Advertisement

காலத்தை வெல்லும் கானம் : சிலிர்க்கும் சிவசிதம்பரம்

இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. திரையிசை, பக்தியிசை என தந்தை வழியில் இந்த தனயனின் இசையை கேட்க... கேட்க... தான் எந்த செவிகளுக்கும் தெவிட்டாது. தந்தை விருப்பத்திற்காக மருத்துவம், தன் விருப்பத்திற்காக தந்தை வழியில் இசை வித்தகம். அவர் தான் மருத்துவ சேவையுடன், இசை சேவையை அளித்து வரும் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். அவருடன் நேர்காணல்...* இசை மீதான பிடிப்பு எப்படி?இசை நான் பெற்ற தவம்; எனக்கு கிடைத்த வரம். இசைக்காக வாழ்ந்து காட்டிய இசை மேதை சீர்காழி கோவிந்தராஜனின் மகனாக பிறந்ததே நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்.* மருத்துவம் அல்லவா படித்துள்ளீர்கள்?நான் முழுக்க முழுக்க என் பெற்றோர் தயாரிப்பு. தந்தை சீர்காழி கோவிந்தராஜன், புகழ் பெற்ற பாடகராக திகழ்ந்தாலும் 'நான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்' என்பது, அவர் ஆசை. அவரது ஆசைப்படி மருத்துவம் படித்தேன்.* பிறகு எப்படி இசைத்துறையில் ஈடுபாடு?நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் தந்தையுடன் கச்சேரி, பாடல் பதிவிற்கு செல்லும் போது என்னையறியாமல் இசை மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது. என் விருப்பத்திற்கு தாயாரும் துணையாக இருந்தார். எனக்காக என் தந்தையிடம் வாதிடுவார். ஒரு பெரிய இசை மேதையின் மகன் இசையறிவு இல்லாமல் இருந்தால் எப்படி? என தந்தையிடம் எனக்காக பரிந்துரைப்பார். இதனால் தந்தையும் என்னை கர்நாடகா இசையை கற்க வைத்தார்.* குருநாதர் யார்?என் குரு கிருஷ்ணமூர்த்தி. அவரும் என் தந்தையும் ஒன்றாக இசைக்கல்லுாரியில் படித்தவர்கள். இதனால் என் தந்தையின் எண்ணத்தை புரிந்து கொண்ட என் குருநாதரும், ''முதலில் பாடங்களை நன்றாக படித்திருக்கிறாயா,'' என கேட்ட பிறகு தான் கர்நாடகா இசையை கற்று கொடுத்தார். இப்படி தான் படிப்பையும், பாட்டையும் கற்று கொண்டேன்.* முதல் கச்சேரி?சென்னை மயிலாப்பூரில் காஞ்சி பெரியவர் மற்றும் ஜெயேந்திரர் முன்னிலையில் என் தந்தை கச்சேரி ஒரு முறை நடந்தது. அதில் ஒரு பாடல் பாட, தந்தை என்னை பணிந்தார். அதன்படி நான் பாடினேன். அதை கேட்ட பெரியவர் என்னை அழைத்து ஆசீர்வசித்து பெரிய ஆளாக வருவாய் என்றார். ஜெயேந்திரரும் பாராட்டினார்.* பள்ளியில் படிக்கும் போதே பாடியிருக்கிறீர்களாமே?சென்னை சாந்தோம் கான்வென்ட் பள்ளியில் படித்தேன். பிரபல கலைஞர்களின் குழந்தைகள் அங்கு தான் படிப்பர். இதனால் தான் என் தந்தை அங்கு சேர்த்து விட்டார். இருப்பினும் 6ம் வகுப்பு படித்த போது, பள்ளி விழாவில் நவீன கதாகலாச்சேபம் செய்தேன். அதில் என் பாடலை கேட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பையா, புத்தகம் பரிசளித்தார். அதை கொண்டு சென்று என் தந்தையிடம் காட்டினேன். ஆனால் அவரது கண்களிலோ கண்ணீர். இதற்காக நான் கான்வென்டில் படிக்க வைக்கிறேன் என்றார். அப்பா விருப்பத்திற்காக மருத்துவத்தையும் நல்ல முறையில் படித்தேன்.* மறக்க முடியாத நிகழ்வு?1988 மார்ச் 23. அன்றிரவு தந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றேன். ஆனாலும் என்னை ஆசீர்வதித்து, நல்ல பெயர் பெற வேண்டும் என நெஞ்சில் கை வைத்து கண் மூடினார். அதை மறக்க முடியாது.* தந்தை பாடியதில் பிடித்தது?அனைத்து பாடல்களுமே பிடிக்கும். ஒவ்வொரு பாடலிலும் ஒரு நுணுக்கத்தை கடைபிடித்திருப்பார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சினிமாவில் 'அமுதும் தேனும் எதற்கு' மற்றும் 'கர்ணன்' சினிமாவில் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' போன்ற பாடல்களை அடிக்கடி கேட்பேன். நானும் பாடி ரசிப்பேன்.* மறக்க முடியாத பாராட்டு?மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டம் பெற்றதை மறக்க முடியாது. தந்தையே ஆசீர்வசிப்பது போல இருந்தது.* திரையிசை பாடல்களை பாடுவது குறைவாக இருக்கிறதே?தேடி வரும் வாய்ப்புகளை நான் மறுப்பதில்லை. இன்றைக்கு கூட இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் 'ஜெயிக்கிற குதிரை' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடி விட்டு தான் வந்திருக்கிறேன்.* நடிக்கவும் செய்கிறீர்களாமே?விஜயகாந்த்-ராதா நடித்த மீனாட்சி திருவிளையாடல் என்ற படத்தில் அகஸ்தியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது சினிமாக்களில் நடிக்கிறேன். 'அரண்மனை 2ல்' நடித்தேன். தற்போது சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு' படத்தில் நடிக்கிறேன். இருப்பினும் காலத்தை வென்ற கானம் பாட வேண்டும் என்பதே என் ஆவல்.* இசை கலைஞர்களுக்கு சொல்ல விரும்புவது?புதுமை என்ற பெயரில் மொழி உச்சரிப்பை அலட்சியம் செய்யாமல் பாட வேண்டும்.இவரை பாராட்ட sgsivachidambaramgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (1)

  • KMM Ganesh - chennai,இந்தியா

    பேட்டி அருமை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement