Advertisement

காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா... என்றார் மகாகவி பாரதி.
தாயை போல பிள்ளை... நுாலை போல சேலை... பெண்கள் நாட்டின் கண்கள்... என்பது போன்ற பெண்களை கவுரவப்படுத்தும் வரிகளை படித்திருக்கலாம். அந்தளவுக்கு பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் சாதித்து வருவது அவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. 'ஒரு குடும்பத்தில் பெண் கல்வி பெற்றால், அந்த சமுதாயமே கல்வியறிவு பெறும்' என முன்னோர் கூறுவதுண்டு. பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்த சிவன் உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்துள்ளார்.

இருப்பினும் கூட பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது இன்றும் பேச்சளவிலேயே உள்ளது. பெண்கள் கிடைத்த சுதந்திரத்தை பேணி, தங்களுக்குரிய கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் மேன்மேலும் சாதிக்கலாம்.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது... லண்டன் மாநகரில் மேயர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பணி ஏற்றவுடன் ஒரு குடும்பத்திற்கு மாதம் முதல் தேதியானால் அரசு முத்திரையுடன் சம்பளம் தவறாமல் போய் விடுகிறது என கண்டார். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எங்கு வேலை செய்கின்றனர் என தெரிந்து கொள்ளும் ஆவல் மேயருக்கு ஏற்பட்டது. அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று அவர்களின் பணியை கண்காணித்தார்.

இதை கவனித்த குடும்பத்தினர் சற்று குற்ற உணர்வுடன் மேயரிடம், ''அதே தெரிகிறதே தேம்ஸ் நதி, அதன் கரையிலுள்ள உயரமான டவரில் காலையானால் ஏறி விட்டு மாலையில் இறங்கி வந்து விடுவோம்,'' என்றனர். என்ன மாதிரியான உத்யோகம் இது? என மேயருக்கு ஆச்சர்யம். அந்த குடும்பத்தினருக்கு இந்த சம்பளத்தை நிறுத்த வேண்டும் என்பதை விட, இதை ஏன் அனுப்பினர் என நுாலகத்திற்கு சென்று ஆவணங்களை தேடும் பணியில் ஈடுபட்டார்.
1801ம் ஆண்டு அரசாங்கம் இங்கிலீஷ் கால்வாய் குறுக்கே நெப்போலியன் படை எடுத்து வருகிறாரா என கண்காணித்து, அப்படி வந்தால் உடனே தகவல் தர வேண்டும் என்பதற்காக டவரில் ஏற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை 1940ல் பதவி ஏற்ற இந்த மேயர் தான் கண்டறிந்து ரத்து செய்தார். நெப்போலியன் இறந்த பிறகும் எதற்கு என்று தெரியாமல் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தினமும் டவரில் ஏறி மாலை இறங்கி வந்துள்ளனர்.

புதிதாக கற்போம், சாதிப்போம் இப்படித்தான் திரும்ப திரும்ப செய்ததையே செய்யும் பெண்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய கதை இது. எதற்காக விடிகிறது; எதற்காக ஓடுகிறோம்; எதற்கு சமையல் செய்கிறோம்; ஏன் சந்தோஷப்படுகிறோம்? என தெரிந்து கொள்ளாமல் செய்ததையே தினமும் திரும்ப திரும்ப செய்யும் நிலை இன்று உள்ளது. தன் சுய அறிவு இல்லாமல் செக்கு மாடு போல செய்ததையே திரும்ப திரும்ப செய்யும் நாம், புதிதாக ஒரு விஷயம் கற்று கொள்ள வேளை வந்து விட்டது என தெரிந்து கொள்ள வேண்டும்.
திறமையிருந்தால் வெற்றி கல்லுாரியில் உங்கள் செயல் திறனாகட்டும், அலுவலகங்களில் உங்கள் பணியாகட்டும், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு செய்வதில் உங்கள் திறமையாகட்டும், எந்த நோக்கமும் இன்றி கடனே என செய்வதை இனியாவது நிறுத்திட வேண்டும். புதிய புதிய விஷயங்களை கற்று கொண்டு அதில் நம் திறமையை செலுத்தி பாருங்கள்; வெற்றி உங்களிடம் தானாக வந்து சேரும். பதிலாக வெறும் கடனுக்காக செய்தால் மனமும் துருப்பிடித்து விடும்.
எந்தவொரு வேலையை செய்தாலும் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் நுணுக்கங்களுடன் திறமையாக செய்யுங்கள். கல்லுாரி மற்றும் பள்ளி பாடங்களை, பாட புத்தகங்களுக்கு வெளியே பல நுணுக்கங்களுடன் கற்று கொள்ளுங்கள். செய்யும் தொழிலையும் அப்படித்தான் எவ்வளவு ஆழமாக தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தெளிவாக கற்று கொள்ளுங்கள். செய்வதை தீவிர காதலுடன் செய்ய வேண்டும்.

அதற்காக செலவழிக்கும் நேரம், பயிற்சி முக்கியமே இல்லை. செய்வதை அடி முதல் முடி வரை தெளிவுடன் தெரிந்து கொள்வது அவசியம். சந்தோஷத்துடன் செய்வது மிக முக்கியம். சுடுநீர் கூட சந்தோஷத்துடன் கொதிக்க வையுங்கள்; ருசியாக இருக்கும்.

வெற்றிக்கு வித்திட்ட ஆர்வம் :தேசிய நெடுஞ்சாலை ரோடு ஓரத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் மாலை நேரத்தில் கூட்டம் அதிகமிருந்த ஒரு டீ கடையில் வழங்கிய டீயை அருந்திய போது அறிய முடிந்தது. வாகனங்கள் விரைந்து செல்லும் அந்த தேசிய நெடுஞ்சாலையில், யார் வாகனங்களை நிறுத்தி டீ குடிக்க போகின்றனர்? என வெறுப்படையாமல், தான் வழங்கும் டீயை விரும்பி சுவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆர்வத்துடன் ருசியாக டீ போட்டு தந்த டீ மாஸ்டரின் ஆர்வத்திலிருந்து அந்த கடைக்கு கூட்டம் தேடி வருவதை தெரிந்து கொள்ள முடிந்தது.
அவரது டீ நன்றாக இருக்கும் என்பதை, புன்னகையுடன் அவர் வரவேற்ற விதத்திலிருந்து, ருசியான டீ தருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக, உடன் வந்த தோழியும் தெரிவித்தார். சந்தோஷமாக செய்யும் எந்த ஒரு பணியும் வெற்றிகரமாக இருக்கும். நம்பிக்கை, புன்னகை, ஆழ்ந்த அறிவு, திறமை இவை அனைத்தையும் கலந்து செய்யும் எல்லா காரியங்களும் ஜெயமாகதான் முடியும்.

சந்தோஷம்... சந்தோஷம் :எப்போதுமே சந்தோஷமாக இருங்கள். காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை உங்களை நீங்களே சந்தோஷமாக வைத்து கொள்வதுதான். முதலில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லலாம்.
தோழியரே... இந்த சந்தோஷம் நாள் முழுவதற்குமான புத்துணர்வு... எரிபொருளை அளிக்கும். சத்தமாக பாடுவது, ராகத்திற்கு ஏற்ப நாட்டியமாடுவது போன்றவை நாம் அன்றைய நாளுக்கு நம் நேர்மறை சிந்தனைகளுக்கு பிரமாதமாக உதவும்.

வாழ்க்கை மகத்தானது. வாழ்வதற்காகத்தான் இறைவன் தந்த வாழ்க்கை. இதில் கவலை என்பது ஒரு போதை மருந்து போன்றது. கவலைப்பட... கவலைப்பட... அதனுள் மூழ்கி பின் அதுவே நம்மை கவர்ந்து இருக்க துவங்கி விடும். ஆதலால் என் இனிய பெண்களே, நீங்கள் சந்தோஷமாக இருப்பதை இந்த உலகத்திற்கு சொல்லுங்கள். சந்தோஷமாக இருப்பதை உரக்கச் சொல்லுங்கள். தினம், தினம் சந்தோஷமாக இருங்கள். மனம் லேசாகும். எல்லோர் வாழ்க்கையும் போராட்டமானதுதான். யார் வாழ்வும் லேசல்ல. சில நேரங்களில் விழ நேரலாம். பள்ளம் இருக்கும், மேடு இருக்கும், விழுந்த பின் எழுகிறோமா... எழுந்த பின் பாடம் கற்று கொள்கிறோமா? என்பதில்தான் இருக்கிறது.-பி.சுபா பிரபாகர்,தலைவர், 'ஷார்ப்' அமைப்புமதுரை.shubamicrogmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • TamilPriya - chennai,இந்தியா

    "மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" இதை சொன்னவர் பாரதியா இல்லை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையா?

  • K.Sugavanam - Salem,இந்தியா

    "அவளொரு தொடர்கதை" சினிமாபாடல் வரிகளை தலைப்புக்காக சுடும் அளவு வறட்சி போல..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement