Advertisement

ரசாயன நஞ்சு எனும் மூன்றாம் உலகப் போர்!

உலக சுற்றுச் சூழல் தினம் அறிவிக்கப்பட்டு, இந்த ஜூன் மாதத்தில் கொண்டாடப்பட்டும் வருகிறது உணவில் தன்னிறைவு, உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு என்னும் நிலை தான் தற்போது உள்ளது. இரண்டாம் உலகப் போரின் மிச்சமாய் இருந்த இந்த ரசாயனங்கள் மனித உடலுக்குள் நோய்எனும் மூன்றாம் உலகப்
போரை நிகழ்த்திக்கொண்டிருப்பதை நாம் உணர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.பூச்சி, நோய் மற்றும் களைகளைக்
கட்டுப்படுத்த பயிருக்குப் பயன்
படுத்தும் ரசாயன மருந்துகளில் ஒருசிறு சதவிகிதம் மட்டுமே பயிர்களுக்கு பயன்படுகிறது. மீதமுள்ள நஞ்சு மண்ணில் நிறைந்து, காற்றில் பறந்து, நீரில் கரைந்து, புல்லில் புகுந்து, நெல்லில் விளைந்து, பசுவில் நுழைந்து, பாலில்பொழிந்து… களங்கமில்லா தாய்ப்பாலின் ஒவ்வொரு சொட்டிலும் பரவி விட்டது. இதை ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும் போது அதிர்ந்து போகாமல் இருக்க முடியுமா.
இது தொழில்நுட்ப புரட்சியல்ல; மனித குல வீழ்ச்சி என்பதை உணர்ந்து மாற்று வழியில் பயணிக்காவிட்டால், மண்டை ஓடுகள் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் மிச்சமிருக்கும்.
இயற்கை நியதி பூச்சி என்றாலே ரசாயன மருந்துதான் வழி என்ற தவறான வித்து, நம் எண்ணங்களில் விதைக்கப்பட்டு நச்சு மரமாக வேரூன்றி விட்டது.
காட்டில் மான்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க புலிகள் படைக்கப்பட்டதைப்போல, உணவுச் சங்கிலியில் இயற்கையே ஒவ்வொரு ஜனத் தொகையையும் நிர்ணயிக்கிறது. பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்ணும் இயற்கை எதிரிகளை, இயற்கையே படைத்துள்ளது.
இயற்கையோடு இயைந்து இருந்த போது ஒவ்வொன்றின் எண்ணிக்கையும் இயற்கை சமநிலையின்படி சீராக இருந்தது. இயற்கையை மீறி ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால், தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே உண்டு வாழ்ந்த, நன்மை செய்யும் பூச்சிகள் மாண்டு போயின. அதன்விளைவு…
பயிர்களைத்தாக்கும் பூச்சிகளுக்கு எதிரிகளே இல்லாமல் போனது.
இப்படி யானையின் காதிற்குள் நுழைந்த சிறு எறும்பாய் இப்பிரச்னை இன்று… சுகாதாரக் கேடு, சுற்றுச்சூழல் மாசு
என பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படையாய் போனது.ஒரு பூச்சியின் வாழ்க்கைப் பருவத்தை முழுமையாக தெரிந்து கொண்டால், ஒவ்வொரு பருவமும் பயிரில் எங்கு காணப்படுகிறது எனத்தெரிந்து, அவற்றை இயற்கை முறையில் அழிக்கலாம்.
ஒரு பூச்சியின் வாழ்க்கைப்பருவம் பெரும்பாலும் முட்டை பருவம், புழுபருவம், கூட்டுப்புழுபருவம், மற்றும் வண்ணத்துப்பூச்சி பருவம்என நான்கு நிலைகளைக் கொண்டது. புழு பருவம் தான் இலை, செடி, காய்களை உண்டு, பயிருக்கு பெரும் சேதம் விளைவிக்கும்.
கீரைகளின் அரசியாக விளங்கும் முருங்கை மரத்தை கம்பளிப் புழு தாக்கும் என்பதால், வீடுகளில் வைக்கப் பலர் தயங்குவதுண்டு. மரத்தின் அடியில் மண்ணுக்கு அருகில் கம்பளிப்புழுக்களை நெருப்பு வைத்து அழித்து விட்டால்
சத்தான கீரைகள் நமக்கு கிடைக்கும். அறிவியல் பார்வை
'சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம்'என்கின்ற, நம் முன்னோர் மொழி அறிந்திருப்போம். கூட்டுப்புழுப் பருவம் பெரும்பாலும் மண்ணில் இருப்பதால் கோடை உழவு செய்யும்போது அவை வெளிவந்து அழிக்கப்படும் என்கிற, முன்னோர்களின் அறிவியல் பார்வையினை நாம் அறிய வேண்டும்.
ஊடுபயிர், வரப்புப்பயிர், கலப்புப்பயிர் என எளிதாய் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வழிகளை வைத்து இருந்தனர், நம் முன்னோர்கள். சொக்கப்பான் கொளுத்துதல், விளக்கு பொறி வைத்தல் என்பவை எல்லாம் காலங்காலமாய் நாம் அறிந்திருந்த ஒன்றே.
காகிதத்தில் எண்ணெய் தடவி ஒளி விளக்குகளுக்கு அருகில் தொங்கவிட்டு, பறக்கும் சிறு பூச்சிகளை பிடிக்கும் ஒட்டும் பொறி முறை பாரம்பரியமாக ,நாம் பயன்படுத்திய பழைய முறையே. நீர், களை, பயிர் உர நிர்வாக முறைகளில் உரிய சிறு மாற்றங்கள் செய்து, பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர்.
அற்புத அறிவியல் விந்தை மருந்தே பயன்படுத்தாமல் பூச்சிகளின் மீது பல் முனைத்தாக்குதல் நடத்தி ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளன. இனச்சேர்க்கையின்போது, இயற்கையிலேயே பெண் அந்துப்பூச்சிகளின் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவம் சுரக்கும். ஆண் அந்துப் பூச்சிகள் மட்டுமே அந்த வாசனை அறியும்.
அந்த வேதியியல் பொருளை செயற்கை முறையில் தயாரித்து வயல்களில் வைக்கும்போது, ஆண் அந்துப்பூச்சிகள் கவரப்பட்டு அங்குள்ள பொறியில் பிடிபட்டுவிடும். இதனால் பெண் பூச்சிகள் முட்டையிட வழியின்றி வாழ்க்கை
சுழற்சி தடைபெற்று இனப்பெருக்கம் குறைந்துவிடும். பல்வேறு பயிர்களுக்கு இதுபோன்ற தனித்தனியான இனக்கவர்ச்சிப் பொறிகள் உள்ளது, அறிவியலின் அற்புதவிந்தையே.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல, பூச்சிகளுக்கு ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்களுக்கான கிருமிகளை கண்டுபிடித்து, அதனை உற்பத்தி செய்து தெளிக்கும் போது பூச்சிகள் இயற்கையாக குறைந்துவிடும். இது போன்ற வைரஸ் கரைசல்கள் மனிதர்களுக்கும் சுற்றுச்
சூழலுக்கும் தீங்கை ஏற்படுத்தாது. ரசாயனம் வேண்டாம் முள்ளை முள்ளால் எடுப்பது போல, பூச்சிகளை சாப்பிடக் கூடிய நன்மை தரும் பூச்சிகளும் முட்டை ஒட்டுண்ணிகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சிறிய சாறுஉறிஞ்சும் பூச்சிகளான மாவுப்பூச்சி, இலைப்பேன்கள் ஆகியவை, நல்ல மழை பெய்தாலே அடித்துச் செல்லப்
பட்டுவிடும். ரசாயன மருந்துகளில் ஊடுருவும் நஞ்சு மருந்துகள், செடிகளுக்குள்ளும் ஊடுருவிச் சென்று உணவுப்பகுதிகளிலும் தங்கி புற்றுநோயை
உருவாக்கும். ஊடுருவும் நஞ்சில் விஷம் இருக்கும் என்பதால், வீடுகளில் கூட தென்னைக்கு மருந்து வைத்தால் 15 நாட்களுக்குத் தேங்காய் பறிக்கக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.
அனைத்துப் பூச்சிகளையும் கட்டுப்படுத்த வேம்பிற்கு இணையான மருந்து இல்லை என்பதால், 'அசாடிராக்டின்' என்ற பெயரில் விற்கப்படும் வேம்பு மருந்துகளே சிறந்தது. அதனினும் சிறந்தது நாமே தயாரிக்கும் வேப்பங்கொட்டைசாறு, வேப்பஇலைச்சாறு, வேப்பஎண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்ற செலவு குறைந்த பூச்சிக்கொல்லிகள். இவற்றால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, இயற்கை எதிர்ப்பூச்சிகளும் பாதுகாக்கப்படும்.
வேம்பின் கசப்பு, பயிர்களை உண்ணவிடாமல் பூச்சிகளை விரட்டிவிடுகிறது. பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும்காய்கறிகள், மரங்களில் இந்த முறைகளை எளிதில்கடை பிடிக்கமுடியும். நமக்கும் மருந்தில்லா இயற்கையான காய்கறிகள் கிடைக்கும். மாசில்லா சுற்றுச்சூழலும் நோயில்லா வாழ்வும் தான், வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வமாக இருக்க முடியும்.
- எஸ்.மனோரஞ்சிதம்,வேளாண்மை அலுவலர், மதுரை98427 92877

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement