Advertisement

உரத்த சிந்தனை

'லோக் ஆயுக்தா' வெறும் கண் துடைப்பாகுமா...?
சமூக நல விரும்பிகள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர், அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து, தம் கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறுதோறும் வெளிவரும்.
சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கட்சித் தலைவர்களை தேர்தல் ஜுரம் பிடித்து ஆட்டத் தொடங்கி விட்டது. தேர்தல் நேரத்தில், வாக்காளர்களைக் கவரும் வகையில், கட்சியினரால் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை, நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகள் என்ற உண்மை, ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதியில் நிரூபணமாகி விடுகிறது.வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இதே அரசியல்வாதிகள், அடுத்த தேர்தலில் மீண்டும் தங்களைச் சந்திக்க வரும்போது, எதிர்த்து கேள்வி கேட்கும் திராணியற்ற கோழைகளான வாக்காளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
இந்தத் தடவை, ஆளும் கட்சியைத் தவிர, தமிழகத்தின் பிற கட்சிகள், கையில் எடுத்திருக்கும் இரண்டு முக்கிய அஸ்திரங்கள், பூரண மதுவிலக்கும், 'லோக் ஆயுக்தா' அமைப்பும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் மதுவிலக்கு பற்றிய பிற கட்சிகளின் உண்மையான நிலைப்பாடு தெரியவரும். ஆனால், இன்றைய சூழலில், 'லோக் ஆயுக்தா' அமைப்பு தமிழகத்தில் செயல்வடிவம் பெறுமா என்பது சந்தேகமே.ஒரு சில சமூக ஆர்வலர்களைத் தவிர, கடந்த இரண்டு ஆண்டுகளில் லோக் ஆயுக்தா பற்றி வாயே திறக்காத அரசியல்வாதிகள், தேர்தல் நெருங்கும் நேரத்தில், 'லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் கொண்டு வருவோம்' என்று உறுதியளிப்பது, ஓட்டு வங்கியைக் குறி வைத்துத் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியக் குடிமக்கள் பலருக்கும் பரிச்சயமில்லாத, லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற வார்த்தைகளை பிரபலமாக்கியதும், அந்த அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்பெறச் செய்ததும், அன்னா ஹசாரேயின் போராட்டம் தான்.ஆனால், நம் நாட்டில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழலைக் கட்டுப்படுத்தவும், தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும், மத்திய அளவில் லோக்பால், மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.'மக்களின் பாதுகாவலர்' என்ற பொருள் கொண்ட, 'லோக்பால்' என்ற சமஸ்கிருத வார்த்தையை, ௧௯௬௩ல், பார்லிமென்டில் அறிமுகம் செய்து வைத்த பெருமை லட்சுமி மால் சிங்வி என்ற எம்.பி.,யைத் தான் சேரும்.கடந்த, ௧௯௬௬ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட, 'நிர்வாக சீர்த்திருத்த ஆணையம்' குடிமக்களின், குறைகள் மற்றும் புகார்களை பரிசீலித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் உயர்ந்த நோக்கத்துடன், லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.இந்தியா சுதந்திரம் அடைந்து, மணிவிழா கண்ட பிறகும் கூட லோக்பால் அமைப்புகளை ஏற்படுத்துவதில், இதுவரை ஆண்ட அரசுகள், தீவிரமான முனைப்பைக் காட்டவில்லை.கடந்த, ௧௯௬௮லிருந்து, ௨௦௧௩ வரையுள்ள காலத்தில், பார்லிமென்டில் கிட்டத்தட்ட எட்டு முறை லோக்பால் மசோதா பற்றிய விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படாமலேயே மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான், ௧௯௭௧ல் முதன் முதலில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அரசியல் குறுக்கீடு காரணமாக, லோக் ஆயுக்தா அங்கு திறம்படச் செயல்படவில்லை.கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை சக்தி வாய்ந்த அமைப்பாக செயல்படுத்திய பெருமை ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவை சேரும். 'ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் களை எடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதில், மக்களின் மன நிலை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது' என்று அவர் கூறியிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில், சுரங்க ஊழலில், லோக் ஆயுக்தாவின் விசாரணையின் முடிவில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் ஒருவர், சிறை சென்றபோது, அவருக்கு ஆதரவாக, அவரைப் பின் தொடர்ந்து சென்ற மிகப் பெரிய கூட்டம், அவரை மாபெரும் தியாகியாக அடையாளம் காட்டியிருக்கிறது. அவர் ஜாமினில் வெளிவந்த போதும் அதை கொண்டாடி மகிழ்ந்தது.உங்கள் ஊரில், நேர்மையாகப் பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், இடமாற்றம் என்ற பெயரில், பலமுறை பந்தாடப்பட்டபோது, பொதுமக்களாகிய நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை. இது தான் ஹெக்டே ஆதங்கத்தோடு ஆற்றிய உரையின் ஒரு பகுதி.மக்களுக்கு சேவை செய்யும் மகத்தான களமாகக் கருதப்பட்ட அரசியல், நாளடைவில், பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்ட தால், அரசியலை நாடுவோரின் எண்ணிக்கை பெருகியதோடு, ஊழலில் ஈடுபடுவோரின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. தகுதியற்றோரின் வரவால், அதிகரித்து வரும் ஊழலும், லஞ்சமும் அரசியலின் புனிதத்தன்மையை கெடுத்து விட்டன.
கடந்த, ௧௯௪௮ம் ஆண்டு, ராணுவத்துக்காக, ஜீப்புகள் வாங்கியதில், முறைகேடு நடந்ததாக, அன்றைய பிரிட்டன் நாட்டின் இந்திய துாதராகப் பணியாற்றிய, வி.கே.கிருஷ்ண மேனன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தான், சுதந்திர இந்தியா வில் முதன் முதலில் பரபரப்பை ஏற்படுத்திய ஊழல் விவகாரம்.ஜீப் விவகாரம் பற்றிய உண்மையைக் கண்டறிய அனந்த சயனம் அய்யங்கார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நீதி விசாரணைக்குப் பரிந்துரைத்தும், அது நிராகரிக்கப்பட்டதோடு, ௧௯௫௬ல், பிரதமர் நேரு, சர்ச்சையில் சிக்கிய, வி.கே.கிருஷ்ண மேனனை, நாட்டின் ராணுவ மந்திரியாக்கி கவுரவித்ததாக இந்திய அரசியல் வரலாறு கூறுகிறது.இந்தியாவுக்கு என்று சுதந்திரம் வழங்கப்பட்டதோ, அன்றே நம் அரசியல்வாதிகள் கைவரிசையைக் காட்டத் தொடங்கி விட்டனர் என்பது நிதர்சனம்.
ஜீப் ஊழலைத் தொடர்ந்து, நம் நாட்டில் பல்வேறு துறைகளிலும், இன்று வரை பரபரப்பை ஏற்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை ௧௯௩. இவற்றில், நகர்வாலா பாங்க் ஊழல், போபர்ஸ் பீரங்கி ஊழல், ஹவாலா ஊழல், பீஹாரில் மாட்டுத் தீவன ஊழல், முத்திரைத்தாள் ஊழல், ௧.௭௬ லட்சம் கோடி கொள்ளை போன, '௨ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ௭௦ ஆயிரம் கோடி ரூபாய் காமன்வெல்த் ஊழல், ௧.௮௫ லட்சம் கோடியை விழுங்கிய நிலக்கரி ஊழல் மற்றும் தமிழகத்தில் கிரானைட் ஊழல், ௪௦ ஆயிரம் கோடி சாரதா சிட்பண்டு ஊழல், மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் போன்றவை நாட்டையே உலுக்கிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள்.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த வழக்குகளில், விசாரணை என்ற பெயரில் கரைந்து போன வழக்குகளும் உண்டு. கயவர்களைக் கம்பி எண்ண வைத்த நியாயமான தீர்ப்புகளும் உண்டு. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்த இந்த முறைகேடுகளால், முடங்கிப் போன கோடானு கோடி ரூபாயை மீட்டிருந்தால், அப்பாவி இந்தியக் குடிமகன் தலையில் சாட்டப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான கடன் சுமை நீங்கியிருக்கும்; ஆசியா கண்டத்தில் ஒரு அமெரிக்காவாக, இந்தியா உருவாகி இருக்கும்.சமூக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தால், லோக்பால் அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முன் வந்தது. டிச., ௨௦௧௩ல், ஜனாதிபதியின் ஒப்புதலோடு அதை நிறைவேற்றியது. ஓராண்டுக்குள், அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு.ஆனாலும், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீர் உட்பட பல மாநிலங்கள் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. சமூக ஆர்வலர்கள் சிலர், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை இதுவரை ஏற்படுத்தாததை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கின்றனர்.மத்திய அரசு, லோக்பால் சட்டத்தில், சில சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இருப்பதைக் காரணம் காட்டி, தந்திரமாகத் தப்பித்து வருகிறது தமிழக அரசு. லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வந்தால், எத்தனை அரசியல்வாதிகளின் தலை உருளப் போகிறதோ தெரியவில்லை.ஆனால், சட்டத்தின் மூலை முடுக்கில் இருக்கும் அத்தனை ஓட்டைகளையும் அறிந்து வைத்து, 'எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் நீதிமன்றத்தில் சந்திப்போம்' என்று நெஞ்சை நிமிர்த்தி சவால் விடும் எத்தர்கள் அரசியலில் இருக்கும் வரை இந்த நாட்டில் ஊழல் ஒழியாது.ஊழலைக் கட்டுப்படுத்தும் ஒரு வலுவான அமைப்பை ஏற்படுத்துவதில், இனிமேலும் தாமதித்தால், மக்களின் வரிப் பணம் முழுவதும் சுரண்டப்பட்டு, ஜனநாயகம் என்ற தத்துவமே நகைப்பிற்குரியதாகி விடும்.லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள், அரசியல் குறுக்கீடு இல்லாமல், நியாயமாக செயல்படுமா அல்லது இதுவும் ஒரு கண் துடைப்பு நாடகமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!இ.மெயில்: rajt1960gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement