Advertisement

அணையாது தேசப்பற்று தீ!

இந்திய வரலாற்றில் 1885ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் மகாசபை உருவானது. 1887 ஜூன் 5ம் நாள் ஜார்ஜ் ஜோசப் பிறந்தார். 50 வயதில் இயற்கை எய்தினார். 1937 மார்ச் 5ம் நாள் மறைந்தார். அவர் பிறந்தது கேரள மாநிலம் செங்கான்னுார். மறைந்தது நம்மூர் மதுரை.''செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்க லாதார்,'' என்றார் வள்ளுவர். இக்குறள் ஜார்ஜ் ஜோசப்பிற்கு நன்கு பொருந்தும்.ஜார்ஜ் ஜோசப் நடுத்தர வேளாண் குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோருக்கு ஒன்பது பிள்ளைகள். ஜார்ஜ் ஜோசப் மூத்தபிள்ளை. பள்ளிப்படிப்பை செங்கன்னுாரில் 1903ல் முடித்தார். சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் 'இன்ட்டர் மீடியட்' படித்தார். 1904ம் ஆண்டு இங்கிலாந்து எடின்பரோவில் முதுகலை (எம்.ஏ.,), லண்டன் நகரில் பாரிஸ்டர் (வழக்கறிஞர்) படிப்பையும் முடித்தார்.
லண்டனில் இருந்த காலத்தில் அங்கு ஒரு முக்கிய நிகழ்வு நிகழ்ந்தது. முதல் இந்திய சுதந்திரப் போர் நினைவாக அதன் 50ம் ஆண்டு விழா கொண்டாடினர். 1857 ஐ நினைவுப்படுத்தி 1907ம் ஆண்டு நடைபெற்றது. எப்படி தெரியுமா? இந்திய சிப்பாய்களின் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய வெற்றி விழாவாக பிரிட்டிஷார் கொண்டாடினர். ஒன்று திரண்ட மாணவர் இந்த எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக லண்டனில் உள்ள 'இந்தியா ஹவுஸ்' எனும் இல்லத்தில் இந்திய மாணவர்கள் கூடினர். ஜார்ஜ் ஜோசப்பும் பங்கு கொண்டார். ஏகாதிபத்திய எதிர்ப்பும், தேசியப்பற்றும் அவரது எண்ணத்தில் ஒருசேர இணைந்து வளர்ந்தது. பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். சென்னை மாகாண கவர்னரின் நிர்வாக சபை அங்கத்தினர் ஆக இருந்தவர் கர்டியூ துரை. துணை நீதிபதி பதவி ஏற்க ஜார்ஜ் ஜோசப்பிற்கு அழைப்பு விடுத்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் நீதிபதியாக பணியாற்ற ஜோசப்பின் மனம் ஏற்கவில்லை. 1909 ஜனவரியில் ஜோசப் திருவிதாங்கூர் திரும்பினார். சூசன்னா என்பவரை மணந்தார். பெண்ணின் தந்தை, பிரிட்டன் அரசின் அரசு விசுவாசத்துடன் பணியாற்றிய உயர் அலுவலர். ஜோசப்பிற்கு சமஸ்தானத்தின் பணி வாய்ப்பு பெற முயன்றனர். ''முயற்சி மேற்கொள்ள வேண்டாம்,'' என தந்தையிடம் ஜோசப் கண்டிப்புடன் கூறி விட்டார்.தேசமும், அரசியலும் நண்பரின் வழிகாட்டுதல்படி மதுரை வந்தார். இங்கு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். கேரளத்தை சேர்ந்த பி.ஜார்ஜ் என்பவர் நடத்திய 'தி சவுத் இந்தியன் மெயில்' என்ற ஆங்கில இதழில் தேச விடுதலைக்கான கட்டுரைகள் எழுதி வந்தார். மிகக்குறைந்த காலத்தில் ஜோசப் சிறந்த வழக்கறிஞர் ஆனார்.பெரிய வீடு,வேலையாட்கள், மக்கட் செல்வங்களும் வாய்த்தன. நலிந்தோர் நலனுக்காக வழக்கறிஞர் தொழிலில் முழுமையாக ஈடுபட்டார். குற்றப்பரம்பரை சட்டம் 1871ல் அமலானது. பின் 1887, 1911, 1923 ஆகிய ஆண்டுகளில் பல திருத்தங்களை கண்டது. இதை எதிர்த்து 1915ல் இருந்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.
'ஹோம் ரூல்' இயக்கம் :மதுரை மில் தொழிலாளர்கள் 1918 ஜூலையில் போராட்டத்தை துவக்கினர். ஊதிய உயர்வு, வேலை நேர குறைப்பு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆட்சியாளர் துணையுடன் மில் நிர்வாகம் அடக்குமுறையை கையாண்டது. சங்கத் தலைவர் ஜே.என்.ராமநாதன் பேசுவதற்கு தடை விதித்தனர்.
தொழிலாளர்களின் தலைவர்களில் ஒருவரான பி.வரதராஜூலு நாயுடு மீது 'அரசு துரோக வழக்கு' பதிவு செய்தனர். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜோசப் வாதாடினார். அன்னிபெசன்ட் அம்மையார், பாலகங்காதர திலகர் ஆகியோரால் தொடங்கப்பட்டது 'ஹோம் ரூல் இயக்கம்' (சொந்த ஆட்சி). இது ஜோசப்பை ஈர்த்தது. இதன் வழியே பணியாற்றி புகழ்பெற்றார். 1916 மார்ச் 20ல் அன்னிபெசன்ட், மதுரையில் ஜோசப்பை சந்தித்தார். மதுரை 'தியோசபிக்கல்' கட்டடம், 'ஹோம் ரூல்' இயக்க பாசறையாயிற்று.
ரவுலட் சட்டம், காந்தியடிகள் :சோவியத் யூனியனில் 1917ல் தொழிலாளர் வர்க்கப்புரட்சி ஏற்பட்டு அரசு அமைக்கப்பட்டது. பிரிட்டன் அரசு அதிர்ந்தது. இந்தியாவிலும் இதுபோன்று நேர்ந்து விடக்கூடாது என நினைத்து 'ரவுலட் சட்டம்' கொண்டு வந்தது. இதை 'ஆள் துாக்கி சட்டம்' என்றனர். இதை எதிர்த்து காந்தியடிகள் 1919 பிப்ரவரியில் கையெழுத்து போராட்டம் நடத்தினார். அதில் ஜோசப் மனைவி சூசன்னாவும் கையெழுத்திட்டார். ரவுலட் சட்ட எதிர்ப்பு மூலம் காந்தியடிகளுடன் இணைந்து, வ.உ.சிதம்பரம், சர்க்கரை செட்டியார், ஜோசப், ராஜாஜி ஆகியோர் களப்பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தொழிலுக்கு முழுக்கு :காந்தியடிகள் அறிவுரையை ஏற்று வழக்கறிஞர் தொழிலுக்கு ஜோசப் முழுக்கு போட்டார். கதர் அணிந்தார். மூத்த மகளை பள்ளி விடுதியில் சேர்த்தார். மூன்று வயது மகள், மனைவியுடன் ஆமதாபாத் சபர்மதி ஆசிரமம் சென்றார். மோதிலால் நேரு நடத்திய 'தி இண்டிபெண்டன்ட்' இதழில் ஆசிரியராக பணியாற்றினார். ஜோசப்பின் ஆக்கபூர்வமான எழுத்தால் பீதியடைந்த பிரிட்டிஷ் அரசு எச்சரித்தது. அவர் கைது செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார். மீண்டும் ஆறு மாதம் சிறை. மனைவி உடல் நலம் குன்றியதால் மதுரை திரும்பினார். விடுதியில் இருந்த மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார். மீண்டும் வழக்கறிஞர் தொழில். என்றாலும் அவர் உள்ளத்தில் எரிந்த தேசப்பற்று தீ அணையவில்லை.
ஜோசப் வீடும், காந்தியும் :காந்தியடிகள் 1927ல் மதுரை வந்த போது ஜோசப் வீட்டில் தங்கினார். சைமன் குழுவை எதிர்த்து மதுரையில் போராட்டங்கள் நடத்தி ஜோசப் வெற்றி கண்டார். 1937 ல் மத்திய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு புகழ் பெற்றார். 1938 மார்ச் 5ல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். நேரு தனது சுயசரிதையில் ஜோசப் பற்றி குறிப்பிட்டுள்ளார். காமராஜரும் ஜோசப் மீது அன்பு கொண்டவர். ஜோசப்பின் மார்பளவு சிலை, மதுரை யானைக்கல்லில் யானைக்கும், காந்திக்கும் இடையில் உள்ளது. இவரது கல்லறை, மதுரை மூலக்கரை மயானம் அருகே உள்ளது. பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. காமராஜபுரம் பகுதியில் 'ஜோசப் பூங்கா' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்:இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என்பதற்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தார் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப். அவரது நினைவுநாள் மார்ச் 5. அன்று அவருக்கு மரியாதை செய்ய வேண்டும். இவரது சிலைக்கும் அரசு மரியாதை செய்வது, அரசுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.- என்.நன்மாறன்முன்னாள் எம்.எல்.ஏ.,மதுரை, 94431 36244

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    நல்ல பதிவு .நன்றி அய்.யா நாம் மறந்த தலைவர்களில் ஒருவர் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement