Advertisement

லஞ்சம் கொடுப்பது குற்றமா?

'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்' என, மத்திய அரசு சட்டம் இயற்றி, அக்குற்றத்திற்கான தண்டனைகளை யும் வரையறுத்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று, 68 ஆண்டுகளுக்கு பின், லஞ்சம் கொடுப்பதும் ஓர் குற்றம் தான் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கின்றனர்.

நாடு முழுவதும் லஞ்சப்பேய் தலைவிரித்தாடுகிறது என, குறிப்பாக அரசியல் தலைவர்கள், - நீதிமன்றத்தால் ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் உட்பட, -அனைவரும் முழங்குகின்றனர். ஒவ்வொருவரும், தான் மிகவும் நேர்மையாளன் என்றும், சுத்தமானவன் என்றும், மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்றும் போடுகிற கூப்பாடு, உண்மையிலேயே மக்களை குழப்பமடையச் செய்கிறது. ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மையென்று நம்ப வைக்க படாத பாடுபட்டு, மக்களை முட்டாளாக்கி, அரசியலையும் கேலி கூத்தாக்குகின்றனர்.

இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் தான் யார் என்பது தான் விடையளிக்க இயலாத கேள்வி.திருடனும் கூட்டத்தில் கலந்து விட்டு, 'திருடனை பிடி' என, கத்திக் கொண்டே ஓடுவது போல்தான் இதுவும். ஆகவே, எல்லாரும் லஞ்சத்தை எதிர்க்கின்றனர் என்ற தோற்றம் உண்மை அல்ல. முன்பெல்லாம் லஞ்ச ஊழலே இல்லையா என்ற கேள்விக்கு பதில், -'இருந்தது' என்பது தான். ஆனால், அச்சப்பட்டுக் கொண்டே, வெட்கப்பட்டுக் கொண்டே, யாருக்கும் தெரியாமல், தன் மனைவி மக்கள் கூட அறியாமல் ஒரு சிலர் தான் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

கடந்த, 1967க்கு பின், 'லஞ்சம்' என்ற கீழ்த்தரமான செயலுக்கு அரிதாரம் பூசி, மாறுவேடமிட்டு 'அன்பளிப்பு' என்ற புதிய நாமகரணம் சூட்டி விட்டனர். அதை எங்கும் கவுரவமாக பவனி வரச் செய்ததுடன், அது ஒரு சமூக அவலம், தேசத்துரோக செயல் என்ற எண்ணத்தையே, மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்க செய்த பெருமை, இன்றைய அரசியல்வாதிகளையே சாரும்.இன்று இறைவனுக்கு அடுத்ததாக, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சம் மட்டுமே. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்குகூட லஞ்சம் தரவேண்டும் என்பது மிகவும் கொடுமையான சூழல்.ஒருவர் தனக்கு நியாயமாக, உரிமையோடு வரவேண்டிய ஒரு விஷயத்தை பெறுவதற்கே, அரசு அதிகாரிக்கு கொடுக்கிற பணம், 'லஞ்சம்!' பெரும்பாலும் அதை அரசு அதிகாரியே நிர்ப்பந்தப்படுத்தி கேட்டு பெற்றுக் கொள்வதாகவே இருக்கும்.

அந்த அரசு அதிகாரியோ, சட்டத்திற்கு புறம்பான அந்த வேலையை செய்ய முடியாது என்று மறுப்பதற்கு பதிலாக, அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பேரம் பேசி, முடிந்த அளவு பெருந்தொகையை கறந்து கொள்கிறார். பல அதிகாரிகள், தங்கள் மாத சம்பளத்தைக் காட்டிலும் பன்மடங்கு பெரும் பணத்தை மாதா மாதம் லஞ்சமாக பெற்றுக் கொண்டிருந்தனர் என்று விசாரணைகள் தெரியபடுத்தி இருக்கின்றன.

சமீபத்தில் ஒரு பெண்மணி, வருவாய் அதிகாரி பதவிக்கு தேர்வெழுதி, தேர்வாகி பணியில் சேர்ந்து ஐந்தே மாதங்களில், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கி, பிடிபட்டு தண்டிக்கப்பட்டார். அவருடைய கனவு, நோக்கம் எல்லாம் அரசு அதிகாரியாகி லஞ்சத்தில் திளைத்து பணக்காரராக வேண்டும் என்பதாகத்தானே இருந்திருக்கும்.இப்படி மாட்டிக் கொண்டவர்கள் மட்டும் தங்கள் முகத்தை மறைக்க முயற்சி செய்கின்றனர். பிடிபடாதவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. நல்ல நேர்மையான அதிகாரிகளின் விழுக்காடு குறைந்து கொண்டே போகிறது.

பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கம், அதிகாரிகளுக்கு, 45 சதவீத கமிஷன் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக வாக்குமூலம் கொடுத்து, புகாரும் தெரிவித்திருக்கின்றனர். அதிகம் லஞ்சம் கேட்கும், 10 அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டிருக்கின்றனர். நேர்மையான அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் துன்புறுத்தப்படுகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த ரகசியம்.லஞ்சத்தைப் பற்றி குறிப்பிடும்போது, அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என்று மூன்று கூறுகளாக பேசுகின்றனர். இந்த மூன்று கூறுகளுமே, 'மக்கள்' என்பதில் தானே இருக்கின்றனர். ஆகவே, மக்கள் தாங்கள் போடுகிற வேஷத்திற்கு ஏற்றார்போல் செயல்படுகின்றனர் என்பதுதான் உண்மை.

நம்மில் எத்தனை பேர் எக்காரணம் கொண்டும், எதற்காகவும் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று தீர்மானமாக முடிவெடுத்திருக்கிறோம் என்ற கேள்விக்கு, நிச்சயமாக திருப்தியான பதில் இல்லை. எப்படியாவது வேலை முடிந்தால் சரி என்பதோடு, நம்மில் பலர் சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நடத்த லஞ்சம் கொடுக்க தயங்குவதில்லை என்பது தான் யதார்த்தம். அரசியல் என்பது, 'மக்கள் பணி' என்பது போய், 'செல்வம் கொழிக்கும் தொழில்' என்ற
கோட்பாடு வேரூன்றி நீண்ட
காலமாகிறது.

பல கோடிகளை செலவு செய்து பதவிக்கு வரும் அரசியல்வாதிகள், போட்ட தொகையைவிட பலமடங்கு வருமானம் பார்க்க முடியும் என்பதனால் தான், அவர்களுடைய இலக்கை எளிதாக அடைய எல்லா வழிகளையும் பின்பற்றுகின்றனர். அதில் முக்கியமான ஒன்றுதான் அதிகாரிகளை லஞ்சம் வாங்க துாண்டி, அதில் பெரும்பங்கை தாங்கள் பெற்று கொள்வதும். அவர்கள் கருத்துப்படி மக்கள் அனைவரும் முட்டாள்கள்தான்.'இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' போன்ற நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக, லஞ்ச செய்திகள் எல்லாம் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இந்த செய்திகளில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், நெருப்பில்லாமல் புகையாது என்பது மட்டும் மக்களுக்கு புரிகிறது.

இந்த பரபரப்பு காரணமாக இரண்டு விஷயங்கள் நடக்கலாம்... லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இன்னும் கவனமாக இருந்து, சாதுரியமான வழிகளை கண்டறிந்து லஞ்சம் வாங்க முயற்சிக்கலாம். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மாயிருக்குமா அல்லது லஞ்சலாவண்யம் சற்று குறையவும் வாய்ப்புள்ளது.எதுவானாலும், மக்கள் வரிப்பணம் மக்களுக்கு பயன்படாமல் இவ்விதம் தனிநபர்கள் கபளீகரம் செய்வது தடுக்கப்பட வேண்டும்
என்பதே மக்கள் விருப்பம்.
இ-மெயில்:
ahanathapillaigmail.com

- டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளை -
முன்னாள் பேராசிரியர்
மதுரை மருத்துவக் கல்லுாரி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Lt Col M Sundaram ( Retd ) - Thoothukudi,இந்தியா

  Impose military rule or emergency rule for 6 months. All will be set right.

 • Rajendran Pillai - Chennai,இந்தியா

  எல்லா அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இது 100 க்கு 100 உண்மை. லஞ்சம் தரா விட்டால் வேலை நடை பெறாது என்பது உறுதி.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  ஒவ்வொரு தனிமனிதனும் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்வேன் ன்னு மன உறுதி கொண்டு அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்..... இல்லையேல் லஞ்சம் இன்றி எதுவும் இல்லை என்ற நிலை இன்னும் உச்சத்துக்குப் போகும். நம்மில் எத்தனை பேர் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்கிறோம் என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.... அலுவலகத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் ஒரு பென்சிலை எடுத்துவந்து குழந்தைக்குக் கொடுப்பதும் குற்றம் தான்.... “நான் செய்யும் தவறு யாருக்குத் தெரியப் போகிறது.... என்ற அலட்சியமும் இதெல்லாம் ஒரு குற்றமா....” என்று தவறை நியாயப்படுத்தும் மனோபாவமும் மாற வேண்டும்..... ஆனால் இதெல்லாம் எங்கே மாறப் போகிறது.....?? ஒழுக்கமான கல்வியைக் கற்றுத் தர வேண்டிய கல்விக் கூடங்கள் இன்றைய நாளில் கலவிக் கூடங்களாகவும் கொள்ளைக் கூடங்களாகவுமே செயல்படுகின்றன..... இதில் அரசு, தனியார் என்ற பாகுபாடே கிடையாது....அரசு பள்ளி, கல்லூரிகள் என்றால் தகுதியும் திறமையும் அற்றவர்களே லஞ்சத்தின் மூலமாகவும் கோட்டாவின் மூலமும் பணி செய்கின்றனர்.... இவர்களிடமிருந்து எப்படி ஒழுக்கத்தையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியும்....?? நீதி போதனை வகுப்புகள் எல்லாம் பள்ளிகளை விட்டே ஓடிவிட்டன.... தான் சொல்வதே நீதி.... தான் செய்வதே ஒழுக்கமான செயல்.... தாங்கள் செய்வதே நேர்மை.... என்ற அளவில் இன்று எல்லோரும் நினைக்கத் துவங்கி விட்டனர்.... ஒவ்வொரு தனிமனிதனும் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ளாத வரை எதுவுமே சாத்தியப்படாது.... நாம் நேர்மையாக நடந்தால் மட்டுமே நமது வாரிசுகளும் நேர்மையாக நடந்துகொள்ளும்.... இதெல்லாம் நடக்க இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்....?? நான் நேர்மையாக நடந்துகொண்டாலும் மற்றவர்களையும் அப்படி இருக்கச் சொன்னால் “போய்யா வேலையப் பார்த்துக்கிட்டு.....வந்துட்டாரு.... புத்தரு.... பொழைக்கத் தெரியாதவன்... துப்புக் கெட்டவன்....” என்றெல்லாம் ஏச்சுப் பேச்சுக்களை எல்லாம் கேட்கத்தான் வேண்டியிருக்கும்.... ஆனாலும் நமது கொள்கையை மாற்றக் கூடாது.... இன்றைய நிலையில் எதிர்காலத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.....

 • Palanichamy - Theni,இந்தியா

  நாம் தினமும் பார்க்கிறோம் வாடாட்ச்யர் அலுவலகமாகட்டும், வட்டார போக்குவரத்து அலுவலகமாகட்டும் லஞ்சம் புற்றிஈசல் போல அதிகரித்து கொண்டே இருக்கிறது. சிறிய சான்றிதல் வாங்குவது கூட காலதாமதம் செய்கிறார்கள். கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் அமுல்படுத்தும் வரை இந்த சாபக்கேடு மாறாது .

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  என்னைப்பொருத்தவரையில் லஞ்சம் வாங்குவதை விட கொடுப்பவர்களை பிடித்து குறைந்த பட்சமாக பத்தாண்டுகள் சிறை தண்டனை கொடுத்தாலே இந்த அசிங்கம் ஒழிந்துவிடும்.

 • Manian - Chennai,இந்தியா

  சொல்வது என்பது எளிதாம், அறிதாம் சொல்லிய வண்ணம் செயல் -எதிர்மறை எண்ண்தில் சொல்லவில்லை நடைமுறை செய்பவர் (implimentor ) லஞசத்துக்கு அப்பால் பட்டவராக, நேர்மையாவரை தேர்வு செய்ய ஜாதி,மதம், ஒதக்காடு கேட்கும், 80% லஞ்சம் கொடுத்து- வாங்குபவர்கள் அனுமதி்ப்பார்களா?அதற்கு முதலில் ஒரு வழி சொல்லுங்கள் டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளை. ஏன் நூற்றுக் கணக்கான சகாயங்கள் இன்னும் வரவிடப்படவில்லை?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement