Advertisement

'சேதுபதி' மதுரையில் மட்டுமே சாத்தியம்- இயக்குனர் அருண்குமார்

இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்களிப்பை எப்படி தவிர்க்க முடியாதோ... அது போல் தான் 'தமிழ்' சினிமாவில், மதுரைக்காரர்களின் பங்களிப்பையும் தவிர்க்க முடியாது. அந்த வரிசையில் எஸ்.யூ.அருண்குமார், பச்சைக்கலர் பத்மினி காரை படமாக்கி 'பண்ணையாரும்
பத்மினியும்' என பெயரிட்டு, இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்.
வெள்ளந்தி மனிதர்களின் உள் மனதை அவ்வளவு வெளிப்படையாக இனி யாரும் வெளி கொண்டு வர முடியாது என்கிற அளவிற்கு தரமாய் அமைந்திருந்தது, அவரது முதல் படைப்பு. இப்போது 'சேதுபதி'. ஆக்ஷன், அதிரடி, அமர்க்களம் என வேறு கோணத்தில் களமிறங்கியிருக்கும் அருண்குமார், இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு இடையே தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...
'பண்ணையாரும் பத்மினியும்' படம் முடிந்ததும். விஜய் சேதுபதிக்காக வேறொரு படம் ரெடி செய்தேன். ஆனால் அதற்குள் 'சேதுபதி' கதை ரெடி ஆகிடுச்சு. முதலில் இப்படத்தில், அவர் நடிப்பதாக இல்லை.
தற்செயலாக அவரிடம் கதை சொன்ன போது, அவருக்கு பிடித்து போக, இரண்டாவது படத்திலும் இருவரும் இணைந்தோம். எனது முதல் படம், மனிதனின் உணர்வுகளை பற்றியது. இதுவும் ஒரு போலீஸ்காரனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படம். ஒரு வழக்கு, ஒரு போலீஸ்காரர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்ற ஒரு வரியில் படத்தை நகர்த்தியிருக்கிறேன்.

எந்த நடிகருக்கும் போலீஸ் கெட்டப் நடித்த பிறகு தான், ஒரு ஆக்ஷன் அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதிக்கும், இது முதல் போலீஸ் படம். அவரை யூனிபார்மில் பார்க்கும் போது விஜயகாந்த் சாரை பார்ப்பதை போல் இருந்தது; அவ்வளவு கச்சிதம்.
என் படங்களில் கதைகளுக்கு தான் நாயகி. இந்த படத்தில் ரம்யா நம்பீசன். ஒரு படத்திற்கு பொருத்தமான பாத்திரங்கள் அமைந்துவிட்டாலே, பாதி வேலை முடிந்துவிடும். இந்த படத்தில் நடித்திருப்பவர்களும் அப்படி செட் ஆனவர்கள் தான். சிலரிடம் படத்தை திரையிட்டு காட்டினோம்; பார்த்த அனைவருக்குமே திருப்தி. ஒவ்வொரு முறை படம் எடுக்கும் போதும், தமிழக மக்களை மனதில் வைத்து எடுக்கிறோம்.
படைப்பில் வெகு ஜனங்களுக்கான விஷயங்கள் இருக்க வேண்டும். அப்போது தான், அது 'ஹிட்' படம். எனது படத்திற்கு பிற மாநிலங்களில் பாராட்டு கிடைப்பதை விட; இங்கு கைதட்டல் கிடைக்க வேண்டும். அப்போது தான் அது வெற்றி.
சேதுபதி படமும் முழுக்க மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான். இந்த கதையை சென்னையில் எடுக்க முடியாது; எடுபடாது. நான் மதுரைக்காரன் என்பதால், மதுரையை மையமாக வைக்கும் போது எனக்கு வசதியாக இருக்கிறது. மது, சிகரெட், ஆபாசங்களுக்கு என் படத்தில் இடமில்லை. அவை இல்லாமல் ரசிக்க வைக்கும் பல அம்சங்கள் இருக்கின்றன. அதை தான் பயன்படுத்துகிறேன்.
பிப்ரவரியில் படம் வெளியாக உள்ளது.
என்னை பொறுத்தவரை, ஒரு படம் முடியும் வரை இன்னொரு படத்தை பற்றி சிந்திக்க மாட்டேன். எனவே அடுத்தபடம் பற்றி, இப்போது நோ ஐடியா என்றார் அருண்குமார்.
நம்மூர் இயக்குனரை தொடர்பு கொள்ள srirammanavalangmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement