Advertisement

அப்பாவிற்கு தெரியாமல் திரைக்குள் நுழைந்தேன் : மனம் திறக்கிறார் மதன் கார்க்கி

'கள்ளிக்காட்டு இதிகாசம்' தந்த மண்வாசனை கவிஞன் வைரமுத்து. தஞ்சாவூர் உருட்டு பொம்மையை எந்தப் பக்கம் கவிழ்த்தாலும், இறுதியில் நேராக நிமிர்ந்து கொள்ளும். அதுபோல், திரைத்துறையில் தனது இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் பெரிய ஆளுமை வைரமுத்து. அவரது மகன் பாடலாசிரியர் மதன் கார்க்கி. 'கோ' படத்தில் 'என்னமோ ஏதோ...,' பாடல் மற்றும் மொழியமைப்பால், கவனம் ஈர்த்தவர். அவரது நேர்காணல்
* கணினியில் மொழி உருவாக்கப் பணி பற்றி...,?
- 'மதன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மொழியை கணினி வழி உதவியுடன், அனைவரும் அறிந்து கொள்ள, கொண்டு செல்லும் முயற்சி அது. மொழியை வளர்க்க, அதை சொல்லிக் கொடுக்கும் 10 கருவிகளை உருவாக்கியுள்ளோம். இந்திய மொழிகள் முழுமைக்கும் இதை கொண்டு செல்வதே நோக்கம். விவசாயம், சட்டம், மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கான அகராதியை 33 பகுதிகளாக பிரித்து, 11 லட்சம் விளக்கங்களை கொடுத்துள்ளோம். அது இணையத்தில் உள்ளது.
* 'பிள்ளைகளுக்கு, பெற்றோர் பி.ஆர்.ஓ.,ஆகக்கூடாது. அவர்கள் பூவாக இருந்தால், புதருக்குள் பூத்தாலும் வாசத்தால் அறியப்படுவர். திசை காட்டுதல் நம் கடமை; பயணம் அவர்கள் பெருமை' என்றார் உங்கள் தந்தை. அவர் திரைத்துறையில் இருப்பதால், உங்களுக்கு அத்துறையில் வாய்ப்பு எளிதில் கிடைத்ததா?
நான், திரைத்துறைக்கு செல்வதில் தந்தைக்கு விருப்பம் இல்லை. எனக்கு சிறு வயதிலிருந்து தமிழ் மீது ஆர்வம். திரைப் பாடல்களை அதிகம் ரசிப்பேன். அதில் எப்படியும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தந்தைக்குத் தெரியாமல், அவரது பெயரை பயன்படுத்தாமல், வாய்ப்புகளைத் தேடி இசையமைப்பாளர்களை சந்தித்து பாடல்களை கொடுத்தேன்.
'எந்திரன்' படப் பணியில், இயக்குனர் ஷங்கர் ஈடுபட்ட நேரம். எனக்கு 'ரோபோடக்ஸ்'
பிடித்தமான துறை. சென்னை அண்ணா பல்கலையில் துணைப் பேராசிரியராக
பணிபுரிந்தவாறு, 'வாய்ப்பளித்தால், எந்திரன் படப் பணிக்கு உதவியாக இருப்பேன்,' என ஷங்கருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
2 மாதங்களாக அழைப்பு வரவில்லை. பின், 'படத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை, உதவிகள் தேவை,' என்றார். எந்திரன் படத்திற்கு வசனம் எழுதினேன். அது ஷங்கருக்கு பிடித்துப்போக, 'பாடல் எழுதலாமே?' என்றார். அந்த ஊக்கத்தால்,' இரும்பிலே இதயம் முளைத்தது...,' பாடல் எழுதினேன். அவரிடம், எனது தந்தை பெயரை பயன்படுத்தவில்லை. எனக்கு பிடித்த கல்வியை மூலதனமாக வைத்து, ஷங்கரிடம் வாய்ப்புக் கேட்டேன். அப்பாடல், இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு பிடித்துப்போனது. 'கண்டேன் காதலை' படத்தில் 'ஓடோடிப் போறேன்...,'பாடல் எழுத வாய்ப்பளித்தார். அது, வரவேற்பைப் பெற்றது.
* 'கோ' படத்தில் 'என்னமோ ஏதோ...,' பாடல் இளைஞர்களால் அதிகம் முணு முணுக்கப்பட்டது. அதில் 'குவியமில்லா ஒரு காட்சிப் பேழை...,' என அறிவியல் சார்ந்த புது வார்த்தைகள் விழுந்தது எப்படி?
படத்தின் கதாநாயகன், பத்திரிகை நிழற்படக் கலைஞன். அவர் காதல் வயப்படுவதை வெளிப்படுத்தும் பாடல் அது. 'அவுட் ஆப் போக்கஸ்' என்பதற்கு 'போட்டோ டெர்மினல்' பட்டியல் அகராதியில் சரியான விளக்கம் இல்லை. இதற்கு 'குவியமில்லா காட்சிப் பேழை...,' மொழியமைப்பை பயன்படுத்தினேன். அதையும்,' 'நிழலைத் திருடும் மழலை நானோ...,' வார்த்தையையும் இயக்குனர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாராட்டினர்.
* புதிய சொற்களை கையாளும் யுக்திகள் பற்றி...,
எந்த பாடலிலும் கருத்து, சொல் பற்றிய தேடல் இருக்க வேண்டும். ஆயிரம் பாடல்களில் சொல்லப்படாத விஷயங்கள், சொற்களை பயன்படுத்த முடியுமா? என மொழி ஆராய்ச்சி செய்தேன்.
சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து, இதுவரை பாடல்களில் பயன்படுத்தப்படாத சொற்களை தேடத் துவங்கினேன். 3 லட்சம் சொற்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதை கண்டறிந்தேன். புது சொற்களால் சிந்தனை வளரும்.
'ஐ' படத்தில் 'பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ, குளம்பி வாசம் இவள் கூந்தலோ...,' பாடலில் பனிக்கூழ், உருளை சீவல், கோந்தை, மகிழுந்து என புதிய சொற்களை பயன்படுத்தினேன். மாற்றம் என்பது நம்மிடமிருந்து, தானாக வர வேண்டும். மாற்றத்திற்கான விதையை என்னால் முடிந்தளவு விதைக்கிறேன். 'மிருதன்' படத்தில் 'முன்னாள் காதலி...,' பாடல் திருப்பமாக அமைந்துள்ளது. காதலின் தோல்வியை, யாரையும் திட்டாமல், வெளிப்படுத்தும் பாடலான அது, இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
பிற மொழிகளை, நான் திணிப்பதில்லை; கேட்டால் எழுதுகிறேன். பாடல்களில் ஆங்கிலம், சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு மொழிகளை கலந்து எழுதியுள்ளேன். சில சமயங்களில் மொழிக் கலப்பு சொற்கள், பாடல்களுக்கு அழகூட்டுகின்றன.
* சினிமாதான் வாழ்க்கை என முடிவு செய்துவிட்டீர்களா?
சினிமா நல்ல தளம்; நல்ல அறிமுகம் கிடைக்கிறது. வாழ்க்கை பயணத்தில் போகும் வழியில், மனதிற்கு பிடித்த வேலையை செய்கிறேன். சினிமாதான் இறுதி என நினைக்கவில்லை. இதுவரை 175 படங்களுக்கு 420 பாடல்கள் எழுதியுள்ளேன். 'பாகுபலி-2' படத்திற்கு வசனம் எழுதுகிறேன். பாரதிராஜா படம் மற்றும் 4 படங்களுக்கு வசனம் எழுத உள்ளேன் என்றார்.
-கருத்து பரிமாற Twitter madhan karky

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (2)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அப்பன் அரை லூசு....பிள்ளை முழு லூசு............ அவ்வளவுதான் வித்யாசம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement