Advertisement

வெற்றிக்கனியை மக்கள் சுவைப்பரா?

மக்கள் அளித்த இத்தீர்ப்பை, மகேசன் அளித்த தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், வித்தியாசமான அரசியல் சூழலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றியை அனைத்து தரப்பு மக்களின் ஒருமித்த ஆதரவுடன், ஆசியுடன் பெற்ற வெற்றியாக கருத முடியாது.

தேர்தலின் போது ஜனநாயக விரோத செயல்கள் தமிழகம் முழுவதும் அரங்கேறியிருப்பது, தமிழ் மக்களை தலைகுனிய வைத்துள்ளது. இக்கைங்கர்யத்தை செய்தவர்கள், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளை சேர்ந்தவர்கள். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த, 100 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கைப்பற்றப்படாத பணம், பல கோடிகள் தாராளமாக வாக்காளர்களுக்கு தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளாலும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, இவ்விரு கட்சிகளை சேர்ந்தவர்கள் வைத்திருந்த பணத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றியது. இவ்விரு தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தள்ளி வைக்கப்பட்டது, தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.

தவறிழைத்த கட்சிகளை சேர்ந்த அதே வேட்பாளர்களை மீண்டும் போட்டியிட அனுமதித்திருப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த சட்டசபை தேர்தலையே ரத்து செய்து, வேறொரு தேதியில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்திருந்தால், அதை வரவேற்றிருக்க முடியும்.
ஆனால், அவ்வாறு சுதந்திரமாக நடவடிக்கை எடுப்பதற்கு, நம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இத்தகைய குறைபாடுகள் நம் தேர்தல் சட்டத்தில் இருக்கும் வரை, ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல்வாதிகளின் தில்லு முல்லுகளை தடுத்து நிறுத்த முடியாது.

வாக்காளர்களை ஈர்த்து, அவர்களை ஓட்டளிக்க துாண்டும் விதத்தில், தங்களது தேர்தல் அறிக்கைகளில் பல இலவச திட்டங்களை அறிவித்திருப்பதற்காக தேர்தல் ஆணையம், தி.மு.க., -
அ.தி.மு.க., ஆகிய கட்சிகளிடம் விளக்கம் கேட்டது. அ.தி.மு.க., உடனடியாக அதன் பதிலை தந்த போது, தி.மு.க., தன் பதிலை சமர்ப்பிக்க, ஒரு வார கால அவகாசம் கேட்டது; தேர்தல் ஆணையமும் வேறு வழியின்றி அக்கோரிக்கையை ஏற்றது. இதுதான், நம் தேர்தல் ஆணையத்தின் இன்றைய பரிதாபமான நிலை!

அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தவர்களில் பெரும்பான்மையினர், வறுமைக் கோட்டிலும், வறுமை கோட்டிற்கு கீழும் வாழும் மக்களும், பெண்களும். இவர்கள், அ.தி.மு.க., அரசின் இலவசங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். அடிதட்டு மக்களாகிய இவர்கள், ஓட்டுக்கு பணம் பெறுவதை குற்றமாகக் கருதவில்லை. பல இலவச திட்டங்களால் அடித்தட்டு மக்கள் உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்வாதார விஷயங்களில் ஓரளவு நன்மையும், திருப்தியும் அடைந்திருக்கின்றனர் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், இவையனைத்தும் இம்மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிரந்தரமாக தீர்க்க முடியாது.

ஏனெனில், உண்மையான வறுமை ஒழிப்பு, ஒரு ஏழைக்கு இலவசமாக தரப்படும் அரிசியிலோ, மற்ற உபயோகப் பொருட்களிலோ கிடைக்கும் திருப்தியில் இல்லை. அந்த ஏழை தன் ஏழ்மையிலிருந்து மீண்டு, தன் சொந்த வருமானத்தில், தன் சுய தேவைகள் அனைத்தையும், பூர்த்தி செய்து கொள்வதில் தான் இருக்கிறது.ஏழைக் குடும்பங்களை பெரிதும் பாதித்திருக்கும் முக்கிய பிரச்னை, மதுக்கடைகள் தான். மதுவுக்கு எதிராக பெண்கள் திரண்டு எழுந்து, போர்க்கொடி உயர்த்திய பின் தான், அ.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், 'படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்ற வாக்குறுதியை அளித்தது. முதல்வர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவாரேயானால், கோடிப் புண்ணியங்களை தேடிக் கொள்வார்.

தி.மு.க., - காங்., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதோடு, 98 இடங்களை கைப்பற்றியிருப்பது, அ.தி.மு.க., அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை தமிழகம் முழுவதும் வீசியதையே காட்டுகிறது. எனவே, இம்முறை, முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், 2021 தேர்தலில், அ.தி.மு.க.,வை, தமிழக மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விடுவர் என்பது உறுதி.தி.மு.க., கூட்டணியின் அறுதிப் பெரும்பான்மை வெற்றியை தடுத்தது பிற கட்சிகள். அதனுடன் இணைந்து, ஒரு பலமான கூட்டணி அமையாதது தான். விஜயகாந்தின், தே.மு.தி.க.,வோ அல்லது பா.ம.க.,வோ - தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்தால், இத்தேர்தலில், அ.தி.மு.க., தன் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும்; அ.தி.மு.க.,வின் அதிர்ஷ்டம் அவ்வாறு நடக்கவில்லை.

கடந்த, 2011 தேர்தலில் மக்கள் அளித்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை திறம்பட விஜயகாந்த் பயன்படுத்த தவறியதும், மக்கள் நலக் கூட்டணியுடன் மிக தாமதமாக இணைந்து, தன்னை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்திக் கொண்டதும், தமிழக மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. கடைசி நிமிடம் வரை விஜயகாந்த், தி.மு.க., கூட்டணியில் இணைவார் என்றே மக்கள் எதிர் பார்த்தனர். அவரது கட்சிக்காரர்களும், அதையே எதிர்பார்த்தனர். அவரது இரண்டும் கெட்டான் நிலை தான், அவரது கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சந்திரகுமார் தலைமையில், பல உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகவும், தே.மு.தி.க., அதன் வலிமையை இழக்கவும் காரணமாக அமைந்து விட்டது.

பா.ம.க., தோல்விக்கு, அக்கட்சியின் தலைமை அவசர கோலத்தில் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தனித்துப் போட்டியிட்டது தான். பா.ம.க.,வைப் பொறுத்தவரை, அதன் ஓட்டு வங்கி வன்னியர் சமுதாய மக்கள் தான். வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் வட மாவட்டங்கள் தவிர்த்து, அக்கட்சிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை.இந்த உண்மையை புரிந்து கொள்ளாது, தற்கொலைக்கு சமமான தனித்துப் போட்டியிடும் முடிவை, அக்கட்சி ஏன் எடுத்தது என்று யாருக்கும் புரியவில்லை. இம்முறை வன்னியர் சமுதாய மக்களே, பா.ம.க.,வை முற்றிலும் நிராகரித்திருப்பது, அச்சமுதாய மக்களும் ஜாதி அரசியலை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து, 'தேசிய ஜனநாயக கூட்டணி' என்ற பெயரில் போட்டியிட்ட போது, தமிழக மக்களிடம், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ஒரு புதிய அணி ஏற்பட்டுள்ளது என்ற எண்ணம் தோன்றியதன் காரணமாக அக்கூட்டணி, தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி, இரண்டு லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. அதே நிலை, இத்தேர்தலிலும் நீடித்திருந்தால், அக்கூட்டணியால், அ.தி.மு.க.,வை தோற்கடிக்க முடியாமல் போனாலும் கூட, பல தொகுதிகளைக் கைப்பற்றி, இரண்டாம் இடத்திற்கு வந்திருக்க முடியும். அது நடக்காமல் போனதற்கு, பா.ஜ., - தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகளின் சுயநலமே காரணம்.

மேலும், '2ஜி' ஊழல் வழக்கு, குடும்ப அரசியல், மு.க.அழகிரி ஏற்படுத்திய உட்கட்சிப்பூசல், வேட்பாளர் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள், பலமான கூட்டணி அமைக்காதது போன்ற பல குறைபாடுகள் இருந்தும், தி.மு.க.,வால் இரண்டாம் இடத்தை பிடித்து, பலமான எதிர்க்கட்சியாக வர முடிந்திருக்கிறது என்றால், அதற்கு முழுக்க முழுக்க, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலினுடைய கடுமையான உழைப்பும், அவர் வகுத்து செயல்படுத்திய தேர்தல் வியூகமும் தான்.

காலொடிந்து போயிருக்கும், காங்., கட்சி கூட, சந்தடி சாக்கில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சி எட்டு இடங்களில் வெற்றி பெற முடிந்தது. ஆனால், ஜாதிக்கட்சி என்ற அடையாளத்துடன், தி.மு.க., கூட்டணியில் ஐந்து இடங்களில் போட்டியிட்ட கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வைகோவின் நிதானமிழந்த பேச்சுகளும், அவரது நாடக பாணி அரசியலும், அவரை தமிழக வாக்காளர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விட்டது. முதல்வர் ஜெயலலிதாவால் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் முறியடிக்க முடிந்ததற்கு அவரது மனத் திட்பமும், அடித்தட்டு மக்களிடம் அவர் பெற்றிருக்கும் செல்வாக்கும் தான் காரணங்கள். எனினும், பணபலமும், அவரது வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளதை மறுப்பதற்கில்லை.

இத்தேர்தலில், தமிழக வாக்காளர்கள் ஜாதி, மத, இன மற்றும் மொழி அரசியலுக்கு மொத்தமாக விடை கொடுத்து அனுப்பி இருப்பது பாராட்டுக்குரிய சிறந்த அம்சம். அ.தி.மு.க., ஆட்சியில் ஊழலின் கரங்கள் நீளாத அரசுத்துறையே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
எனவே, தேர்தல் அறிக்கையில் தந்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதோடு, ஊழலை அடியோடு ஒழிக்க, 'லோக் ஆயுக்தா'வை முதல்வர் ஜெயலலிதா உடனே அமைக்க வேண்டும்.தேவைப்படுவோருக்கு இலவசங்களை வழங்குவதோடு, மின்சாரம், தண்ணீர், விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகிய முக்கிய விஷயங்களிலும் தனிக்கவனம் செலுத்தி, முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை நம்பர் ஒன் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற முன் வரவேண்டும்.

தமிழ் மக்களுக்கு, அ.தி.மு.க., அரசு மீது ஒரு பலத்த சந்தேகம் உள்ளது. அ.தி.மு.க., இத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கனியை மக்கள் மனமுவந்து அளித்தனரா அல்லது வாக்காளர்களிடமிருந்து தந்திரமாக - இலவசங்கள் கொடுத்து தட்டிப் பறிக்கப்பட்டதா என்ற சந்தேகம் தான் அது.
வெற்றிக்கனி வாக்காளர்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அக்கனியை அனைத்து தரப்பு மக்களும் சுவைத்துப் பார்க்க, ஜெயலலிதாவுக்கோ அல்லது அவரது கட்சியினருக்கோ மனம் வருமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது.
இ - மெயில்: krishna _samy2010yahoo.com
- ஜி.கிருஷ்ணசாமி --
எழுத்தாளர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் - பணி நிறைவு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • raj - chennai,இந்தியா

    ஐந்து வருடங்களாக செய்த எல்லா அராஜக நடவடிக்கைகளுக்கும் மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டனர். 1000 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை மாற்றியது. பிடிக்காதவர்களை நில அபகரிப்பு ,குண்டர் சட்டத்தில் போடுவது. அண்ணாதிமுக மேடை பேச்சாளர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எதிர்கட்சியினர் எதாவது பேசினால் வழக்கு போடுவது. மார்க்கெட் போன நடிகர்களை பணம் கொடுத்து மேடையில் அசிங்கமாக பேசவிடுவது, அமைச்சர்களை புட் பால் விளையாடுவது -எல்லாவற்றுக்கும் அங்கிகாரம் கொடுத்துவிட்டனர் மக்கள்.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    இதில் வெளிப்படை என்னவென்றால்... ஊத்தி மூட வேண்டும் என்று நினைத்த வாக்காளர்கள் ஐந்து கட்சிகளுக்கு பிரித்து ஒட்டு போட்டுள்ளார்கள்.. குடிக்கும் பழக்கமுள்ளவர்கள் அப்படியே ஒரே கட்சிக்கு ஒட்டு போட்டு விட்டார்கள் விளைவு அதிமுக வெற்றி பெற்றது.. இதில் மூடி மறைக்க ஒன்றும் இல்லை.. அந்த அம்மா மிகத்திரைமையாக காயை நகர்த்தியதில் அவரின் கட்சிக்கு அபரிமித,நூலிழை வெற்றிகள்.. மற்ற ஐந்து காட்சிகளில் ஒருகட்சிக்கு கூடுதல் அது திமுக.. மற்றது பிரித்து போட்டுள்ளார்கள்.. இருந்தாலும் 40% வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது.. 60% எதிருப்புத்தான் கணக்கிடமுடியும்.. இருப்பினும் வெற்றி.. வெட்டியே எடுத்துலதும் உண்மையே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement