Advertisement

மறந்து போனதா மக்கள் பிரச்னைகள்?

தேர்தல், ஆட்சி, அதிகாரம் எல்லாம் ஏழை, எளிய சாமானிய மக்களை வாழ வைக்கத்தான் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், தற்போதைய தமிழக அரசியல் நடவடிக்கைகளை பார்க்கும் போது அப்படி இருப்பதாக தெரியவில்லை.
எப்படியாவது, எம்.எல்.ஏ., சீட் வாங்கிக் கொடுங்கள் என்று, மூன்று கோடி ரூபாய் முதல், 10 கோடி ரூபாய் வரை, முக்கிய பிரமுகர்களிடம் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற செய்தியை படிக்கும் போது, நிச்சயம், எம்.எல்.ஏ.,வாகி சம்பந்தபட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யப் போவதில்லை. கறுப்பாகவும், வெள்ளையாகவும் செலவழித்த பணத்தை திரும்ப எடுத்து விடுவோம் என்ற அபார நம்பிக்கையைத் தவிர, இவர்களிடம் சின்னதாய்கூட மக்கள் நலனில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
தலைமைகளும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. ஜாதி பார்த்து, பணம் பார்த்துதான் பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறதே தவிர, நாட்டுக்கு, மக்களுக்கு உழைக்கும் ஏழை எளிய நேர்மையான தொண்டன், எந்த கட்சியிலும் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது, அரிதிலும் அரிதாக உள்ளது; அப்படிப்பட்ட தொண்டர் இருந்தாலும், அவர் கடைசி வரை கட்சிக்கொடி கட்டிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
'நேற்று சாயங்காலம் வரை போயஸ் தோட்டத்து கதவை தட்டிப் பார்த்தோம் கதவு திறக்கவில்லை, திரும்பிவரும் வழியில் கோபாலபுரத்து கதவு திறந்திருந்தது; கூட்டணி வைத்துக் கொண்டோம்' என்று, வாய்கூசாமல் சொல்கின்றனர். அப்படி என்றால் கட்சிக்கு என்று, கொள்கை லட்சியம் எதுவுமே கிடையாதா, சேருபவர்களுக்கும், சேர்த்துக் கொள்பவர்களுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்காதா, அது இயங்காதா?'கழகங்களே வேண்டாம், கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆண்டது போதும் ஒரு மாற்றத்திற்கு உதவுங்கள்' என்ற, கோஷம் எல்லாம் போட்டு உருவான பஞ்சபாண்டவர் அணியில் நடக்கும் கலகங்களை பார்த்தால், மாற்றத்தை விரும்பியவர்கள் கூட தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்வர்.
கடந்த ஒரு மாதமாகவே எங்களிடம் இவ்வளவு ஓட்டு சதவீதம் இருக்கிறது, உங்களிடம் அவ்வளவு ஓட்டு சதவீதம் இருக்கிறது, இருவரும் சேர்ந்தால் எவ்வளவு ஓட்டு சதவீதம் வருகிறது என, கூட்டல் கழித்தல் கணக்குதான் போடுகின்றனர். புதிதாக, 1.60 கோடி வாக்காளர்கள், இந்த தேர்தலில் ஓட்டு போடப் போகின்றனர். அவர்களது ஓட்டுதான் ஒவ்வொரு தொகுதி வாக்காளரின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது. இந்த புதிய வாக்காளர்களின் மனக்கணக்கு ஒருவிதமாக இருக்கிறது என்பதை யாரும் எடுத்துக் கொண்டது போலவே தெரியவில்லை.முதல்வர் பதவியில் இருந்து, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி வரை, அனைத்து அதிகார நாற்காலிகளையும் நிரப்பியிருந்த இன்றைய ஆளுங்கட்சி, கடந்த ஐந்தாண்டுகளில் தங்களுக்கு இருந்த அதிகாரங்களைக் கொண்டு மக்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்திருக்கலாம். ஆனால், பழைய ரேஷன் கார்டைக் கூட மாற்றித் தராமல் கூடுதல் தாள் தான் ஒட்டித் தந்தனரே தவிர, சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் செய்யவில்லை என்பதே மக்கள் கருத்து.
ஆரம்பம் முதலே அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் மாற்றம் ஒன்றுதான் ஆளுங்கட்சியில் மாறாததாக இருந்தது. இந்த மாற்றம் இப்போது வேட்பாளர் மாற்றம் வரை தொடர்கிறது.வெள்ளம் பாதித்த தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு தள்ளிவிட்டு விடுவர் என்று பார்த்தால், அதிலும் பெண் அமைச்சர்களை களமிறக்கியுள்ளனர். ஓட்டுக்கு துட்டு என்பதை, வீட்டுக்கு துட்டு என்று, வெள்ளம் பாதித்த தொகுதி மக்களுக்கு அதிகாரபூர்வமாக வழங்கி விட்டோம் அப்புறமென்ன என்ற இவர்களின் துணிச்சலுக்கு, தேர்தல் முடிவில்தான் பதில் கிடைக்கும்.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற வழக்கமாக சொல்வர். ஆனால், அரசியலில் இதெல்லாமா சகஜம் என்று நினைக்கும்படியாக மூத்த தலைவர்களே கூட தரம் தாழ்ந்து பேசுவது இந்த தேர்தலில்தான். சமீபத்திய வைகோவின் பேச்சு இதைத்தான் காட்டுகிறது.
'உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் மன்னியுங்கள்' என்று அவர் சொன்னாலும், வாயை விட்டு வந்த வார்த்தைகள் அவ்வளவு சீக்கிரம் மறந்து போகுமா?விவசாயமும், விவசாயிகளின் வாழ்க்கையும் நாளுக்கு நாள் நலிந்து கொண்டே போகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எட்டாக்கனியாகி வருகிறது. தொழில் வளர்ச்சி என்பது வெறுமனே பேப்பரில் தான் இருக்கிறது. நீராதாரங்கள் நிலமை கவலையைத் தருகிறது. மக்களின் வாழ்வாதாரம் இலவசங்களை மட்டுமே நம்பியிருக்கிறது.
குடிமக்கள் வெகு வேகமாக 'குடி' மக்களாகி வருகின்றனர் இப்படி பல பல பிரச்னைகளில் இருந்து தமிழகத்தை மீட்டு எடுப்பது பற்றி பேசவாது செய்யுங்களேன் அரசியல்வாதிகளே...!இ-மெயில்: murugaraj2006gmail.com- எல்.முருகராஜ் ---பத்திரிகையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement