Advertisement

கலை வளர்த்த ராமநாதபுரம்

அயராத உழைப்பினாலும், தன்னலமற்ற தொண்டினாலும், பணியினாலும், படிப்படியாக உயர்ந்து குறுநிலப் பகுதிகளின் மன்னர்களாகவும் ஆக முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் சேதுபதி மரபினர். இந்திய வரலாற்றில், போர் வழியிலன்றி ஆன்மிக நெறியில் நின்று இந்தியா முழுவதிலும் புகழ்படைத்த மரபினர் இவர்கள்.
பாண்டிய நாட்டின் கிழக்கு கடற் கரையை அடுத்து பாலையும், நெய்தலும், முல்லையும், மருதமும் மயங்கிய நால்வகை நிலப்பரப்பில் தமிழும் இசையும் கலைகள் யாவும் வளர்ச்சி பெற்றன. கி.பி. ஏழாம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ராமேசுவரம் வந்து, தமிழ்வேதம் பாடி வழிபட்டுள்ளனர். ராமனால் சிவன் பூஜிக்கப்பட்டதால் 'ராமேஸ்வரம்' என்ற பெயர் பெற்றது. தமிழகக் கட்டடக் கலையின் சிறப்பைக் சொல்லும் ராமேசுவரம், கோயிலின் கட்டுமானப் பணி வியக்க வைக்கும் உழைப்பை உடையது.

திருநாவுக்கரசர் பாடிய தலம்

ராவணனை வதைத்து, சீதையை மீட்டு வந்த ராமன் கட்டிய அணை இங்கு அமைந்ததால், 'சேது' என்று அழைக்கப்படுகிறது. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று ராமேஸ்வரம். வடநாட்டினர் இங்கு வருவதும் தென்னாட்டினரான நாம், காசி செல்வதும் பாரத பண்பாடாகும். மக்கள் தங்கள் வினை நீக்கம் வேண்டி இங்கு வந்து 22 தீர்த்தங்களில் நீராடி வழிபடுகின்றனர்.
'சனி புதன் ஞாயிறு, வெள்ளி திங்கள்
பல தீயன முனிவது செய்துகந் தானை
வென்ற அவ்வினை மூடிட இனியருள்
நல்கிடென்று அண்ணல் செய்த
ராமேச்சுரம் பனிமுதி சூடி நின்று
ஆடவல்ல பரமேட்டியே!'
என்று காந்தாரப் பஞ்சமப் பண்ணிசையில் சம்பந்தரும்;
'கடலிடை மலைகள் தம்மால்
அடைத்து மால் தரும் முற்றித்
திடலிடைச் செய்த கோயில்
திரு இராச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவில்
சுழல்கின்றேன்!'
என்று திருநாவுக்கரசரும் பாடி அருள் பெற்ற தலம்.

திருஉத்திரகோசமங்கை

கி.பி.10ம் நுாற்றாண்டில் மாணிக்கவாசகர் திருஉத்திரகோசமங்கைக்கு வந்து திருவாசகப் பாடல்களில் இரண்டு பதிகங்களை பாடி அருள்பெற்றார். மேலும் இத்திருத்தலத்தின் நடராஜர் சிலை மரகதத்தால் ஆன சிறப்புடையது. 15ம் நுாற்றாண்டில் சந்தப்பாவலர் அருணகிரிநாதர், ராமேசுவரம் மற்றும் உத்திரகோச மங்கையில் திருப்புகழ் ஓதியுள்ளார். கி.பி.15ம் நுாற்றாண்டு முதல் ராமநாதபுரம் பல்வேறு கலை வளர்ச்சியைப் பெற்றது.
தமிழ் மொழியின் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய சான்றோர்களையும், இசை, நாட்டிய துறையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உலவி வந்த கலைஞர்களையும், ஆண்டுதோறும் நவராத்திரிக் கலைவிழாவில் கலந்துகொள்ளச் செய்தனர் சேதுமன்னர்கள். கலைஞர்களது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பரிசுகளையும், பொற்பதக்கம், பட்டாடைகளையும் அணிவித்து, கனகாபிஷேகம் செய்தும், கண்ணும் கருத்தும் குளிரக் கண்டு மகிழ்ந்தவர்கள் சேது மன்னர்கள்.
மன்னர்கள் பாராட்டிய மேதைகள்
இத்தகைய நவராத்திரி கலை விழா ஒன்றில் 1897ல் கலந்து கொண்டு பொன்னாலான காப்புகளும், பட்டாடையும் பெற்று மகிழ்ந்த நிகழ்ச்சியை தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், 'என் சரித்திரம்' என்ற தமது வாழ்க்கை வரலாற்று நுாலில் இடம்பெறச் செய்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இசைக் கலைஞர்கள் மகா வைத்யநாத ஐயர், பட்டணம் சுப்ரமணிய ஐயர் திருக்கோடிக்கா கிருஷ்ண ஐயர், மைசூர் வீணை வித்வான் சேசன்னா, கும்பகோணம் நாட்டிய நங்கை பானுமதி, புதுக்கோட்டை மாமுண்டியா பிள்ளை, குன்னக்குடி கிருஷ்ண ஐயர், திருவாவடுதுறை ராஜரெத்தினம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், பூச்சிசீனிவாச ஐயங்கார் போன்ற சிறந்த மேதைகள், ராமநாதபுரத்தில் சேதுபதி அரசர்களால் பாராட்டப்பட்டனர் என்பது வரலாறு.
மொழியிலும், இசையிலும் சேதுபதி மன்னர்களே சிறந்து விளங்கினர் என்பது வியப்பிற்குரிய செய்தி. திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் சங்கீதத்திலும், நாட்டியத்திலும், சிறந்து விளங்கியமைக்காக 'சங்கீத நாடக நாட்டிய பிரவீணன்' என்ற பட்டத்தையும், கிழவன் ரெகுநாத சேதுபதி இசைப் பிரியராக இருந்தமைக்காக 'சங்கீத சாகித்ய வித்யா வினோதன்' என்ற பட்டத்தையும் பெற்றனர்.
சுமார் 48 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த முதலாவது 'முத்துராமலிங்கசேதுபதி' மன்னர் மேலைநாட்டு இசையில் பெரு விருப்புக் கொண்டு, அவரது அரசவையில் வயலின் வித்துவான் ஒருவரை அமர்த்தி இருந்தார் என்பதை ஆங்கிலேயரது ஆவணம் ஒன்று குறிப்பிடுகிறது. இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி முத்தமிழ்ப் புலவராக, இலக்கண, இலக்கியங்களை முழுவதும் உணர்ந்த வித்தகராக வாழ்ந்ததுடன் தமிழ், இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கிய புலவராவார்.
இவரது தமிழ் இசைப் பாடல்களின் தொகுப்பு காயகப்பிரியா என்றும், இந்துஸ்தானி 'இசைப்பாடல் சாகித்யங்கள் ரசிக ரஞ்சனம் என்ற தொகுப்பாகவும், வள்ளி மணமாலை, சரச சல்லாப மாலை, பால போதம், நீதி போதம், சடாக்கர பதிகம் என்ற தலைப்புக்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மன்னர் 32 ஆண்டுகளே வாழ்ந்த போதும் ஏராளமான தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரது குமாரரான மன்னர் பாஸ்கர சேதுபதி ஆங்கிலத்திலும், வடமொழியிலும், தமிழிலும் மிகத் தேர்ந்த புலவராக விளங்கினார்.
ராஜாதினகர் என்ற மன்னர் சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும், பெரும் புலமை பெற்றிருந்தார். கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் வடநாட்டில் விளங்கியது போன்று, தென்நாட்டில் ஆங்கிலக் கவிஞராக விளங்கியவர் இந்தத் திருமகனார்.
இவ்விருவரது பெரிய தந்தையும், வள்ளலுமான பொன்னுச்சாமி தேவர், தமிழில் பெரும் புலவராக விளங்கியது போன்று தமிழ் இசையிலும் தனி இடத்தைப் பெற்று விளங்கினார். 1862ஆண்டிலேயே தாம் இயற்றிய பல கீர்த்தனைகளின் தொகுப்பினை அச்சேற்றி வெளியிட்டுள்ளார்.

தமிழ் வளர்த்த வள்ளல்கள்

வறுமையில் ஏங்கித் தவித்த தமிழ்ப்புலவர்களுக்கு உதவி, போற்றியவர்கள் சேதுபதி மன்னர்களும் அவர் தம் வழியினரும் ஆவர். தமிழ் இலக்கியப் படைப்புகள் வருவதற்கு ஊக்குவித்ததுடன், வீட்டுப் பரண்களில் கரையானுக்கு இரையாகி எஞ்சி நின்ற தமிழ் இலக்கியச் சுவடிகளை தேடிச் திரட்டியவர்களும், மதுரைத் தமிழ்ச் சங்கம் வழியாக இலக்கியங்களை அச்சில் வெளிக் கொணர்ந்த தொண்டினைச் செய்தவர்களும் சேதுபதி மன்னர் மரபினரே ஆவர்.
நுாறு ஆண்டுகளுக்கு முன் தமிழில் இதழ்கள் வெளிவராத நிலையில் நாகை நீலலோசனி, மதுரை ஞானபானு, விவேக பானு, போன்ற இதழ்கள் முறையாக வெளிவருவதற்கு பொருள் உதவி செய்தவர்களும் சேது மன்னர்களே ஆவர்.
யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலரைக் கொண்டு சைவ சாத்திர நுால்களை, வள்ளல் பொன்னுச்சாமித் தேவர் பதிப்பித்தார். தந்தையின் பணியினைத் தொடர்ந்து, வள்ளல் பாண்டித்துரைத் தேவர் எஞ்சிய சைவ சமய நுால்களைப் பதிப்பித்து உதவினார். மன்னர் முத்துராமலிங்க சேதுபதியும், அவரது மகன் மன்னர் பாஸ்கர சேதுபதியும், மூதறிஞர் உ.வே.சுவாமிநாத ஐயரது பதிப்புப் பணியைப் பாராட்டி பொருள் உதவி செய்ததின் காரணமாக புறநானுாறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி கிடைத்தது. அபிதான சிந்தாமணி என்ற கலைக்களஞ்சியம், கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், திருக்குறள் ஆகிய அரிய இலக்கிய படைப்புகள், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவிய மதுரை தமிழ்ச்சங்கம் வாயிலாக வெளியிடப்பட்டன.

இப்படி கலைகள் வளர்த்தது ராமநாதபுரம் மண்!

-முனைவர் தி.சுரேஷ்சிவன்
தலைமை ஆசிரியர் அரசு இசைப் பள்ளி,
ராமநாதபுரம் 94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

    It was Baskara Sethupathy, who partly financed the trip of Vivekananda for talking part in the Parliament of World Religions in Chicago and gave a rousing reception on his return from America. Their contribution for Ramakrishna Mission in general and for Vivekananda in particular has been immense

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

    கிழவன் சேதுபதி, ராசாங்க காரியத்துல தலையிட்டான் ன்னு சொல்லி ஒரு வெள்ளக்கார தொரைக்கே மரண தண்டனை கொடுத்தாரு. தேவகோட்டை கிட்ட அவன் மடக்கி போட்டு தள்ளினாங்க சிவகங்கை பாசறையை சேர்ந்த அவரோட தளபதிங்க. அவன் பேரு டி பிரிட்டோ. என்ன செய்ய எங்க ராசா பரம்பரை வலிமை கொறஞ்சு பாஸ்கர சேதுபதிக்கு கல்யாணம் செய்யறதுக்கு கூட கும்பினி கிட்ட அனுமதி கேக்க வேண்டிய கேவலமான நெலமை வந்துச்சி. மங்கம்மாவுக்கும் சேதுபதிக்கும் பரம்பரை பரம்பரையா விசுவாசம இருப்போமின்னு பட்டயம் எழுதி கொடுத்தவுக இன்னும் அங்க இங்க இருக்காக. மங்கம்மாவுக்கு குர்-ஆன் மேல பொய் சத்தியம் செஞ்சு ஏமாத்தின முகமது அலி ய இன்னும் மறக்கல, மன்னிக்கவும் இல்ல. நாடு போயி அதிகாரம் போயி வவுத்து பொழப்புக்கு யாவாரியா போன தளபதி பரம்பரைகள் இன்னும் கூட விசுவாசம் மறக்கல.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement