Advertisement

ஏமாற்றம் ஒன்றே மாறாதது!

இன்னொரு தேர்தல் வந்து விட்டது. அவர்கள் மறுபடியும் வருகின்றனர். வேறு முகமூடிகளை அணிந்து, வெவ்வேறு அணிகளில் மாறி சேர்ந்து, புதிய நம்பிக்கைகளை அள்ளித் தருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக மாற்றாத நம் நிலையை, இனி மாற்றப் போவதாக உறுதி கூறுகின்றனர்.
நமக்கும், ஒரு விஷயம் பழக்கமாகி விட்டது. ஏறக்குறைய போதை மாதிரி. இந்த கட்சி இல்லை என்றால், அந்த கட்சி. அவர்கள் கொடுத்த இலவசங்களை வாங்கியாச்சு, இனி இவர்கள் கொடுக்கும் இலவசங்களுக்காக காத்திருப்போம். ஒரே ஒரு ஓட்டுதான்; ஒரு சிறு கரும்புள்ளிதான். ஆனால், அது நம் சமூகத்தின் நிலையை எப்படி மாற்றி விடுகிறது என்பதை, நாம்
உணர்வதில்லை.எந்த கட்சியிடமும், தெளிவான தொலை நோக்கு திட்டம் எதுவுமில்லை. எப்படி தமிழகத்தை, இந்தியாவில் சிறந்த மாநிலமாக உருவாக்கப் போகிறோம் என்ற எண்ணம் இல்லை. அறிவிக்கப்படும் வேட்பாளர்களே மாறிக் கொண்டிருக்கின்றனர். நல்லதொரு தமிழகம் உருவாக வேண்டுமென்ற ஆர்வம் மக்களிடையே முதலில் வர வேண்டும்.
ஆனால், மக்களோ, கிரிக்கெட் போட்டியை போல, இவர் ஜெயிப்பாரா அல்லது அவர் ஜெயிப்பாரா என்று பேசியே பொழுதை கழிக்கின்றனர். சமீபத்தில் கூட, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார். ஆனால், கோடிக்கணக்கில் சுருட்டும் ஆட்கள் சொகுசாக வாழ்கின்றனர்.
பணக்காரர்களிடம் பணத்தை நிதியாக வாங்கும் அரசியல் கட்சிகள், ஏழைகளை ஏமாற்றி, நம்பிக்கை தந்து ஓட்டை பிடுங்குகின்றன. ஏழைகளை தேர்தலுக்கு பின், மறந்து போகும் அரசியல்வாதிகள், பணக்காரர்களை மறப்பதில்லை. அவர்களின் தொழிலுக்கு தேவையான உதவிகளை
செய்கின்றனர்.ஒரு ஏழை சொந்த தொழில் செய்ய, 20 ஆயிரம் கொடுக்க மறுக்கும் வங்கிகள், அதே ஒரு பணக்காரனுக்கு, 9,000 கோடி கடன் கொடுக்கிறது. அவன் தேசத்தை விட்டு ஓடிப் போகிறான். அவனை ஒவ்வொரு கட்சியும் விட்டு வைக்க காரணம், அவன் கட்சிகளுக்கு கொடுத்த கோடிக்
கணக்கான நன்கொடை தான்.ஏழையிடம் என்ன இருக்கிறது. ஓட்டுதானே! அதற்கு இலவசம் கொடுத்தால் போதும். இல்லை என்றால் சில, 1,000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கினால் போதும். அவர்களை சுலபமாக ஏமாற்றி விடலாம். அவனுக்கென்ன? இன்னும், ஐந்தாண்டு காத்து இருப்பான். வேறு கட்சிக்கு மாற்றி ஓட்டு போட... மறுபடியும் புதிய நம்பிக்கைகளுடன்
காத்திருப்பான். அ.தி.மு.க.,விற்கு எதிராக களத்தில், தி.மு.க., - காங்கிரஸ்
கூட்டணி, கேப்டன் அணி, பா.ஜ., அணி, பா.ம.க., என்று, மொத்தம் ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஓட்டுகள் சிதறினால், நாம் தான் ஜெயிப்போம் என்று, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் நினைக்கின்றன. இரண்டு திராவிடக் கட்சி ஆட்சிகளால் வெறுத்துப் போன மக்கள், தங்களுக்கு ஒரு வாய்ப்பு தருவர் என்று, மூன்றாவது முக்கிய அணியான கேப்டன் அணி எதிர்பார்க்கிறது.
இந்த அணியில் இருக்கும் தலைவர்கள், ஊழலே செய்யாதவர்கள் என்று சொல்கின்றனர். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, 1,860. ஜாதி, மதம், வர்க்கம், இனத்தின், மொழியின் பெயரால், கறுப்பு பணத்தை பாதுகாக்கவே, கட்சிகள் தோன்றுகின்றன.
ஏழை விவசாயிகளின் விளைநிலங்கள், வளர்ச்சியின் பெயரால் பறிக்கப்படுகின்றன. விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி
விட்டது. பெண்களின் கற்பழிப்பு அதிகரித்து விட்டது. குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல், பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி போடும் அவலம் நீடிக்கிறது.
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது, எல்லா மக்களையும் ஒருங்கிணைந்து தான் இருக்க வேண்டும். ஒரு சிலர் மட்டுமே வளர்ச்சி அடைந்து கொண்டேபோவது, ஒட்டு மொத்த மக்களின் வீழ்ச்சி. ஓட்டு போட வெளியே வராத மக்கள், லாபங்களை சம்பாதிக்கின்றனர். வெயிலில் வரிசையில் நின்று ஓட்டு போடும் ஏழையின் நிலை, அதே மாதிரியே இருக்கிறது.
மதுக்கடைகள் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதன் மூலமே இலவசங்களை அள்ளித்தர முடியும். இலவசங்களுக்கு மூடுவிழா நடத்தினால் தான், மதுக்கடைகளையும் மூட முடியும். அரசுக்கு சொந்தமான போக்குவரத்து துறை, மின்சாரத் துறை, வணிக வரித்துறை, ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை ஆராய வேண்டும். உண்மையிலேயே இவை நஷ்டத்தில் இயங்குகின்றனவா என்று
கண்டறியப்பட வேண்டும்.தனியார் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும் போது, அரசு அமைப்புகள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன. அங்கு கொள்ளையடிக்கப்படும் பணம் எங்கே செல்கிறது. இந்த பணம் தானே சுவிஸ் வங்கிக்கு செல்கிறது. சென்ற பணத்தை திருப்பிக் கொண்டு வருவதாக
செல்வதற்கு பதிலாக, இனி அதை செல்லாத மாதிரி, இங்கேயே ஏன் பறிமுதல் செய்யக் கூடாது. முதலில் அனுப்பி வைத்து விட்டு, அப்புறம்
அதை கொண்டு வருவதாக கதை அளப்பது, 'காமெடி!'வறுமையை முழுசாக ஒழிக்க முடியவில்லை. கல்வித் தரத்தில் முழுமையான அளவில் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாறவில்லை. மணல் கொள்ளை, கனிம வளச் சுரண்டல் போன்றவை அதிகாரிகளின் ஆதரவுடன் தொடர்ந்து
நடக்கிறது. எண்ணற்ற இளைஞர்கள் வேலையில்லாமல், நம்பிக்கையிழந்து தளர்ந்து போயிருக்கின்றனர். இளைஞர்களின் சக்தி வீணடிக்கப்படுகிறது. வெறும், 'வாட்ஸ் - ஆப்'பில் அது பொழுதை போக்குகிறது. திராவிட இயக்கத்தின் வளர்ச்சிகளுக்கும், அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கும் அன்றைய இளைஞர்கள் தான்
முக்கிய காரணம்.அவர்களை இந்நிலைக்கு தள்ளி விட்டதில் தமிழ் சினிமாவும், மதுக்கடைகளும் முக்கிய காரணம். இவைகளிடமிருந்து முதலில் இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அதன்பின் தான் அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும்.
மாற்றத்துக்கான முயற்சியில் அவர்கள் இறங்குவர். வேறு எந்த முறையும் இல்லாமல், 2016ல் முதல்முறையாக ஓட்டளிக்கும் இளைய தலைமுறை மிகவும் அதிக அளவில் உள்ளது. அவர்களின் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.இளைஞர்கள் அனைவரையும்
ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்வோம். அவர்களே புதிய ஆட்சியை நிர்ணயிப்பர். அதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இ-மெயில்: affu16.mgmail.com
-அப்சல்-
எழுத்தாளர், சிந்தனையாளர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement