Advertisement

கட்டித்தங்கம் வெட்டி எடுத்து...

தங்கம் என்ற மஞ்சள் உலோகத்தின் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தங்கம் பயன்பாட்டில் முன்னணியில் உள்ள இந்தியா, தங்கத்திற்கு இறக்குமதியைதான் நம்பியிருக்கிறது.இந்தியாவில் தங்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு தங்க நகை விற்பனை ஆண்டுக்கு ரூ.2.51 லட்சம் கோடியாக உள்ளது. 2018ம் ஆண்டு வரை விற்பனை இலக்காக ரூ.5 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தங்கம் அரிதான உலோகம். பூமியில் அனைத்து இடங்களிலும் தங்கம் கிடைப்பதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரங்களுக்குள் ஏற்பட்ட பெரும் மோதலின் விளைவாக
பூமியில் தங்கம் உருவாகி உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அதாவது மிகுந்த அடர்த்தி கொண்ட நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டாதலேயே தங்கம் உருவாகியுள்ளது. காமா கதிர்வீச்சு, வெடிப்பு போன்ற நிகழ்வுதான் தங்கம் உருவாக காரணம் என்றுக்கூறும் விஞ்ஞானிகள், இவ்வாறு நட்சத்திரங்களின் மோதலின்போது ஏற்பட்ட தங்கத்தின் அளவு 10 நிலவுகளின் எடைக்கு சமமானது என்றும் கூறுகின்றனர்.
தங்கம் எப்படி கிடைக்கிறது ஆண்டுதோறும் உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அதாவது 53 சதவீத அளவிற்கு தென்னாப்ரிக்காவில் உள்ள சுரங்கங்களில்தான் தயாராகிறது. 10 ஆயிரம் அடிக்கு கீழே கிடைக்கும் உலோக மண்ணை பொடி செய்து நீரிலும், சயனைடிலும் கழுவினால் மஞ்சள் பொன் துகள் கண்ணுக்கு தெரியும். அதில் களிமண்ணும்
கலந்திருக்கும். இந்த கருப்பு தங்கத்தை துத்தநாக பொடி போட்டு உருக்கினால் 'புல்லியன்' எனும் கட்டித்தங்கம் கிடைக்கும். சுரங்க வேலை நடக்கும்போது நாள் ஒன்றுக்கு 45 தங்கக்கட்டிகளை தென்னாப்ரிக்காவில் தயாரிக்கின்றனர்.
தங்கத்தை சுத்தம் செய்யும் உலகிலேயே மிகப்பெரிய 'ராண்டுரிபைனரி' என்ற தொழிற்சாலை தென்னாப்பிரிக்காவின் 'ஜெர்மிஸ்டன்' நகரில் உள்ளது. இங்கு கட்டித்தங்கத்தை 'கிராபைட்' எனும் பென்சில் கரியிலான கொப்பரை யில் உருவாக்குவார்கள். இந்த
கொப்பரைகள் கொளுந்துவிட்டு எரிகிற தணலில் கழுத்து மட்டத்திற்கு புதைக்கப்பட்டிருக்கும்தங்கம் 'ஏயு' என்ற வேதியியல் குறியீட்டினால் குறிப்பிடப்படுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது. தங்கம் பெரும்பாலும் நிலத்தின் அடியில், பாறைகளில் ரேகை வடிவில் படிமங்களாகவே கிடைக்கின்றன. இந்தியாவில் கர்நாடகா கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கிடைத்தது. இப்போது, அந்த சுரங்கப்பணி நிறுத்தப்பட்டுள்ளதற்கு இருப்பின்மையே காரணமாம்.
எப்போதும் பளபளப்பு தங்கத்தை மெல்லிய தகடாக அடிக்கலாம், கம்பியாக நீட்டலாம். இது வெப்பத்தையும், மின்சாரத்தையும் நன்கு கடத்தும். காற்றில் இதன் நிறம் மங்காது. மேலும் இது துருப்பிடிக்காது. எப்போதும் பளபளப்பாக இருக்கும். ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும், மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்ந்த கலவையில் மட்டுமே தங்கம் கரையும். தங்கம் 'காரட்' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தமான தங்கம். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. இதனுடன் செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களை கலந்த பின்னரே ஆபரணம் செய்ய முடியும்.
தங்கம் ஒருவரின் சொத்து மற்றும் அந்தஸ்தினை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. தங்கத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். ஏனெனில், பெண்கள் அணியும் தாலியானது தங்கத்தால் செய்யப்படுகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடன் தாலிக்கு பொன் உருக்குதல் என்ற மங்கல நிகழ்வு நடக்கும். மேலும் தற்போது மணப்பெண் சீர்வரிசையில் முக்கிய இடம்பிடித்திருப்பதும் தங்கம்தான்.
தங்கம் சிறந்த சில மருத்துவ குணங்கள் உடையவை என முன்னோர் கூறியிருக்கின்றனர். தங்கத்தை மதுவில் சிறிதளவு சேர்த்து அரைத்து, பொடியாக்கி தயாரிக்கப்படுவதுதான் தங்க பஸ்பம் என்கின்றனர். இதை சாப்பிட்டால் உடல் பொலிவடையும் என்பது நம்பிக்கை.
தங்கமும், நாணய மதிப்பும் ஒவ்வொரு நாட்டின் நாணய செலவாணியிலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலவாணியை குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மதிப்பிடுவர். ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும். இந்த கையிருப்பு அடிப்படையில்தான் அந்நாடு நாணயத்தை தயாரித்து வெளியிட முடியும். தங்கத்தின் இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.
சில ஆண்டுகளாகவே தங்கத்தின் மீதான மோகம், ஆன்-லைன் வர்த்தகம், தங்கத்தில் முதலீடு போன்ற காரணங்களால் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கிராம் தங்கம் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று 3 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது. அதே சமயம் தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு குறையவில்லை என்பது உண்மை.
உலகம் முழுவதும் தங்கத்தை வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. அமெரிக்கா டாலரின் ஏற்றம், இறக்கம் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்தியாவில் தங்கம் உற்பத்தி இல்லாததால், வெளிநாடுகளை நாம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்தின் மதிப்பு, அதன் மீதான வரி அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மிகப்பெரிய தங்கப்பொருள் ஏதென்ஸ் நகர தேவதை சிலை தங்கம் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்டது. இந்த தேவதையின் அணிகலன்கள் மட்டும் ஒரு டன் எடை கொண்டது. எகிப்தில் கெய்ரோ அருங்காட்சியகத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட அரசனின் சவப்பெட்டி உள்ளது. இது 6.2 அடி நீளம் கொண்டது. எடை 2,450 பவுண்டுகள். உலகில் மிகப்பெரிய தங்கப்பொருள் இதுதான்.
ஒரு அவுன்ஸ் தங்கத்தை, கம்பி இழையாக நீட்டினால் ஒரு மைல் துாரம் நீட்ட முடியும். தங்கத்தை அணிய பெண்களுக்கு மட்டும்தான் ஆசை என்று நினைத்தால் அது தவறு. சங்ககால
மன்னர்கள் முதல் இக்கால ஆண்கள் வரை தங்கம் மீது மோகம் உண்டு.தங்கம் வாங்கியவர்கள் அதை பாதுகாப்பதில் கவனக்குறைவாக இருக்கிறார்கள். வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பது நல்லது. தங்க நகைகளை தனித்தனி பெட்டிகளில் வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்றாக வைத்தால், நகைகளில் கீறல் ஏற்பட்டுவிடும். இதனால் அதன் 'பளிச்' நிறம் மங்கும். எனவே தங்கம் வாங்குவதோடு, அதை பாதுகாப்பதும் முக்கியம்.
- வி.ஜி.ஏ., ஆல்பர்ட்,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்மதுரை. 94893 66178

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

    தங்கமும், கச்சா எண்ணெய்யும் தான் இன்றைய பொருளாதார பண்ட பரிமாற்றங்கள் இதை மாற்ற வேண்டும். அப்போது தான் உண்மையான உலகின் பொருளாதாரம் தெரிய வரும். இந்திய சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அவர்களின் அறிவுத்திறன் அவை எப்ப உலகுக்கு பயன் அடைகின்றன என்று வரும் பொது , இந்த தங்கம் கச்சா எண்ணெய் பொருளாதார அளவுகோல்கள் மாறும். மனிதன் மனிதனின் உழைப்பு மற்றும் அறிவுத்திறன், அன்பு மனிதாபிமானம் போன்றவை ஒரு நாட்டின் பொருளாதாரமாக மாறும் போது அங்கே உண்மையான எழுச்சி இருகின்றது. மற்ற பொருளாதார வளர்ச்சிகள் மனிதனை அடிமை படுத்து கின்றன நாச வேலைகளுக்கும் இதுவே காரணம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement