Advertisement

இலவசங்களை புறக்கணிப்போம்!

சில நாட்களுக்கு முன், 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், சைக்கிளில் பல ஊர்களில் வலம் வந்தார். போகிற, வருகிறவர்கள் பலர், அவர் சைக்கிளில் எழுதி வைத்துள்ள அந்த செய்தியை படித்தபடி சென்றனர்.

'இலவசங்களுக்கு ஆசைப்பட்டால் வளர்ச்சியில் பின்தங்கி விடுவோம்; ஓட்டுக்கு நோட்டு வாங்கினால் அடிமைப்பட்டு விடுவோம். நமக்கு தேவை இலவசங்களா, வளர்ச்சிப் பணிகளா... சிந்தியுங்கள்!' என்ற வாசகம் தான் அது.எந்த அரசியல்வாதி புண்ணியத்தாலோ தெரியவில்லை, காவல் துறை, அந்த பெரியவரின் சைக்கிளிலிருந்த அந்த வாசக அட்டையைப் பிடுங்கி, கிழித்துப் போட்டு விட்டது. காரணம், காவல் துறையிடம் முறையாக அனுமதி வாங்காமல், அந்த பிரசார வாசகம் மாட்டக் கூடாதாம்.ஆனால், அதே காவல் துறை, அரசியல் கட்சிப் பிரமுகர்களின் அல்லது அவர்களது விசுவாசிகளின் சொந்த திருமண விழாவிற்கோ, புதுமனை புகுவிழாவிற்கோ சாலையின் இரு புறமும் வரிசையாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், கொடிக்கம்பங்கள், அலற விடும் ஒலிபெருக்கிகள் பற்றி கண்டுகொள்வதில்லை. மாறாக அவர்களுக்கு துணை போகிறது.

பொதுவாகவே, இலவசங்களுக்கு மயங்குவது மனித இயல்பு. ஆண்களை விட பெண்களே இலவசங்களுக்கு அதிகம் ஆசைப்படுகின்றனர்.'வீடு வாங்கினால் கார் இலவசம்; மனை வாங்கினால் தோட்டம் இலவசம்; ஒரு புடவை வாங்கினால், ஒரு புடவை இலவசம்; ஒரு ஜீன்ஸ் வாங்கினால், இன்னொரு ஜீன்ஸ் இலவசம்' என, கவர்ச்சிகரமான இலவச விளம்பரங்களுக்கு ஆசைப்பட்டு, அவற்றை வாங்கப்போகும் நாம், அதில் உள்ள நுணுக்கங்களை அறிய முற்படுவதில்லை. லாபத்தைக் குறைத்து வியாபாரத்தை பெருக்கும் தந்திரம் இது. நஷ்டத்திற்கு யாரும் வியாபாரம் செய்வதில்லை. ஒரு மாதத்தில் விற்க வேண்டிய பொருட்களை ஒரே நாளில் விற்கும் நுணுக்கம் இது. தங்களது பொருளை சந்தைப்படுத்தும் விளம்பர யுக்தி.இதே பாணியில் தான், பண பலமுள்ள அரசியல் கட்சிகள், மக்களுக்கு, இலவசங்களை ஆசை காட்டி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகின்றனர். ஆட்சிக்கும், பதவிக்கும் வருபவர்கள், மக்களுக்கு சேவை செய்யவா வருகின்றனர்... பதவியில் இருக்கும் வரை எவ்வளவு சொத்து சேர்க்க முடியுமோ அவ்வளவு சொத்து சேர்ப்பதில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர்.

ஓட்டுக்கு, ஆயிரம், ஐநுாறு ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்களும் வாங்கும் நாம், ஒரு விஷயத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, மக்களுக்கு சேவை செய்வரா அல்லது செலவழித்த பணத்தை விட பல மடங்கு எடுக்கப் பார்ப்பரா?
உண்மையிலேயே மக்கள் தொண்டாற்ற வருவோர், எதற்காக தன் சொத்துக்களை விற்று, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தலில் நிற்க வேண்டும்?
மீன் பிடிக்கச் செல்பவன், முதலில் துாண்டில் புழுவை வைத்து, சின்ன மீனை பிடிப்பான்; பின் அந்த சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பான். அதேபோல் தான் நம் அரசியல்வாதிகளும். இவர்கள் ஒரு துாண்டில் புழுவை போட்டு, பெரிய திமிங்கலத்தையே பிடிக்கும் வல்லமை நிறைந்தவர்கள்.சாதாரண மக்களின் கஷ்டத்தை விட, சாதாரண மக்களின் சபலத்தை நன்கு அறிந்தவர்கள். 'எதை கொடுத்து எதை வாங்கலாம்' என்று நன்கு தெரிந்தவர்கள்.நன்கு தேர்ந்த இந்த அரசியல் வியாபாரிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதியை மாற்றி, மக்களுக்கு, இலவசங்களை காட்டி, நோட்டை கொடுத்து, ஓட்டை வாங்கி, பதவிக்கு வந்து விடுகின்றனர்.

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாம் து ாண்டில் புழுவிற்கு ஆசைப்பட்டு மாட்டிக் கொள்ளும் மீனைப் போல் இருப்போம்?அரசியல்வாதிகளும், அவரது வாரிசுகளும் சொத்து மேல் சொத்து சேர்க்க, நாம் மட்டும் இன்னும் ஏழைகளாகவே எவ்வளவு காலம் தான் இருப்போம்?அரசியல்வாதிகளின் நோக்கம் ஒன்றே ஒன்று தான்... அது, பெரும்பான்மையான மக்களை ஏழைகளாகவும், பரம ஏழைகளாகவும் வைத்திருப்பது. அப்போது தான் அவர்கள் பிழைக்க முடியும். ஏழைகள் வளர்ச்சி அடைந்து விட்டால், அப்புறம் அவர்கள் எப்படி பிழைக்க முடியும்.ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து, அவர்களுக்கு இலவச அரிசியும், இலவசப் பொருட்களும், ஓட்டுக்கு பணமும் கொடுத்தால் தானே இவர்கள் வண்டி ஓட்ட முடியும்?

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மெத்தப் படித்தவர்களும், பணக்காரர்களும் கூட இலவசத்திற்கு மயங்கிப் போவது தான் தமிழகத்தின் சாபக் கேடு.நாம் வளர்ச்சி அடைய வேண்டுமா அல்லது இலவசங்களை வாங்கி ஏழைகளாகவே இருக்க வேண்டுமா?நமக்குத் தேவை: தரமான சாலை, தட்டுப்பாடு இல்லாத குடிநீர், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவைகளே. இலவசங்கள் ஒருபோதும் நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாது.நமக்கிருக்கும் ஒரே உரிமையான ஓட்டுரிமையை, சொற்ப தொகைக்கு விற்று விட்டால், போரில் ஆயுதங்களை இழந்து நிற்கும், நிராயுதபாணிகளாகி விடுவோம்.மக்கள் சக்தி என்பது மாபெரும் சக்தி. நாம் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் அரியணையில் ஏற்றலாம்; யாரை வேண்டுமானாலும் அரியணையில் இருந்து இறக்கலாம்.ஆனால், நம் ஓட்டுரிமையை விற்று விட்டால், நாம் எதுவுமே செய்ய முடியாமல் செயலற்று போய் விடுவோம்.எனவே, நாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கே. இலவசங்களைப் புறக்கணிப்போம். வளர்ச்சிப் பற்றி சிந்திப்போம்!
இ - மெயில்: vbnarayanagmail.com

-வ.ப.நாராயணன்-
சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • NAGENDRAN - THIRUPPUVANAM,இந்தியா

    நல்ல தகவல். அட்டையை கிழித்து எறிந்த போலீக்காரருக்கு இலவச அறிவிப்பு. அரசியல்வாதிகளால் போலீஸ்காரர் மற்றும் அவர் சந்ததியினர் பாதிக்கப்படுவது அவருக்கு தெரியவில்லை. ஆகையால் யாரும் திருந்த போவது கிடையாது,

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    லஞ்சம் என்பதற்கு நவீன சொல் இலவசம். பின்ன காவலர்க்கு கோபம் வராதா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement