Advertisement

தோற்றுவிடுவோம் என்று நினைக்க வேண்டாம் - 'இறுதிச்சுற்று' இயக்குனரின் அறிவுரை

தமிழ் சினிமாவில், ஆண் இயக்குனர்கள் வெற்றி பெறுவதே பெரிய போராட்டமாக இருக்கும் நிலையில், தொடர் போராட்டங்களுக்கு பின் 'இறுதிச்சுற்றில்' வெற்றி பெற்றவர் பெண் இயக்குனர் சுதா கொங்கரா. அவர், மதுரை திருமங்கலம் வந்த போது தினமலர் வாசகர்களுக்காக அளித்த பேட்டி:
* ஆந்திராவில் பிறந்த உங்களுக்கு தமிழ் சினிமாவில் ஆர்வம் வரக் காரணம்?
ஆந்திராவில் பிறந்தாலும், 3 வயது முதல் சென்னையில் தான் வாழ்கிறேன். 8 வயதிலிருந்தே நிறைய சினிமா பார்ப்பேன். மணிரத்னத்தின் 'பகல்நிலவு' பார்த்த பின், சினிமா மீது தீவிர பற்று கொண்டேன். 20 ஆண்டுகளுக்கு பின், மணிரத்னத்திடமே அசோசியேட்டாக பணியாற்றுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
* தேசிய விருது பெற்ற 'மித்ர் மை பிரண்ட்' ஆங்கில படத்தின் திரைக்கதை எழுத்தாளராக சினிமாத்துறையில் நுழைந்த நீங்கள் எப்படி இயக்குனர் ஆக மாறினீர்கள்?
நான் எடுத்திருந்த ஆங்கில டாக்குமென்ட்ரியை பார்த்த இயக்குனர் ரேவதி, 15 பெண்களால் தான் உருவாக்கி வந்த ஆங்கில படத்தில் அசோசியேட்டாக எனக்கு வாய்ப்பளித்தார். முழுவதும் பெண்களால் உருவான அந்த படத்திற்கு திரைக்கதை எழுதினேன். பின்னர், நல்ல சினிமாக்களை இயக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
* சினிமாத்துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் பற்றி...
இந்த சமுதாயத்தில் குடும்பங்கள் தான் பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுப்பதில்லை. சினிமாவில் பெண்களுக்கு சுதந்திரமும் பாதுகாப்பும் இருக்கிறது. திறமை இருந்தால் எங்கும் ஜெயிக்கலாம். ஆயிரம் ஆண்கள் சினிமா துறைக்கு வந்தால், பெண்களில் 30 பேர்தான் வருகின்றனர். இதில் திறமையான 3 பேர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.
* நீங்கள் மாணவ பருவத்தில் குத்துச்சண்டையில் பங்கேற்றுள்ளீர்களா?
பள்ளி மைதானத்தில் ஆசிரியர் ஓட சொன்னால் கூட ஓடமாட்டேன். இறுதிச்சுற்று படத்திற்காக தான் குத்துச்சண்டையை முழுமையாக தெரிந்து கொண்டேன். விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஆனால் குத்துச்சண்டை போட தெரியாது.
* இயக்குனர் மணிரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய அனுபவம் பற்றி...
எதை செய்தாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற அவரின் பிடிவாதம் எனக்கு பிடிக்கும். அவரிடம் பணியாற்றிய காலங்களில் என்னை அறியாமல் நான் நிறைய விஷயங்களை, அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
* சினிமாவில் பெண்கள் கவர்ச்சி பொருளாக காட்டப்படுவது பற்றி உங்களின் கருத்து?
சமுதாயத்தின் பிரதி தான் சினிமா. இங்கு என்ன நடக்கிறதோ அது தான் சினிமாவில் காட்டப்படுகிறது. பெண்களை கவர்ச்சி பொருட்களாகத் தானே சமூகத்தில் பார்க்கிறார்கள்.
* இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு உங்களின் அறிவுரை...
வாழ்க்கையிலும், சினிமா இயக்குவதிலும் வரும் கஷ்டங்களை பார்த்து மனம் தளராமல் உறுதியுடன் இருக்க வேண்டும். தோற்றுவிடுவோம் என்று இடையில் வெளியேற கூடாது. சினிமா மீது அன்பும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவது உறுதி.
* ஏன், தமிழ் சினிமாவில் அதிக பெண் இயக்குனர்கள் உருவாவதில்லை?
இந்தியில் பாரா கான், மீரா பாய், தீபா மேத்தா போன்ற சிறந்த இயக்குனர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் இப்போதைய பெண் இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுக்க துவங்கினால், நிறைய பெண் இயக்குனர்கள் உருவாகுவார்கள்.
* இயக்குனர் பாலாவிடம் பணியாற்றி உள்ளீர்களாமே...
பாலாவிடம் பணியாற்றவில்லை. அவருடைய படத்திற்கு 4 மாதங்கள் உதவிகள் செய்தேன். தமிழ் சினிமாவில் மணிரத்னம் மற்றும் பாலாவை எனக்கு பிடிக்கும்.
* இந்தியிலும் வெற்றி பெற்றுள்ள இறுதிச்சுற்றை தொடர்ந்து, இந்தி படங்கள் இயக்கும் திட்டம் உள்ளதா?
இந்தி படங்கள் இயக்குவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அது எனக்கு அந்நியமாக உள்ளது. இறுதிச்சுற்றை இந்தியில் இயக்க 5 ஆண்டுகள் என்னை தயார் செய்தேன். என் மொழிகளாகிய தமிழ், தெலுங்கில் தொடர்ந்து இயக்குவேன்.
* உங்களுக்கு நடிப்பில் ஆர்வமுண்டா?
இல்லை.
இவரை பாராட்ட sudhakongaragmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement