Advertisement

மன்னித்தால் மனம் சுத்தமாகும்

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை 'மன்னிப்பு'. இதுகொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். ஆனால் மன்னிப்பதும்,
மன்னிக்க வேண்டுவதும் எவ்வளவு பாதுகாப்பு என்பதை நாம் அறிய வேண்டும்.
“உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நண்பர்கள்?”என்று என்னைப் பார்த்துப் பலர் வியப்பதுண்டு. இத்தனைக்கும் நான் பெரிய பிரபலமும் இல்லை. இதற்கு நட்பு மட்டும் போதாது. நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் அல்ல. பாசமும் பரிவும் காட்டுவதுகூட அல்ல. மன்னிக்கிற மாண்புதான் மிக இன்றியமையாதது. மன்னிப்பு மாபெரும் சித்துகளை நிகழ்த்துகிறது என்பதைக் கேட்டு அல்ல, கடைப்பிடித்துப் பயன்கொண்டால் உங்களுக்கே இது புரியும்.

மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. மன்னிப்பு என்பது இறைத்தன்மை. இறைவன் நம்மை மவுனமாக மன்னித்துக் கொண்டிருப்பதால்தான் வெளியில் தெரியாத மாபாவிகளான நம்மில் பலர் நிம்மதியாக நடமாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மன்னிப்பு என்பது ஒரு மென்மையான தண்டனையே தவிர அடுத்த தவறுக்கான அங்கீகாரமோ, அனுமதியோஅல்ல.

உறுத்தும் பாரம் :“இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்பார் மார்ட்டின் லுாதர் கிங். அந்த அன்புதான் மன்னிப்பு. மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல.

“மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” என்று முன்னாள் பிரதமர் இந்திரா சொல்லியிருக்கிறார். நமக்கு ஊறு செய்கிறவர்களை மன்னிக்கிற போது ஒரு பெரிய பாரத்தை மனதிலிருந்து இறக்கி வைத்ததைப் போல உணர்வோம். மாறாக அது மனதிலேயே தங்கியிருக்குமானால் பெரும் பாரமாகவே நம்மை உறுத்திக்கொண்டிருக்கும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான்திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று காந்தியடிகள் சொல்வதிலிருந்து இந்தப் பேராபத்து நமக்குப்புலப்படும்.

பொறுத்தல் :க.ப.அறவாணன் 'பொறு, புறக்கணி, புறப்படு' என்பார். நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஊறு செய்கிறவர்களை அலட்சியப்படுத்திவிட்டு மேலே சென்று கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை, இந்தமூன்று சொற்களும் நம்மைப்புரிந்து கொள்ள வைக்கும். இவற்றுள் பொறுத்தலும் புறக்கணித்தலும் தான்மன்னிப்போம் மறப்போம் என்கிற,பண்பு. ஏசு கிறிஸ்துவை சிலுவையில்அறைகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள்.
அதற்காக அவர் ஆத்திரப்படவில்லை. மாறாகப்பொறுத்துக் கொள்கிறார். அறைந்தபாவிகளைப் புறக்கணிப்பதோடு, “தாம்செய்வது இன்னதென்று தெரியாத இந்த பாவிகளை மன்னியும்” என்கிறார். அவரது இரக்கம் பொதிந்த இந்த வாசகங்கள் உலக மக்கள் அனைவருடைய மனதிலும் பதிந்திருக்கிற மாணிக்கவரிகளாகும்.

புத்தபிரான் கருணையே வடிவானவர். பகையைக்கொண்டு பகையை அழிக்க முடியாது. அன்பினால்தான் பகையை அழிக்கமுடியும் என்று போதித்தவர். பகைவரின்மீது பகை என்பது பகையை அதிகமாக்குமே தவிர அழிக்காது. ஊரிலிருக்கிற ரவுடிகளெல்லாம் பெரிய பெரிய கார்களில் பத்து பதினைந்து அடியாட்களோடு வளைய வருகிறார்களே… மிரட்டுவதற்கா அப்படி..? இல்லையில்லை. மிரண்டுபோய்தான் அப்படி. அவர்கள் தம் பகைவர்களை மன்னித்திருந்தாலும், பகைவர்களால் மன்னிக்கப் பட்டிருந்தாலும் பலரைத் துணைக்கு வைத்துக்கொண்டு பிரியாணி போட்டுக்கொண்டும், பிராந்தி ஊற்றிக்கொடுத்தும், வாழத்தேவை இருந்திருக்காது.

மன்னித்தால்... பகைவனை மன்னித்தால் பயமின்றித் திரியலாம். இன்று இது நடைமுறையில் சாத்தியமில்லைதான். ஆனால் நடைமுறைக்கு வந்தால் நாளை இது சாத்தியமாகலாம். கொஞ்சம் பொறுமையும் பயமின்மையும், நிதானமும்மிக அதிகமாய் மன்னிக்கிற மாண்புமிருந்தால் பகையில்லா உலகின் பேரின்பத்தை எல்லோரும் நுகரலாம்.“குற்றம்புரிவோரை மன்னிப்பதென்பது குற்றங்களை அதிகப்படுத்தி விடாதா?” என்று நீங்கள் கேட்கலாம். குற்றங்கள் பெருகாதிருப்பதற்கு தண்டனை இருக்க வேண்டும் என்பதும் நியாயமாகத்தோன்றும். ஆனால் சிறைச்சாலைக்குச் சென்று திரும்புகிற சிறிய குற்றவாளிகள் பெரிய குற்றங்களுக்கான பயிற்சியோடு வெளிவருவதைப்பார்க்கும்போது, நமது நடைமுறையைக்கொஞ்சம் பரிசீலிக்கத் தோன்றும்.

மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். குற்றத்தைஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம்.
கூடுதல் குற்றம் :குற்றத்தைச் செய்துவிட்டு குற்றமென ஒப்புக்கொள்ளவும், மன்னிப்புக்
கேட்கவும் மறுப்பது கூடுதலாக ஒரு குற்றத்தைச் செய்வதற்குச் சமம். இன்றைக்கும் தவறு செய்கிறவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். மன்னிக்கும் இடத்தில் இருக்கிறவர்களும் மன்னிக்கிறார்கள். இதனால் மனமாசு தூசு தட்டப்படுகிறது. புழுங்கும் நெஞ்சங்களில் புதுக்காற்று புகுந்து கொள்கிறது. இதயங்கள் இதமாகின்றன.

பாவத்தை கழுவி... மியான்மரில் இன்றும் ஒரு வழக்கமிருப்பதாகச்செய்தித் தாள்களில் படித்தேன். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல தவறாக மனதில் நினைத்தவர்களும் கனவில் ஒரு தவறை இழைத்தவர்களும் சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்து மன்னிப்புகேட்டுவிடுகிறார்கள். மன்னிப்பு கேட்பதின் மூலம், அந்தப் பாவத்தை அவர்கள் கழுவிக் கொள்வதாகக் கருதுகிறார்கள். மன்னிப்பு கேட்பதற்குத் தயங்கியோ அல்லது பயந்தோ தவறை மறைப்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக அழகான ஒரு பெண்ணிடம் 'அப்படி' நடந்து கொண்டதாக கனவு கண்ட இளைஞன் மறுநாள் அவளிடம் சென்று 'சகோதரி என்னை
மன்னித்துவிடு' என்று கனவில் தான் செய்த தவறுக்காக வருந்தும்போது அவளும் பெருந்தன்மையோடு மன்னித்து அனுப்பிவிடுகிறாள். நம்மூரில் யாருக்கும் இப்படி மன்னிப்பு கேட்கிற திராணியும் கிடையாது, மன்னிக்கிற தயாளமும் இல்லை. பொது இடங்களிலும் பேருந்துகளிலும், இல்லங்களிலும் அலுவலகங்களிலும் சில சாதாரண தவறுகள் கூடப் பெரிதுபடுத்தப்பட்டு பூதாகாரமாகப்பட்டுவிடும். சிறியதவறுகளை நாம் செய்கிறபோது அல்லது
அதுவாக நிகழ்கிறபோது 'சாரி' என்ற ஒரு வார்த்தை எல்லாவற்றையும் சரி செய்துவிடும். மன்னிப்புஎன்பது வருந்துகிறவர்களோடு நின்றுவிடக்கூடாது. 'பரவாயில்லை' என்று மன்னித்து விடுகிறவனில் அது முழுமை பெற வேண்டும். பிழைபொறுக்கும்பெருந்தன்மை இல்லையெனில்பெருந்தீமை நிகழவும்வாய்ப்பிருக்கிறது.

கேட்காமலே... மன்னிப்பதில்கூடபல்வேறு நிலைகள் உண்டு. கேட்கும்போது மன்னிப்பது ஒரு வகை. கேட்கவைத்து மன்னிப்பது மற்றொருவகை. அதனிலும்மேலாய் கேட்காமலேயே மன்னிப்பதுதான்மிகச் சிறந்தது. நாள்தோறும் நாம் எத்தனையோ தவறுகளைச் செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ மனத்தளவிலும்,செயல்வடிவிலும் நாம் செய்கிற எல்லாத்தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நாம் தண்டனைகள் பெறுவதில்லை.

ஆனால் இறைவனும் நாம் வேண்டாமலேயே நம்மை மன்னிக்கிறான். இறைவன் நம்மை நாம் கேட்காமலேயேமன்னிப்பதுபோலப் பரந்த மனம்கொண்டவர்கள் தமக்குத்தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ளாமல் தவறு செய்தவர்களை மன்னிப்பதுண்டு. இப்படி மன்னிப்பது பிழை செய்தவர்களிடம்நாணத்தை ஏற்படுத்தும். இதைத்தான் திருவள்ளுவர்,'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்'என்று குறிப்பிடுகிறார்.

மன்னிக்கிற போது மனதில் இருக்கிற மாசுவெளியேற்றப்படுகிறது. மனம்
சுத்தமாகிறது. மனம் சுத்தமாக இருப்பதுகூட உடல்சுத்தத்தைப் போல உயிர்பேணும் ஒப்பற்ற உபாயமாகும். மன்னித்தல் என்பது நாளும் நம்மை நலமாக வைத்திருப்பதால் மறப்போம்... மன்னிப்போம்; மகிழ்ச்சியாக இருப்போம்.-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்எழுத்தாளர், 94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    மிக அற்புதமான கருத்து ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும்ம் என்றால் மன்னித்தலும் மன்னிப்பு கேட்டலும் மிக முக்கியம்அது மட்டுமல்ல முன் ஜென்ம வினைகள் தீரவும் இது ஒரு மா பெரும் வழியாகும் மன்னிக்க மனமிருந்தாலும், எல்லோருக்கும் மன்னிப்பு கெட்க மனமிருப்பதில்லை.ஒரு சாதா ஆத்மா மஹாத்மா ஆனது இப்படிதான் அவர்பட்ட அவமானங்கள் கணக்ககில் அடங்கா,இருந்தாலும் அனைவரையும் மன்னித்தார்,அது ஏன் உலகையே கட்டி ஆண்ட இங்கலாந்து மாஜாராணியையே மன்னித்தார் உயர்ந்தவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தவர்கள் அனைவரும் இதை தெரிந்தோ தெரியாமலோ செய்தார்கள். நன்றாக வாழ்ந்தார்கள்.மன்னித்தலையும் மன்னிப்பு கேட்பதையும் நேருக்கு நேர் செய்ய வேண்டும் என்பதில்லை .மானசீகமாக செய்யலாம் அல்லதுமன்னிப்பு கோருவதை ஒரு பேப்பரில் எழுதி படித்து விட்டு எரித்தும் விடலாம்.மன்னித்தலையும் இதே போல் செய்யலாம்.செய்து பாருங்கள் உண்மையை உணருங்கள். மருத்துவத்தில தீர்க்க முடியாத எந்தவகை நோயாக இருந்தாலும் இந்த பயிர்ச்சியின் மூலம் கால போக்கில் சரி செய்ய முடியும்.முக்கியமாக,இரத்த கொதிப்பு, மூட்டு வாதங்கள்.இனம் புரியாத பயங்கள்,ஏன் ஆரம்ப நிலை கேன்சரைகூட சரி செய்யமுடியும்.மேலும் வாழ்க்கையில ஏற்படும் அனைத்து முன்னேற்ற தடைகளையும் போக்க முடியும்.பொருளாதார நிலையை கூட மேம்படுத்த முடியும்.ஆனால் இதில் மற்றொன்றையும் சேர்க்க வெண்டும் அதாவது.ஜீவகாருண்ணீயம்.இதை அனுசரிக்க நினைப்பவர்கள் முதலில் சுத்த சைவமாக இருக்க வேண்டும் இது மிக மிக முக்கியம்.அதாவது மனிதன், மற்றும் இதர ஜீவன்களுக்கு பாதுகாப்பு அளித்து உணவு அளித்தல் அதாவது முடிந்த வரையில். மேலும் டித் என்று சொல்லக்கூடிய பத்தில் ஒரு பங்கு தர்ம காரியத்திற்கு செலவிடுதல் என்பது மிக முக்கியமான ஒரு செயலாகும். இதை எப்படி செய்வது என்றால் பத்து ரூபாய் வருமானம் வ்ந்தால் அதில் ஒரு ரூபாய் எடுத்து பிச்சை இடுதல் ஏழை எளீயவர்களுக்கு தான தர்மம் செய்தல் ,கோவில் காரியங்களுக்கு வழங்குதல் போன்றவை செய்து பாருங்கள்,உங்கள் மனமும் உடலும் மனமும் லேசாவதை உணர்வீர்கள்.பணவரவு அதிகரிக்கும் .அப்பொழுதான் சந்தோக்ஷம் என்றால் என்ன என்று உணரமுடியும் மேலும் விபரங்களோ,ஆலோசனைகளோ தேவை பட்டல் இலவசமாக என்னை அணூகலாம்.தொடர்புக்கு.08526542126.தினமலருக்கு நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement