Advertisement

பெண்மை வேறு-, பெண் வேறு! இன்று மகளிர் தினம்

"பெண்கள் வெளவால்கள் அல்லது ஆந்தைகள் போல் வாழ்கின்றனர்.
விலங்குகளைப் போல் உழைக்கின்றனர். புழுக்களைப் போல இறக்கின்றனர்"
என்றார் -பதினேழாம் நுாற்றாண்டில்வாழ்ந்த 'மார்காரட்' எனும்
ஆங்கிலேயச் சீமாட்டி.உலகமே கொண்டாடும் அன்னையர் தினமான மே 13ம் தேதியன்று, மேற்சொன்ன சீமாட்டியின் வாசகத்தைப் படிக்க நேர்ந்தது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருக்கின்ற பெரும்பாலான அடித்தட்டு வர்க்கத் தாய்மார்களின் நிலையில், குறிப்பாக, "அன்றாடம்காய்ச்சி" எனப்பிழைப்பு நடத்துகின்ற, உழைக்கும் தாய்மார்களின் வாழ்நிலையில், சிறப்பானமாற்றங்கள் இன்று வரை இல்லை என்பது கண்கூடான உண்மை.
காலாவதியாகி விட்டதா
உலகமயமாக்கலின் கரம் ஒருபுறம் அன்னையர் தினத்தை ஒரு வணிகமயமான நாளாக மாற்றி லாபம் ஈட்டுகின்றது என்றால், மறுபுறம் "புனிதங்களின்" பெயரால் பெண்ணை அடிமைப்படுத்தும் போக்கினை இது தீவிரப்படுத்திவிடுமோ என்கிற ஐயமும் எழுகின்றது. அது போலத் தான் மார்ச் -8 எனும் "உழைக்கும் மகளிர் தினமும்". அதிலிருக்கின்ற 'உழைக்கும்' எனும் சொல்லே காலாவதியாகிவிட்டது, நுகர்வோர் தினமாகிவிட்டது அது!
எந்த நிலையில் வாழ்கை தந்தை வழிச் சமூகமாக்கப்பட்டு விட்ட குடும்ப அமைப்பில் கணவன், குழந்தைகளின் நலன் முன்னுரிமையாக்கப்பட்டு, தாய் தானாகவே தன்னை பின்னிறுத்திக்கொள்கின்ற போக்கு இன்றும் உள்ளது. வேலைக்குப், பள்ளிக்குச் செல்கின்ற கணவன், குழந்தைகளை அனுப்பிய பின்பே காலை உணவை உண்கின்ற தாய்மார்களே தமிழ்நாட்டில் அதிகம். சமையலறையிலோ, வெளிவேலைகளிலோ உதவுகின்ற ஆண், அவனது நட்பு வட்டாரத்தில் கேலிக்குரியவனாகவே
சித்தரிக்கப்படுகிறான். சமயங்களில்
அவர் தம் மனைவி/ தாய் முதலியோரே "அவருக்கு / அவனுக்கு ஒன்றும் தெரியாது. இன்னும் குழந்தைதான்' எனப்
பெருமைப்பட்டுக் கொள்ளும் எரிச்சல் தரும் சொல்லாடல்களையும் கேட்க
நேரிடுகிறது.
பெண், ஆணுக்கு எப்படி அடிமையானாள்? அப்படி ஆனதற்கு என்ன காரணம் எனப் பார்க்கையில், மதம், உயிரியல், உளவியல், திருமணம், குடும்பம் எனும் கட்டமைப்பு, மற்றும் பொருளாதாரம் ஆகிய காரணிகள் பல இருப்பினும், "புனிதப்படுத்துதல்" அதன்மூலம் "நயமாகக்கொலைசெய்தல்" என்பதே பிரதானமானதொரு காரணம். ஏனெனில், இந்த வேலையைப் பெண்களே மனமுவந்து செய்வதால் இதிலிருக்கின்ற மிகநுட்பமானவன் முறை எளிதில் புலப்படுவதில்லை.மகிழ்வின் தினமாகட்டும்

மேல்தட்டு வர்க்கத்து பெண்களைவிட, நாம் அதிகம் கவலையுடன் அவதானிக்கவேண்டியது நாளொன்றிற்கு பனிரெண்டு முதல் பதினான்கு மணி நேரம்வரை உழைக்கின்ற இடைத்தட்டு, அடித்தட்டு வர்க்கத் தாய்மார்களின் நிலைகுறித்தும் இந்த ஒருநாள் கொண்டாட்டமும், வாழ்த்தும் எந்தவகையில் அவர்களுக்கு அர்த்தமாகின்றன என்பதையும் தான்.
"பெத்துவளர்ப்பது" மரத்திற்கு தண்ணீர் விடுவது மாதிரியானதொரு இயல்பானது என்றொரு சிந்தனை பாமர மக்களிடம் இன்று வரை நிலவுகிறது. நாம் வலியுறுத்த வேண்டியதெல்லாம் இரண்டு தீவிர நிலைப்பாடுகளும் ஆபத்தானவை என்பதையே.

முழுதுமாய்த் தன்னைத் தியாகத்தின் மொத்த உருவான கட்டமைப்பின் 'தாய்மை' யின்று விடுவித்துக்கொண்டு, அதேசமயம், தன் உள/ உளநலன், விருப்பு/ வெறுப்பு, சுயம்/ உரிமை முதலியனவற்றை உள்ளடக்கிய 'பெண்ணாய்', பொறுப்பான தலைமுறையை உருவாக்குகின்ற, 'தாய்மை' எனும்சொல் ஆணிற்கும் பொதுவானது என்கின்ற விழிப்புணர்வோடு பெண்ணானவள் மகிழ்ச்சியோடு "அன்னையர்தினத்தைக்" கொண்டாடட்டும். "மகளிர்தினத்தில்" மகிழ்வுறட்டும்.உழைப்பை போற்றுவோம் "மரபுச் சார்பற்றவள். உள்ளும்புறமும் தூய்மையானவள். பிரதிநிதித்துவப்படுத்தபட்டதற்கேற்ற கடின புனைவு, மனிதவகை மாதிரி கருத்தாக்கங்களுக்கு நேர்மாறானவள். நேர்மையானவள். 1860-ற்குப் பின்னான புதுமைப் பெண் இவளே" என்கிறார் பெண்ணியச் சிந்தனையாளர் தேவதத்தா.
'தாய்மை' குறித்த சரியான புரிதலோடும்,"பணிபுரியும் சுதந்திரம், கல்விகற்க, ஆரோக்ய வாழ்வு வாழ, திருமணமின்றி தனித்துவாழ, விரும்பிய விதத்தில் திருமணத்தை ஏற்றோ, தவிர்த்தோ வாழ்வதற்குச் சுதந்திரம் என்று இத்தனை நலன்களோடும் "புனிதங்களுக்குள் சிறைப்பட்டு, தனித்தன்மையினை இழந்துவிடாத பெண்ணாய்த் "தாய்மை" ஒளிரட்டும்-,
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல, அனைத்து தினங்களிலும். மகளிர் தினத்தில் மட்டுமல்ல- மற்ற தினங்களிலும்.உழைக்கும் மகளிருக்கான இந்தத்தினத்தில்உழைக்கின்ற நம் பெண்களைப் போற்றுவோம்!நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் ஆண்களுக்கும்உழைப்பைப் பொதுவில் வைப்போம்!- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்vanapechiyahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement