Advertisement

தமிழ் மொழி என்னும் விழி பிப்.21 - உலக தாய்மொழி தினம்

நம் தாயிடமிருந்து கற்கும் மொழி, நமக்குத் தாயாய் அமைந்து உலகியலைக் கற்பிக்கும் மொழி நம் தாய்மொழியாம் தமிழ் மொழிதான். நம்விழியாய் அமைந்து எல்லாவற்றையும் பார்க்கத் துணைபுரிகிறது. தாய்மொழி எனும் பெருவரத்தின் ஆற்றல் புரியாமல் இன்னும் அயல்மொழிகளைத் துாக்கிப்பிடித்துக் கொண்டு திரிகிறோம். தமிழ், எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று. பண்பாட்டோடு தொடர்புடைய மொழி.
உலகம் முழுக்க எட்டு கோடி தமிழர்களின் தாய் மொழியாய் உள்ள தமிழ் மொழி, திராவிட மொழிகளின் தாயாகத் திகழ்கிறது. உலகத்தமிழ் சிங்கப்பூரிலும், மலேசிய நாட்டிலும், கனடாவிலும், இலங்கையிலும், துபாயிலும், மொரிசியஸ் நாட்டிலும், இந்தோனேசியாவிலும், பிஜி தீவிலும், தென்னாப்ரிக்க நாட்டிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இங்கிலாந்து நாட்டிலும், தொப்புள்கொடி உறவாம் அன்னைத் தமிழ் உறவை இனிய தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டு அவர்கள் மென்மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க, நாமோ நம் தாய்மொழியை மறந்துவிட்டு அயல்மொழி மயக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்.
சிங்கப்பூரின் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் அரியணையில் அமர்ந்துள்ளது. அந்நாடெங்கும் அழகு தமிழில் அறிவிப்புகளைக் காணமுடிகிறது. மலேசியாவில் தமிழுக்கு அரசியலமைப்பில் உரிமை தரப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டினை மலேசியப் பிரதமரே முன்னின்று நடத்தித் திருக்குறளின் சிறப்பை மிக அழகாக ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார். அங்குள்ள 525 தமிழ்ப்பள்ளிகளுக்குத் தமிழ் இலக்கிய அறிமுக நுால்களை, அரசே தமிழ்நாட்டிலிருந்து வாங்கி மாணவர்கள் படிக்கத் தந்தது. நான்கு தேசிய மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்கிறது. தென்னாப்பிரிக்காவில் தமிழுக்கு அரசின் உதவி உள்ளது. இலங்கையில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க் கல்லுாரிகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இங்கிலாந்து நாட்டில் தமிழகத்திலிருந்து சென்ற இளைஞர்கள் தமிழ்ப்பள்ளிகளை நடத்தி தமிழ் விழாக்களையும் நடத்தி வருகின்றனர்.
தமிழின் அருமையை உலகெங்கும்தமிழ் மக்கள் உணர்ந்து, தமிழ் பயின்று கொண்டிருக்க, தமிழ்நாடாகத் திகழும் நம் மாநிலத்தில் தாய்மொழியைக் கற்காமலேயே எல்.கே.ஜி., முதல் எம்.பி.பி.எஸ்.,வரை பயின்று விடலாம் என்ற நிலையை நாம் எப்படி மாற்றுவது? நாம் சல்லடையால் சமுத்திரத்தைச் சலிக்கிற மாதிரி தமிழ்க் கல்வியைவிட்டு அப்பால்போய்க் கொண்டிருக்கிறோம். தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி என்று எந்தக் கல்வியாக இருந்தாலும் தமிழ் பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே! எப்படி இதை செய்துமுடிக்கப் போகிறோம்? விழிப்பாயிருக்கிறவனுக்கு எதுவும் வியப்பாயிருக்காது. தாய்மொழி குறித்த விழிப்புணர்வு இன்னும் நமக்கு வரவேண்டும்.
மகாகவி பாரதிக்குத் தாய்மொழியின் மீது அளவற்ற அன்பு. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாய்ந்தது அவன் காதினிலே. பதினோரு மொழிகள் கற்ற அந்த மா கவிக்குத் தாய்மொழியாம் தமிழ்மொழியே இனித்தது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று சொல்ல வைத்தது.
தமிழின்மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக் கல்வியை ஏற்க முடியவில்லை.ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதன் அடையாளமாய், நாம் நம் தாய் மொழியை மறந்துவிட்டு, ஆங்கிலமொழியைத் துாக்கித் திரிவதைக் காண
முடிகிறது.காந்திஜியின் தாய் மொழிப் பற்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட, மகாத்மா காந்தியின் தன் வரலாற்று நுாலான சத்திய சோதனையை, அவர் தாய்மொழியான குஜராத்தி மொழியில் தான் முதலில் எழுதினார். தங்குதடையில்லாமல் சிந்திப்பதற்கும் புதிய கருத்துகளை முன் மொழிவதற்கும் தாய் மொழியால் மட்டுமே முடியும் என்று காந்தி நம்பினார். 1917ல், புரோச் நகரில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் தாய் மொழி வழிக்கல்வியால் மட்டுமே நல்ல சிந்தனையாளர்களை உருவாக்க முடியும் என்று பேசினார். தாய்மொழியில் ஆற்றல் இல்லாதவனின் புலமை, அடித்தளமில்லாமல் கட்டும்கட்டடம் போன்றது என்று காந்திஜி கூறினார். பாடம் புரிந்தால் தானே அது குறித்து மாணவன் வினா எழுப்புவான்! என்று காந்தி வினவினார்.
தொன்மையான மொழி “உலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், சீனம், அரபு ஆகிய மொழிகளோடு தமிழையும் செவ்வியல் மொழியாக ஏற்று அதன் தொன்மை, வரிவடிவம் ஆகியவற்றை ஆராய முற்பட்டது” என அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார். அதில் காலத்தால் மூத்தமொழியாக நம் தமிழ்மொழியை அவர்கள் கண்டார்கள். தேமதுரத் தமிழோசை இணையமெலாம் ஒலித்திடும் இந்தப் புதுயுகத்திலும், தமிழின் மிகப் பழைமையான இலக்கண நுாலான தொல்காப்பியத்தையும் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நுால்களையும் இன்றும் கற்கமுடிகிறது என்பது எத்தனை அழகானது! காலத்தால் மூத்த மொழி, இன்றுள்ள நவீன இலக்கிய வடிவங்களைத் தன்னகத்தே கொண்டு புதுமையாக இயங்குகிறது. லட்சக்கணக்கான பக்கங்களை இணையத்தில் கொண்ட உயர் தனிச்செம்மொழியாகவும் அமைகிறது.
நாம் செய்ய வேண்டியது என்ன முன்னேற்றத்தின் முகவரியாய் அமையும் தாய்மொழியைக் காப்பது நம் கடமை. எங்கும்தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் கொண்டுவரவேண்டும்.

நம்பிக்கை தரும் நற்றமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி கற்கவேண்டும், அதன் இலக்கியச் செழுமையை நம் குழந்தைகளுக்குத் தினமும் கற்றுத்தர வேண்டும்.
திருக்குறளை உலக இலக்கியமாய் ஐக்கியநாடுகள் சபை மூலம் அறிவிக்க முயற்சிகள் எடுக்கவேண்டும். நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ்மொழியைக் கொண்டுவர முயற்சிசெய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் பயிலாமல் எந்தப் படிப்பும்படிக்க இயலாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும். ரயில் நிலையங்களில், விமானநிலையங்களில், வங்கிகளில், மத்திய மாநில அரசு நிறுவனங்களில் தமிழ் இடம் பெற வேண்டும்.

தமிழ் இலக்கியத்தைக் கற்றுத்தருவது, இன்றைய சூழ்நிலையில் எழுத்துக்களைச் சார்ந்தும்,சொற்களைச்சார்ந்தும் அமைகிறது. தமிழ் இலக்கியங்களை ஒலிசார்ந்து கற்றுத் தருவதற்காக ஒவ்வொரு கல்லுாரியிலும், “மொழி ஆய்வகம்“ஏற்படுத்தப்பட்டுத் தமிழின் நுட்பமான தனித்துவம் எதிர்காலத்திலும் நிறுவப்படவேண்டும். லகர, ளகர, ழகர வேறு
பாடுகள் சார்ந்த இனிமை போன்றவற்றை மொழி ஆய்வகம் மூலம் எதிர்காலத்தில் மிகநுட்பமாகக் கற்றுத்தரலாம்.அப்துல்கலாம் சில ஆண்டுக்கு முன் ஆற்றிய உரையில், “உலகின் உன்னதமான திருக்குறள் மூலச்சுவடிகளை நாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. உடனடியாக அதைக் கண்டறிவது அவசியம்'' எனக் குறிப்பிட்டார். கண்டுபிடிக்கப்படாத சுவடிகளில் தமிழின் நாட்டார் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியச் செய்யுள்கள் இன்னும் பல தமிழகத்தின் கிராம, நகரப்பகுதிகளில் இருட்டறைகளில் மறைந்து கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்குத் தரவேண்டும். மொழி நவீனமாகும் போது, பண்பாடு எழுச்சி அடைகிறது.
“தமிழே உனக்காக” என்று உழைக்க வைக்கிறது. நாடுகளாலும், எல்லைகளாலும், தொலைவினாலும், துண்டு துண்டாகிப் பிரிந்து கிடக்கும் தமிழினத்தைத் தமிழ் ஒன்று சேர்க்கிறது.
தமிழ் நம் உலக அடையாளம். தளர்ந்து கிடக்கும் மனங்களுக்குள் தன்னம்பிக்கையைப் பாய்ச்சுகிற வலிமை நம் அன்னைத் தமிழுக்கே உண்டு. தமிழ்
நம் முகவரி, தமிழ் நம் இருப்பின் அடையாளம்.- முனைவர் சௌந்தர மகாதேவன்தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி
99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தமிழ் கெடுவதற்கு நமது சின்னத்திரைகளில் வருபவர்கள் பேசும் நுனி நாக்கு ஆங்கிலம்தான். தயவு செய்து சின்ன திரையில் முழுவதும் தமிழை கொண்டுவாருங்கள். அவைதான் எல்லா இல்லங்களிலும் பவனி வருகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement