Advertisement

ஆறாது சினம் சொல்லும் அருள்நிதி

'வம்சம்' சினிமா மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனக்குள் இருக்கும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் அருள்நிதி. அரசியல் பின்னணிகளை கடந்து, சினிமாவில் முன்னணி இடத்தைப் பெற முயற்சிக்கும் அருள்நிதியின் ஒவ்வொரு படமும், அவரது தேர்வை நியாயப்படுத்துகிறது. தகராறு, டிமான்டி காலனியில் மிரட்டிய அருள்நிதி, ஆறாது சினம் படத்தில் ஆர்ப்பரித்தார்.
தினமலர் வாசகர்களுடன் மனம் திறக்கிறார்...
* 'ஆறாது சினம்' தலைப்பே வித்தியாசமாய் இருக்கே?
ஜித்து ஜோசப் இயக்கிய 'மெமோரிஸ்' மலையாள படத்தின் ரீமேக் தான் ஆறாது சினம். மெமோரிஸ் படத்தை பார்த்ததில் இருந்தே, அதை தமிழில் பண்ணணும்ன்னு இயக்குனர் அறிவழகன் நினச்சுட்டே இருந்தார். நானும் அந்த படத்தை பார்த்துட்டு, உடனே அவருக்கு போன் செய்து ஒரே மாசத்துல டயலாக் ரெடி பண்ணிட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.
* அந்த படத்தில் உங்களை கவர்ந்தது?
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது சூழ்நிலையை பொறுத்து ஓர் ஆறாது சினம் இருக்கும்.. கண்டிப்பா எதாவது ஒரு இடத்துல மறக்க முடியாத வலி அனுபவிச்சுருப்பாங்க. காயங்கள் ஏற்பட்டிருக்கும். அந்த வலியை கோபமா வெளிப்படுத்துவாங்க.. இப்படிப்பட்ட ஓர் உணர்வை கதைக்கருவாக கொண்ட படம் தான் ஆறாது சினம். அது தான் எனக்கும் பிடிச்சது.
* ஐஸ்வர்யாவை ஜோடியாக்கி, நீங்கள் சொல்ல வந்தது என்ன?
ஒரு குழந்தைக்கு தாயாக.,. ஹோம்லி கேரக்டரில் கலக்கிருக்காங்க. அவங்க நடிப்பைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். காக்கா முட்டை படத்திலேயே அசத்தினாங்க.
* உண்மையில் நீங்க சினம் கொண்டவரா?
எனக்கு 'டக்கு டக்குன்னு' கோபம் வரும். ஆனா வந்த கோபம் ஐந்து நிமிஷத்திலே சரியாகிடும். என் சினத்திற்கு கனம் இல்லை.
* கோபம் வர்ற இடத்தில குணம் இருக்கும்னு சொல்லுவாங்களே...
எவ்வளவு கோபம் வந்தாலும் கோபம் தனிஞ்சதுக்கு அப்புறம் நானே போய் பேசிடுவேன். என்மேல தப்பு இருந்தாலும் சரி., அவங்க மேல இருந்தாலும் சரி. இந்த பழக்கம் இருக்குறது நல்லதுன்னு தோணும். அதுல தப்பு எதுவும் இல்லயே.
* மனைவி வந்த பிறகு மாற்றம் வந்ததா?
ம்ம் ... எல்லாரோட வாழ்க்கையிலும் முக்கியமான பகுதி கல்யாணம். ரொம்ப அமைதியான பொண்ணு என் மனைவி. கோபமே படமாட்டாங்க. இதை விட வேற என்ன மாற்றம் வேணும்.
* உங்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு இடைவெளி இருக்கிறதே...?
ஒரு படம் ரிலீஸ் ஆகிற வரை, அடுத்த படத்தை பற்றி எந்த முடிவும் எடுக்க மாட்டேன். கண்டிப்பா நல்ல ஸ்டிராங்கான கதை கிடைச்சா உடனே பண்ணிடுவேன். நல்ல கதைகள் தேர்வு செய்யணுமே.
* திடீரென நடிப்புக்கு வந்துட்டீங்க... அதுக்கு முன்னாடி என்ன பண்ணீங்க?
மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். என் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் சார் தான் நடிக்க போலாமேன்னு சொன்னார். எல்லார் மனதிலும் நம்ம இப்படி இருக்கணும் என்ற கனவு இருக்கும். அப்படித்தான் நானும் சினிமாவிற்கு வந்தேன்.
* நல்ல கதையை எப்படி தேர்வு செய்யுறது?
நம்ம படங்களை ரசிக்கிறவங்க ரசிகர்கள் தான் . அதனால படத்தை தேர்ந்தெடுக்கும்போது இதை நான் பண்ணா ரசிப்பாங்களா நல்ல கதையான்னு பார்த்து நடிப்பேன். எல்லாரோடையும் பழகுவேன். எல்லார்கிட்டயிருந்தும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துப்பேன். ஒரு பத்து வருஷத்துக்கு அப்புறமா பார்க்கும்போது நல்ல வித்தியாசமான நடிகர் என்ற பெயரும், பெயர் சொல்ற மாதிரியான பத்து படங்களாவது இருக்கணும் என யதார்த்தமான பதிலைக்கூறி விடைபெற்றார் அருள்நிதி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement