Advertisement

விமர்சனங்களை எதிர் கொள்ளுங்கள்!

ஒரு கருத்துக்கு மூன்று முகங்கள் உண்டு. ஒன்று உங்களுடையது. அடுத்தது மற்றவருடையது. மூன்றாவது உண்மையானது. அந்த உண்மை தேடுவது தான் வாழ்க்கை. கருத்து மோதல்களும், கடுமையான விமர்சனங்களும், எதிர்வாதங்களும் இதற்கு அடிப்படையாய் அமையும்.
உங்களை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு தனித்தீவாகி விட்டீர்கள் என்று பொருள். நீங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்று பொருள். நீங்கள் அலட்சியப்படுத்தப்படுகிறீர்கள் என்று பொருள். நீங்கள் யாரையும் விமர்சிக்கவில்லை என்றால், உண்மையை கண்டறியும் உத்வேகம் உங்களிடம் இல்லை என்று அர்த்தம். சமூக அக்கறை இல்லாமல் வாழ்கிறீர்கள் என்று பொருள். வெந்ததை தின்று விதி வந்தால் சாகும் வகையை சேர்ந்தவர் நீங்கள்.
உங்கள் மீதான விமர்சனங்கள் பொறாமையால் செய்யப்படும் விமர்சனங்களை இனம் காண கற்றுக்கொள்ளுங்கள். உண்மையில் உங்கள் வளர்ச்சிக்கான பாராட்டு அது. அதற்காக மகிழ்ச்சி அடையலாம். விளையாட்டாக, உண்மையான அர்த்தமோ, விளைவுகளோ இல்லாமல் செய்யப்படும் விமர்சனங்களை புரிந்துகொள்ளுங்கள். புறந்தள்ளுங்கள். வெற்று விமர்சனங்களை வைத்துக்கொண்டு அதீதமாக கற்பனை செய்து அஞ்சாதீர்கள். அது எதிராளிக்கு வெற்றியை கொடுத்துவிடும்.
சரியும், தவறும் கலந்த விமர்சனமாக இருந்தால், தவறான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு, சரியானதை பற்றி சிந்தியுங்கள். யாரோ சொன்னதாக சொல்லப்படும் விமர்சனங்களை ஏற்காதீர்கள்.உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பலத்தோடும், மனவளத்தோடும், நம்பிக்கையோடும், நேர்மையோடும் இருக்கும்போது விமர்சனங்கள் உங்களை காயப்படுத்தாது. உங்கள் அனுமதியின்றி யாரும் உங்களை காயப்படுத்த முடியாது.
காஞ்சிபுரத்தில் அண்ணாதுரையை விமர்சித்து எதிரிகள் கேவலமாக ஒரு தட்டிப்போர்டு எழுதி முச்சந்தியில் தொங்கவிட்டிருந்தனர். தொண்டர்கள் கோபமடைந்து, அதை அப்புறப்படுத்த அண்ணாதுரையிடம் அனுமதி கேட்க, அவர் மறுத்துவிட்டார். போர்டை வைத்திருந்தவர்களுக்கு அது மகிழ்ச்சி தரும் என்றால் அப்படியே இருக்கட்டும் என்றார்.
இருட்ட தொடங்கியது. அண்ணாதுரை ஒரு 'பெட்ரோ மாக்ஸ்' விளக்கை வாடகைக்கு எடுத்து, அந்த போர்டுக்கு மேலே பலரும் படிக்கும் வகையில் தொங்க விட்டார். இதையறிந்த எதிரிகள் வெட்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நல்லவரை புண்படுத்தி விட்டோமே என்று வருந்தி அந்த போர்டை அகற்றிவிட்டனர். விமர்சனம் வேறு, வசவு வேறு அல்லவா?
விமர்சிக்கும்போது கவனிக்க வேண்டியவை குறிப்பிட்ட நபரை விமர்சிக்காதீர்கள். பிரச்னைகளை விமர்சியுங்கள். இப்போதைய சிக்கலை மட்டும் விமர்சியுங்கள். பழைய கதைகள் வேண்டாம்.
உங்கள் நோக்கத்தை தெளிவுபடுத்துங்கள். விளக்கப்பெறும் விபரத்தை வெளிப்படுத்துங்கள். பணம் பதவியை காட்டி பயமுறுத்தாதீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
விமர்சனங்களின் வகைகள் 1. காகித அம்பு: சில விமர்சனங்களை எந்த ஆழமும் இல்லாமல், அடித்தளமும் இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படும். அவற்றுக்கு முக்கியத்துவம் தராமல் புறந்தள்ளுங்கள்.2. கண்ணாடி: சில விமர்சனங்கள் கண்ணாடி போல் உங்கள் நிலையை காட்டி திருத்திக்கொள்ள உதவும்.3. கால்பந்து: சில விமர்சனங்கள் விளையாட்டாக பொழுதுபோக்காகவும், நகைச்சுவையாகவும் சொல்லப்படுவது உண்டு. அதை பந்தை போல் உதைத்து விளையாட வேண்டும்.4. கத்தி: சில விமர்சனங்கள் உள்நோக்கத்தோடு உங்களை காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும். நீங்கள் காயம்படாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியை பிடித்து திருப்பி வீச வேண்டும். காந்திஜி எளிய உடையோடு லண்டன் வட்ட மேஜை மாநாட்டிற்கு போயிருந்த போது, ஒரு ஆங்கிலேயர் 'இந்தியாவின் விடுதலைக்கு போராட உங்களை போன்ற ஒரு நோஞ்சான்தான் கிடைத்தாரா?' என கேட்டார். காந்திஜி சிரித்துக்கொண்டே, 'உங்களை எதிர்க்க நானே போதும். உங்கள் சாம்ராஜ்ஜியம் அவ்வளவு பலஹீனமானது', என்றார்.5. அவமான அம்பு: அவமானப்படுத்துவதற்காகவே சில விமர்சனங்கள் ஏவப்படும். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர், 'நீங்கள் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதை மறந்துவிடாதீர்கள்' என கேவலமாக பேசினார். ஆபிரகாம் லிங்கன் கொஞ்சம்கூட சலனப்படவில்லை. 'நான் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்பதை அவமானமாக கருதவில்லை. எனக்கும் அந்த தொழில் நன்றாக தெரியும். உங்கள் ஷூ பழுதுபட்டிருந்தால் சொல்லுங்கள். இப்போதே சரிசெய்து தருகிறேன்' என்றார்.6. ஈட்டி: முன்புறமாக இல்லாமல், பின்புறமாக இருந்து புறமுதுகில் வீசப்படும் ஈட்டியாகக்கூட சில விமர்சனங்கள் அமையும். மொட்டை பெட்டிஷன் என்பதை இந்த வகையில் சேர்க்கலாம். இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதை விளக்க, ஒரு வேடிக்கை நிகழ்ச்சி.:ஒரு நகரத்தில் பெரிய பணக்காரர் இருந்தார். யார் மீதாவது மொட்டை பெட்டிஷன் போடுவது அவரது பொழுதுபோக்கு. அதனால் பாதிக்கப்பட்டவர் படும் வேதனையை கண்டு ஆனந்தப்படுவது அவரது வழக்கம். தொழிலதிபர்கள், கல்வி, மருத்துவம், அரசு அதிகாரிகள் என்று எல்லோர் மீதும் பெட்டிஷன் போடுவார். அவருக்கு வயதாகி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். முக்கிய பிரமுகர்கள் சிலர், நலம் விசாரிக்க சென்றனர். 'மொட்டை பெட்டிஷன் போட்டு பலரை துன்பப்படுத்தி இருக்கிறேன். அது பெரிய பாவம் என்று இப்போதுதான் உணர்கிறேன். அந்த பாவத்திற்கு தண்டனையாக நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். எனது மரணத்திற்கு பிறகு அலங்காரமாக கொண்டு செல்லாமல், சாதாரண கட்டை வண்டியில் என் உடலை கட்டி நீங்கள் எல்லாம் இழுத்துச் செல்ல வேண்டும். ஊர் மக்கள் காறித்துப்ப வேண்டும். செய்வீர்களா' என கேட்டபோதே உயிர் போய்விட்டது. அவரது இறுதி ஆசையை அப்படியே நிறைவேற்றினார்கள்.
தெருவின் ஒரு திருப்பத்தில் திரும்பும்போது, ஒரு போலீஸ் ஜீப் வந்தது. இன்ஸ்பெக்டர் இறங்கி, 'உங்களை எல்லாம் கைது செய்கிறேன்' என்றார். ஏனென்று கேட்டபோது, 'நீங்கள் எல்லாம் இவரது உடலை கட்ட வண்டியில் வைத்து இழுக்கப்போவதாக முன்கூட்டியே ஒரு மொட்டை பெட்டிஷன் போட்டுவிட்டுதான் உயிரை விட்டிருக்கிறார்' என்றார்.
விமர்சனங்கள் அவதுாறுகள் ஆகுமா?
விமர்சனங்கள் யார் யாரை பார்த்து சொல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். காரண, காரியங்களோடு, புள்ளி விபரங்களோடு ஆதாரங்களோடு செய்யப்படும் விமர்சனங்கள் வலிமையானதாக இருக்கும். விமர்சனத்திற்குட்பட்டவர்கள் அதை அவதுாறாக ஆக்க முற்பட்டால் தப்பிப்பதற்கான முயற்சி அல்லது கிடப்பில் போடுவதற்கான ஏற்பாடு என்றே கருதவேண்டும்.மொத்தத்தில் நல்ல விமர்சனங்கள் என்பது நீங்கள் செலவு செய்யாமல் கிடைக்கும் ஆய்வறிக்கை ஆகும். எனவே விமர்சனங்களை எதிர்க்கொள்ளுங்கள். முகம் பார்க்கும் கண்ணாடி நம் அழுக்கை காட்டினாலும், நாம் கண்ணாடி பார்க்க தவறுவதில்லை அல்லவா!
- முனைவர் இளசை சுந்தரம், எழுத்தாளர், பேச்சாளர்98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Rajesh - Bangalore,இந்தியா

    அருமையான கருத்து உள்ள கட்டுரை.. பாராட்டுகள் ஆசிரியரே .

  • Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா

    நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement