Advertisement

ஓநாயை விரட்ட வேண்டியது ஆடுகளின் பொறுப்பு

இன்று, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆதரிக்கும் இந்த அரசியல்வாதிகள், முன் ஒருவரை ஒருவர் வசை பாடியவர்கள். அதுபோல், இன்று ஒருவரை ஒருவர் தாக்கும் இந்த அரசியல்வாதிகள், முன்பு ஒன்றாக இருந்தவர்கள். இவர்கள் எல்லாரும்
சந்தர்ப்பவாதிகள்.

எரியும் கொள்ளியில், எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று சொல்ல முடியுமா? கடந்த, 1954ல் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை குறை கூறிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பேரன்கள் எல்லாம், இன்று அவர்கள் தந்தையைப் போல அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கவுன்சிலர், வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர் பதவி என்று, எல்லாவற்றிலும் அரசியல் வாரிசுகள், 'ஆக்டோபஸ்' போல வளர்ந்து விட்டனர்.

கடந்த, 1949ல், ஈ.வெ.ரா., - மணியம்மை திருமணத்தை பொருந்தாத திருமணம் என்று கூறி, ஈ.வெ.ரா.,வின் நிலை கண்டு கண்ணீர் விடுவதாக கூறியவர்களை, 'கண்ணீர்த் துளிகள்' என்று ஈ.வெ.ரா., கூறினார். ஈ.வெ.ரா., திருமணத்தை முன்னிட்டு, திராவிட கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது என்று, எல்லாரும் நினைக்கலாம். அது உண்மையல்ல; ஈ.வெ.ரா.,வுடன் இருந்தால் அரசியல் கட்சியாக செயல்பட முடியாது என்று எண்ணியவர்களால் தான், திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது.ஈ.வெ.ரா.,வின் திருமணத்தை எதிர்த்த, அவரின் சகோதரர் மகன், சம்பத்தின் மகன் இளங்கோவன் இன்று, 'குஷ்பு'வை, தன் பாட்டியாகப் பார்க்கத் துவங்கி விட்டார்.

'கண்ணீர்த் துளிகள்' சட்டசபையில் சாதித்தது என்ன என்று, 1962ல் கூறிய வீரமணி, இன்று கருணாநிதியின் காலில் கிடக்கிறார். 'காமராஜர் பச்சைத் தமிழர்; காங்கிரசை காமராஜருக்காக ஆதரிப்போம்' என்று கூறிய ஈ.வெ.ரா.,வுக்கு சவால் விடும் வகையில், 1967ல் காங்கிரஸ் ஆட்சியை வேரோடு சாய்த்தது தி.மு.க., எந்த காங்கிரஸ் கட்சியை, தமிழகத்தில் வேரோடு சாய்த்ததோ, அந்த திராவிட கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் பல்லக்கு துாக்கிகளாக மாறி, பதவி சுகம் கண்டதுடன், உலகம் போற்றும் ஊழல் செய்யத் துவங்கி விட்டனர்.

ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை முன் வைத்து, 'தி.மு.க., அமைச்சரவையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு, ஆதரவு தர மாட்டோம்' என்று கூறி, காங்கிரஸ் கட்சி, குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு தந்த ஆதரவை விலக்கியது. ஆனால், '2ஜி' ஊழல் புரிய மன்மோகன் சிங் அமைச்சரவையில் பதவிகள் பட்டியலிடப்பட்டு வாங்கப்பட்டன. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறிய பின், இன்று எலியும் தவளையும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. காமராஜரை வீழ்த்தியவருடன் இணைந்து, இனி தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க போகின்றனராம்.

கடந்த, 2011 தமிழக சட்டசபைத் தேர்தலில், 41 தொகுதிகளை, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கியதால், ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறைந்து போனது. எனவே, ம.தி.மு.க., 2011ல் தேர்தலில் இருந்தே ஒதுங்கியது. அந்த தே.மு.தி.க.,வுடன் இன்று, ம.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது.சொத்துக்களை விற்று, தே.மு.தி.க.,வை வளர்த்தவர்கள், தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்றவுடன் எரிமலையாக வெடிப்பதன் மூலம், அரசியலில் முதலீடு செய்ததை அள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும். இவர்கள் வெற்றி பெற்றால், இழந்த சொத்தை (சொர்க்கத்தை) மீண்டும் சம்பாதிக்க, தங்களின் பதவியை பயன்படுத்திக் கொள்வர். தியாக சீலர்கள் வாழ்ந்த பூமியில் பிறந்தவர்களா இவர்கள்?

காங்கிரஸ் போல, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனவர்கள் தான் இந்த கம்யூனிஸ்ட்கள். காங்கிரசை எதிர்த்து அரசியலை துவங்கியவர்கள். 2002 ஜனாதிபதி தேர்தலில், அப்துல் கலாமை எதிர்த்து, கேப்டன் லட்சுமியை களத்தில் இறக்கினர். காரணம், அப்துல் கலாம் அணுசக்தி விஞ்ஞானி என்பதால். ஆனால், 2004 - 2009 வரை மன்மோகன் சிங் பதவிக்கு பாதுகாப்பு தந்தவர்கள், இந்த கம்யூனிஸ்ட்கள். இன்று மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கீரியும், பாம்பும் மேற்கு வங்கத்தில் ஒன்றாக உலா வருகின்றன; ஆனால், கேரளத்தில் கீரியும், பாம்புமாக உள்ளனர். எல்லாம் பதவிபடுத்தும்பாடு.தேர்தலுக்கு பின், பலர் கூடாரம் மாறி விடலாம். காரணம், தேர்தலுக்கு பின் அமையும் கூட்டணி பற்றி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏதும் கூறப்படவில்லை.

கடந்த, 1952 சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 152 இடங்களில் வெற்றி பெற்றது. மைனாரிட்டி அரசை அமைக்க, காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்று கூறிவிட்டது. (இரட்டைத் தொகுதிகளையும் சேர்த்து, சென்னை மாகாணத்தின் மொத்த தொகுதிகள், 375). கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், 167 உறுப்பினர்கள் ஆதரவுடன், 'ஐக்கிய ஜனநாயக முன்னணி' உருவானது. கவர்னர் ஸ்ரீபிரகாசாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதன் தலைவர் டி.பிரகாசம். ஆனால், 'தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கூட்டணியை ஏற்க முடியாது' என்று கவர்னர் ஸ்ரீபிரகாசா கூறிவிட்டார். தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சி அமைக்க அழைத்தார். நேருவின் நம்பிக்கைக்குரிய, காங்கிரஸ்வாதியான கவர்னர் ஸ்ரீபிரகாசா.எனவே, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

திராவிட நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க.,வின் ஆதரவில் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்ற, 'காமன்வீல்' கட்சி, ராஜாஜிக்கு ஆதரவு தந்தது. காமன்வீல் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமான காமன்வீல் கட்சித் தலைவர் மாணிக்கவேல் நாயக்கருக்கு, நில வருவாய்த் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.குலக்கல்வி திட்டத்தால் ராஜாஜி பதவி விலகி, 1954ல் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றார்.

1952 தேர்தலில், தி.மு.க., ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு, 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற, 'தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி' காங்கிரசில் ஐக்கியமானது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவர் ராமசாமி படையாட்சிக்கு வருவாய் துறை அமைச்சர் பதவியை கொடுத்தார் காமராஜர். இப்போது எல்லாரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். பதவி என்னும் போதை, இன்றைய அரசியல்வாதிகளை வாட்டி எடுக்கிறது. எனவே, விலை போகவும், விலைக்கு வாங்கவும் தயாராக உள்ளனர். அவ்வாறு விலை போகாத வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சொத்து சம்பாதிக்காத அரசியல்வாதியே இல்லை. படிக்காதவர் பலர் இன்று அரசியல் மூலம் கல்வித் தந்தையாக மாறிவிட்டனர். சுயநலமில்லாத அரசியல்வாதிகள் ஒரு சிலர்
மட்டுமே. நல்லவர்களை, கண்ணியமானவர்களை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் சட்டசபையின் மாண்பு மாசுபட்டுவிடும்.கூட்டணி கட்சி வேட்பாளருக்கு, அதே கூட்டணியில் உள்ள வாக்காளர்கள் ஓட்டளிப்பரா என்று தெரியவில்லை. ஒரு கூட்டணியின் வேட்பாளரை மற்றவர்கள் விரும்புவதில்லை என்னும் நிலையில் உள்ளது கூட்டணி தர்மம்.
வரும், 2016 தமிழக சட்டசபைத் தேர்தல், தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தல் என்பதைவிட, தலைவர்கள் பலரின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக கட்டாயம் அமையும்.

தலைமையில் உள்ளவர்களில் யார் நல்லவர் என்று பாருங்கள். வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பாருங்கள். தலைமைக்காக, தவறான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டாம். நம்மிடம்
உள்ளவர்களில் நல்லவரை தேர்வு செய்யுங்கள்.யாருக்கு நாம் அடிமையாக வேண்டும் என்னும் தேர்தல் அல்ல இது. நாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்று பார்க்கும் தேர்தல் இது. மேய்ப்பவனை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு, ஆடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆடு நனையும்போது, அழும் ஓநாய்க்கு இடம் கொடுத்து விட வேண்டாம்.
- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி
- வழக்கறிஞர்
இ-மெயில்: asussusigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • prakash - kilpalur,இந்தியா

    thanks for SUNDARAMORTI anna.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement