Advertisement

வாழ்க்கை எனும் ஓடம் நடத்தும் பாடம்

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பது அனைவரும் அறிந்ததே. மனிதன் தன் வாழ்நாளில் குறைவற்ற செல்வம் பெற்றிருந்தாலும் நோய்நொடி அற்ற வாழ்க்கையே இன்பத்தை பெற்றுத் தரும். இன்றைய காலகட்டத்தில் நோயற்ற மனிதனை காண்பதே அரிதாகி போனது. நுாறு வயது கண்ட தாத்தாவும், பாட்டியும் அந்தக் காலத்து மனிதர்கள். இன்று பிறக்கும் போதே நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறது. பழங்காலத்து வாழ்க்கை முறை யாவும் இனிமையானவை.
சாணம் மெழுகிய இயற்கை வீடுகள் :அதிகாலையில் சேவல் கூவும், மாடு அம்மா என்றழைக்கும், குயில்கள் கீச்சிடும் நேரத்தில் எழுந்து பெண்கள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாக்கோலம் போடுவார்கள். அந்த அரிசிக்கோலத்தை உண்டு மகிழ எறும்புக் கூட்டங்கள் சாரை, சாரையாய் அணிவகுத்து வரும். சாணம் மிகச்சிறந்த கிருமிநாசினி மற்றும் மங்களகரமானது. மேலும் வீட்டிற்கொரு வேம்பு மரம் வளர்த்து அந்த இயற்கை காற்றை சுவாசித்து நோய்நொடி அண்டாமல் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால், இன்று அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் கோலம் போட இடமில்லை. தனிவீடு என்றாலும் கூட மரம் வைக்க இடமில்லை. மரம் வளர்க்கும் அந்த சதுரடியில் கடையைக் கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்க நினைக்கிறோம். சாணம் தெளிப்பதற்கு பதிலாக சாணப்பொடி தெளிக்கிறோம். அதில் உள்ள ரசாயனக் கலவை கொடிய விஷமுடையது. அரிசிக்கோலத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் கோலங்கள் வாசலை அலங்கரிக்கின்றன.
சுகாதாரமான வீட்டு உணவுகள் :வீட்டுத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை, அவரை, புடலை, மிளகாய், தக்காளி என, அனைத்து காய்கறிகளையும் இயற்கை உரமிட்டு வளர்த்து உபயோகப்படுத்தினார்கள். சிறுதானியங்களை உண்டு நீண்ட ஆயுளை பெற்றிருந்தனர். கஞ்சி, களி, கூழ் என எண்ணெய் கலக்காத உணவு வகைகளை உண்டு திடமான உடற்கட்டை பெற்றிருந்தனர்.இயற்கை உரம் போட்டு வளர்ந்த காய்கனிகளை காண்பதே அரிதாகி போனது இன்று. செயற்கை நிறமூட்டப்பட்ட ரசாயன உரத்தில் வளர்ந்த காய்கனிகளை உண்டு, அழையா விருந்தாளியாக புதுவிதமான நோய்களை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்துகிறோம். பிரைடு ரைஸ், பீட்சா, பர்கர் என அந்நிய உணவு உண்பதை நாகரிகமாக கொண்டுள்ளோம். வறுத்த உணவும், பொறித்த பண்டமும் சுவையைத் தந்து ஆயுளைக் குறைக்கும்.
அலைபேசி இல்லா வாழ்க்கை :அலைபேசியே இல்லாத காலத்திலும் ஆனந்தமாய் வாழ்ந்தார்கள் மனிதர்கள். அண்டை வீட்டாரிடமும் அலுவலகத்திலும் நட்பாக ஒருவருக்கொருவர் பேசினார்கள். அலைபேசியில் முன்கூட்டியே தெரிவிக்காமல் வரும் திடீர் விருந்தாளிகளால் வீடு கலகலப்பாக இருந்தது. கடித பரிமாற்றம் அதிகமாக நடந்தது. வாழ்த்து அட்டைகளும் மடல்களும் பண்டிகைக் காலங்களிலும் பிறந்த நாட்களிலும் மனிதர்களை மகிழ்வித்து பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இன்று அலைபேசி எனும் அரக்கன் பிடியில் சிக்கிவிட்டோம். அலுவலகத்தில் ஓய்வு நேரம் கிடைத்தால் பேஸ்புக்கும், டிவிட்டரும் தான் பேச்சுத்துணை. வீட்டிற்குள்ளேயே ஒருவருக்கொருவர் வாட்ஸப்பில் பேசும் விபரீதமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அலைபேசியின் அறிமுகத்திற்குப் பிறகு, நாம் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருப்பது புற்றுநோய் எனும் ஆட்கொல்லி நோயைத்தான். அலைபேசியின் கதிர் வீச்சை தாங்க முடியாமல், சிட்டுக் குருவி இனம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, மனித இனமும் சென்றுவிடக்கூடாது. அலைபேசியின் கதிர்வீச்சு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மூளை நரம்புகளை மிகவும் மோசமாக பாதிப்படையச்செய்யும். இவை அனைத்தையும் பாதுகாக்கும் கடமை நம் அனைவரையும் சார்ந்ததே.
சமுதாய ஒற்றுமை :அக்கம் பக்க வீட்டாருடன் அமர்ந்து அரட்டை அடிப்பது குழந்தைகள் கூடி விளையாடி 'மாமா' 'அத்தை' என உறவுமுறையோடு அன்புடன் பழகிய காலம் அது. பண்டிகை காலங்களில் வீட்டிலே தயாரித்த பலகார பரிமாற்றங்கள் நடந்தன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து விழாக்காலங்களை கொண்டாடி மகிழ்ந்தார்கள். தீபாவளியும், பொங்கலும் வரும் நாளை எதிர்நோக்கியும் கடைக்குச் சென்று புதுத் துணியை வாங்கியும் தியேட்டருக்குச் சென்று புதுப்படங்களை பார்த்தும் மகிழ்ந்த தருணங்கள் அது.இன்றுள்ள இயந்திர வாழ்க்கையில் அண்டை வீட்டாருடன் பேச நேரமில்லை. அரட்டை அடிப்பதைவிட தொலைகாட்சி தொடர்களில் மூழ்கிக் கிடக்கும் நேரம்தான் அதிகம். 'மாமா' 'அத்தை'கள் மலையேறி 'அங்கிள்' 'ஆன்டிகள்' களம் இறங்கியுள்ளனர். பிள்ளைகள் வெளிநாட்டிலும் பெற்றோர் உள்நாட்டிலும் 'வாட்ஸ் ஆப்' மூலமாக பண்டிகைக் காலங்களை கொண்டாடி வருகின்றோம். ஆன்லைன் வர்த்தக அறிமுகத்திற்குப்பிறகு, கடைக்குச்சென்று பொருட்களை வாங்குவது சற்றே குறைந்து வருகிறது.
கூட்டு குடும்ப வாழ்க்கை முறை :தாத்தா, பாட்டி, மாமா, சித்தி என அனைத்து உறவுகளோடு அன்போடும் அரவணைப்போடும் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். 'தனிமை' எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதிருந்தனர். கதை சொல்ல ஒரு தாத்தா, கடைக்கு கூட்டிச்செல்ல ஒரு மாமா, உணவு ஊட்ட ஒரு பாட்டி என்று உறவுகள் இருந்தன. பள்ளிவிட்டு வீடு வரும் குழந்தையை அழைத்து வரவும் வரவேற்கவும் உறவுகள் நிரம்பியிருந்தன.
ஆனால், இன்றுள்ள தனிக்குடித்தன முறையினால் கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்ல வீட்டிற்கு வரும் குழந்தையை வரவேற்பது வேலைக்காரர்கள்தான். உணவு கொடுக்ககூட நேரமில்லாமல் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகரித்துவிட்டன. கல்விச்செலவிற்கு பயந்து ஒரு குழந்தை முறை பின்பற்றப்பட்டு, எதிர்காலத்தில் நம் பிள்ளைக்கு உறவினர் இல்லாத சமூகத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தனியாக வளரும் குழந்தைக்கு பிடிவாத குணம் அடம் பிடிப்பது அதீத துறுதுறுப்பு என்று எதிர்மறை குணங்கள் ஆளத் தொடங்கிவிட்டன.
எதை நோக்கிய பயணம் :எங்கே செல்கிறோம்; நாம் எதை நோக்கிய பயணமிது; எதை அடைய இந்த அவசரகதி ஓட்டம். தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் கண்ட இன்பத்தைவிட தொலைத்த சொர்க்கங்கள் அதிகம். தொலைத்தவற்றை திரும்ப பெறுவது நம் கையில்தான் உள்ளது. நம் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் பணமும் பொருளும் சேர்த்து வைப்பதைவிட, நோயற்ற உறவுகள் சூழ்ந்த வாழ்க்கையை உருவாக்குவோம். அதிக உழைப்பைத் தவிர்த்து, அன்பைப் பரிமாறி நம் முன்னோர் கண்ட சொர்க்கத்தை நாமும் அனுபவித்து நம் பிள்ளைகளும் காண முயற்ச்சிப்போம்.
செயற்கை வண்ணம் பூசிய வாழ்க்கைக்கு விடை கொடுத்து இயற்கை சார்ந்த வாழ்க்கையை ஆதரிக்க பச்சை கம்பளம் விரிப்போம்.'இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே' என்ற கவலை சிலருக்கு. 'இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ' என்ற கவலை சிலருக்கு. இப்படி வாழ்க்கை எனும் ஓடம் நடத்துகின்ற பாடங்களை நாம் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.- கே.பிரவீணா, பேராசிரியை,பொருளாதார துறை,தியாகராஜர் கல்லுாரி, மதுரை,praveena52gmail.com

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • gopinath - BANGALORE ,இந்தியா

  எங்கே போகிறோம் ......... எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை - அற்புதம் ......

 • jeyakumar - Wellington,நியூ சிலாந்து

  எல்லாத்திற்கும் காரணம் அறிவு வளர்ச்சி தான்

 • Lt Col M Sundaram ( Retd ) - Thoothukudi,இந்தியா

  Very Good .It is true also.

 • Silambarasan Velayutham - Palacode,இந்தியா

  சிறந்த பதிவு....

" "
Advertisement