Advertisement

இன்று பகத்சிங் நினைவு நாள்:ஓர் இளைஞன் ஒரு தலைவன்

'தலைவன்' என்ற வார்த்தையை இன்று யார் உச்சரிக்க கேட்டாலும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அரசியல் தலைவர்கள் தான். நல்ல பிள்ளைகளில் இருந்து தான் நல்ல தலைவர்கள் தோன்றுகின்றனர்.'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பிஇந்த நாடே இருக்குது தம்பி'- என்ற பாடல் வரிகள் உணர்த்துவது இதைத்தான்.நல்ல பிள்ளைகள் என்பது நல்ல மதிப்பெண் வாங்கக் கூடிய பிள்ளைகள் மட்டுமே என நினைத்து விடக் கூடாது. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உடல், உதிரம், உயிர், சிந்தனை என அனைத்தையும் வழங்க தயாராக உள்ள இளைஞர்கள் தான் அந்த பிள்ளைகள், அவர்களே நாளைய தலைவர்கள்.
சில தலைவர்களை பார்க்கும் போது, இவர்கள் பிறவியிலேயே தலைவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் யாரும் பிறக்கும் போதே தலைவர்களாக பிறப்பதில்லை, தலைவர்கள் உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிறார்கள். பகத்சிங் என்ற தலைவன் உருவாக்கப்படவில்லை; அவனே தலைவனாக உருவாகினான்.

இளம் தலைவன் பஞ்சாப் மாநிலம் பங்கா கிராமத்தில், 1907 ல் செப்டம்பர் 27ம் நாள் பகத்சிங் பிறந்தார். தந்தை கஹன்சிங், தாயார் வித்யாவதி. தனது 14 வயதில் காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு நாட்டு விடுதலைப் போரில் பங்கெடுத்தார். காந்தி திடீரென ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதால், நேதாஜியைப் போல காந்தியக் கொள்கையிலிருந்து விலகி, புரட்சிகர விடுதலைப் போராட்ட பாதையைத் தேர்வு செய்தார் பகத்சிங்.
அன்பான குடும்பத்தைப் பிரிந்தார். பகத்சிங் வீட்டை விட்டு வெளியேறியது, நாட்டு விடுதலையை நோக்கி ஒரு லட்சிய இளைஞன் எடுத்து வைத்த தீர்க்கமான முதல் அடி. போகும் போது தந்தை கஹன்சிங்கின் லாகூர் அலுவலக மேஜையில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றார் பகத்சிங். அதில்...''மரியாதைக்குரிய தந்தைக்கு, என்னுடைய வாழ்க்கை ஒரு உன்னத லட்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அது இந்தியாவின் சுதந்திரம் என்னும் லட்சியம், அதனால் இவ்வுலக வாழ்வின் ஆசைகளுக்கு என் வாழ்வில் இடமில்லை” என்று எழுதப்பட்டிருந்தது.

1926ல் நவஜவான் பாரத் சபை என்ற புரட்சிகர அமைப்பை தனது தோழர்கள் சுகதேவ், யஷ்பால், பகவதி சரண் உதவியுடன் துவக்கி தேச விடுதலைக்கான போராட்ட களத்திற்கு இளரத்தங்களை கொண்டு வந்தார். டில்லியில் 1928ல் இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ஜனநாயக சங்கத்தை தோற்றுவித்தார். இந்திய அரசியலில் சோஷியலிசத்தை முதலில் இனங்கண்டது பகத்சிங் தான்.

கொள்கை பிடிப்பு சைமன் கமிஷன், 1928ல் இந்தியா வந்த போது, நாடு முழவதும் எதிர்ப்பு கிளம்பியது. லாகூர் ரயில் நிலையத்தில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய்
தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தடியடியில் காயமுற்று மரணமடைந்தார் பஞ்சாப்பின் சிங்கம். இதற்கு பழிதீர்க்க பகத்சிங்கின்
பரிவாரம் தயாராகியது. லஜபதிராயின் மரணத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரியான சாண்டர்ஸை மண்ணில் சாய்த்தார் பகத்சிங்; இந்நிகழ்வை நாட்டின் கவுரவத்தையும், லஜபதிராயின் கவுரவத்தையும் பகத்சிங் காப்பாற்றியதாக நேரு தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். சாண்டர்ஸை கொலை செய்த பகத்சிங் பல நாட்கள் துடித்தார். ஏனெனில்
அவர் ஒரு கொலைகாரன் அல்ல, அவர் ஒரு புரட்சியாளர், மனிதர்கள்
அடிமைகளாகவும், மந்தைகள் போல் அல்லாமலும் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென விரும்பியவர்.

சாண்டர்ஸ் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது “சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை, கொலை நடந்த அன்று பகத்சிங் லாகூரிலேயே இல்லை” என்று ஒரு மகனைக் காக்க துடிக்கும் தந்தையாக, ஆங்கில நீதித்துறை தீர்ப்பாயத்திற்கு கடிதம் எழுதினார் கஹன்சிங். இதை அறிந்த பகத்சிங் தன் தந்தைக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்...
“என் கொள்கைகளை அடகு வைத்து, உயிரைக் காக்க வேண்டிய அவசியம் இல்லை, வெள்ளையருக்கு தாங்கள் எழுதிய கடிதத்தால் நான் என் முதுகில் குத்தப்பட்டதாக உணர்கிறேன், நாட்டு விடுதலைக்காக பல தியாகங்களைச் செய்த தங்களின் மிக மோசமான பலவீனமாக இதை நினைக்கிறேன்.” எத்தனை கொள்கை பிடிப்பு அந்த இளம் தலைவனுக்கு!

பாரத தாயின் தரிசனம் :ஒரு முறை மியான்வாலி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் பகத்சிங் ஈடுபட்டிருந்த போது, அவரைக் காணச் சென்றார் தாயார் வித்யாவதி. அப்போது நீதிமன்றத்திற்கு ஸ்டிரெச்சரில் பகத்சிங் கொண்டு வரப்பட்டதைப் பார்த்த போது, அவரால் அழுகையை அடக்க முடியவில்லை.
பின்பு மீண்டும் ஒரு முறை பகத்சிங்கை அவர் சிறையில் சந்தித்த போது “உங்களின் பாசத்திற்குரிய மகனை எப்பொழுதும் நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமானால், நீங்களும் என்னுடன் சிறையில் வந்து தங்கிட வேண்டும்” என பகத்சிங் ஆறுதல் வார்த்தை கூற,
அதற்கு வித்யாவதி 'நான் எப்படி வரமுடியும் எனக்கு உன்னைப்போல் மக்கள் முன் புரட்சிகர உரையாற்ற தெரியாதே! ஆகவே மறியல் செய்து கைதாகட்டுமா? என்றார் அந்த வீரத்தாய். 'நீங்கள் இதல்லாம் செய்ய வேண்டியதில்லை அம்மா' என்றார் பகத்சிங். 'அப்படியானால் நான் கைதாக வேண்டுமானால், வெள்ளையர்கள் அல்லது அவர்களின் கைக் கூலிகள் யாரையாவது தடியால் அடிக்க வேண்டுமா?' என்று பட்டென்று கேட்டார் தாயார் வித்யாவதி. அப்பொழுது பகத்சிங் கண்டது பாரத் தாயின் தரிசனமே.தலைவனின் பண்பு சாண்டர்ஸ் கொலை வழக்கும், மத்திய சட்டமன்ற தாக்குதல் வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பகத்சிங்கின் பேச்சில் அனல் பறந்தது.

“மனித குலத்தை நேசிப்பதில், நாங்கள் எவருக்கும் குறைந்தவர்களில்லை. எந்த தனிநபரின் மீதும் எங்களுக்கு தனிப்பட்ட வன்மம் இருந்ததில்லை, மனித உயிரை நாங்கள் புனிதமாக கருதுகிறோம், இதை வெள்ளைய நிறுவனங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் மீது விழுந்த அடிக்காக துடிக்கும் எங்கள் இதயத்திலிருந்து எழும் போர்க்குரலை யாராலும் நசுக்க முடியாது. மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியது என்பது வெடிகுண்டு கலாசாரமோ அல்லது துப்பாக்கி கலாசாரமோ அல்ல. அது புரட்சி என்பதன் அர்த்தம்.

சிறை வாழ்க்கை நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் போராடும் புரட்சியாளர்களுக்கு பெரும்பாலும் தடையாக இருப்பதில்லை சிறையும் கூட அவர்களின் போராட்ட களமாக மாற்றப்படும்” என்று ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் முன் அச்சமின்றி முழங்கி 1931 மார்ச் 23ல் துாக்கு கயிற்றை முத்தமிட்டு இந்த மண்ணிலிருந்து மறைந்தார் பகத்சிங்.அந்த இளைஞன் போல, இன்னும் நம் எண்ணங்களிலும் வரலாற்று ஏடுகளிலும் நிறைந்துள்ள வீரமிக்க இளம் தலைவர்களை நேசிப்போம், -முனைவர். சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர்,
தேவாங்கர் கலைக் கல்லூரி அருப்புக்கோட்டை.78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Subbu - chennai,இந்தியா

  இப்படிப்பட்ட தியாகிகளின் ரத்தத்தால் பெறப்பட்ட சுதந்திரம் இன்று சிரிப்பாய், சிரித்துகொண்டு இருக்கிறது, ஜனநாயகம் என்ற போர்வையில் போலி அரசியல்வாதிகள்,அய்யோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்ட நம்நாட்டின் அரசியல் நிலையை நினைத்தால் ரத்த கண்ணீர் வருகிறது, இது போல இன்னும் பல ஆயிரம் பகத்சிங்குகள் தோன்றி இந்த அரக்கர்களை கொன்று அழிக்க வேண்டும்.

 • Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா

  நல்ல கட்டுரை. வாழ்த்துகள்

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  அன்று நாடுகாக்க சோஷலிச / கம்யுனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு தனது இன்னுயிர் ஈந்து,இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திட தனது பங்காக, தனது இன்னுயிரையும் தந்தான் பகத் சிங்.அப்படி பகத் சிங் போன்றோர் உயிர் தியாகம் செய்து பெறப்பட்ட இந்திய விடுதலை,சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு துணைநின்று,காட்டிக்கொடுத்தவர்களின் / மதவெறியர்களின் ஆட்சி இன்று இந்தியாவில் நடைபெறுகின்றது. பகத்சிங்கின் வாரிசாக இன்று எழுந்து நிற்கின்றார் / உருவாகின்றார் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த, ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் தலைவர் கன்னைய குமார் அவர்கள். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்பது உண்மையாகி உள்ளது.அன்று கஹன்சிங் - வித்யாவதியின் மகன் பகத்சிங் . இன்று ஜெய்சங்கர்சிங் -மீனாதேவியின் மகன் கன்னைய குமார்.மாணவர்களே, இளைஞர்களே இன்றைய ஊழல் நிறைந்த, மதவெறியின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவை விடுவித்து உன்னதமான , உலகுக்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கிட கன்னைய குமாரை பின்தொடருங்கள்.கன்னையா குமார் மிக, மிக சரியாகவே சொல்லியுள்ளார் " நாங்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலை கேட்கவில்லை. இந்தியாவுக்குள் விடுதலை கேட்கின்றோம். மதவாத்திடம் இருந்து, ஊழலிலிருந்து , ஆர் எஸ் எஸ் சிடம் இருந்து விடுதலை வேண்டும் என மிக சரியாகவே இன்றைய இந்தியாவை குறிப்பிட்டுள்ளார். தோழர் பகத்சிங்கே, நீ சாகவில்லை. உனது வாரிசாக , கன்னைய குமார் உருவாகின்றார். உனது நினைவு நாளில் நாங்கள் - இந்திய இளைஞர்கள் - மாணவர்கள் சபதம் ஏற்கின்றோம் ஊழலற்ற, மதவாதமற்ற ,தாழ்த்த பட்டவர்களுக்கு சமஉரிமை கிடைத்திட,சமதர்ம சமுதாயம் அமைத்திடுவோம் .

 • vasu - chennai,இந்தியா

  உண்மை தான் இன்று....பல வேடதாரிகள்.....நாட்டுபற்றற்று நாட்டையே காட்டி கொடுப்பவனெல்லாம் நானும் பகத்சிங் என கூச்சல் வேறு..போடுகிறார்கள்.....அதற்கு சில நாதாரிகள்..... கொடி பிடிக்கிறார்கள்.....எங்கு தான் போய் முடியுமோ இதெல்லாம்....இறைவா நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பீராக.......இக்கட்டுரையை படிக்கும் போதே வீரம் பொங்குகிறது.....நாட்டுக்காக தன்னுயிரையே கொடுத்த மகான் எங்கே.....இவனுகள் எங்கே........கொடுமையடா.....ஜெய் ஹிந்த்......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement