Advertisement

தூக்கமே நீ எங்கே தொலைந்தாய்

'துாக்கம்' அது ஒரு சுகம். அனுபவித்து துாங்குவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும். எல்லோருக்கும் இந்த துாக்கம் கிடைத்து விடாது. ஆழ்ந்த துாக்கம் என்பது உயிர்மூச்சு, உடலோடு இணைந்து ஒருங்கிணைந்து ஒரே சீரான அளவில் தன்னை மறப்பது. உடலுக்கு இது ஒரு விதமான ஓய்வு. அனுபவித்து துாங்குபவர்கள் உலகில் மிக சிலரே.
'காலமிது காலமிதுகண்ணுறங்கு மகளேகாலமிதை தவற விட்டால்துாக்கம் இல்லை மகளே'என்று பாடினார்கள். பச்சிளங்குழந்தையாக இருக்கும்போதே நன்றாக துாங்கி விடு. பின்னால் கால சக்கரத்தில் எத்தனையோ கவலை, இடர்பாடு, உன்னை துாங்க விடாமல் ஆக்கிவிடும் என்று சொல்வதில் உண்மை இருக்கிறது.மகா யுத்தம்
படிக்கும் காலத்தில் மாணவர்கள் புத்தகத்தோடு போராட, பெற்றோர் பிள்ளைகளோடு போரிட ஒரு மகாபாரத யுத்தமே நடக்கிறது. இந்த கால கட்டத்தில் படிக்கும் மாணவர்களை பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி எண்ணுவதே இல்லை. இவர்களை பொறுத்தவரை அது ஒரு படிக்கும் இயந்திரம். வேண்டியதை கொடுப்போம். ஆனால் பெற்றோர் கனவும், ஆசிரியர் கனவும் வெற்றி பெற வேண்டும் என்பதே. இதனால் பிள்ளைகள் துாக்கமும், பெற்றோர் துாக்கமும், ஆசிரியர்கள் துாக்கமும் தொலைந்து விடுகிறது.
'மாலை இட்ட கணவன் வந்துசேலை தொடும் போதுமங்கையரின் தேன் நிலவில்கண்ணுறக்கம் ஏது'
இந்த மாதிரி இனிமையான சூழலில் கொஞ்சம் துாக்கம் கெடலாம். இது இயற்கையின் அமைப்பு. இனிமையான விழிப்பு. ஆனால் கணவன் இல்லாமல் மனைவியோ, மனைவி இல்லாமல் கணவனோ, தனிமைப்படும்போது, துாக்கம் எங்கோ துாரப் போய்விடுகிறது.
பழக்கதோஷத்தில் ஒருவரை ஒருவர் பக்கத்தில் தேடிப்பார்க்க, ஏக்க மூச்சே எழுந்து வரும். இனி துாக்கம் எங்கே தொடர்ந்து வரும். இப்படியும் துாக்கம் தொலைந்து போகும்.
குடும்ப கவலைகள்
குடும்ப தலைவனாகவோ, தலைவியாகவோ இருப்பது பெரும் சோதனை. பெருத்த சவாலும் கூட. குடும்ப கவலைகள் எண்ணற்றவை. துாங்கி விழித்தால் பொழுது புலரும் என்பார்கள். ஆனால், இவர்கள் துாங்குகிறார்களோ, இல்லையோ, பொழுதும் விடியும். கூடவே இவர்களின் பிரச்னையும் விழித்து கொள்ளும். இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயல்வதால், இவர்களின் துாக்கம் தொலைந்து போய் விடுகின்றது.
உடல் நலக்குறைவு என்று மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் கேட்பார், 'நன்றாக துாங்கினீர்களா' என்று; துாக்கமில்லாமல் தவிப்பதற்கு துாக்க மாத்திரை ஒன்று கொடுப்பார். துாக்க மாத்திரை போட்டு துாங்குவது, ஒரு நல்ல துாக்கமே இல்லை. ஆறு மணி நேரமோ, எட்டு மணி நேரமோ உடலில் இயங்கி கொண்டிருக்கும் இயந்திரத்தை மின் விளக்கை நிறுத்துவது போல் நிறுத்தி வைப்பதுதான். மீண்டும் மின்சாரம் வந்தது போல் விழிப்பு வரும். இவர்கள் மொத்தமாக துாக்கத்தை தொலைத்தவர்கள்.
துாக்கமல்ல மயக்கம்
உயர் பதவியில் இருப்பவர் சிலரும், முறைகேடாக பணம் சேர்ப்பவரும் துாங்குவதே இல்லை. காரணம் பணம் இன்னும் சேர வேண்டும் என்றும், பதவி என்றும் பறி போக கூடாது என்ற ஏக்கத்திலேயே துாக்கத்தை தொலைத்து விடுவார்கள். மது அருந்தி விட்டு துாங்குபவர்கள் இன்னொரு ரகம். இரவில் கூடவோ, குறையவோ குடித்து விட்டு தன்னை அறியாமல் ஒருவித மயக்க நிலைக்கு சென்று மயங்கி விடுவார்கள். இதை இவர்கள் துாக்கம் என்பார்கள். இது துாக்கம் இல்லை மயக்கம்.
இதெல்லாம் விட லஞ்சம் வாங்குபவர்கள் துாங்க சென்றதும், அவர்கள் நினைவில் லஞ்சம் கொடுத்தவர்கள் வரிசையில் வர, எப்போது மாட்டுவோமோ? என்ற பயத்திலேயே துாக்கத்தை தொலைத்து விடுவார்கள். அடுத்து இளைஞர்களின் துாக்கத்தை கெடுப்பது, அலைபேசி. அல்லும் பகலும் 'ஹலோ' சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது. கூப்பிட்டால் ஒன்று 'தொலைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்' அல்லது 'தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்' என்று வரும். எல்லையை தாண்டி இளசுகள் செல்வதால் வாழ்க்கையே வீணாகிறது. 'பேஸ்புக்' மூலம் பேதலித்த மனது, 'வாட்ஸ் ஆப் மூலம் வா வா' என கதறினாலும் வராது. கெட்டுப் போனது, கெட்டுப் போனது தான். அலைபேசி அடிமைகளும் நிரந்தரமாக துாக்கத்தை தொலைத்தவர்கள்தான்.
பாலியல் பலாத்காரம்பள்ளியறையில் நடக்க வேண்டிய பாலியல் என்ற புனிதமான உறவு, இன்று படிக்கும் பள்ளியிலும், பஸ்சிலும் பாலியல் பலாத்காரமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் இந்த மானுடர்களுக்கு இப்படியான வக்ர புத்தி. வளர்க்கப்பட்ட விதமா அல்லது வளர்ந்த விதமா?
இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அவள் எப்படி மீண்டு வருவாள். அன்று பெண்மையை மதித்தார்கள். இன்று நமக்கு பெண்கள் வன்கொடுமை சட்டம் தேவைப்படுகிறது. இது வேதனை.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களுக்கு மட்டும் சங்க கால கண்ணகியின் சக்தி இருந்தால் இன்று என்னவாகும். அப்படி மனதளவில் பாதித்து, துாக்கத்தை தொலைத்தவர்கள் எத்தனை பேர். மெத்தையை வாங்கலாம். துாக்கத்தை வாங்க முடியாது அல்லவா?
இயற்கையில் பகலும், இரவும் வழக்கம் போல் வந்து போய் கொண்டிருக்கின்றன. நல்ல சிந்தனை, அமைதியான வாழ்க்கை, சுகாதாரமான உணவு, நோயற்ற உடல் நல்ல உறக்கம் தரும்.
பிரச்னைகளை கண்டு மிரளவேண்டாம். நல்லதை சிந்தியுங்கள். நேர்மையாக இருங்கள்; இப்படி என்றால் நீங்கள் கும்ப கர்ணன்தான்.-பி.சுப்பிரமணியன்,வங்கி மேலாளர் (ஓய்வு)காரைக்குடி94431 22045

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement