Advertisement

ஒரு குச்சி ஒரு வானம்

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக தனியார் பேருந்து ஒன்றில் புதுச்சேரி சென்றேன். என்னை அழைக்க வருபவருக்கு தகவல் சொல்வதற்காக ஓட்டுநரிடம்,
“புதுச்சேரி போய்ச்சேரும் நேரம் என்ன?” என்று கேட்டேன். பலமுறைக் கேட்டும் பதில் சொல்ல மறுத்துவிட்டார். என்ன காரணம் என்று விசாரித்த போது, அப்படிக் கேட்பது அபசகுனமாம்!தன் மீதும் தனது தொழில்திறன் மீதும் நம்பிக்கை இல்லாமல் இப்படி நம்புவது, பெரும்பான்மையான வாகன ஓட்டுனர்களிடம் இருப்பதைப் பின்னர் அறிந்தேன்.
புறப்படும் நேரம், சேரும் நேரம் இரண்டிற்கும் முன்பும் பின்பும் காலம் தொடர்கிறதே. இறைநம்பிக்கையோடு தன்திறனையும் உழைப்பையும் நம்பி பொறுப்புணர்வோடு செயல்படுபவர்களுக்கு 'நல்ல காலம் பொறக்குது' என்று சொல்ல எந்த குடுகுடுப்பைக்காரனும் தேவையில்லை.
ஆகாய ஆச்சரியம் ;அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.
இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்?
சாம்பலில் எழுந்த பீனிக்ஸ் :பல்வேறு துறைகளில் மாபெரும் வெற்றி பெற்றோர் அனைவரும், நாம் எதிர்பாக்கவே முடியாத சின்ன விஷயங்களை ஆதாரமாகப் பிடித்து சாதித்தவர்களே.இரண்டாம் உலகப்போர்... ஹிரோஷிமா, நாகசாகியின் மீது வீசப்பட்ட அணு குண்டு களின் பேரழிவில் முடிவுக்கு வந்தது. லட்சக்கணக்கான மனித உயிர்கள் மலினப்பட்டுப் போய் கருகலாய்.... சாம்பலாய்... வானளாவிய கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாய்! எல்லாம் சாம்பல் மேடாய்! எல்லாம் இழந்து வாழ்க்கை கைவிட்டுப்போன ஹிரோஷிமாவில், 24 வயதான ஓர் இளைஞன் மட்டும் இடிபாடுகளுக்கு இடையே எதையோ தேடுகிறான். கண்ணில் பட்ட உலோகச் சிதறல்களை, இரும்புத் துண்டுகளை ஒரு கோணிப்பையில் சேகரிக்கிறான். முதுகில் மூடையாக சுமந்து பல மைல் துாரத்தில் உள்ள ஊருக்குச் சென்று பழைய உலோகப் பொருட்களை வாங்கும் கடையில் எடைக்குப் போட்டு பிழைப்பை ஆரம்பிக்கின்றான்.
அந்த இளைஞன்தான், பிற்காலத்தில் உலகின் நவீனத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்த டிரான்சிஸ்டர் தொடங்கி, இன்றுள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருட்களின் தயாரிப்பு நிறுவனமான 'சோனி' நிறுவனத்தை உருவாக்கிய அக்கியோ மொரிட்டோ.பேரழிவுகளின் இடையே தனக்கான வாழ்க்கையைத் தேடிய அக்கியோ மொரிட்டாவை, சாதாரண உலோகச் சிதறல்கள் உச்சத்திற்கு கொண்டு சென்றன என்றால், நாம் வாழும் இந்த அற்புதமான உலகில் முன்னேறுவதற்கு கண் முன்னே எவ்வளவு ஆதாரங்கள், வாய்ப்புகள்!
சம்பாதிக்கும் சின்ன கரங்கள் :கியூபா என்பது உலக வரைபடத்தில் ஒரு கோழிமுட்டை அளவுள்ள வட அமெரிக்க நாடு. அந்த குட்டி நாடு, அமெரிக்காவின் வல்லாண்மைக்கு அடிபணியாமல் இன்றுவரை எதிர்த்து நிற்பதற்கும், எழுந்து நிற்பதற்கும் காரணம், அந்நாட்டு மக்கள் அனைவரும் அயராத உழைப்பாளிகள் என்பதுதான். பள்ளி செல்லும் சிறுவர் -கூட தங்கள் வீட்டுத் தோட்டத்தில் மண்புழு உரத்தை தயாரித்து பொருள் ஈட்டும் வழக்கம் உடையவர்கள் என்பதுதான், அந்நாட்டின் தன்னிறைவுக்கும், வல்லரசையே எதிர்த்து நிற்கும் துணிவிற்கும் காரணம்.
ஆக்கப்பூர்வமான பழிவாங்கல் :இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வீழ்ந்தபோது, அந்நாட்டு இளைஞர் இயக்கத் தலைவன் ஒருவன், 'எங்கள் தேசத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இதற்காக நாங்கள் அமெரிக்காவைப் பழிவாங்குவோம்!' என்றான். 'எப்படி பழிவாங்கப் போகிறீர்கள்?' என்று நிரூபர்கள் கேட்டபோது, 'நாங்களும் இரண்டு அணுகுண்டுகளைச் செய்து அமெரிக்காவின் இரு பெரு நகரங்களில் வீசப்போகிறோம்!' என்று அவன் கூறவில்லை.
அவன் சொன்னான், 'இனி நாங்கள் மிகக் கடுமையாக உழைக்கப் போகிறோம். எங்கள் அயராத உழைப்பின் மூலம் எங்கள் தேசத்துப் பொருட்களின் உற்பத்தித் தரத்தை உயர்த்தப் போகிறோம். பின்னர், உலகச் சந்தையில் ஜப்பானிய பொருட்கள்தான் முதல் தரமான பொருட்கள் என்பதை முன்னிறுத்தி, உலகச் சந்தையிலே இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதுதான், நாங்கள் அவர்களைப் பழிவாங்கப் போகும் விதம்' என்று கூறினான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 110 அடுக்கு மாடிகளை கொண்ட வர்த்தக கட்டடங்களின் மீது பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி, அக்கட்டடங்கள் தகர்ந்து தரைமட்டமாவதைக் கூட அமெரிக்கர்கள், ஜப்பானிய தயாரிப்பான 'சோனி' தொலைக்காட்சியில்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான சிந்தனை உடைய தலைமுறை எப்போது உருவாகும்?
பாவமும் பெரும்பாவமும் :'பிச்சை எடுப்பது பாவம்' என்று சமய ரீதியாகத் தடை செய்த சீக்கிய சமூகத்தில், அனைவரும் உழைப்பு விலாசத்திற்கு உரியவர்களாக இருப்பது நாம் பார்க்கும் சத்ய சாட்சி.அதுபோல, 'இலவசங்களைப் பெறுதல் என்பது பெரும்பாவம்' என்ற பொதுமனநிலை உருவாக வேண்டும். 'உழைத்துதான் உண்பேன்' என்ற நேரிய பிடிவாதம் சமூகத்திற்கு உரியதாக வேண்டும். அதற்கான வாய்ப்பு வாசல்களைத் திறந்து வைப்பதே, ஆளும் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.- முனைவர். மு.அப்துல் சமது,இணைப் பேராசிரியர்உத்தமபாளையம்93642 66001

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • gopinath - BANGALORE ,இந்தியா

    அற்புதமான கட்டுரை - நன்றி அய்யா..

  • razik - bangkok,தாய்லாந்து

    ஊக்கம் தரும் ஆக்கம் வாழ்த்துக்கள்

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    மிக்க நன்றி அய்யா .இந்த கட்டுரையால் நானும் குச்சி ஒன்றை எடுத்து செல்ல உள்ளேன் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement