Advertisement

முடிவில் தான் ஆரம்பம்

வாழ்க்கையின் பயணம் பல நேரங்களில் நாம் அவ்வப்போது எடுக்கும் முடிவுகளில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது யதார்த்தமான உண்மை. இதற்கு எந்த மனிதனும் விதிவிலக்காக இருந்திட முடியாது. மனிதனின் செயல்பாடுகளும் முடிவெடுக்கும் தன்மையும் ஏறத்தாழ இரண்டறக் கலந்துள்ளதால், ஒவ்வொரு மனிதனின்
செயலுக்கு பின்புறத்தில், பல தருணங்களில் அவரவர் எடுக்கும் முடிவுகள் மறைந்துள்ளன.இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற்ற மனிதர்களாக திகழ்வதற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, அவர்களது ஆளுமைத்திறனில் மிகவும் அவசியமாக தேவைப்
படுவது முடிவெடுக்கும் பண்புதான். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை நிலையை ஒவ்வொரு தனிமனிதனும் சற்று ஆராய்ந்து பார்த்தால் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகள் அனைத்திலும் மிகவும் முக்கியமான முடிவுகளை எடுத்துதான் கடந்து செல்ல முடியும்.
ஒரு சராசரி மனிதன் தினந்தோறும் எடுக்கும் முடிவுகளால், அவனது வாழ்க்கையை உருவாக்கிடவும் முடியும் அல்லது உடைத்திடவும் முடியும். இவ்வளவு முக்கியமான பண்பை ஒவ்வொருவரும்
தங்களது ஆளுமைத்திறனில் முக்கியத் திறனாக கொண்டு வருவதற்கு, அதனை பற்றியும் அதனை கையாளும் முறையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
முடிவு எடுப்பதின் அவசியம் தன்னம்பிக்கையோடு, தெளிந்த சிந்தனையுடன் தரமான செயல்பாடுகளின் மூலம், ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்கு, எல்லோரும் ஆரோக்கியமான முடிவுகளை, அவர்களது வாழ்க்கையில் அவ்வப்போது எடுப்பது அவசியம். முடிவெடுக்கும் திறனில், அவர்கள் வல்லமை படைத்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் முடிவெடுக்க தயங்கும் தருணத்தில், வாழ்க்கையின் வசந்த வாசல் அவர்களுக்கு திறக்கப்படுவதில்லை. ஆரோக்கியமாக, உற்சாகமாக, குழப்பம் இல்லாமல் உயர்ந்த எண்ணத்தில், நெறிகளோடு கூடிய முடிவுகளை எடுக்கத் தெரிந்த அனைவருமே வெற்றிக்கனியை பறித்துக் கொள்ளும் வாய்ப்பு படைத்தவர்கள் என்று சமுதாயத்தில் அடையாளம் காட்டப்
படுகின்றனர்.இளைஞர்களும் முடிவு எடுத்தலும் ஒவ்வொரு வருடமும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், சற்று மன அழுத்தத்துடன் காணப்படுவதற்கு முக்கிய காரணம், பொதுத் தேர்வுகளை தாண்டிய அவர்களது வாழ்க்கை என்னவாக இருக்கும் என்ற கவலைதான்.
பல நேரங்களில் இந்த கவலை, பொதுத்தேர்வுகளில் அவர்கள் தேர்ச்சி பெறும் விதத்தையே நிர்ணயிக்கிறது. மனஅழுத்தத்துடனும், கவலையோடும், நடுக்கத்தோடும் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் போது அவர்களது உண்மையான திறனை தேர்வுத்தாளில் வெளிப்படுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். தேர்வுக்கு
பிந்தைய எதிர்பார்ப்புகள் நிறைந்த கேள்விகள்... அடுத்து என்ன படிக்கலாம், எந்த கல்லுாரியில் படிக்கலாம், எந்த துறையில் படிப்பை மேற்கொள்ளலாம்? என்பது இயற்கையாகவே எல்லா மாணவர்களின் மனதிலும் எழுக்கூடிய நியாயமான கேள்விகள்தான்.
ஆனால் அந்த கேள்விகளுக்கு அவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுகளை எடுத்துவிட முடியாது. மாணவர்களின் உள்மனதில் இருக்கும் ஆசை, அவர்கள் எதிர்காலத்தை பற்றிய நோக்கம், அவர்களது இயல்பான குணாதிசியங்கள், அவர்களது குடும்ப சூழ்நிலை மற்றும் வாழ்க்கையின் லட்சியங்கள் ஆகிய மிக முக்கியமான காரணிகளை அலசி பலன் அளிக்கக்கூடிய வகையில் முடிவு எடுக்க வேண்டும். இதுதான் முடிவெடுப்பதற்கு அடிப்படை அடித்தளம்.
தடைய தகருங்கள்
சாதாரணமாக மாணவர்கள் முடிவு எடுப்பதற்காக, சில தடைகளை கடந்து போக முடியாமல் தவிக்கிறார்கள். அதில் முதலில் பயம் என்ற காரணம் மேலோங்கி நிற்கிறது. பயத்துடன் எந்த செயல்பாடுகளையும் வெற்றி
கரமாக செய்திட முடியாது என்பதை அறிந்திட வேண்டும். பயம் அல்லது அச்சத்தை தாண்டி உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் தங்களின் செயல்பாடுகளை வெற்றியை நோக்கி செலுத்தும் தன்மையை மாணவர்கள் வளர்த்திட வேண்டும். தள்ளிப்போடுவது எப்பொழுதுமே மாணவர்களுக்கு சிறந்த பண்பாக அமையாது.
எந்தெந்த நேரத்தில், எந்தெந்த காரியங்களை நேரம் தவறாமல் செய்திட வேண்டுமோ, அதை காரணங்கள் காட்டி செய்யாமல் இருப்பதற்கு தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும் மனோபாவத்தை
கைவிடுதல் அவசியம். இது போன்று இன்னும் பல தடைகள் இருப்பினும், முடிவெடுக்காமல் எந்த ஒரு மனிதனும்
தனது வாழ்க்கையை கடத்த முடியாது.
முடிவெடுத்தால் தோல்விதான் வரும் என்றால் எவருமே ஜெயித்திட முடியாது.பெற்றோர்களின் பங்கு மாணவனுக்கு வகுப்பறை எவ்வளவு முக்கியமோ, அவர்களின் பரிணாம வளர்ச்சிக்கு குடும்பம் மிகவும் முக்கியம். ஏனென்றால் முக்கிய வாழ்க்கை திறன்களை வளர்த்து அனுபவம் பெற்ற பிறகு, வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது. மாறாக சிறு வயது முதல் வாழ்க்கை திறன், செயல்முறை கல்வியாக அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து போதிக்கப்பட வேண்டும். இளம்
பருவத்தில் சிறு சிறு முடிவுகளை தங்களது தினசரி வாழ்வில், குடும்ப சூழ்நிலையில் எடுத்துக் கொள்ள பழக வேண்டும்.
குடும்ப நிகழ்வுகளில் முடிவெடுப்பதற்கான சூழ்நிலைகளை, மாணவர்களுக்கு பெற்றோர் உருவாக்கி தர வேண்டும். குடும்பத் தேவைகளை விரிவாக்கவும், அதற்கான வசதிகளை பெருக்குவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளில் முடிவெடுக்கும் வட்டத்திற்குள் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் தங்கள் பிள்ளைகளை ஆக்க
பூர்வமாக பயன்படுத்தி முடிவெடுப்பதற்கும், பங்கேற்பதற்கும் உற்சாகப்படுத்த வேண்டும். குடும்ப பொருளாதார நிலைகளை கையாளும் போது, பிள்ளைகளின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டால் அவர்களின் சுயமரியாதை கூடும். அப்போது அவர்களின் தனித்திறமை கூடும் வகையிலும், தன்னம்பிக்கை மிளிரும் வகையில் செயல்படுவதை கண்டிப்பாக காணமுடியும். இதுவே அவர்களுக்கு முடிவு எடுக்கும் பண்புகளை வளர்க்க உரமிடும் செயலாக மாறமுடியும்.
வெற்றிகரமாக வாழ்ந்திடுங்கள் இன்றைய உலகின் வேகத்திற்கு, மனிதர்கள் அனைவரும் ஈடுகொடுத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். நிமிடத்திற்கு நிமிடம் மாறி வரும் உலகை எதிர்கொள்வதற்கு உற்சாகம் நிறைந்த மனிதர்களாக நாம் பிரதிபலிக்க வேண்டும். இதற்கு வாழ்க்கையில் வெற்றி பெற தடையில்லா தயக்கத்துடன் திடமான முடிவுகளை எடுத்திட வேண்டும்.
எத்தனை முறை வேண்டுமானாலும் ஆலோசிக்கலாம். எல்லோரின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் முடிவை மட்டும் நாம்தான் எடுக்க வேண்டும். சுயநம்பிக்கையுடன் நாம் எடுக்கும் முடிவுகளில் ஒரு வகையான உயர்வு இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக அது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்காகதான் அமையப்போவது என்பதால் அது என்றைக்குமே தீங்கு விளைவிக்காது.
சுயமாக நாம் எடுக்கும் முடிவுகள் ஆலமரத்தின் விழுதினை போல, நமது வளமான வாழ்க்கைக்கு என்றுமே உறுதுணையோடு இருக்கும். ஆகவே ஆரோக்கிய எண்ணத்துடன் முடிவெடுங்கள்! வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
-- நிக்கோலஸ் பிரான்சிஸ்எழுத்தாளர், பயிற்சியாளர்மதுரை. 94433 04776

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா

    நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் சார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement