படுகர் குல பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் புகார் மனு
ஊட்டி : "எடக்காடு அருகே மதமாற்ற நோக்கத்துடன் அமைக்கப்படும் கட்டட செயல்பாட்டை தடுக்க வேண்டும்,' என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. படுகர் குல பாதுகாப்பு இயக்கம் கன்வீனர் ராமமூர்த்தி கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மதமாற்றம் செய்து பணம் ஈட்டும் முயற்சி நடந்து வருகிறது. படுக சமுதாயத்திலிருந்து மதம் மாறிய சிலர் "நாக்குபெட்டா, கவதமனெ, ஒதபதுக்கு,' போன்ற படுக கலாச்சார சொற்களை பயன்படுத்தி மதமாற்றம் செய்து வருகின்றனர். படுக கலாச்சார சொற்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி கட்டாயம் மதமாற்றம் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். 100 சதவீதம் இந்துக்கள் வாழும் குந்தா தாலுகா எடக்காடு கிராமத்தில் கட்டாய மத மாற்ற முயற்சியில் ஈடுபட்ட ஒருவர், கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், எடக்காடு கிராமம் அருகில் சொந்தமாக கிறிஸ்தவ கம்யூனிட்டி ஹால் என்ற பெயரில் கட்டடம் அமைத்து, அந்த கட்டடம் 25ம் தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தெரிய வருகிறது. இதனால், அப்பகுதியில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதமாற்ற நோக்கத்துடன் அமைக்கப்படும் சமுதாய ஹால் செயல்பாட்டை தடுக்க வேண்டும். இவ்வாறு, ராமமூர்த்தி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!