Advertisement

'வாட்ஸ் ஆப்' வரமா... சாபமா? இன்று 'வாட்ஸ் ஆப்' நிறுவன நாள்

வணக்கம், 'வாட்ஸ் ஆப்'...சமூகத் தொடர்புச் செயலிகளில் இன்றைக்கு வெகுவேகமாக முன்னேறி தகவல்களைப் பரிமாறுவதில் 'வாட்ஸ் ஆப்' தனி இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. காலைக்கடன்களை முடிக்கிறார்களோ இல்லையோ... காலையில் எழுந்தவுடன் 'வாட்ஸ் ஆப்' தகவல்களைக் காணமால் அன்றைய பொழுது, இன்றைய தலைமுறையினருக்கு விடிவதேயில்லை.
இரவில் வீடுகளில் திருட்டு நடப்பது குறைந்து கொண்டு வருகிறது. காரணம், நள்ளிரவு தாண்டியும், 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அறிந்தோ, அறியாமலோ தன் வீட்டிற்கும் தெருவிற்கும் வாட்ச்மேனாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேடிக்கையாக இருந்தாலும் உண்மை நிலை இதுதான். கையடக்கக் கருவியின் மூலம்
உலகமே ஒவ்வொருவரோடும் உரையாடிக் கொண்டிருக்கிறது.
கட்டுரையா... படங்களா...
வீடியோவா... கலந்துரையாடலா... இவை அனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் நுாற்றுக்கணக்கானோரைச் சென்றடைகின்ற அளவிற்கு 'வாட்ஸ் ஆப்' பயன்பாடு மிக எளிதாக்கப்பட்டுள்ளது.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த தகவல் வீடியோ பதிவுடன் பாரிஸ் நகரத்தில் உள்ள ஒரு தமிழருக்கு அடுத்த நொடி சென்றிருக்கிறது என்றால், 'வாட்ஸ் ஆப்' அற்புதத்தை குறிப்பிடுவது எப்படி
அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் செய்திக்கான குறிப்பு ஒலியுடன் சட்டைப்பைக்குள் உலக, உள்ளூர் நடப்புகள் வந்து விழுகின்ற தகவல் புரட்சியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சம்பவம் நடந்த அடுத்த நொடிக்குள் நமக்குத் தகவல் கிடைக்கவில்லை என்றால், இன்றைய இளைஞர்களால் நாம் சென்ற நுாற்றாண்டு மனிதராக எள்ளி நகையாடப்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. 'குழந்தை பிறந்தது' என்பதில் தொடங்கி, 'தாத்தா இறந்தார்' என்பது வரை குடும்பங்களுக்கான செய்திப் பரிமாற்றங்களும் மிகச் சாத்தியமாகிவிட்டன.
இன்னும் ஒரு சில மாதங்களுக்குள்... மன்னிக்கவும்... ஒரு சில நொடிகளுக்குள் திருமணத்திற்கான அழைப்புகளும் இனி 'வாட்ஸ் ஆப்'பிலேயே வரக் கூடும். அதனையே அதிகாரப்பூர்வ அழைப்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
வெள்ளத்தில் சேவை சென்னையில் வெள்ளப்பேரிடரின் போது 'வாட்ஸ் ஆப்' நிகழ்த்திய மனிதநேய அறைகூவல்கள், நம் ஒவ்வொருவரையும் நெஞ்சுருகச் செய்தது என்னவோ உண்மை.
'வேளச்சேரியில் இத்தனையாவது தெருவில், இந்தக் கதவு எண்ணுள்ள வீட்டின் மொட்டை மாடியில், உணவின்றி ஒரு குடும்பமே தவிக்கிறது' என்ற 'வாட்ஸ் ஆப்' தகவலைப் பார்த்து, தன்னார்வலர்கள் சென்று உதவியகாட்சியும், 'பிரசவ வேதனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் துடித்துக் கொண்டிருக்கிறார்' என 'வாட்ஸ் ஆப்'பில் செய்தி அனுப்பிய சில மணித்துளிகளில், ஆம்புலன்ஸ் அழகாக அள்ளிக் கொண்டு சென்ற காட்சியையும் பார்த்தோமே...!
இப்படியெல்லாம் நடக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் கனவிலும் நினைத்திருப்போமா? ஒவ்வொருவரின் கையிலும் இருக்கும் அலைபேசியில் ஒருவரை அழைத்து உரையாடுகிறோமோ இல்லையோ... ஆனால் இரண்டு கைகளின் ஆட்காட்டி மற்றும் கட்டை விரல்களால் கைபேசியின் திரைமேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறோம்.
'உங்ககிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்கா..?' என்ற கேள்வியின் தொடர்ச்சியாக, 'நீங்க வாட்ஸ் ஆப்ல இருக்கீங்களா..?' என கேட்காத நபர்கள் எவ்வளவு குறைவோ... அதை விட 'ஆம்' என்று சொல்லாத நபர்களும் குறைவு.
பரவும் புரளி
அதெல்லாம் சரி... கையில் கிடைத்த கத்தியைக் கொண்டு காய்கறியும் நறுக்கலாம். ஏதோ ஒரு உயிரினத்தின் கழுத்தையும் அறுக்கலாம். 'வாட்ஸ் ஆப்'பின் மூலம் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் நடப்பதை வரவேற்கும் அதே நேரம், அதன் மூலம் சில தீமைகளும் பரவிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
மிக எளிதான கருத்துப்பரிமாற்றம் காரணமாக சில தேவையற்ற புரளிகளும், வதந்திகளும், தவறான தகவல்களும் சில சமூகக் கிருமிகளால் பரப்பப்படுவதும் வருந்தத்தக்க ஒன்று.
மற்றொருபுறம் செய்தியை முதலில் தர வேண்டும் என்ற ஆவலின் பொருட்டு, விபத்தில் அடிபட்டுக் கிடப்பவரைக் காப்பாற்றும் சிந்தனையின்றி, அதனை வீடியோவாக எடுத்து உடன் சமூகத் தொடர்புத் தளங்களில் உலவ விட வேண்டும் என்ற வக்கிரம் பெருகிக் கொண்டிருக்கிறது. தற்கொலை முயற்சியின் பொருட்டு பாலத்தின் மீது ஏறி, சாவோடு போராடிக் கொண்டிருக்கும் இளைஞரைக் காப்பாற்ற நான்கைந்து பேர் முன் வருகின்றனர். வேடிக்கை பார்க்கும் நானுாறு பேர் அலைபேசியில் வீடியோ படம் எடுக்க முந்திக் கொண்டு நிற்கின்றனர். இது எந்தவித மனநிலை? இதனை 'வாட்ஸ் ஆப்' வக்கிரம் என்று சொல்வதா? மரத்துப்போன மனிதநேயம்
என்பதா?
இளைஞர்களின் நோக்கம்
இப்படியெல்லாம் இளைஞர்கள் உருவாக வேண்டும் என நினைத்தா ஜேன்கௌம்மும், பிரையன் ஆக்டனும் இந்தச் செயலியைக் கண்டுபிடித்தனர். 'ஒருவருக்கொருவர் நட்பை வளர்க்கவும், அன்பைப் பரிமாறிக்கொள்ளவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் எந்த இடையூறும் இன்றி செயல்படக்கூடிய நல்ல தொடர்புச் செயலியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்' என கூறிய அந்த இளைஞர்களுக்கு, நாம் காட்டக்கூடிய வெகுமானம் இதுதானா?
கடந்த 2009 பிப்., 24 அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உதயமானது. இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்குள்தான் 'வாட்ஸ் ஆப்' மாபெரும் வளர்ச்சியைப் பெற்று, தகவல் தொடர்பில் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்து வருகிறது.
பல கோடிக்கணக்கானோர், 'வாட்ஸ் ஆப்' சேவையில் தங்களையும் இணைத்துக் கொண்டு, தகவல் புரட்சிக்கு அணி செய்து வருகின்றனர். 'வாட்ஸ் ஆப்'பின் வளர்ச்சி வேகத்தைக் கண்ட 'பேஸ்புக்' நிறுவனம், ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு அந்த இளைஞர்களிடம் இருந்து 'வாட்ஸ் ஆப்' உரிமையைப் பெற்று அதன் பரவலை விரைவுபடுத்தியுள்ளது.
'வாட்ஸ் ஆப்' கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான ஜேன் கௌம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஏழ்மைக் குடும்பத்தை சேர்ந்தவர். வாழ்வதற்காக அமெரிக்காவை நோக்கிப் புலம் பெயர்ந்த ஜேன் கௌம்மும், அவரது அம்மாவும் அரசு தரும் இலவச உணவுக்காக வரிசையில் காத்துக் கிடந்தவர்கள் என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இரவு நெடுநேரம் விழித்திருந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்துகின்ற 'வாட்ஸ் ஆப்' செயலி, ஜேன் கௌம், பிரையன் ஆக்டன் ஆகியோரால் பல இரவுகள் துாங்காமல் செதுக்கி செதுக்கி உருவாக்கப்பட்டதாகும்.
உலகமே வியக்கும் உன்னதமான தொடர்புச் செயலி, எந்தவித செலவுமின்றி நம் அலைபேசிக்குள் நுழைந்திருக்கிறது. அதை நம் உயர்வுக்காய் பயன்படுத்திக் கொள்வதும்...சமூக மாற்றத்திற்காக விதைத்துச் செல்வதும் அவரவர் எண்ணித்திலும், செயலிலும்தான் இருக்கிறது.- -இரா.சிவக்குமார்எழுத்தாளர், மதுரை.99948 27177

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement