Advertisement

கமல் வெறியன் நான்!: பரணி 'பளீர்'

ஹீரோ, காமெடி, வில்லன் என கேரக்டர்களில் தனக்கென தனித்துவம் பெற்றிருப்பவர் நடிகர் பரணி. இயக்குனராக ஆசைப்பட்டு நடிகராக கோலிவுட்டில் கலக்கி வரும் இளம் நடிகர். 'கல்லுாரி' சினிமாவில் தனது பயணத்தை துவங்கி 'நாடோடிகள்' படத்தில் முத்திரை பதித்து 'துாங்காநகரம்' முடித்து வைத்து, கன்னக்கோலுக்காக 'தகிடுதத்தம்' போட்டு பொட்டு வைத்து காத்திருக்கும் நாயகர். மதுரை நாயகன் 'பரணி' ' தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக பகிர்ந்தவை.
* சினிமாவில் தடம் பதித்தது எப்போது?
சிறுவயது முதலே மற்றவர்களை போல் நடித்துக் காட்டுவேன். அப்போதே கதையும் எழுதுவேன். மதுரையில் நான் படித்த பள்ளியை சுற்றி தியேட்டர்கள் அதிகம். படிப்பை விட நடிப்பின் மீது ஆர்வம் அதிகமானது. நடிப்பதை எல்லோரும் ரசிக்கிறார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை சென்னைக்கு வர வைத்தது. இயக்குனர் ஷங்கர், பாலாஜி சக்திவேல் மூலம் 1995 ல் கண்ட கனவு 2005 ல் பலித்து விட்டது.
* 'கல்லுாரி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
10 ம் வகுப்பு படிக்கும்போதே சென்னையில் இயக்குனர் பாலா அலுவலகத்திற்கு உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தேன். பட்டப்படிப்பு முடித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்றனர். திக்கி திணறி ஒரு வழியாக பிளஸ் 2 முடித்து சென்னையில் படிக்க சென்றேன். அந்த காலகட்டத்தில் ஷங்கர் அலுவலகத்தில் வேலை பார்த்த எனது அத்தை மூலம், உதவி இயக்குனருக்கு ஆள் எடுக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு சென்றேன். அங்கு சென்ற போது நடிக்க தான் ஆள் எடுத்து கொண்டிருந்தார்கள்.
கிளம்பும் போது, அங்கிருந்த உதவி இயக்குனர்கள் 'மதுரையில் இருந்து வந்தா போதுமா சரக்கு வேணாமா 'என கூறி கிண்டலடித்தனர். உடனே பராசக்தி டயலாக்கை என் பாணியில் நடித்து காட்டினேன். இதைப் பார்த்த பாலாஜி சக்திவேல் எனக்கு கல்லுாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
* சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பு பெற்றது?
முதலில் 'வால்மிகி' படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன். அடுத்து 'நாடோடிகள்' படம் பண்ணினேன். தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு வாய்ப்பு வந்தது. அப்போது 'துாங்காநகரம்' படம் பண்ணிக் கொண்டிருந்தேன்.
துாங்காநகரம் இயக்குனரின் ஈகோ பிரச்னையால் அந்தப்பட வாய்ப்பையும் தவறவிட்டேன். பின் மற்றொரு தேசிய விருது படமான 'மைனா' வாய்ப்பையும் நழுவ விட்டேன். சினிமா ஆர்வம் இருந்ததால் மட்டும் போதாது. 'சினிமா அரசியலும்' தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் தான் ஆறு ஆண்டுகள் பின்தங்கி மீண்டும் முதலில் இருந்து துவங்குகிறேன். தேசிய விருது படங்களை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால், பெரிய ஹீரோவாக வளர்ந்திருப்பேன்.
* சசிகுமார் படங்களில் உங்களை காணோமே?
எனக்கு ஹீரோ வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அவரும் ஹீரோவாக உச்சநிலைக்கு சென்றுவிட்டார். அவரது பட இயக்குனர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் அது.
* காமெடியில் பட்டையை கிளப்பிய நீங்கள், ஏன் காமெடியை தொடரவில்லை?
இன்றைக்கு இருக்கக்கூடிய உச்ச நடிகர்கள் எல்லாம் காமெடி பண்ணித்தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்கள். காமெடி மட்டும் நாடோடிகள் படத்தில் இல்லை. சூரியோ, சந்தானமோ நாடோடிகள் படத்தில், கிளைமேக்சில் நான் செய்த 'ஆக்ஷன் டேக்' பண்ண முடியுமா...?
கல்லுாரியில் 55 கிலோ எடையில் இருந்த நான் நாடோடிகள் படத்திற்காக 69 கிலோவாக மாறினேன்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் முதலில் அந்த கதையை என்னிடம் சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் முடிவால் மிஸ் ஆனது. அந்தப்படம் வந்திருந்தால் ஹீரோவாக இருந்திருப்பேன். இப்போது டபுள் ஹீரோவாக பொட்டு படத்தில் பரத்தும், நானும் நடிக்கிறோம்.
கன்னக்கோல், தகிடுதத்தம் படங்கள் வந்தால் எனக்கான தனி இடம் உறுதி செய்யப்படும்.
* உங்களது ரோல் மாடல் ?
கமல் வெறியன் நான். ரகுவரன், மணிவண்ணன், நாகேஷ், சுருளிராஜன், தங்கவேலு என அனைவரையும் பிடிக்கும். ஆனாலும் எம்.ஆர். ராதா நடிப்புக்கு ஈடு உண்டா? அவர் காமெடி, ஹீரோ, வில்லன் என அனைத்திலும் கலக்கியவர். அது போல் பரணியும் தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் இருப்பான். 'ஜிகர்தண்டா' படத்தில் பாபி சிம்ஹா, மதுரை மொழியில் சுமாராகத்தான் பேசியிருப்பார். அதே படத்தில் பரணி இருந்து இருந்தால் 100 சதவீதம் மதுரை ரவுடியை பார்த்து இருக்கலாம். ஹீரோ, காமெடி, வில்லன் என எதை பண்ணினாலும், அதில் பரணியின் தனித்துவம் கண்டிப்பாக இருக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Chandrasekaran Padmanathan - mahe,செசேல்ஸ்

    வாழ்த்துக்கள் பரணி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement