Advertisement

பயணங்கள் முடிவதில்லை! - என்பார்வை

பலம் தந்த பயணங்கள் அத்தனை இன்பமும் பெறுவதற்காக நாமும் பயணிப்போம். உங்கள் குடும்பத்தாரோடு சுற்றுலாசென்ற நிமிடங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு வெகு நெருக்கமாகியிருப்பான். இரண்டடி துாரத்தில் நின்று பேசுகிற உங்கள் மகள் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பாள். எப்போதும் உங்கள் குறைகளையே பிரகடனப்படுத்தும் உங்கள் அலவலக நண்பரோடு சுற்றுலா சென்றதுண்டா? சென்றிருந்தால் நீங்களும் அவரும் விசாலமாயிருப்பீர்கள்.
துாரங்களைத் துரத்தும் நேரங்களைச் சுற்றுலா நமக்குச் சத்தமில்லாமல் தந்து செல்கிறது. பிணக்கை விடுத்துப் பிணைப்பையும் ஓர் இணைப்பையும் சுற்றுலா உருவாக்குகிறது. பிளவுபட்ட மனங்களை நெருக்கி நிறுத்துகிறது.
ஓட்டத்தையும் முக வாட்டத்தையும் தடுத்து இறுக்கத்தை நிறுத்தி நெருக்கத்தை உருவாக்குகிறது. பண்பாட்டை நமக்குக் கற்றுத்தருகிறது.
நகர்வுத் தியானம் பயணம் ஓர் நகர்வுத் தியானம். பயணப்படும்போது நாம் பக்குவம் அடைகிறோம். பயணம், பாதங்களால் நடக்கும் பக்குவத் தியானம். பயணப் பொழுதுகளில் நீங்கள் பக்குவமாகியிருப்பீர்கள். பயணப் பொழுதுகளில் உங்கள் சிக்கல்களுக்கும் விக்கல் எடுத்திருக்கும். பயணப்பொழுதுகளில் நீங்கள் இயற்கையின் இதயத்தில் இருந்திருப்பீர்கள். தீட்டத்தீட்ட ஒளிர்கிற வைரங்கள் மாதிரி நடக்க நடக்க நீங்கள் காலத்தையும் கடந்திருப்பீர்கள்.
அலுவல் அழைப்பில்லா அந்த அருமைப் பொழுதுகளில், அலைபேசிகள் செவிகளை வருத்தாத அந்த அமைதிப் பொழுதுகளில் வினாடிகளில் சிந்தையை நிறைத்திடும் விந்தை நிகழ்வதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நாம் கடிகாரம்
கட்டிக்கொண்டுள்ளோமோ?
நம்மைக் கடிகாரம் கட்டிக் கொண்டிருக்கிறதோ என்று சந்தேகப்படும்படியாக, வாழ்வின் முதல்பாதியில் டென்ஷனுக்கும் அடுத்தபாதியில் பென்ஷனுக்கும் தன்னைக் கொடுத்து வாழும் மனிதர்களை பயணப்பொழுதுகள் பழுது பார்க்கின்றன. பூமியின் பிரம்மாண்டத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள். நீங்கள் வசிக்கும் மண்ணின் மகத்துவத்தைஉங்கள் மனம் கண்டு மலைத்திருக்கும்.
சுற்றிக்கொண்டேயிருப்பதே சுகம் தோன்றிய வினாடியிலிருந்து சுற்றிக்கொண்டே இருக்கும் பூமிமாதிரி இடையறாது சுற்றிக்கொண்டேயிருப்பதன் சுகம் தனியானது. அதனால்தான் காசியில் வசிப்பவனுக்கு ராமேஸ்வரமும், காஞ்சியில் வசிப்பவனுக்கு ரிஷிகேசும் புனித தலங்களாய் முன்னிறுத்தப்பட்டது.
கோல்கட்டா நகரில் பிறந்த சுவாமி விவேகானந்தர் மிகுந்த சிரமத்திற்குஇடையே, சிகாகோ மாநகருக்கு மேற்கொண்டபயணம் இந்தியப் பண்பாட்டை உலகுக்கு உணரவைத்தது. இமயம்
முதல் குமரிவரை அவர் கடந்தபாதைகள் அவருக்கு இந்தியா குறித்த விசாலமான பார்வைக்குக் காரணமாய் அமைந்தன. அவருக்குத் தென்னிந்தியா மிகவும் பிடித்த பகுதியாய் இருந்தது.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற புகழ்மிக்க வழக்கறிஞராய் வழக்கு நடத்த தென்னாப்ரிக்கா பயணம் மேற்கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பயணம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவரை அழைத்து வந்தது.
மகாகவி பாரதியின் பயணங்கள்
தமிழக மக்களுக்கு எழுச்சியையும் உற்சாகத்தையும் தந்தன. எட்டயபுரத்தில் பிறந்து திருநெல்வேலியில் கல்விகற்று காசி சென்று உயர்கல்வி முடித்து பலமொழிகள் கற்று சென்னையிலும் புதுவையிலும் கடையத்திலும் வாழ்ந்து இயற்கையை ரசித்து “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பலதோற்ற மயக்கங்களோ?” என்று கேட்கக்காரணமாய் அமைந்த
பயணங்களை எப்படிப் புகழ்வது?
உலகைச் சுற்றிய பயணிகள்
போர்ச்சுக்கீசிய நாடு காண் பயணியாகக் கிளம்பிய வாஸ்கோடகாமா, ஆப்ரிக்காக் கண்டத்திலிருந்து, 23 நாட்கள்
இந்தியப்பெருங்கடலில் பயணித்து இந்தியாவின் மலபார் கடற்கரைப்பகுதியை அடைந்தார்.கிறிஸ்டோபர் கொலம்பசின் பயணத்தால், அமெரிக்க நாடு உலகின் பார்வைக்கு வந்தது. சீனப்பயணியான யுவான்சுவாங், கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அற்புதமானது. காஷ்மீர், பாடலிபுத்திரம் போன்ற பகுதிகளுக்குப் பயணித்து
புத்தசமயம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். சமஸ்கிருதத்தில் இருந்த புத்தசமய நுால்களைக் கற்றுணர்ந்து, சீனமொழியில் மொழிபெயர்த்தது அவர் பயணத்தால் நிகழ்ந்த நிகழ்வு.
பயணித்த கடல் பார்த்த கண்கள், நதியில் கால் நனைக்கும் கால்கள், அருவியில் நனையும் அழகுத்தலைகள், தேயிலைத் தோட்டத்தில் நுரையீரல் நிறைக்கும் வெகு சுத்தமான ஆக்சிஜன் காற்று, பயணத் தடங்களில் கிடைக்கும் சூடான தேநீர், மாசு மருவற்ற அற்புதமான ரயில் சிநேகம் எல்லாம் கிடைத்து எவ்வளவு நாட்களாயிற்று?
இன்னும் திருமலை நாயக்கர் மகால் பார்க்காத திருவாளர்கள் எத்தனைப் பேர்? தேக்கடி கூடப்பார்க்காமல் கொசுக்கடியில் தவிப்போர் எத்தனை பேர்? மதுரை ஈர்ப்பில் அழகர்கூட ஆண்டுக்கொருமுறை அழகர்கோயிலை விட்டுக்கிளம்பி வந்து விடுகிறார். ஆனால் இல்லம் விட்டு நகராமல் இன்னும் நாம்!
நிம்மதி தரும் பயணங்கள் ஓடும் நீர் தானே நதியாகும், இயங்காமல் இருக்கிற இடத்தில் இருப்பது சதியாகும். குதிரைப்பந்தயத்தில் உள்ள குதிரைகளை போல், ஓடிக்களைக்கும் போது வலு
குறைந்ததாய் வாழ்க்கை நம்மை வாசலில் கொண்டு நிறுத்துகிறது. வாழ்வின் வசந்தத்தை ரசிக்க நாம்
வெளிநாடுகளுக்கு தான் விமானத்தில் பறக்கவேண்டும் என்பதில்லை. மெட்ரோ ரயில்பயணம் கூட, மெட்டுப்போட்ட பாட்டு நம்மைக் கட்டிப்போடுகிற மாதிரி இனிமையானதுதான். பயணப்பொழுதுகளில் பஞ்சுபோல் நெஞ்சு மாறுகிறது.
சோகம் தொட்டுச் சென்றே பழக்கப்பட்ட நமக்கு, மேகம்தொடும் அனுபவம்தரும் மலைத்தலங்கள் பக்கத்தில்தான் இருக்கிறது. பேருந்துப்பயணம் எத்தனை அற்புதமானது! ஜன்னலைத்தாண்டி நம் மீது சில்லென்று வீசும் பூங்காற்று, நாற்கரச்சாலையின் நடுவே அழகாகப் பூத்திருக்கும் அரளிச்செடிகள், இருபுறமும் பின்னால் ஓடும் மரங்கள் யாவும்
அழகியல் காட்சிகள்.ரயில் பயணம் இன்னும் அழகு. நம் வீடு போல் நடக்கவும், நிம்மதியாய் துாங்கவும் எந்த அலுப்பில்லாமல்
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பல மாநிலங்களைப்பார்த்து ரசிக்கவும் வாய்ப்பளிக்கவும் உதவும் ரயில்பயணம் பல நண்பர்களை நமக்குத் தந்திருக்கிறதே.கேரளக்கடற்கரையின் படகுப்
பயணம், கன்னியாகுமரிக்கடலில் ஸ்டீமர் பயணம், கிராமத்தில் கட்டைவண்டிப் பயணம்,உடல்நலத்திற்கு உதவும் சைக்கிள் பயணம்,சிறு தெருக்களில்
நுழைந்து வெளிவரும் ஆட்டோப்பயணம், பஞ்சுப் பொதிகளுக்குள்நுழைந்ததுபோல் ஆகாயத்தைக்கிழித்தபடி விரிவானில்பல நாடுகளைக் கடக்கும் இனிமையான விமானப்பயணம்.. என்றுவிதவிதமாய் அவரவர் வசதிக்கு ஏற்றபடி இனிமையான பயணங்கள்.
-முனைவர் சவுந்தர மகாதேவன்தமிழ்த்துறைத்தலைவர்சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லுாரி,திருநெல்வேலி
99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Mani Kandan - tanjore,இந்தியா

    அருமை அருமை சௌந்தர மகாதேவன் அய்யா வாழ்க வளமுடன் என்னவொரு அழகான அருமையான கட்டுரை. இப்பவே சுற்றுலா போக வேண்டும் போல் இருக்கிறது. இந்த கட்டுரையை படிப்பவர்கள் கண்டிப்பாக சுற்றுலா செல்ல அயத்தமாவார்கள். இதுபோல் இன்னும் நிறைய எழுதவேண்டும்.

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    நாம் சிறு வயதில் நம் பெற்றோருடன் ஊருக்கு சென்றதை நினைத்து பாருங்கள். கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகும். அத்தனை இன்பமயமானது.அதுவும் அந்த நீராவி எஞ்சின், அதன் இயக்கம், அந்த விசில் சத்தம்.நீராவி எஞ்சினிலிருந்து சுடு நீர் பிடித்து அதில் காபி அருந்தியது.பாலுக்கு மில்க்மெயிட் டின். ஜோலார்பேட்டை சந்திப்பில் எந்த நேரமும் ( இரவானாலும் சரி ) டீ, காபி டீ, காபி என்ற இனிமையான குரல்,இன்னும் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளன. நெஞ்சம் மறப்பதில்லை.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    பயணங்கள் சிறப்பானவை என்பதால்தான் காசி ராமேஸ்வரம் த்வாரகை மற்றும் பூரி ஜகன்னாத் என்று இந்தியாவில் நான்கு திசைகளிலும் உள்ள சிவாலயங்களை பார்க்கும்படி இந்துமதம் வலியுறுத்துகிறது. நான் ஒரு அரசு வங்கியில் வேலைபார்ப்பதால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன். சுற்றுலா உண்மையில் மிகவும் சுகமானது மற்றும் அறிவை பெருக்கும் அருமருந்து. எனது ஓய்வுக்கு பின்னும் நான் பார்க்க எண்ணியுள்ள இடங்கள் ஏராளம். எனது சேமிப்பு முழுவதையும் சுற்றுலாவிலேயே செலவு செய்ய எண்ணம். பயணங்கள் செல்லும்போது கண்டிப்பாக செல்போனை பார்க்காமல் சுற்றுப்புறங்களை கவனிப்பது மிகுந்த நன்மை பயக்கும் என்பதையும் சொல்லவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement