Advertisement

நமக்கென ஒரு பிறந்தநாள் பாடல்!

வெகுமதி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, திரைப்படப் பாடல்களில் ஆங்கிலக் கலப்பினை அரங்கேற்றும் சில பாடலாசிரியர்கள் மத்தியில், தமிழ் பாடல்களில் துாய தமிழ் சொற்களே இடம்பெற வேண்டுமென்று விடாபிடியாய் நின்று கொண்டிருப்பவர் அறிவுமதி.இவர் எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை, இருநுாற்றி ஐம்பதிற்குள் தான் என்றாலும், அத்தனையும் முத்துக்கள். சேது படத்தில் "எங்கே செல்லும் இந்த பாதை" என்று சோகத்தில் உருக வைத்த இவர்தான், ரன் படத்தில் "பொய் சொல்லக் கூடாது காதலி" என எழுதி காதலர்களை குதுாகலிக்கச் செய்தார்.மதுரை காமராஜ் பல்கலை கழகமும், மன்னர் கல்லுாரியும் இணைந்து நடத்திய வைரமுத்துஅறக்கட்டளை சொற்பொழிவில் கலந்து கொண்ட கவிஞர் அறிவுமதியுடன் ஒரு நேர்காணல்...* பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பெருகி விட்டனவே?ஆரம்ப காலத்திலிருந்தே இது போன்று வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், தற்போதைய நிலை மோசம்தான். இதனை தவிர்ப்பது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கைகளில்தான் உள்ளது. நமது கலாசாரத்திற்கு சம்பந்தமில்லாத சில தயாரிப்பாளர்கள் திரைத்துறையில் கால் பதித்துவிட்ட சூழலில், அவர்களின் அக்கறையின்மையும் இதுபோன்ற பாடல்களுக்கு காரணமாய் அமைகிறது.* நடிகர்களும் பாடல் எழுதுகிறார்களே?அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தோன்றவில்லை. அவர்களுக்குள் பாடல் இயற்றும் திறமை இருக்கும் போது, அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லையே. ஆனால், எழுதும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.* ஆங்கிலக் கலப்பு இல்லாத தமிழ் திரைப்பாடல்களை பார்ப்பது அரிதாகி விட்டதே?மக்களின் ரசனை முழுவதுமாக மாறிவிட்டது. அவர்களை திருப்திப் படுத்தும் நோக்கத்தில் எழுதப்படும் பாடல்களே, ஆங்கிலக் கலப்புள்ள பாடல்களாக அமைகிறது. அம்மா என்று அழகாக அழைக்கும் குழந்தைகளை கூட, 'மம்மி' என்று ஆங்கிலத்தில் அழைக்கச் சொல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை மிகுந்து விட்டது. ஆக, திரைத்துறையோடு சேர்ந்து மாற்றத்தை நம்மிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.* திரைத்துறையில் பெண்களின் நிலை பற்றி...ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. முன்பெல்லாம் நிறம் கருப்பு என்றால், திரையில் முகம் காட்ட தயங்கிய நம் பெண்கள், இப்பொழுது ஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சினிமாவிலும் இத்தகைய மாற்றம் வேண்டும். கருப்பான ஆண்கள் திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கும் போது, பெண்களும், தங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர வேண்டும். * அடுத்த படைப்பு...?தற்பொழுது, சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அது தவிர, தமிழில் மிகச் சிறந்த பிறந்தநாள் பாடல் ஒன்றினை இயற்றுவதில் மும்முரமாக உள்ளேன். அதனை பிரபலப்படுத்த முன்னணி நடிகர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்பாடல் வெளிவந்தவுடன், உங்கள் இல்ல பிறந்தநாள் விழாக்களில் தவறாமல் ஒலிக்கும் ஒரு பாடலாக அது அமையும். திருமண வீடுகளில் "மருமகளே மருமகளே வா வா" பாடல் ஒலிப்பது போல!இவ்வாறு கூறினார்.அறிவுமதியின் அந்த பாடலுக்கு காத்திருப்போம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • L M EMPERUMAL - Visakhapatnam,இந்தியா

    பிறந்த நாள் பாடல்கள் பல 1960 களில் வெளி வந்துள்ளன. ஆனால் பலருக்கு மறந்துவிட்ட பழைய பாடல்களாகி விட்டன. உதாரணத்திற்கு சில பாடல்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .நாம் மூவர் என்ற படத்தில் இடம்பெற்ற வாலி அவர்கள் எழுதி ,எஸ் எம் வி இசை அமைத்த" பிறந்த நாள் இன்று பிறந்த பிறந்த நாள்" என்ற டி எம் எஸ் அவர்களின் இனிமையான பாடல் , காவல்காரன் திரைப்படத்தில் , ஆலங்குடி சோமு அவர்களின் கவிதையில் மலர்ந்த 'கட்டழகு தங்க மகள் திருநாளோ 'என்ற எம் எஸ் வி யின் இசையில் சுசீலா அவர்களின் குரலில் amaintha பாடல், மாளிகையில் மான் குட்டியின் திரு நாளாம் " என்ற எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் குரலில் வெளி வந்த அழகான பாடல் , இந்த பாடலின் வரிகளுக்கு சொந்தமானவர் ஆலங்குடி சோமு அவர்கள். இதற்க்கு இசை வடிவம் தந்தவர் மெல்லிசை மாமன்னர் எம். எஸ். வி அவர்கள். இப்படிப்பட்ட காலத்தால் அழியாத பாடல்களை இன்னமும் மனதில் சுமந்து கொண்டு பல ரசிகர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன். இதைபோன்ற நல்ல தமிழில் அறிவுமதி அவர்களின் பாடல் வெளி வர எனது வாழ்த்துக்கள் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement