Advertisement

இந்த யுகம் நம்மோடு முடிந்து விடாது...!

சமீபத்தில் பெய்த மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து விட்டனர்.
நிவாரணமாக குறிப்பிட்ட தொகையை அரசு வழங்குகிறது. உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் தொகை என பட்டியலிட்டு, அவர்களின் வாயை அப்போதைக்கு அடைத்து விடுகிறது.
இந்த நிவாரண விஷயத்தில் மற்ற அரசியல் கட்சிகள் புகுந்து அரசியல் செய்வதும் உண்டு. மீண்டும் அடுத்த பருவமழைக்கும் இதே நிலைதான். சங்கிலித் தொடர் போல ஒவ்வொரு ஆட்சியின் போதும் ஒரு சடங்காகவே நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, 10 நாட்களுக்குப் பின் வரும் மழையைக் கூட துல்லியமாக கணித்துக் கூறும் அளவிற்கு விஞ்ஞான யுகம் வளர்ந்துள்ளது.
ஆனால், இன்னமும் பாதிக்கப்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கெல்லாம் யார் காரணம்; அரசியல்வாதிகளா, அதிகாரிகளா; தவறு எங்கே நடக்கிறது என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும், இதற்கு பதில் என்பது முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என, மீண்டும் கேள்விதான் மிஞ்சும்.
மனிதனுக்கு சொந்தமான ஒரு இடத்தை ஒருவர் கபளீகரம் செய்தால், முடிந்த வரை இடத்தைப் பெற போராடுவான். கிடைக்காது என்ற ஒரு கட்டத்தில் தெரிந்தால் நமக்குத் தேவையில்லை என, விட்டு விடுவான். ஆனால், இயற்கைக்கு சொந்தமான இடத்தை கபளீகரம் செய்தால் விட்டு விடுமா; அதற்கு நல்லது கெட்டது தெரியுமா?
இதுதான் தற்போது பெய்துள்ள வட கிழக்குப் பருவமழை, அரசுக்கும், இனி வரப்போகும் அரசுக்கும், ஏன் பொதுமக்களாகிய நமக்கும் கற்பித்துள்ள பாடம்.தமிழகத்தில் மட்டும் சிறியது, பெரியது என, 39 ஆயிரத்து, 202 ஏரிகள், குளங்கள், 95 ஆறுகள்,
கிட்டத்தட்ட, 5,000 கி.மீ., துாரத்திற்கு பாசன வாய்க்கால்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவில் அத்திப்பட்டி என்ற ஊர் காணாமல் போனது போல், எவ்வளவோ ஏரிகள், குளங்கள் காணாமல் போயிருக்கின்றன.
தற்போது அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய்த் துறையில் கூட, முறையான தகவல் இருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. இதை, பாமரனாகிய சாமானியன் கூட அறிந்ததுதான்.
இவற்றையெல்லாம் கபளீகரம் செய்தது யார் என, ஆக்கிரமிப்பு செய்ததில் பெரும்பங்கு வகிக்கும் பொது ஜனமாகிய நாம் கேட்டால், ஒவ்வொரு அரசியல்வாதிகளின் ஆட்காட்டி விரல்கள், ஒருவரை ஒருவர் மாறி மாறி, எங்கள் ஆட்சியில் அல்ல; அது அவர்கள் ஆட்சியில் தான்
நடந்தது என, காட்டுவர்.ஆனால், எவரும் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுப்பதும் இல்லை. கடுமையான நடவடிக்கை எடுத்து அவைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பதில்லை.
எல்லாம் கையூட்டும், கமிஷனும் படுத்தும் பாடு. இதில் வேதனை என்னவென்றால் தற்போது ஆளுகிற மற்றும் ஆண்ட அரசுகளே குளங்கள், வாய்க்கால்களைத் துார்த்து தீயணைப்பு நிலையங்கள், பள்ளிக் கட்டடங்கள் என, அரசு கட்டடங்களைக் கட்டியுள்ளது தான். பொது ஜனமாகிய நாமும் எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ அங்கு இடத்தை வாங்கிப் போட்டு வீட்டைக் கட்டி விடுகிறோம்.
அந்த இடத்தில் குளம் இருந்ததா, ஏரி இருந்ததா என பார்ப்பதும் இல்லை. மழைக்காலத்தில் தண்ணீர் புகுந்து விட்டால், 'அய்யய்யோ, வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதே, வாழ்வாதாரமே போயிற்றே...' என கூப்பாடு போடுகிறோம்.
இடத்தை வாங்கும் முன், வீட்டைக் கட்டும் முன் விசாரித்து வாங்காமல் விழிப்புணர்வுடன் இருந்தால், ஏமாற்றுவோர் இல்லாமல் போவர்.இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு. முதலில் நாம் மாற வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்று இலவசங்களைக் கொடுத்து விட்டாலோ அல்லது பேரிடர் காலங்களில் நிவாரணங்களை வழங்கி விட்டாலோ நமக்கு அடிமை என, அரசியல்வாதிகள் நினைத்து விடுகின்றனர்.
அதனால் தான் ஒரு சில இடங்களில் மக்கள் கேள்வி கேட்கும்போது, 'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும்போது தெரியலையா; இலவசங்களை வாங்கும்போது தெரியலையா' என, மக்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு வந்து விட்டது நிலைமை.
முதலில் நிவாரணம் - இலவசம் என்ற இரண்டு வார்த்தைகளை நாம் மறப்போம். நீண்ட நெடுநாளைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்போம். நமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் வளமுடன் வாழ தொலைநோக்கு திட்டத்தைக் கேட்போம்.
வரப்போகிறது தேர்தல். ஒரு ஆட்சியின் பதவி காலம் முடிந்து விட்டால், அன்று முதல் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், வாக்காளர்களாகிய நாம் தான் எஜமானர்கள். செய்த தவறுகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, தியாகிகள் போல் நம்மிடம் ஓட்டு கேட்டு வருவர்.
அப்படி வருபவர்களிடம் தைரியமாக நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்:மழைநீர் வடிகால் திட்டத்திற்கு தொலை நோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதா; அந்த திட்டத்தை எவ்வளவு காலத்தில் செயல்படுத்துவீர்கள். ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசியல் கட்சியினர், அதிகார வர்க்கத்தினர் என யாருக்கும் தயவு தாட்சண்யம்
காட்டாமல் அகற்றுவீர்களா?நீர்வழி நிலைகளில் வீடுகளைக் கட்டி விற்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா; அந்த இடம் வீடு கட்டுவதற்கு ஏற்ற இடம் இல்லை என தெரிந்தும் பணத்திற்காக வீடு கட்டிக் கொடுத்த பொறியாளர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா; நீர் நிலைகள் அதன் வழியில் செல்ல உரிய நடவடிக்கை எடுப்பீர்களா?
இவ்வாறு, எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும்படியாக கோரிக்கைகளை கேளுங்கள். இலவசங்கள் என்ற பெயரில் நமக்கு அவர்கள் பிச்சை போடுவதை எதிர்த்திடுங்கள். ஓட்டுக்கு பணத்தைக் கொடுத்தால் வீசியெறியுங்கள். இயற்கை நமக்கு கொடுத்த கொடையை இனியும் அடுத்தவர்கள் கபளீகரம் செய்வதை பொறுத்திருந்து பார்க்காதீர்கள்.
ஒவ்வொருவரும் வீடு மற்றும் இடம் வாங்கும்போது, அந்த இடம் நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்பது தெரிந்தால் வாங்காதீர்கள்; புறக்கணியுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருங்கள்.
இந்த பொறுப்பு சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமல்ல; நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கும் உண்டு.இயற்கை பேரிடர்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது விவசாயிகள் என்பது ஒருபுறம் இருந்தாலும், பெரு விவசாயிகள் தங்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளை விட்டுக் கொடக்க முன்வர வேண்டும்.
உதாரணமாக இன்று, அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு எவ்வளவு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டுப் பார்த்தால், எங்கேயோ போய் நிற்கும். இவற்றையெல்லாம் தவிர்த்து,
அரசுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாம் சுத்தமாக இருந்தால் தான் அடுத்தவர்களை கேள்வி கேட்க முடியும். ஓட்டு போடும் நாம் தான் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்க வேண்டும். பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இந்த யுகம் நம்மோடு முடிந்து விடப்போவதில்லை. நாம் வாழ்வதற்காக நமக்கு முன் வாழ்ந்த முன்னோர், குடிநீர் ஆதாரத்திற்காகவும், பாசனத்திற்காகவும் ஊர் ஊராக வெட்டி வைத்த ஏரிகள், குளங்கள், கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டி சாதித்து விட்டோம் என, நினைத்தால் வருங்கால நம் சந்ததியினரின் சாபத்திற்கு ஆளாவோம்.
நமக்குப் பின் வரும் நம் சந்ததி யினரும் எவ்வித சிரமமும் இன்றி சுபிட்சமாக வாழ வேண்டும் என நினைப்போம். வி.மோகன்எழுத்தாளர், சமூக சிந்தனையாளர்


இ-மெயில்: vimomohan63gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    அருமையான கட்டுரை ,அரசனே தவறு செய்தால் மக்கள் என்ன செய்வோம் என்று கேட்டது ரொம்பவே சரியான வாக்கியம் , எவன் ஆண்டாலும் இதேதான் நடக்குது இப்போ கடந்த 20வருஷத்துலெ அரசியல்வாதிகளின் அழிச்சாட்டியம் அடங்க்காபிடாரித்தனம் (போறச்ச எல்லாம் கொண்டுபோவோம் என்ற வெரிலெ வாங்கி குவிச்சுன்னே போறாங்க 5வருஷம் லே குறைஞ்சது 500 கொடியாச்சும் செர்த்துர்வாணுக ஓமகுச்சிமாதிர்வந்தவஅணுக எல்லாம் 5ஆண்டுக்கிரகு குண்டுகல்யாணம் போல ஊதுரானுக எல்லாத்துலேயும் ஒரு லிமிட் வேண்டும் அவ்ளோ பெருந்தீனி குடி என்று சர்வமும் வருது , இதுலே இன்த பிராடுகளுக்கு காவல்துரைலேயே ஹெல்பும் செய்யுது என்பது தான் நேர்மையா உண்மையா இருந்தால் இந்த அன்ஜாண்டு மன்னர்கள் அவர்களை படுத்தும் பாடு பரிதாபம் அசும் பிராடு காவல்துறையோ கேட்கவே வேண்டாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement