait,குவைத்

  நண்பா திராவிடம் பற்றி பேச அல்லது வெளியே வர சொல்வது எந்த விதத்தில் நியாயம். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவ படிப்பு, சட்ட படிப்பு என்பதையெல்லாம் மாற்றி அனைத்து சமுதாய மக்களும் படிப்பதற்கு வழிவகை செய்தது திராவிடம். எங்கள் அய்யா காமராஜர் குலக் கல்வி திட்டத்தை எதிர்த்தும் அதை வராமலும் பார்த்துக் கொண்டார். இப்போதைக்கு தேவை 1. அனைவருக்கும் இலவச கல்வி (அனைத்து ஜாதியினருக்கும், மதத்தினருக்கும்) 2. ஜாதி பெயர் இருக்கும் இடத்தில் : ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று எழதுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 3. ஜாதி, மதம் பார்க்காமல் தமிழ் வழிக்கல்வி அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மதிப்பெண் யார் அதிகம் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க செய்யவேண்டும் . 4. அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்க வைக்க வேண்டும். (படிக்க வைத்தால் தான் தேர்தலில் நிற்க அனைத்து கட்சிகளும் அனுமதிக்கவேண்டும்). 5. மத்திய, மாநில அரசாங்க அனைத்து ஊழியர்களும், தங்களின் குழந்தைகளை அரசாங்க பள்ளியில் தமிழ் வழி கல்வி படிக்க வைக்கவேண்டும். ( அப்போது தான் அனைத்து ஏழை மாணவர்களுக்கும், தரமான கல்வி கிடைக்கும், ஆசிரியர்களுக்கும் பயம் இருக்கும் ). 6. ஜாதி சான்றிதழ் கட்டயமக்க கூடாது. (ஜாதி சான்றிதழ் வழங்கும் அலுவலரை, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்ற வேண்டும்). 7. ஜாதி பார்த்து வேலை கொடுப்பதால், மற்ற ஜாதியினருக்கு உதவி செய்வது இல்லை. ஆணவமாகவும் ஏளனம் பார்கிறார்கள் 8. டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். 9. விவாசயிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். (தற்கொலைகளை தடுத்த நிறுத்த வேண்டும், ரியல் எஸ்டேட் பண முதலைகளிமிடருந்து காப்பாற்ற வேண்டும்) 10. அனைத்து இலவசங்களை உடனடியா நிறுத்த வேண்டும். (முதியோர் பணம், விதவை பணம், முதியோர்களுக்கு இருக்கும் சலுகைகளை தவிர) 11. ஜாதி சான்றிதழ் பார்த்து யாரும் வேலை கேட்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. (திறமையும், நேர்மையும், பணிவும் உள்ளவற்கே முதல் இடம்) 12. சமச்சீர் கல்வியை தரமானதாக உயர்த்த வேண்டும். (இப்போதைய கல்வி தரமானதாக இல்லை) 13. திரைபடங்களை தமிழை தமிழ் ஆசிரியர்களை அவமான படுத்தியாகி விட்டது. இனிமேல் அவமானபடுத்துவதை நிறுத்த வேண்டும். (தமிழ் அழிந்ததற்கு மிக முக்கிய காரணம் தமிழ் படங்கள்தான். உதாரணம் : பழைய படங்களில் கூட ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளி என்றும் தமிழில் பேசினால் முட்டாள் என்றும் தமிழர்கள் சித்தரிக்க பட்டார்கள், அதற்க்கு முட்டை கண் ராமசாமி போன்ற நடிகர்கள் முக்கிய காரணகர்த்தாக்கள். நாம் வணக்கம் சொல்ல மறந்து ஹாய், ஹாலோ என்று சொல்லி கொண்டுடிருக்க திரைபட துறை யும் காரணம். திரைபட துறை அழிந்தால் தான் நாடு முன்னேறும். 13.அ. தனியார் தொலை காட்சிகளில் நெடுந்தொடர், குறுந்தொடர்களை நிறுத்த வேண்டும். கு. ரமேசு, வேலூர். (குவைத்)

 • Lakshmanan KR - madurai,இந்தியா

  WELL SAID SIR BUT WE ( TAMIL PEOPLE ) ARE SLEEPING

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நல்ல கட்டுரை,. வாழ்த்துக்கள், தமிழர்கள் திராவிடத்தை விட்டு வெளியே வந்தால் தான், இதெல்லாம் புரியும்

 • TechT - Bangalore,இந்தியா

  "தேர்தலுக்கு முன்னால், வட சென்னையிலிருந்து, தென் சென்னைக்கு குடி வந்து, வாக்காளர் பட்டியலுக்கு குடும்பத்தோடு விண்ணப்பித்தேன்" - ஏன் வட சென்னை மோசமா ? அதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

 • mohanasundaram - chennai,இந்தியா

  அருமை. ஆனால் மோடி ஏழைகளின் மேல் கவனம் திருப்ப வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement