Advertisement

நீதித்துறையில் பெண்கள்

உலகின் ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது நமக்கு பெருமையளிக்கும் விஷயம். பெண்கள் அதிகம் வாழும் 2வது பெரிய நாடாகவும் இந்தியா விளங்குகிறது. நாட்டில் 1991ல் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் இருந்தனர். 2011ல் 940 பெண்களாக உயர்ந்துள்ளனர். நாட்டில் தனிநபர் வருமானத்தில் முன்னிலையில் இருக்கும் அரியானாவில், ஆயிரம் ஆண்களுக்கு 877 பெண்களே உள்ளனர். கல்வியறிவு கொண்ட கேரளாவில், ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு அதிகமானால் பெண் சிசுக்கொலை குறையும். பெண் உரிமைகள் பாதுகாக்கப்படும் என கூறுவதுண்டு.
அதிகரித்த கல்வியறிவு:நாட்டில் முதல் பட்டதாரி பெண்களை, 1883ல் கோல்கட்டா பெத்யூன் பள்ளி உருவாக்கிய போதிலும், 1901ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஒரு சதவீத பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். நாடு சுதந்திரமடைந்த போது, பத்து சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 70 சதவீதத்திற்கு மேலிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியாவில் தான் பெண்களை பாதுகாக்க அதிக சட்டங்கள் உள்ளன. கருவில் உருவானது முதல் முதியோராவது வரை, சட்டம் பெண்களை பாதுகாக்கிறது. பெண்களை பாதுகாப்பதற்காக உள்ள ஒவ்வொரு சட்டத்திற்கும், பின்பும் மிகப்பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. கருக்கொலையை தடுக்க, 1860ல் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன. குழந்தை ஊனமாக பிறக்கும் நிலை இருந்தாலோ, அல்லது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தாலோ மட்டும் தான் கருக்கலைப்பு செய்ய முடியும்.குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தாலோ, பிறந்தவுடன் மரணமடைய செய்தாலோ ஆயுள் தண்டனையும், தாயின் சம்மதமின்றி இயக்க நிலையிலுள்ள கருவை கலைத்தால் ஆயுள் சிறை தண்டனையும் வழங்கலாம். கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து சொல்லும் டாக்டருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவும், டாக்டராக பணி செய்வதை நிரந்தரமாக தடை செய்யவும் சட்டம் உள்ளது.
வரதட்சணை ஒழிப்பு சட்டம் :நாட்டில் 1961ல் வரதட்சணை ஒழிப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி வரதட்சணை கொடுப்பதோ, வாங்குவதோ மட்டுமின்றி தன் மகனையோ, மகளையோ திருமணம் செய்தால் பணமோ, சொத்தோ தரப்படும் என விளம்பரம் செய்வதும் குற்றம். 1989ல், தமிழகத்தில் இந்து வாரிசுரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, 1989க்கு பிறகு திருமணமான அனைத்து பெண்களுக்கும், குடும்பச்சொத்தில் ஆண்களுக்கு உள்ள அனைத்து சரிசமமான உரிமையும் உண்டு என்ற உரிமை கிடைத்தது. குற்றவியல் சட்டங்களை பொறுத்தவரை, 2013ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் பலவித திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
மத்திய, மாநில ஆணையங்கள் :தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்கவும், அதுகுறித்து புலனாய்வு செய்தும், சட்ட திருத்தம் மற்றும் இதர ஆலோசனைகளை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்குகிறது.ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது குற்றவியலின் அடிப்படை தத்துவம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதற்கு விதிவிலக்கு. திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள், ஒரு பெண் அசாதாரணமான சூழ்நிலையில் இறந்தால், அவர் வரதட்சணை கேட்டதால் கொடுமைக்குள்ளாக்கி இறந்தார் என சட்டம் அனுமானிக்கிறது. அவ்வாறு இல்லையென குற்றம் சாட்டப்பட்டவர் தான், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை, பெண்களை கேலி செய்யும் ஈவ்டீசிங் குற்றம் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர் தான் தாங்கள் நிரபராதி என நீதிமன்றம் முன் நிரூபிக்க வேண்டும்.
அதிகரிக்கும் குற்றங்கள் :பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருந்த போதும், ஆண்டுக்காண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. 2005ல் கணவரால் மனைவிக்கு எதிரான கொடுமைகள் 58,319, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 34,175, பாலியல் வன்முறைகள் 18,359 வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டன. பத்தாண்டுகளில், இந்த பெரும் மூன்று குற்றங்கள் தொடர்பாக மட்டும் இந்தியாவில், 16,26,320 வழக்குகள் பதிவாகின. ஆனால் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு.இந்தியாவில் பெண்கள் உடன்கட்டை ஏறுதல், கருவிலேயே அழிக்கப்படுதல், கல்வி மற்றும் சத்துணவு மறுக்கப்படுதல், இளவயது திருமணம், பணியிடங்களில் பாலியல் வன்முறை, வரதட்சணை கொடுமை போன்ற பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து மீண்டு எழுந்து இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து கொண்டிருக்கின்றனர்.
பிரதிநிதித்தும் உள்ளதா :தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக, பெண்களுக்கு வழங்கப்பட்ட 33 சதவீத இடஒதுக்கீடு, தற்போது 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்க உதவியாக இருக்கும். ஆனால் பெண்களின் உரிமைகளை பற்றி, தேசிய அளவில் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்தக்கூடிய நாட்டின் துாண்களாக விளங்கும் சட்டசபை, பார்லிமென்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்தும் இல்லை. தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு பெண் நீதிபதிகள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில், ஏழு அட்வகேட் ஜெனரல்களில் ஒருவர் கூட பெண் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் 12 குற்றவியல் அரசு வழக்கறிஞர்களில், ஒரு பெண் கூட இல்லை. 25 உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு பார் கவுன்சிலில், தற்போது ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை.
1950ம் ஆண்டு முதல் இன்று வரை உச்சநீதிமன்றத்தில் 10க்கும் குறைவான பெண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றியுள்ளனர். மத்திய மற்றும் மாநில அமைச்சரவைகளிலும் அரசுக்கு அறிவுரை கூறும் நிலையில் உள்ள அரசு முதன்மை செயலாளர் நிலையிலும், பத்து சதவீதத்திற்கும் குறைவான பெண்களே உள்ளனர்.பெரியளவில் மாற்றமில்லை 1947ல் நாடு சுதந்திரமடைந்த போது, தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்படும் 36 பெண் குழந்தைகளில் 22 பேர் நடுநிலைப் பள்ளிக்கும், 14 பேர் உயர்நிலைப்பள்ளிக்கும், 7 பேர் மட்டுமே பல்கலைகழகங்களுக்கும் சென்றனர். அந்த சதவீதத்தில் இன்றும் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. இன்றும் தமிழில் சினிமாவில் நாயகன் உன் சமையலறையில் உப்பா? சர்க்கரையா? என, பெண்களின் இடம் சமையலறை என பாடும் நிலையில் தான் உள்ளது.பெண்கள் உயர்கல்வி பெற்று நாட்டின் உயர்ந்த சட்டமியற்றும் துறை, சட்டத்தை நிறைவேற்றும் துறை, நீதித்துறை போன்ற துறைகளில் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடம் பெறும் போது தான் இந்நிலை மாறும். இந்நிலையை மாற்ற பெண்களால் முடியும். பெண்களால் முடியாதது எதுவும் உண்டோ...-ஆர்.அழகுமணி,வழக்கறிஞர், மதுரை.98421 77806.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ச.மீனா - Delhi,இந்தியா

    பெண்களை படிக்க வைத்தால் மட்டும் நிலைமை மாறுமா? சுதந்திரமாக முடிவு எடுக்க விடுவதில்லை. படித்த பெண்கள் நவீன அடிமையாக உள்ளனா். ஆண்களை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement