Advertisement

மாசற்ற உலகை உருவாக்குவோம்!

மனிதன் வாழ காற்று, உணவு, உடை இருப்பிடம் மிகவும் அவசியம். இதில் காற்று அதிகம் மாசடைந்துள்ளது. காற்றின் மாசுக்களை எளிதில் தவிர்க்க முடியும். எனவே அதை தெரிந்து கொண்டு அவற்றை தடுப்பது அவசியம். இதைப்பற்றி தெரிந்துகொள்ளத்தான் உலக புகை தவிர்க்கும் நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

காற்று இரண்டு வகையான புகைகளால் மாசடைகிறது. ஒன்று, சிகரெட் புகை, மற்றொன்று சிகரெட் அல்லாத இரண்டாம் நிலை புகை. இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியது சிகரெட் புகைப்பது.நாட்டில் அதிக இறப்பு ஏற்பட முதல் காரணம் புகையிலை தான். இந்தியாவில் விறகு, கரி, விலங்குகளின் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மிகப்பெரிய தீமைகளை விளைவிக்கின்றன. 1990 முதல் 2010 வரை எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, வீட்டுப்புகை இரண்டாவது அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. ஐந்து லட்சம் மக்கள் இதனால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தென் கிழக்கு ஆசியாவில் இந்தியாவில் மட்டும் 80 சதவீதம் மக்கள் இதற்கு பலியாகின்றனர். 70 சதவீதம் கிராமப்புற வீடுகளில் போதிய காற்றோட்டம் இல்லை. இப்புகையினால் நிமோனியா, ஆஸ்துமா, கண் பார்வை இழப்பு, சிஓபிடி நுரையீரல் புற்றுநோய், காசநோய் ஏற்படுகின்றன. தலைநகரில் உள்ள புகை அளவைக் காட்டிலும் கிராமப்புற சமையலறை புகை 30 மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது அந்நிறுவனம்.

புகையிலையில் சக்தி வாய்ந்த வேதிப்பொருளான நிகோட்டின் உள்ளது. புகைபிடிக்கும்போது 20 விநாடிக்கு குறைவாக இந்த நிகோட்டின் மூளை வரை சென்று அடைய கூடியது. எவ்வாறு ஹெராயின் அல்லது கோஹைன் அதன் உபயோகிப்பை துாண்டுமோ அதே அளவு நிகோட்டினும் அதன் உபயோகிப்பை துாண்டக்கூடியது. இதனால் புகை பிடிப்பவர்கள் அதிலிருந்து மீண்டும் வருவது கடினமாகிறது.

14 வகை நோய் அபாயம் :சிகரெட்டிலுள்ள வேதிப் பொருள் நமது ரத்தத்தோடு கலந்து, உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக் கிறது. குரல்வளை, வாய், தொண்டை, கணையம், சிறுநீரகம் உட்பட 14 வகை புற்றுநோய்கள் தாக்கும்.

இதுவரை உலக அளவில் 1.95 கோடிக்கு அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இந்த தொகையானது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. புகைபிடிப்பதின் மூலம் நம் நுரையீரலில் உள்ள சிறிய காற்றறைகள் பாதிப்படைகிறது. நுரையீரல் சம்பந்தமான மற்ற நோய்களான சிஓபிடி, எம்சீமா மற்றும் நீடித்த ப்ரான்கைட்டில் ஆகிய நோய்களும் புகை பிடிப்பதன் மூலம் ஏற்படுகின்றன.

50 சதவீதம் அதிக வாய்ப்பு:புகைப்பவருக்கு புகைக்காதவரை விட 6% இருமல், சளி, 3% பிலீகம், 10% டிஸ்பீனியா, 9 % இளைப்பு ஏற்படுகிறது. மேலும் உலகளவில் இதுவரை 3.30 கோடி பேர் சிஓபிடி நோயால் பாதித்துள்ளனர். 30 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். பல லட்சம் மக்கள் ஆஸ்துமா, நுரையீரல், பல்மனரி ஹைபர்டென்சனால் பாதிக்கின்றனர். 40 சதவீதம் மக்கள் இருதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கின்றனர். இவர்களுக்கு இயல்பை விட 50 சதவீதம் அதிகமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.

இதுதவிர இது மன அழுத்தத்தையும் மலட்டுத்தன்மையும் உண்டாக்கக் கூடியது. புகையிலை நிறுவனங்கள் சந்தையில் நிறைய வாசனை மிகுந்த, வாயில் கரையக்கூடிய புகையில்லா புகையிலையை விற்கின்றன. இவையெல்லாம் மாத்திரையாகவோ, சாக்லேட் வடிவத்திலோ, குச்சிகளாகவோ, மிட்டாய் போன்று விற்கப்படுகின்றன.நம் அன்றாட வாழ்வில் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் பல்வேறு வகையான 'பகை' புகைகள் உள்ளன.

இரண்டாம் நிலை புகை :இது, நம்மை அறியாமல் சிகரெட் பிடிப்பவர்கள் மூலம் வரும் புகையினை நாம் சுவாசிப்பது. சிகரெட் மூலம் வரும் புகையானது நமது சுற்றுப்புறத்தில் குறைந்தது இரண்டு அல்லது ஒரு மணிநேரம் கூட அங்கேயே சுற்றித்திரியக் கூடியது. காற்றோட்டமான சூழ்நிலையில் கூட ஒரு மணிநேரம் அங்கேயே நாம் அறியாமலே தங்கிவிடக் கூடிய குணம் பெற்றது. நம்மையும் அறியாமல் அந்த காற்றை நாம் சுவாசிக்கிறோம்.

புகையிலை மூலம் வரும் புகை 40 - 50% வரை புகைக்காமல் அருகில் இருப்பவரை பாதிக்கும். புகைக்காமல் இருப்பவருக்கு அது நாள்பட்ட குணமாகாத நோய்களை கொடுக்க கூடியது. மேலும் அதன் மூலம் 20-30% நுரையீரல் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. புகைப்பவர் அருகில் குழந்தைகள் இருக்கும்போது அது அந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூளையில் கட்டி, கட்டி நோய், இருமல், சளி மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது.

ஒரு எரியும் கொசுவிரட்டி சுருளில் இருந்து வெளிவரும் புகையானது, 75-137 எரியும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகைக்கு சமம்.சங்கிலி தொடராக சிகரெட் பிடிப்பவரோடு கூட படுத்து உறங்குவதற்கு ஒப்பாக ஒரு கொசு விரட்டியில் இருந்து வெளிவரும் புகை ஆபத்தை உண்டாக்கக் கூடியது.கொசுவிரட்டி பயன்படுத்துவதால் கண்களில் கார்னியாவை பாதிக்கும். சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் ஈரலை பாதிக்கும். மேலும் நாட்பட்ட பயன்பாடு மலட்டுத்தன்மையை கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படுத்தும். ஆகவே கொசு விரட்டிகள் தவிர வேறு ஏதேனும் மாற்று வழிகளில் கொசுவை விரட்டுவது சிறந்தது.
விறகு எரிப்பதில் இருந்து வெளிவரும் புகையும், சிகரெட்டிலிருந்து வெளிவரும் புகை போன்றது தான்.

குழந்தைகளுக்கு இது பல நாள்பட்ட வியாதியை உண்டாக்கக் கூடியது. முதியோருக்கு கடுமை யான சுவாச கோளாறு மற்றும் புற்றுநோயை உண்டாக்க கூடியது.தடுக்கும் முறைகள்
* வீட்டை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் புகைக்கூண்டு வைப்பதன் மூலம் வீட்டில் காற்று மாசை தவிர்க்கலாம்.
* வீட்டில் விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்பதில் இருந்து காஸ் அடுப்புக்கு மாறுதல்.
* பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி, அட்டை, அலுமினியம் போன்றவற்றை தீயூட்டாமல் மறுசுழற்சி செய்தல்.
* ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் உபயோகித்தல்.
* கார், பைக் போன்ற வாகனங்களை சரியாக பராமரித்து அதன் புகை அளவை அளவோடு வைத்தல்.
n வீட்டில் உள்ள விளக்குகளை தேவை யற்ற நேரங்களில் அணைப்பதன் மூலம் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும்.
* மரங்கள் நடுவதன் மூலமாகவும் மாசை குறைக்கலாம்.
* சிகரெட் புகைப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டால் தான் அவர்களால் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இயலும். ஆகவே புகை பிடிப்பவர்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகி புகைபிடிப்பதை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பெற வேண்டும்.
நம் முன்னோர் மாசற்ற உலகை நமக்கு பரிசளித்தார்கள். நாம் அதை அனுபவிக்கிறோம். நமது வாரிசுகளுக்கு மாசு நிறைந்த உலகை பரிசளிக்க கூடாது. துாய காற்று, மாசற்ற உலகம், நல்ல பழக்கம், படிப்பு போன்றவற்றை நாம் பரிசளிப்போம்.
- டாக்டர் மா.பழனியப்பன்,
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சிறப்பு நிபுணர்,
மதுரை, 94425 24147.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement