Advertisement

வெற்றி நமதே!

பள்ளி, கல்லுாரி தேர்வுகளிலோ நேர்முகத் தேர்விலோ, விளையாட்டு போட்டியிலோ தோல்வி நேர்ந்து விட்டால் துவண்டு போகிறவர்கள்தான் அதிகம். 'அதற்கு அவசியம் இல்லை' என்கிறார்கள் அறிஞர்கள். 'வெற்றியால் கிடைக்கும் பலனை விட தோல்வியால் கிடைக்கும் பாடங்களே சிறந்தவை' என்கின்றனர்.தோல்வி ஏற்பட்டால் ஏன் ஏற்பட்டது? என சிந்திக்க வேண்டும். மாறாக கவலைப்பட்டால் சோர்வு வரும். சிந்தித்தால் தீர்வு வரும்.

ஏன் தோல்வி என்பதை பட்டியலிடுங்கள். சுயபரிசோதனை செய்யுங்கள். பல காரணங்கள் நமக்கு பிடிக்கும். அணுகுமுறையில் ஏற்பட்ட குளறுபடி தெரியும். தயாரிப்பு முறையில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் விளங்கும்.'வேகமாக ஓடும் முயல், மெதுவாக செல்லும் ஆமையிடம் தோற்றது ஏன்?' என்ற கதை நமக்கு தெரியாதா.
தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல், ஒரு மணிநேரம் தாமதமாக சென்று தனது கண்டுபிடிப்பு குறித்து பதிவு செய்திருந்தால், அதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எலிசா கரே என்பர் முந்தியிருப்பார் என்று ஒரு தகவல் உண்டு. எனவே தாமதம் என்ற தடைகளை தகர்த்து சிகரம் தொட சிறகை விரியுங்கள்.

உங்களால் முடியும் :உங்களால் முடியும் என்று உறுதியாக நம்புங்கள்; வெற்றி உறுதி. அது நீங்கள் விரும்பும் வகையில்தான் அமையும் என அவசியமில்லை. அது வேறுமாதிரியாகவும் அமையலாம்.பள்ளி படிப்புக்கு தகுதியில்லை என்று விரட்டியடிக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், பல கருவிகளை கண்டுபிடித்தார். பார்வை இழந்த பின்பும் உலகம் போற்றும் வகையில் உன்னத கவிஞனாய் உயர்ந்தவர் மில்டன்.'ஓடப்பயந்த நதிகளில் கிருமிகள் வந்து குடியிருக்கும்
உயரப் பிறந்த நதிகளே அருவிகள் என்று பெயரெடுக்கும்'என்ற கவிதையின்படி இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.

திருப்புமுனை :தோல்வி என்பது தோல்வி அல்ல; அது ஒரு திருப்புமுனை. கும்பகோணத்தில் பிறந்த கணிதமேதை ராமானுஜம் கண்டுபிடித்த, சில கணித வழிமுறைகளை உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் பிரமிப்போடு ஆராய்கிறார்கள்.ஆனால் கும்பகோணம் கல்லுாரியில் ஒருமுறை, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் ஒரு முறை என தனியாக முயன்று 'இன்டர்மீடியட்' எனும் தேர்வில் தோற்றுப் போனார். அதே ராமானுஜத்துக்குதான் கணித ஆராய்ச்சிக்காக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை பி.ஏ., பட்டம் வழங்கி சிறப்பித்தது. தேர்வு ஒன்றுதான் வழியல்ல; நாம் பிரகாசிக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொடக்க காலத்தில் டில்லியில் ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்றார்; தேர்வாகவில்லை. ரிஷிகேஷ் பகுதிக்கு சென்று சோர்வோடு உலாவிக்கொண்டிருந்தபோது, ஒரு மகானை சந்தித்தார். அவரிடம் நடந்ததை சொன்னார்.
'கவலைப்படாதே! இதைவிட பெரும்வாய்ப்புக்கள் உனக்காக காத்திருக்கின்றன' எனக்கூறி ஆசி வழங்கினாராம்.

மருத்துவக்கல்லுாரியில் இடம் பிடித்து சிறந்த மருத்துவராக வேண்டும் என ஒரு மாணவர் ஆசைப்பட்டார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. தனது வாழ்க்கை பாதையை திருப்பினார். கடுமையாக உழைத்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். முதலில் ஆசைப்பட்டது நிறைவேறவில்லை என முடங்கிவிடக் கூடாது.'தோல்விகள் சில நாள் வரவாகும். உன் வேள்வியில் அவைதான் உரமாகும். லட்சியம் ஒரு நாள் வரமாகும்' என்ற கவிதை வரிகளை எண்ணிப்பார்ப்போம்.

ஆறுமுனை சிந்தனைகள்
தோல்வி ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றி ஓர் ஆறிஞர் பட்டியலிடுகிறார்...
1. நமது ஆற்றல் என்ன என்பதை ஆராய்தல்.
2. தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்தல்.
3. இந்த தோல்வியால் ஏற்பட்ட நஷ்டம் என்ன
4. வெற்றியாக அமைந்து இருந்தால் என்ன பயன் கிடைத்திருக்கும்.
5. தொடர்ந்து முயல்வதற்கான அடுத்த வாய்ப்புகள் என்னென்ன?
6. உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக உங்களது பெற்றோரால் திணிக்கப்பட்ட துறையாக இருந்து தோல்வி ஏற்பட்டிருந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு முயலுதல் வேண்டும்.
விருப்பம்
விருப்பம்தான் வெற்றியின் விதை. ஆயிரம் பூக்களில் அமர்ந்தும் தேனீக்
களுக்கு அயர்வில்லை. காரணம், தேன் எடுப்பதில் உள்ள ஆர்வம்.
இலக்கியம், வரலாறு போன்றவற்றில் ஈடுபாடுடைய மாணவர்களை பெற்றோர் தங்கள் நோக்கத்திற்காக பொறியியல், மருத்துவ துறைக்கான பாடங்களை படிக்க வற்புறுத்துவதால், அது எதிர்விளைவை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு பங்களாவில் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த போது, திருடன் ஒருவன் புகுந்து, சில பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அதை விழித்திருந்த ஒரு சிறுமி பார்த்துவிட்டாள். கத்தி விடுமோ என பயந்து கத்தியை காட்டினான். சிறுமி, திருடனை அருகில் அழைத்தாள்.

''பயப்படாதே கத்த மாட்டேன். அதற்காக
நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்.
என்னுடைய பள்ளிக் கூட பையை துாக்கிக்கொண்டு போய்விடு,'' என்றாளாம். பாடத்தில் இத்தகைய வெறுப்பு இருந்தால் படிப்பு எப்படி வரும்?
ஆற்றல் இல்லாமையா
'தங்களிடம் ஆற்றல் இல்லாததே தோல்விக்கு காரணம்' என சிலர் தாழ்வு மனப்பான்மை கொள்வார்கள்; அது முழு உண்மையல்ல. சூழ்நிலையும் சந்தர்ப்பமும் காரணமாக அமையலாம். உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டில் ஒரு போட்டியில் செஞ்சுரி அடித்த சச்சின் டெண்டுல்கர், இன்னொரு ஆட்டத்தில் 'டக் அவுட்'
ஆகி வெளியேறுகிறார். அதற்காக அவருக்கு ஆற்றல் இல்லை
என்பதா. அவருடைய ஆற்றல் நாம் அறியாததா? உடல்நிலை, வெளி நாட்டின் சீதோஷ்ண நிலை போன்ற காரணங்களால் அந்த தோல்வி ஏற்பட்டிருக்கலாம். இதனால் அவர் முடங்கி போகவில்லை. அடுத்த போட்டியில் சாதனை படைக்கிறார். வாழ்க்கையும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு போல் தான்.

அவமானத்தை உரமாக்குங்கள்

தோல்வி என்பது அவமானப்படத்தக்கதல்ல; ஆராயத்தக்கது. மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று மயங்கக் கூடாது. எதிர்காலமே இருண்டு விட்டதாக எண்ணக் கூடாது. அந்த அவமானங்ளையே உரமாக்கிக்கொள்ள வேண்டும். துாற்றுகிறவர்கள் துாற்றினாலும் மாற்றுவழி கண்டுபிடித்து ஏற்றம் காணுங்கள். இகழ்ந்தவர்களே புகழ்ந்து பேசும் சூழ்நிலையை உருவாக்குங்கள்.
வரலாற்றில் டெமாஸ்தனிஸ் என்பவர் திக்குவாய்க்காரர். தொடர்ச்சியாக பேச வராது. மற்றவர் கேலி செய்தார்கள். அதற்காக அவர் உயிரைவிட நினைக்கவில்லை. அதை உரமாக்கினார்.
கடற்கரையோரம் சென்று வாயில் சிறு சிறு கூழாங்கற்களை போட்டு பேசி பேசி பழகினார். பின்னாளில் உலகின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
நம்பிக்கையூட்டும் ஒரு கவிதையை பாருங்கள்...
சிறகாய் முயற்சியை தரித்துவிடு - உன்
செயல்களில் எல்லாம் விரித்துவிடு
திசைகள் எவையென தெரிந்துவிடு
தெளிவாய் உன்னை புரிந்துவிடு
தோல்வி சொல்கிறதாம்
முதலில் என்னை சந்தித்தவர்கள்
முயன்றால் விரைவில்
வெற்றியை சந்திப்பார்கள்.
- முனைவர் இளசை சுந்தரம்
எழுத்தாளர், பேச்சாளர்
98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Shruti Devi - cbe,இந்தியா

    முனைவர் இளசை சுந்தரம் அவர்களுக்கு நன்றி ..... மிகவும் யோசிக்க வைக்கிறது ஓவரு வரியும் .........துாற்றுகிறவர்கள் துாற்றினாலும் மாற்றுவழி கண்டுபிடித்து ஏற்றம் காணுங்கள். இகழ்ந்தவர்களே புகழ்ந்து பேசும் சூழ்நிலையை உருவாக்குங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement